Tuesday, February 16, 2016

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 75 (16.2.2016)

எம். வி. எஸ். செல்வபாண்டி, சென்னை.

கேள்வி :

குருஜி அவர்களுக்கு வணக்கம். 1993 முதல் 2003 பிப்ரவரி வரை சிங்கப்பூரில் வேலை செய்தேன். அதுதான் இதுவரை நான் சம்பாதித்தது. 2005-ல் திருமணமாகி இரண்டு ஆண்குழந்தைகள். 2011-ல் ஊராட்சித்தலைவருக்கு மனைவியை நிறுத்தி தோல்வி. 2011 அக்டோபரில் சென்னை வந்து மளிகைக்கடை நடத்தி சரியாகப் போகாததால் நகைஅடகுக்கடை மற்றும் பைனான்ஸ் செய்கிறேன். தொடர்ந்து செய்யலாமா? அல்லது வெளிநாடு செல்லலாமா? என் பெயரை மேலே சொன்னபடி நியூமராலஜிப்படி மாற்றி இருக்கிறேன். சரியாக உள்ளதா என்பதைச் சொல்லவும்.


சனி
ராசி
சூ,சுக்

சந்.செ 
ராகு
புத
லக்
குரு

பதில் :

(தனுசுலக்னம். மகரராசி. இரண்டில் செவ்வாய் ராகு, ஆறில் சனி, எட்டில் சூரியன் சுக்கிரன், ஒன்பதில் புதன், பனிரெண்டில் குரு 05.08.1971 மாலை 5.15 சிவகங்கை)

நான் அடிக்கடி எழுதுவதைப் போல லக்னாதிபதி வெளிநாட்டைக் குறிக்கும் பனிரெண்டாம் பாவத்தில் அமர்ந்து எட்டு, பனிரெண்டாம் அதிபதிகள் சுபத்துவம் பெற்றால் ஒருவர் வெளிநாட்டில் சம்பாதிப்பார் எனும்படி உங்களுக்கு தனுசு லக்னமாகி லக்னாதிபதி பனிரெண்டில் அமர்ந்து அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சமாகி எட்டுக்கு அதிபதி சந்திரன் அவருடன் இணைந்து தனது எட்டாம் வீட்டை பார்த்து பலப்படுத்தியதால் ராகுதசை குருபுக்தி ஆரம்பித்தவுடன் வெளிநாடு சென்று சம்பாதித்து கேதுபுக்தியில் கேது மாற்றத்தைத் தருவார் எனும் விதிப்படி தாய்நாடு திரும்பி விட்டீர்கள்.

தற்பொழுது மஞ்சள் நிறத்தைக் குறிக்கும் தனகாரகனான குருதசை நடப்பதால் நகை அடகுக்கடை வைத்து வட்டித்தொழில் செய்கிறீர்கள். அடுத்து உங்கள் ராசிக்கு ஏழரைச்சனி நடக்கவுள்ளதாலும் மகனுக்கும், மனைவிக்கும் அஷ்டமச்சனி நடப்பதாலும் குருதசை கேதுபுக்தியில் 2017 இறுதியில் மீண்டும் வெளிநாடு செல்வீர்கள். வெளிநாடு செல்ல உங்களை முடிவெடுக்க வைப்பதற்காகவே இங்கு கஷ்டநிலைக்கு உங்களைக் கிரகங்கள் கொண்டு செல்கின்றன. பெயர் மாற்றுவதில் ஒரு பலனும் இல்லை என்பதையும் அடிக்கடி எழுதி வருகிறேன்.

ராமசாமி, கோவை – 33.

கேள்வி:

நாற்பத்தைந்து வயதாகும் என் மகனுக்கு திருமணம் நடைபெறுமா நடைபெறாதா என்பதை உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுகிறேன். காளகஸ்தி கூட சென்று வந்தாகிவிட்டது. எனக்கும் 74 வயது நடந்து கொண்டிருக்கிறது. எப்போது திருமணம் நடைபெறும்?


சூ,புத 
சுக்,சனி
லக்
ராசி

செவ், 
ராகு
சந்
குரு

பதில் :

(கும்பலக்னம். தனுசுராசி. நான்கில் சூரியன், புதன், சுக்கிரன் சனி, பத்தில் குரு பனிரெண்டில் செவ்வாய், ராகு 10.06.1971 இரவு 11.40 கோவை)

மகன் ஜாதகத்தில் தாம்பத்யசுகத்தைத் தரக்கூடிய களத்திரக்காரகன் சுக்கிரன் ஒரே டிகிரியில் சனியுடன் இணைந்து பலவீனமாகி ராசிக்கு இரண்டாம் வீட்டில் உச்ச செவ்வாயும் ராகுவும் ஒரேடிகிரியில் இணைந்ததால் இதுவரை திருமணம் ஆகவில்லை.

சுக்கிரனும் குருவும் மிக நெருக்கமாக இணைந்தாலோ சமசப்தமமாக நேருக்குநேர் இருந்தாலோ இருவருமே தங்களது காரகத்துவங்களைத் தரும் சக்தியை இழப்பார்கள் என்பதையும் நான் அடிக்கடி எழுதிவருகிறேன். அதன்படி உங்கள் மகனின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் சரியாக 180 டிகிரி அளவில் இருப்பது மனைவி சுகத்தையும், புத்திரபாக்கியத்தையும் தடுக்கும் ஒரு அமைப்பாகும்.

தற்பொழுது ராகுதசையில் ராசிக்கு ஏழுக்குடைய புதனின் புக்தி 2016 ஜூன் முதல் ஆரம்பிக்கவுள்ளதால் பரம்பொருளை வேண்டி பிரார்த்திப்பதன் மூலமாகவே கர்ம வினைகளை மாற்றிக்கொள்ள முடியும். ஏற்கனவே முறையானபடி காளகஸ்தி சென்று வழிபட்டிருக்க மாட்டீர்கள். மீண்டும் குடும்பத்துடன் மகனின் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் சூரியன் அஸ்தமிக்கும் முன்பே சென்று தங்கி கடுமையான தோஷம் உள்ளதால் சர்ப்பசாந்திபூஜை செய்யாமல் அதிகாலை அய்யன் காளத்திநாதனுக்கு நடைபெறும் ருத்ராபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டு தடைநீக்க வேண்டும் என்று வேண்டித் திரும்புங்கள். கண்டிப்பாக திருமணம் நடக்கும்.

என். ராமநாதன், கோவை – 14.

கேள்வி :

மாலைமலரில் நீங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. என் மகனுக்கு திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகிறது. ஆறு மாதத்தில் இருவருக்கும் பிரச்னைகள் வந்து தற்பொழுது பிரிந்து இருக்கிறார்கள். எந்தவித பேச்சு வார்த்தையும் இருவருக்கும் இல்லை. இவர்கள் ஒன்று சேர்வார்களா? இவர்களின் எதிர்காலம் எப்படி?

சந்
ராசி

சூ,புத 
சுக்
குரு
கேது

செவ், 
சனி
லக்

செவ் குரு சந்
ராசி
சுக்
கேது
லக்
சனி
புத சூரி
பதில் :

(கணவனுக்கு கன்னிலக்னம், கும்பராசி இரண்டில் செவ்வாய், சனி. மூன்றில் கேது. நான்கில் குரு, பதினொன்றில் சூரியன், புதன் சுக்கிரன், மனைவிக்கு தனுசு லக்னம் மிதுனராசி லக்னத்தில் சனி. நான்கில் செவ்வாய், ஆறில் குரு ஒன்பதில் சுக்கிரன், கேது பத்தில் சூரியன், பதினொன்றில் புதன்)

மருமகளுக்கு லக்னத்திற்கு ஏழாமிடத்தை சனி, செவ்வாய் பார்த்து ராசிக்கு ஏழாமிடத்தில் சனிபகவான் அமர்ந்து தாம்பத்ய சுகத்திற்கு காரணமான சுக்கிரன் ராகு கேதுக்களுடன் இணைந்து பலவீனமாகி அம்சத்தில் நீசமடைந்த அமைப்புள்ள ஜாதகம். இது போன்ற அமைப்புள்ள ஜாதகத்திற்கு 30 வயதிற்கு முன் திருமணம் செய்தது தவறு.

