முக்தி தரும் மகாமகம்
இந்த பெருமைமிகு மகாமகத்தன்று நம்முடைய வேதநூல்கள் எளியவருக்கு அன்னதானம், ஆடைதானம் போன்ற நல்ல காரியங்களையும், கடல், ஆறு, குளம் போன்ற புனித ஸ்தலங்களில் நீராடி முன்னோர்களை வழிபடுதலையும் வலியுறுத்துகிறது.
இந்த பெருமைமிகு மகாமகத்தன்று நம்முடைய வேதநூல்கள் எளியவருக்கு அன்னதானம், ஆடைதானம் போன்ற நல்ல காரியங்களையும், கடல், ஆறு, குளம் போன்ற புனித ஸ்தலங்களில் நீராடி முன்னோர்களை வழிபடுதலையும் வலியுறுத்துகிறது.
அதிலும் பனிரெண்டு ராசிக்காரர்களுக்கென்று தனித்தனியே சில தீர்த்தங்களும் மகாமகத்தன்று கும்பகோணத்திலேயே குறிப்பிடப் பட்டிருக்கின்றன.
ஆயினும் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு மக்கள்தொகை பெருகிவிட்ட இந்தக்காலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட குளத்திலும், தீர்த்தங்களிலும்
குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் நீராடுவது இயலாது என்பதை முன்னரே உணர்ந்திருந்த நம்முடைய ஞானிகள் மகாமகம் தவிர்த்து மாசிமாதத்தின் அனைத்து நாட்களும்
நீராடுவதற்கு தகுதியான உகந்த நாட்கள்தான் என்று நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.
எனவே பொதுவாக அனைத்து நட்சத்திரக்காரர்களும் மாசி மகத்திற்கு பிறகு எந்த நாளில் எந்த அமைப்பில் மகாமகத் திருக்குளத்தில் நீராடினால் அவர்களுக்கு புண்ணியம்
கிடைக்கும் என்பதை கீழே விரிவாக கொடுத்திருக்கிறேன்.
எனவே பனிரெண்டு ராசிக்காரர்களும் கீழ்க்கண்ட அமைப்பில் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் திருக்குளத்தில் இந்த மாதம் முழுவதும் நீராடி வழிபடுவதன் மூலமாக
மகாமகத்தன்று கிடைக்கும் அத்தனை புண்ணிய பலன்களையும் நிச்சயமாகப் பெறலாம் என்பது உறுதி.
மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன. இவற்றில் அஸ்வினியும், மகமும் ஜோதிடத்தின்படி ஒரே தன்மையுள்ள சகோதரநட்சத்திரம் என்பதால்
மாசிமகத்தன்றே புனித நீராடுவது அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான ஒன்றுதான்.
மகாமகத்தன்று கும்பகோணத்தில் நீராட இயலாத சூழ்நிலை உண்டாகுமாயின் அடுத்த மார்ச் மாதம் 3-ம்தேதி வியாழக்கிழமை திருக்குளத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி
வரை நீராடி அனைத்து நற்பலன்களையும் ஒரு சேர பெறலாம். மகாமகத்தன்று ஒரு குதிரைக்கு நெருப்பில் சமைத்த உணவினை அதாவது கேரட் போன்ற காய்கறிகளாக கொடுக்காமல் தங்கள்
கையால் கொடுப்பது புண்ணியம் சேர்க்கும்.
பரணி நட்சத்திரக்காரர்கள் மகாமகத்தின் மறுநாளான செவ்வாய்கிழமை காலை 10.40 முதல் மதியம் 2.40 வரை அதே குளத்தில் குளிப்பதன் மூலம் மகாமக நாளன்று புனித நீராடிய
நற்பலன்களை பெறலாம். இந்த நாளன்று ஒரு விதவைப் பெண்மணியின் குழந்தைகளுக்கு ஆடைதானம் செய்வது மூன்று தலைமுறைக்கு நற்கருமம் தரும்
மேஷராசியின் இறுதிப்பகுதியான கார்த்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிகத்தில் உள்ளவர்கள் என்பதால் மார்ச் மாதம் 5-ம்தேதி சனிக்கிழமை
அன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மகாமகக்குளத்தில் நீராடுவதன் மூலமாக இப்பிறவிக்கு தேவையான அனைத்து
நற்பலன்களையும் பெறலாம். அன்று ஒரு பசுவிற்கும் அதே பசு ஈன்ற கன்றிற்கும் வயிறு நிரம்ப அகத்திக்கீரை போன்ற விருப்ப உணவு அளிப்பது வெகு புண்ணியம் .
ரிஷபம்:
ரிஷப ராசியில் அடங்கியுள்ள கார்த்திகை 2, 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்திலும், சந்திரனின் ராசியிலும் பிறந்தவர்கள் என்பதால் மகாமகத்
தினத்தன்று பவுர்ணமி நிலவொளியில் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள புனித தீர்த்தங்களிலோ, திருக்குளங்களிலோ நீராடுவது சிறப்பை தரும்.
