கைப்பேசி: 8681 99 8888
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு தற்போது நற்பலன்களைத் தரும் இடமாக சொல்லப்படும் ஐந்தாம் இடத்தில் இருந்து, சாதகமற்ற பலன்களை தருவதாக சொல்லப்படும் ஆறாம் இடத்திற்கு குரு மாறுதல் அடைகிறார்.
பொதுவாக ஆறாம் இடம் என்பது கடன், நோய், எதிரிகளை குறிக்கும் இடம் என்பதாலும், சுப கிரகமான குரு ஆறாம் இடத்தில் அமரும் நிலையில் கடன், நோய் தொந்தரவுகளை வளர்ப்பார் என்ற முறையிலும் ஆறாம் இடம் குருவுக்கு பகவானுக்கு ஏற்றதல்ல என்று சொல்லப்பட்டது. ஆனாலும் அனைத்து விதிகளும் விதிவிலக்குகளுக்கு உட்பட்டது என்ற முறையில், எல்லா ராசிகளுக்கும் குரு பகவான் ஆறாம் இடத்தில் ஒரே பலனைத் தருவதில்லை.
மிதுனம் என்பது ஒரு உபய ராசி என்பதாலும் உபய ராசிக்கு கேந்திராதிபதிகளாக வரும் குருவும், புதனும் மறைவு ஸ்தானங்களில் நல்ல பலன்களைத் தருவார்கள் என்ற விதிப்படியும், தற்போது தனக்கு பிடித்த அதிநட்பு வீடான ஆறாமிடத்தில் குருபகவான் அமர்ந்து இருப்பதாலும், ஆறாமிடத்து கெடுபலன்களை மிதுன ராசிக்கு கண்டிப்பாக குரு தரமாட்டார்.
அதைவிட மேலாக இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடத்தை புனித படுத்துபவர் குருபகவான் என்ற விதிப்படி அவர் பார்க்கும் இடங்களான பத்து, பன்னிரெண்டு, மற்றும் இரண்டாம் இடங்கள் தற்போது மிதுன ராசிக்கு புனிதமடைகின்றன.
இதில் பத்தாமிடம் என்பது வேலை, தொழில் போன்றவைகளை குறிக்கின்ற ஒரு இடமாகும். எனவே இதுவரை மிதுன ராசியில் பிறந்து நிம்மதியற்ற தொழிலில் இருப்பவர்களும், முன்னேற்றம் இல்லாத வேலையில் உள்ளவர்களும் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் வரும் அக்டோபர் மாதம் மாதத்திலிருந்து வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல முன்னேற்றங்களை காண்பீர்கள்.
தொழில் விஷயங்களில் விரிவாக்கங்கள், புதிய முயற்சிகள் போன்றவற்றை செய்வதற்கு யோசித்து, தயங்கி கொண்டிருந்தவர்கள் இனிமேல் தாராளமாக புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். படித்த படிப்பிற்கு ஏற்றார்போல வேலை கிடைக்காத மிதுன ராசி இளைய பருவத்தினருக்கு அவர்களின் மனதுக்கு ஏற்ற மாதிரியான வேலைவாய்ப்புகள் நிச்சயமாக உண்டு.
அடுத்து குருபகவான் ஆறாம் இடத்தில் இருந்து 12-ஆம் இடத்தைப் பார்ப்பது வீண் செலவுகளையும், விரயங்களையும் தருகின்ற ஒரு நிலை என்பதாலும் ஆறாம் இடத்தில் இருந்து அவர் பார்க்கிறார் என்பதாலும் செலவுகள் விஷயத்தில் இந்த வருடம் நீங்கள் கவனமுடன் இருந்தாக வேண்டி இருக்கும். 6-ஆம் இடம் என்பது கடன் தொந்தரவுகளை கொடுக்கக்கூடிய இடம்தான். இருப்பினும் கடன்களில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று சுபக்கடன் எனவும் அடுத்தது அசுபக்கடன் எனவும் சொல்லப்படக் கூடியது.
இங்கே கடன் வாங்காமல் எந்த மனிதரும் இருக்க முடியாது. கடன் வாங்கித்தான் தொழில் செய்கிறோம். தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடன் வாங்குகிறோம். கடன் வாங்காமல் எந்த ஒரு உயிரும் இருப்பதில்லை. அதேநேரத்தில் வாங்குகின்ற கடன் நல்லவழியில் செலவாகிறதா அல்லது கெட்ட வழியில் செலவாகிறதா என்பதுதான் நமக்குள்ள பிரச்சினையாக இருக்கும்.
குருபகவான் இயற்கை சுப கிரகம் என்பதாலும், அவர் ஆறாமிடத்தில் நட்பு வீட்டில் சுபமாக அமர்ந்திருப்பதாலும், இம்முறை மிதுன ராசிக்காரர்களுக்கு சுபக் கடன்களை மட்டுமே தருவார் என்பது உறுதி. இதில் சுபக் கடன் என்பது வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களான திருமணம், தொழில் அமைப்பு போன்றவர்களின் மட்டும்தான் இருக்கும்.