அதேபோல மகனுக்கு இரண்டில் செவ்வாயும் உச்சசனியும் அமர்ந்து ஏழுக்குடைய குருபகவான் கேந்திராதிபத்திய தோஷத்தில் வலிமையிழந்த தாரதோஷ அமைப்புள்ள ஜாதகம். இது போன்ற ஜாதகங்களை இணைத்து வைத்தது தவறு. அதோடு இருவருக்குமே முறையான திருமண அமைப்புகளை தரக்கூடிய தசாபுக்தியில் திருமணம் ஆகவில்லை. இருவருக்குமே ராசிக்கு ஏழுக்குடையவன் வலுவிழந்து பதினொன்றுக்குடையவன் வலுவாவதும் சரியான அமைப்பல்ல.

மருமகளின் குணப்படி ஈகோ உள்ளவராக இருப்பார். அவரது ஜாதகத்தில் சந்திரனை சனி செவ்வாய் பார்ப்பதால் யார் சொன்னாலும் கேட்கக் கூடியவரும் அல்ல. பொறுத்துப் போவதோ விட்டுக் கொடுப்பதோ அவரிடம் இருக்காது. எனவே நல்ல பதில் சொல்வதற்கில்லை.

குலதெய்வத்திற்கு எந்த எண்ணெயில் எத்தனை தீபம் போட வேண்டும்?

எஸ். மணிகண்டன், புரசைவாக்கம்.

கேள்வி :

ஜோதிடக்கலை அரசருக்கு வணக்கம். நாங்கள் அய்யர் குடும்பம். குலதெய்வம் மயிலம் முருகப்பெருமான். திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்தநாளில் குலதெய்வக் கோவிலுக்கு செல்லலாம்? எந்த எண்ணெயில் எத்தனை தீபம் போடவேண்டும்? மனதிற்குப் பிடித்த பெண் அமைய மயிலம் முருகனைத்தான் நம்பி உள்ளேன். தற்சமயம் திருக்கணிதப்படி ராகுதசை கேதுபுக்தியும் வாக்கியப் பஞ்சாங்கப்படி ராகுதசை புதன்புக்தியும் நடைபெறுகிறது. எப்பொழுது திருமணம்? மனதில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய நல்லதொரு பரிகாரத்தினைக் கூறி வழி காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில் : 


உலகின் மேலான நமது மதத்தில் குலதெய்வம் என்பது அனைத்திலும் மிக உயர்ந்த எல்லாவற்றிற்கும் மேலான ஒரு உச்ச சக்தி. குலதெய்வம் என்பது உங்களுக்கு மட்டுமேயான உங்கள் குலத்தைக் காக்கும் கருணை வடிவிலுள்ள உயர்தெய்வம். ஒருவர் எத்தனை இஷ்டதெய்வங்களை வணங்கினாலும் குலதெய்வ வழிபாட்டுக்கு ஒருபோதும் இணையாகாது.


குலதெய்வத்தை எப்படி வணங்குவது என்று ஒரு ஜோதிடரிடமோ மற்றவரிடமோ கேட்கத் தேவையில்லை. ஆத்மசுத்தியுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் குலதெய்வத்தை எப்படி வணங்கினாலும் அந்த மகாசக்தி ஏற்றுக் கொள்ளும். ஏனென்றல் அது உங்களின் தெய்வம்.

