Thursday, November 2, 2017

Meenam : 2017 November Month RasiPalangal – மீனம் : 2017 நவம்பர் மாத பலன்கள்

மீனம்:

நவம்பர் மாதம் முழுவதும் ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்து ராசி மற்றும் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த மாதம் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். ஐந்தில் இருக்கும் ராகு நல்ல பலன்களைச் செய்வார் என்பதால் மிக முக்கியமான நபர்களிடமிருந்து இப்போது எதிர்பார்க்கும் உதவிகளைப் பெற முடியும். பதினொன்றில் இருக்கும் கேது இதுவரை தரிசிக்க இயலாத புனிதத் தலங்களை சென்று பார்க்கும் வாய்ப்பினை இப்போது தருவார்.

சுக்கிரன் எட்டில் இருப்பதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள். சிலருக்கு முதல் திருமண தொடர்புகளின் மூலம் நிம்மதியற்ற சூழல்கள் இருக்கும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சகோதர உறவு சற்று முன்பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம்.

வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். பணம் புரளும் இடங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். சுடச்சுடத்தான் தங்கம் பொலிவு பெறும் என்பது போல கடந்த இரண்டு வருடங்களில் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களால் 2018 முதல் மிகச் சிறந்த முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள் என்பது உறுதி. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடையேதும் இல்லை. வருமானம் குறையாது. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும்.

3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம்தேதி அதிகாலை 2.29 முதல் 18-ம் தேதி மதியம் 12.49 வரை சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலை பாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment