Wednesday, November 1, 2017

2017 November Month Natchathira Palangal - 2017 நவம்பர் மாத நட்சத்திர பலன்கள்

அஸ்வினி:

அஷ்டமச் சனி முடிந்து விட்டதால் அஸ்வினிக்கு ஆனந்தம் தரும் மாதம் இது. இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். இதுவரை உங்களுக்கு எதிலெல்லாம் பிரச்னைகள் இருந்து வந்ததோ அவை அனைத்தும் விலகப் போகிறது. அவரவர் வயது இருப்பிடம் தகுதி திறமைக்கு ஏற்றார்போல இனிமேல் நன்மைகள் நடக்கத் துவங்கும். இளைய பருவத்தினருக்கு நினைப்பது நடக்கும் மாதமாக இருக்கும். வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்களை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தோழிகளால் இனிமையான அனுபவங்கள் இருக்கும். செலவுகள் உள்ள மாதமாக இது இருக்கும். நவம்பரில் நல்லவைகளே அதிகம்.

பரணி:

பரணி நட்சத்திரக்காரர்களின் பிரச்னைகள் அனைத்தும் நல்லவிதமாகத் தீரப் போவதற்கான ஆரம்ப மாதம் இது. அஷ்டமச் சனி முடிந்து விட்டதால் இனி அப்பாடா என்று நிம்மதியாக இருப்பீர்கள். சிக்கல்கள் விலகுவதற்கான அறிகுறிகள் இந்த மாதமே தெரியத் துவங்கும். இனிமேல் உங்களுக்கு ஒரு குறையும் இல்லை. எதையும் சமாளிப்பீர்கள். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் இந்த மாதம் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் அது விலகுவதை உணருவீர்கள்.

கிருத்திகை:

உங்களில் மேஷராசியில் பிறந்தவர்களுக்கு பிரச்னைகள் விலகும் மாதம் இது. அஷ்டமச் சனி விலகுவதால் இனிமேல் அனைத்திலும் தடைகள் விலகி நன்மைகள் நடப்பதை இந்த மாதம் முதல் உணரத் தொடங்குவீர்கள். அதே நேரம் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எதிலும் நிதானமாக இருக்க வேண்டிய மாதம் இது. அவர்களுக்கு வேலை தொழில் விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். ரிஷபத்தில் பிறந்தவர்கள் தற்போது எவ்வித புது முயற்சிகளும் செய்யாமல் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு மாதம் முழுவதும் பரபரப்பும் டென்ஷனுமாக இருக்கும். உங்களை அறியாமலேயே நெருக்கமான சிலர் மீது கோபப்படுவீர்கள்.

ரோகிணி:

நட்சத்திரநாதன் சந்திரன் பலவீனமாக இருப்பதால் இந்த மாதம் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் தெளிவான முடிவு எடுப்பதற்கு தயங்குவீர்கள். சிலருக்கு இனம் புரியாத தயக்கங்கள், மனக்கலக்கங்கள் இருக்கும். மாத இறுதியில் கிரகநிலைகள் மாறுவதால் அனைத்துப் பிரச்னைகளும் சூரியனை கண்ட பனிபோல கடைசி வாரத்தில் இருக்காது என்பது உறுதி. பெண்களால் செலவுகள் இருக்கும். சகோதரிகளுக்கு உதவீர்கள். ஒரு சிலர் வெளிமாநிலம், வெளிநாடு போக நேரிடும். பிறந்த இடத்தை விட்டு தூரஇடங்களில் இருப்பவர்களுக்கு சிக்கல்கள் எதுவும் இருக்காது.

மிருகசீரிஷம்:

உங்களில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு மேன்மையான பலன்களும் ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சற்றுச் சுணக்கமான பலன்களும் நடக்கும் மாதம் இது. ராசிநாதன் செவ்வாய் மதம் முழுவதும் வலுவான நிலையில் உள்ளதால் உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். மாதம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும். பெண்களுக்கு இது மிகவும் நல்ல மாதம்.

திருவாதிரை:

திருவாதிரையில் பிறந்தவர்களுக்கு கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கை கொடுக்கும். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு இப்போது நல்ல மாற்றங்கள் இருக்கும். பெண்களால் லாபம் கிடைக்கும் மாதம் இது. சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும்.

புனர்பூசம்:

உங்களில் சிலர் மலையும் மலைசார்ந்த இடங்களுக்கு பயணம் செல்லுவீர்கள். சிலருக்கு புனிதப் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இளம் பருவத்தினருக்கு திருமண உறுதித் தகவல்கள் உண்டு. சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இது ஒரு திருப்புமுனையான மாதம். கால்நடை மருத்துவர்கள், வளர்ப்புப் பிராணிகள் விற்பவர்கள் போன்றவர்களுக்கு மேன்மைகளை இந்த மாதம் தரும். உறவினர்களால் வீண் விரையங்கள் இருக்கும் என்பதால் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணருவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு.

பூசம்:

இந்த மாதம் பூச நட்சத்திரக்காரர்களுக்கு பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இருக்காது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்தையும் மனைவியின் பொறுப்பில் விடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். அலுவலகங்களில் இணக்கமான சூழல் இருக்கும். சிலருக்கு தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் மாதம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள்.

ஆயில்யம்:

பருவ வயதினர் உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திக்கும் மாதம் இது. சாதகமான கிரக அமைப்பால் எதையும் அறிவால் சாதிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு இந்த மாதம் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நல்ல மாதம் இது. மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷங்கள் உண்டு. கோர்ட் கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் இருப்பவர்களுக்கு வழக்குகள் சாதகமாகும். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் உண்டு. குழந்தைகள் கேட்பதை வாங்கித் தர முடியும்.

மகம்:

சிம்மத்தின் சோதனைகள் விலகி விட்டதால் மகத்திற்கு மகத்தான மாதம் இது. குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும். தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கலாம். நகைகள் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். எந்த வித தொல்லைகளோ கஷ்டங்களோ இனிமேல் இருக்காது. நல்ல பலன்களையும், பணவரவையும், பொருளாதார மேம்பாடுகளையும் தரக்கூடிய கிரக அமைப்புகள் உருவாகியுள்ளது என்பதால் இனிமேல் உங்களுக்கு எவ்வித தொல்லைகளும் இல்லை. அதேநேரம் எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் இல்லாமல் இப்போது கிடைக்கும்.

பூரம்:

பூரம் நட்சத்திரத்தின் பின்னடைவுகள் பூராவும் விலகும் மாதம் இது. இதுவரை உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்திலும் இருந்த தடைகள் இப்போது முதல் விலகுகிறது. தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்ற முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு. சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். தாயார் வழியில் நல்லவைகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும்.

உத்திரம்:

நவம்பர் மாதம் முழுவதும் உத்திரம் நட்சத்திரக்காரர்களின் பொருளாதார நிலைமை நல்லபடியாகவே இருக்கும். செலவுகள் அதிகமாகவே இருக்கும் என்றாலும் பணவரவிற்குப் பஞ்சம் இருக்காது. தொடக்கத்தில் சிலநாட்கள் மட்டும் ஒரு தெளிவான முடிவு எடுக்கமுடியாமல் மனம் அலைபாயும் நாட்களாக அமையும். உங்களில் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற வகைகளில் எதிர்பாராத ஒரு தொகை உண்டு. அதேநேரத்தில் தொகை கிடைத்ததும் அதிலிருந்து விலகி விடுவது நல்லது. கிடைத்ததை மீண்டும் முதலீடு செய்தால் நஷ்டம் வரும் அமைப்பு இருக்கிறது.

அஸ்தம்:

அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஜெயிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பீர்களோ என்று நண்பர்களும் குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இடையூறுகள் எதுவும் இருக்காது. நவம்பர் மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். எந்த ஒரு விஷயத்தையும் வெற்றியாக முடிக்க முடியும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்களுக்குள் இணக்கமான நிலை இருக்கும். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் வரும்.

சித்திரை:

இந்த நட்சத்திரத்தினுள் அடங்கி இருக்கும் கன்னி, துலாம் ஆகிய இரண்டு ராசிக்காரர்களுக்குமே நல்ல மாதம் இது. மந்தமாக இருக்கும் தொழில், வியாபாரம் போன்றவைகள் இனி விறுவிறுப்புடன் நடக்கும். கடன் தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். நண்பர்கள் உதவுவார்கள். சிலர் நீண்டதூரப் பயணம் செய்வீர்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் அமையும்.

சுவாதி:

இந்த மாதம் சுவாதி நட்சத்திரக்காரர்கள் மதிப்பு வாய்ந்த செயல்களைச் செய்து உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். குறிப்பாக சகோதர, சகோதரிகளுக்கு தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவீர்கள். சிலருக்கு பெண்களால் மறைமுகமான லாபங்கள் இருக்கும். திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் இப்பொழுது கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் இனி சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டில் சுபநிகழ்ச்சி மூலமும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலமும் செலவுகள் இருக்கும் என்பதை கிரகநிலைகள் காட்டுகின்றன.

விசாகம்:

இதுவரை தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த விசாகம் நட்சத்திரக்காரர்கள் இப்போது உங்களின் தொழில் முன்னேற்றம் பெறுவதை கண்ணெதிரே காண்பீர்கள். உங்களில் விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு இனிமேல் அனைத்து பின்னடைவுகளும் மாறி சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சாதிப்பீர்கள். இனிமேல் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். பணவரவு உண்டு. உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும்.

அனுஷம்:

அனுஷத்திற்கு ஜென்மச் சனி விலகி விட்டதால் கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மன அழுத்தம் தந்து வந்த நிகழ்வுகள் இனிமேல் ஒரு முடிவுக்கு வரத் துவங்கும். அலுவலகங்களில் பொறாமையால் பாதிக்கப்பட்டவர்கள் பதிலடி கொடுக்கத் தொடங்குவீர்கள். பணவரவுக்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். எல்லா நல்லவைகளும் நிதானமாகத்தான் நடக்கும். அவசரப் படாதீர்கள். இனிமேல் உங்களுக்கு கெடுபலன்கள் இல்லை. இந்த மாதம் உண்டாகும் அடிப்படை அம்சங்கள் சிலவற்றால் படிப்படியாக நல்லவைகள் நடக்க ஆரம்பித்து அடுத்த வருடம் முதல் பிரச்னை இல்லாத வாழ்க்கை உங்களுக்கு உண்டு.

கேட்டை:

கேட்டை நட்சத்திரத்திற்கு கெட்டபலன்கள் இன்றி இனி நீங்கள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க ஒரு அச்சாரமான மாதமாக இது அமையும். முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இனி நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவீர்கள். வழக்கு, காவல் நிலையம் என அலைந்து கொண்டிருப்பவர்கள் சாதகமான திருப்பங்களை காண்பீர்கள். தீர்ப்பு இனி சாதகமாக அமையும். வாழ்க்கை இனி செட்டிலாகும். கணவர் திருந்துவார். வழக்கு சமரசமாகும். இனிமேல் உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். இனி எல்லாம் சுகமே.

மூலம்:

மூலத்திற்கு திருப்பங்களைக் கொடுக்கின்ற மாதம் இது. உங்களை பிடிவாதக்காரர் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள் நல்ல மனதைத் தெரிந்து கொண்டு அருகில் வருவார்கள். அனைத்தும் நன்மையாகும் மாதம் இது. நட்சத்திர நாதன் கேது நல்ல நிலையில் இருப்பதால் மாதம் முழுவதும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்களாலும் பிறருக்கு உதவ முடியும்.. உதவும் அளவிற்கு கையிலும் பணம் இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பேசித் தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் நன்மை உண்டு. வெகுதூரத்தில் இருக்கும் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

பூராடம்:

பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தின் முற்பகுதியை விட 15-ந் தேதிக்கு பிறகு வரும் பிற்பகுதி சிறப்பானதாக அமையும். மாத ஆரம்பத்தில் உங்களை குழப்புவதற்கென்றே சிலர் அருகில் இருப்பார்கள். யாருடைய பேச்சையும் கேட்டு செயல்படாமல் என்றுமே நீங்கள் தனித்தன்மை உடையவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் சுயமாகவே ஒரு முக்கிய முடிவு எடுப்பீர்கள். சிலருக்கு தந்தையின் மருத்துவச்செலவுகள் இருக்கும். சிலருக்கு பங்குச்சந்தையில் லாபம் வருவது போல் காட்டி பிறகு நஷ்டம் ஏற்படலாம் என்பதால் யூக வணிகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