பொதுவாக அர்ச்சனை செய்பவனுக்கு ஒரு அருள்... அர்ச்சனை செய்யாத ஏழைக்கு தனிஅருள் என்றோ.. இலவச தரிசன வரிசையில் வருபவனுக்கு அரைக்கண் அருள் பார்வை, பணம் கொடுத்து கட்டண தரிசன வரிசையில் வருபவனுக்கு இருகண் முழுப்பார்வை என்றோ தெய்வம் பிரித்துப் பார்ப்பது இல்லை. நாம்தான் அர்ச்சனை, விளக்கேற்றுதல், மலர்மாலை போன்ற சடங்குகள் மூலம் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே தெய்வத்தைப் பிரித்து வைக்கிறோம்.

மூலஒளி என்பது ஒன்றே ஒன்றுதான் அதிலிருந்து கிளைத்தவைகள்தான் மற்ற ஒளிகள். எனவே ஒரு தீபம் ஏற்றினாலும் ஓராயிரம் தீபம் ஏற்றினாலும், வழிபாட்டில் ஒரே பலன்தான். பல தீபங்கள் ஏற்றுவதன் மூலம் கோவிலுக்கு வெளியே நெய் விற்பவர் மற்றும் எண்ணெய் விற்பவரின் வீடுகள் வெளிச்சமாக இருக்கும். அவ்வளவுதான்.

நீங்கள் இதயத்தில் ஒளியோடு இறையை வணங்கி தீபம் ஏற்றாமல் வெளியே வந்தாலும் தெய்வம் உங்கள் மேல் குறை காணாது. உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றாமல் போகாது. சடங்குகளும், சாஸ்திரங்களும் சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து உதவி செய்து கொண்டு நாம் நன்றாக வாழ்வதற்கு முன்னோர்கள் உருவாக்கியவைதான். காலப்போக்கில் நமது வசதிக்கேற்ப அனைத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் அழியும், உருமாறும், புதிதாக வரும். ஆனால், வழிபாடு என்றும் நிரந்தரமாக இருக்கும்.

ஐந்து நிமிடம் கூட கருவறை முன்பு நிற்கமுடியாத அளவிற்கு சிலஆலயங்களில் மக்கள்கூட்டமும், அதே ஐந்து நிமிடத்தைக் கூட பரம்பொருளின் வழிபாட்டிற்கு ஒதுக்க முடியாமல் பரபரப்பாக இயங்கும் இந்த விஞ்ஞான வளர்ச்சியடைந்த சமுதாயமும் இருக்கும் முரண்பட்ட உலகில் குலதெய்வ வழிபாடு மட்டுமே ஒருமனிதனை நல்வழியில் செலுத்தி அவனுக்கு அனைத்து நன்மைகளையும் தரும்.

குலதெய்வ வழிபாட்டிற்கென ஜென்மநட்சத்திரம் போல தனிப்பட்ட நாட்கள் எதுவும் இல்லை. அனைத்து நாட்களும் குலதெய்வத்தின் முன் நல்ல நாட்கள்தான். மகாசிவராத்திரி கூட சில விதிகளுக்காகத்தான். சில குறிப்பிட்ட குலதெய்வக் கோவில்களில் அந்த மகாசக்திக்கு பிடித்தமான இச்சைப் பொருட்களைப் படைத்து வணங்குவது ஒரு சம்பிரதாயம் என்பதால் உங்கள் குலதெய்வத்திற்கு பிடித்தமான பொருட்களை நீங்கள் அதன் முன் படைத்து வணங்கி உங்களின் கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி வேண்டலாம். நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.

பிறந்தநாளையும், லக்னம் மற்றும் ராசியையும் மட்டும் குறிப்பிட்ட நீங்கள் பிறந்த நேரத்தை குறிப்பிடாததால் உங்களுக்கு எப்போது திருமணம் என்பதை என்னால் துல்லியமாகச் சொல்ல இயலாது. வாக்கியத்தை விட திருக்கணிதமே கிரக நிலைகளை சரியாகச் சொல்வது என்பதால் திருக்கணிதப்படி குடும்பாதிபதி சுக்கிரனின் வீட்டில் உள்ள கேதுபுக்தி அல்லது சுக்கிரபுக்தியில் உங்களுக்குத் திருமணம் நடக்கும்.

No comments :

Post a Comment