ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
கைப்பேசி: 8681 99 8888
.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது கெடுபலன்களைத் தந்து கொண்டிருக்கும் ஆறாம் இடத்தில் இருந்து நல்ல இடம் என்று சொல்லப்படக்கூடிய ஏழாம் இடத்திற்கு குரு பகவான் மாறுகிறார்.
ஏழாம் இடத்தில் இருக்கும் குரு ராசியைப் பார்ப்பார் என்பதால் இந்த இடம் மிகுந்த நன்மை தரும் இடமாக குருவிற்கு சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கோட்சார ராசிபலன்களாக இருந்தாலும் குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற பெயர்ச்சி பலன்களாக இருந்தாலும், எதிலும் நுணுக்கமாக கணித்து பலன் சொல்லக்கூடிய நான் இம்முறை ரிஷப ராசிக்கு சொல்ல இருக்கும் குருப் பெயர்ச்சி பலன்களும் சற்று மாறுபாடானதாகத்தான் இருக்கும்.
வருடாந்திர கிரகங்களான சனி, குரு, ராகு-கேதுக்கள் தரும் பலன்களில் கோட்சார அமைப்பில் ஒருவருக்கு சனியின் பலன்கள் மட்டுமே கூடுதலாக தலைதூக்கி நிற்கும். அதிலும் சனி சாதகமற்ற அமைப்பில் இருக்கும்போது மற்ற கிரகங்கள் நன்மை தரும் அமைப்பில் இருந்தாலும், அவைகள் தரும் நற்பலன்களை சனிபகவான் தடுப்பார்.
குறிப்பாக அஷ்டமச் சனி, ஏழரைச் சனி காலங்களில் சனியின் ஆதிக்கம் மட்டுமே ஒரு ஜாதகருக்கு முன் நிற்கும் என்பதால், இந்த காலகட்டங்களில் வருகின்ற குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி போன்றவை தங்களுடைய நல்ல, கெட்ட பலன்களை சனிக்கு முன்பாகத் தர இயலாது.
கோட்சார ரீதியில் தற்போது ரிஷப ராசியினர் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். அஷ்டமச் சனி காலத்தில் ஒருவருக்கு தொழில் முன்னேற்றமும், சொந்த வாழ்க்கையில் நல்ல பலன்களும், பண விவகாரங்களில் நன்மைகளும் நடக்காது என்பது விதி. இந்த அமைப்பின்படி பெரும்பாலான ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது நன்மைகள் எதுவும் நடந்து கொண்டிருக்கவில்லை.
குறிப்பாக இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையில் செட்டிலாக தடை செய்யும் அமைப்புகள்தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவ ரிஷப ராசிக்காரர்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் முன்னேற்றம் இல்லை. இது அஷ்டம சனி முடியும் காலமான 2020ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.
தற்போது வருகின்ற குரு பெயர்ச்சி, அஷ்டமச் சனியின் ஆதிக்கத்திற்கு முன்னர் பலன் தர இயலாது. ஒரு ஸ்தம்பித்த நிலையில்தான் பலன்கள் இருக்கும். எனவே ஏழாமிடத்துக் குருவால் கோட்சார ரீதியில் அது நடக்கும், இது நடக்கும் என்று எழுதி ரிஷப ராசிக்காரர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிவிட நான் தயாராக இல்லை. எனது இந்த பலனை மறுப்பவர்கள் அடுத்த வருடம் குரு மாறிய பிறகு ஒரு வருட காலத்தை பின்னோக்கிப் பார்க்கும்போது எனது பலனின் உண்மை தன்மையை உணருவார்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பெரிய நன்மை எதுவும் தந்துவிடப் போவதில்லை. அதே நேரத்தில் குருவின் பார்வை மூலம் ராசி உறுதித்தன்மை பெறுவதால் எதையும் சமாளிக்கும் மனோதிடம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது உண்டாகும். அதாவது அஷ்டமச் சனியால் உண்டாகும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதை சமாளிக்க கூடிய தைரியத்தை குருபகவான் தருவார் என்பதுதான் சரியான பலனாக இருக்கும்.
நான் ஏற்கனவே எழுதியுள்ளபடி ரிஷபராசி இளைய பருவத்தினர் தங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. அடுத்தவரை நம்பி எதிலும் இறங்க வேண்டாம்.