உத்திராடம்:

உங்களில் ராகுதசை நடப்பவர்களுக்கு அதிக நன்மைகள் நவம்பர் மாதத்தில் இருக்கும். சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் உண்டு. லயசனிங் எனப்படும் பணத்திற்காக வேலை முடித்துக் கொடுப்பவர்களுக்கு காரியங்கள் சுலபமாக முடியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரக் காரர்கள் எதிலும் யோசித்து செயல்படுவீர்கள் என்பதால் உங்களின் நீண்டகால பிரச்னைகளை தற்போது வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

திருவோணம்:

உங்களில் இளையபருவத்தினர் சிலருக்கு இந்த மாதம் காதல் அனுபவங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையால் லாபம் உண்டு. சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். யாரிடமும் சண்டையோ வாக்குவாதமோ செய்யாதீர்கள். சிலருக்கு வி.ஐ.பி.க்கள் அறிமுகம் இந்த மாதம் உண்டு. மூத்தவர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். சிலர் தூரப் பயணங்கள் செய்வீர்கள்.

அவிட்டம்:

உங்களில் மகர ராசிக்காரர்களை சுற்றியுள்ளவர்கள் வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். அதனால் கோபம் வரும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. கிரகநிலைகள் உங்களை கோபக்காரனாக்கி அதன்மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்கும் என்பதால் அனைத்து விஷயங்களிலும் பக்குவமாக நடந்துக் கொள்வது நல்லது. அதேநேரம் கும்பத்தினருக்கு இதுபோன்ற பிரச்னைகள் எதுவும் இருக்காது. அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் அரட்டைகளில் ஈடுபட வேண்டாம். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும் என்பதால் பேசுவதில் கவனமாக இருங்கள்.

சதயம்:

சதயத்தினருக்கு இந்த மாதம் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பண வரவும், வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும் நிகழ்ச்சிகள் இப்போது நடக்கும். இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. மனதில் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனி இருக்காது. எதை நினைத்து கலங்குகிறோம் என்று தெரியாமல் இனம் புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் உற்சாகம் அடைவீர்கள். உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள்.

பூரட்டாதி:

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் மனம் உற்சாகமாக இருக்கும் மாதம் இது. வீட்டில் சுப காரியங்களுக்கான உறுதி நிகழ்வுகள் இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் இருக்கும். வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் அனைத்தும் இனி உங்கள் மனம் போல நிறைவேறும். சிலர் ஏதேனும் ஒரு சாதனைச் செயல் புரிந்து புகழடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். வேலை செய்யும் இடங்களில் புகழப்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கும். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும்.

உத்திராட்டாதி:

இந்தமாதம் உத்திராட்டாதி நட்சத்திரக்காரர்கள் சின்ன விஷயத்திற்கு கூட எரிச்சல் அடைவதற்கோ, தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு பெயரைக் கெடுத்துக் கொள்வதற்கோ வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு இப்போது வீடு, குடும்பம், வேலை, தொழில் போன்ற விஷயங்களில் தவிர்க்க முடியாத மாறுதல்கள் இருக்கும். அந்த மாறுதல்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லவையாக அமையும் என்பதால் வருகின்ற மாறுதல்களை ஏற்று கொண்டு அதன்படி நடப்பது நல்லது. கணவன் மனைவி உறவு சற்று அப்படி இப்படித்தான் இருக்கும். விட்டுக் கொடுத்து போவது நல்லது.

ரேவதி:

ரேவதி நட்சத்திரக்காரர்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு இந்த மாதம் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போவதற்கோ, சம்பளம் தாமதம் ஆவதற்கோ வாய்ப்புக்கள் இருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. நவம்பர் மாதம் சில குழப்பங்களை ஏற்படுத்தினாலும் சமாளித்து விடுவீர்கள். ஐந்தில் இருக்கும் ராகு சுபத்தன்மை அடைவதால் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானங்கள் உண்டு. எனவே சுய தொழிலர்களுக்கு எவ்வளவு பிரச்னை இருந்தாலும் பணத் தட்டுப்பாடு இருக்காது. செலவுக்கேற்ற பணவரவு இருக்கும். பொருளாதார நிலைமை கெடாது. பணம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம்.

No comments :

Post a Comment