மருத்துவச் செலவு போன்ற தேவையில்லாத கடன்களை குருபகவான் ஒருபோதும் தருவதில்லை. ஆகவே ஆறாமிடத்தில் வருகின்ற குரு பகவானைப் பார்த்து மிதுன ராசிக்காரர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
அடுத்து குரு பகவான் தன்னுடைய 7-ஆம் பார்வையால் 12-ஆம் இடத்தைப் பார்ப்பது விரயங்களையும் குறிக்கும் என்பதால், இம்முறை மிதுன ராசியினர் வீட்டில் திருமணம், வீடு கட்டுதல் போன்ற சுப செலவினங்களும் அதற்கேற்றார்போல சுபக்கடன் வாங்கும் நிலையும் இருக்கும்.
இதுவரை வீடு இல்லாதவர்கள் கடன் வாங்கி வீடு கட்டவோ அல்லது ஹவுசிங் லோன் போட்டு, பிளாட் வாங்குவது போன்ற நற்பலன்கள் இருக்கும். சிலருக்கு வாகன கடன்கள் ஏற்படலாம். நல்லவைகளை வாங்கத் தூண்டும் கிரகமான குரு இம்முறை உங்களை நல்ல செலவு செய்ய வைப்பார்.
அடுத்து குரு பகவான் தன்னுடைய 9ம் பார்வையால் இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கிறார். ஏற்கனவே இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் சிலர் மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை சற்று முன்பின்னாகத்தான் இருக்கிறது.
நினைத்த இடத்தில் பணம் கிடைக்காமல் சிலர் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே வந்து கொண்டிருக்கின்ற வருமானத்திலும் சிலருக்கு துண்டு விழுந்திருக்கிறது. நிரந்தர வருமானம் இல்லாமல் சிலர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 100 ரூபாய் கிடைக்க வேண்டிய இடத்தில் 50 ரூபாய் கூட கிடைக்காமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்கள் அதிகம் பேர்.
இது போன்றவர்களுக்கு தன ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் இந்த அக்டோபர் மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பொருளாதார நிலைமை நன்கு மேம்படும். தொழில் வேலை அமைப்புகளில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
இரண்டாம் இடத்தைப் பார்க்கும் குரு பகவானால் இதுவரை திருமணம் ஆகாத சிலருக்கு குடும்பம் அமையும். 35 வயது தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண், பெண்களுக்கு இது போன்று குடும்ப ஸ்தானத்திற்கு சுப கிரகமான குருவின் பார்வை கிடைக்கும் போதுதான் திருமண அமைப்பு கூடி வரும் என்பதால் இம்முறை திருமணத்திற்கு தாமதமானவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடைபெறும்.
உங்களில் நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்த அழுத்தம் போன்றவைகள் கண்டு பிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக் குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.
நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.
பெண்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்.
சிலருக்கு வெளியூரிலோ, வெளிமாநிலத்திலோ, தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தூர இடங்களுக்குச் செல்லும்படி இருக்கும். இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் கவனத்துடன் செய்ய வேண்டும்.
குருபகவான் ஆறாமிடத்தில் வலுப் பெறுவதால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆக வேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்னையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதிக வட்டிக்கு வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் தொல்லையில் கொண்டு போய் விடும் என்பதால் எச்சரிக்கை தேவை.
இதுவரை தாமதமாகி வந்த வங்கிக் கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார். ஆனால் அந்தக் கடனைக் கட்ட முடியாமல் சிக்கல்கள் வரும். எனவே கடன் வாங்குவதில் உஷாராக இருங்கள்.
ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட்கார்டு உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும்.யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆறாமிடத்துக் குரு நல்ல நண்பர்களையும் சிறு பிரச்னைகளால் எதிரிகளாக மாற்றுவார் என்பதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது.
பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு அதிகமாக செலவு இருப்பதால் வரவுக்கேற்ப செலவு செய்வது நல்லது. வீண்விரயங்கள் ஏற்படும் காலம் இது என்பதால் செலவு செய்யும் முன் நன்கு யோசனை செய்து செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிருங்கள். செலவுகளை குருபகவான் இழுத்து விடுவார் என்பதால் கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை நிலத்திலோ, வேறு வகையான விஷயத்திலோ முதலீடு செய்வது நல்லது.
பொதுவில் மிதுனத்திற்கு கெடுதல்கள் எதுவும் இல்லாமல் நற்பலன்களை மட்டுமே தரக்கூடிய குரு பெயர்ச்சி இது.
பரிகாரம் :
குருபகவானின் நன்மைகளை கூடுதலாகப் பெற வியாழக்கிழமை தோறும் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திப் பெருமானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் ஆடை சமர்ப்பித்து, மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வாருங்கள். வயதில் மூத்தவர்கள் மனம் குளிரும் காரியங்களை செய்யுங்கள்.
No comments :
Post a Comment