இந்த காலகட்டத்தில் எவரை நம்பியும் எந்தத் தொழிலும் செய்யக்கூடாது. கூடுமானவரை புதிய தொழில் செய்யாமல் இருப்பது நல்லது. அப்படியே செய்ய நேரிட்டாலும் அதிகமான முதலீடு இல்லாமல், சுத்தமாக பணத்தை முதலீடு செய்யாமல் உங்களுடைய திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து செய்யக்கூடிய தொழிலைச் செய்யலாம். பண முதலீடு கூடவே கூடாது அகலக் கால் வைக்காதீர்கள். வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் கசப்பு மட்டுமே வருகின்ற காலகட்டம் இது.
அதேநேரத்தில் ரிஷப ராசியில் பிறந்த எல்லோருக்கும் கெடுதலான பலன்கள் மட்டுமே நடந்து விடுவதில்லை. பிறந்த ஜாதக அமைப்பின்படி யோக தசாபுக்திகள் நடப்பவருக்கு கடுமையான கெடுபலன்கள் இருக்காது. அதே நேரத்தில் நல்லவைகளும் நடக்காது.
குருபகவான் 7-ஆம் இடத்திற்கு மாறுகின்ற நிலையில், தன்னுடைய சுப பார்வையால் 11, 1, 3 ஆகிய இடங்களை பார்வையிடுவார். அவர் பார்வை பெறும் பதினொன்றாம் இடம் லாபஸ்தானம் என்பதால் பாலைவனத்தில் நடந்து செல்பவனுக்கு நடுவே ஒரு சோலை தெரிந்தார் போல கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஒரு சில பணவரவு மற்றும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும். ஆயினும் அஷ்டமச் சனி நடந்து கொண்டிருப்பதால் அதுவும் தடைகளோடுதான் நடக்கும்.
இளைய பருவத்தினருக்கு குரு பலம் எனப்படும் திருமணத்தை நடத்தி வைக்க கூடிய ஏழாம் இடத்து குரு வந்திருப்பதால், தசாபுக்திபடி தாம்பத்திய சுகம் கிடைக்க கூடிய அமைப்பில் இருப்பவர்களுக்கு தற்போது திருமணம் நடக்கும். அதேநேரத்தில் திருமணத்தின் மூலமாக பலன்களை அனுபவிக்க முடியாதபடி ஒரு சில சிக்கல்கள் இருக்கும்.
சிலர் திருமணமான உடனே வேலை நிமித்தமாக வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு கணவர், மனைவியை விட்டு பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். இதற்கு திருமணம் ஆகாமலேயே இருந்திருக்கலாமே என்ற நினைப்பு மனதுக்குள் ஓடும்.
சுப கிரகமான குரு பகவான் ஏழாம் இடமான நட்பு வீட்டில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால், தொல்லைகளை சமாளிக்கக்கூடிய புத்துணர்வும், செயல்திறனும் ரிஷப ராசிக்காரர்களுக்கு உண்டாகும் எதையும் ஒரு எதிர்கால நோக்கோடு செயல்படுத்த முயற்சிப்பீர்கள். எதையும் தனி ஒருவராக போராடிப் போராடித்தான் செய்வீர்கள். யாரும் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்களைத் தேடி வந்து உதவிகளைச் செய்யவும் ஆள் இருக்காது.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகுவை பார்ப்பது இந்த பெயர்ச்சியின் மூலம் கிடைக்க இருக்கும் ஒரு அற்புதமான நிலை. இதன் மூலம் மூன்றாம் இடத்தின் சுப காரகத்துவமான முயற்சி, புகழ், கீர்த்தி ஆகியவை நடைபெறும். இதுவரை தாழ்வு மனப்பான்மையால் எதையும் முயற்சிக்காமல் இருந்தவர்கள் தற்போது தைரியமாக முயற்சி செய்வீர்கள்.
வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி, மீள முடியாமல் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு வழி பிறக்கும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள்.
பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் குருப் பெயர்ச்சியாக இருக்கும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேலதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும். கணவரும், குழந்தைகளும் சமர்த்தாக உங்கள் பேச்சை கேட்பார்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலை இனி இருக்காது.
இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும்.
சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு தங்க நகை சேமிக்க முடியும். முதல் திருமணம் முறிவடைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இப்போது இரண்டாவது திருமணம் நடக்கும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் அமையும்.
அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.
பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.
தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.
பரிகாரங்கள்:
அஷ்டமச் சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுங்கள். சென்னையில் இருப்பவர்கள் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரரை தரிசித்து அருள்பெறலாம். தென் மாவட்டத்தவர்கள் நெல்லை கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஜன்ம நட்சத்திரம் அன்று அர்ச்சனை ஆராதனைகளைச் செய்யுங்கள்.
ரிஷப ராசிக்கு கூறும் பலன்கள் ரிஷப லக்கினத்துக்கும் பொருந்துமா?
ReplyDelete