மகாமக குளத்தில் நீராடும் வாய்ப்பை இழந்தவர்கள் பிப்ரவரி மாதம் 26-ம்தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 6.30
வரையிலும் கும்பகோண திருக்குளத்தில் நீராடுவதன் மூலம் பிறவிப்பயணை அடையலாம். ஆதரவற்ற முதியோருக்கு அன்று அன்னதானமோ அல்லது ஆடைதானமோ அல்லது இரண்டுமோ செய்ய
வேண்டும்.
ரிஷப ராசியின் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முழு பவுர்ணமி தினமான மகாமகத்தன்று திருக்குளத்தில் நீராடுவதே சாலச்சிறந்தது. திருக்குளத்திற்கு வர
இயலாதவர்கள் மகாமக நீர்த்தமாடும் அதே நேரத்தில் தங்கள் ஊர்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவது நன்மை பயக்கும்.
மகாமகத் திருக்குளத்தில் மார்ச் மாதம் 2-ந்தேதி புதன்கிழமையன்று அதிகாலை 4.40 முதல் 6 மணி வரை நீராடுவது புனித நீராடலின் முழு புண்ணியத்தையும் தரும். அன்று
பெற்ற தாயின் ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவது மகாபுண்ணியம். தாயாரை இழந்தவர்கள் அவர் உயிரோடு இருந்தால் எதைச் செய்தால் மகிழ்வாரோ அதைச் செய்வது கொடுப்பினை.
ரிஷபராசியின் இறுதி நட்சத்திரமான மிருகசீரிடம் 1, 2-ம் பாதங்களில் பிறந்தவர்கள் மகாமகத்தன்று கும்பகோணத்தில் நீராட இயலாத சூழ்நிலையில் அதேநாளில் அருகில் உள்ள
தீர்த்தங்களில் நீராடுவது நல்லது.
கும்பகோணத்தில் பிப்ரவரி மாதம் 28-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 12 வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் மகாமக திருக்குளத்தில் புனித
நீராடுவதன்மூலம் மகாமகத்தன்று புனித நீராடிய அதே பலனை பெறலாம். மகாமகத் திருநாளில் ஏழை எளியவர்களுக்கு உளுந்து மற்றும் துவரம் பருப்பினால் செய்த பொருட்களை அன்று
தானம் செய்வது புண்ணியம் சேர்க்கும்.
மிதுனம்:
மிதுனராசியில் அடங்கியுள்ள மிருகசீரிடம் 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் மேலோங்கிய நிலையில் பிறந்தவர்கள் என்பதால் மகாமகத்திற்கு அடுத்த
நாளான செவ்வாய்கிழமை அதிகாலை 5.20 மணி முதல் 7.20 மணி வரை மகாமக குளத்தில் நீராடுவதன் மூலம் பிறவிப்பயனை அடையலாம் என்பது உறுதி.
இதில் ஒரு சிறப்புப்பலனாக மகம் நட்சத்திரம் செவ்வாய்கிழமை காலை 7.20 மணி வரை நீடித்திருப்பதால் இந்த நேரமும் மகாமக நேரம்தான். இந்த புனித நாளன்று சிகப்பு நிறமான
பொருட்களை அல்லது புதிய காவி உடைகளை சந்நியாசிகளுக்கு தானம் செய்ய வேண்டும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக நாளன்று திருக்குளத்தில் புனித நீராட இயலாத சூழ்நிலையில் அடுத்த பிப்.28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி
முதல் மதியம் 1.40 மணி வரை மகாமக குளத்தில் நீராடலாம். இந்த நேரத்தில் தீர்த்தமாடுவது மூலம் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மகாமக நீராடலின் முழுப்பயனையும்
பெறமுடியும். அன்று வயதான முதியவர்கள் விதவைப் பெண்மணிகள் ஆகியோருக்கு அன்னதானம் ஆடைதானம் செய்வது ஏழு பிறவிக்கு புண்ணியம் சேர்க்கும்.
மிதுன ராசியில் அடங்கிய புனர்பூச நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்கள் மகாமக நாளான பவுர்ணமி தினத்தன்று தங்கள் அருகில் இருக்கும் ஆறு, கடல்
போன்ற புனித தீர்த்தங்களில் நீராடுவது நல்லது. மகாமக குளத்தில் மார்ச் மாதம் 1-ந்தேதி செவ்வாய்கிழமையன்று மாலை 4.40 முதல் 6 மணி வரை நீராடுவது புனித நீராடலின்
முழு புண்ணியத்தையும் தரும். அன்று ஒரு முதிர்ந்த வயதுள்ள பசு ஒன்றிற்கு வயிறு நிரம்ப உணவளிப்பது சாலச் சிறந்தது.
கடகம்:
கடகராசியில் அடங்கிய புனர்பூச நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் பிறந்தவர்கள் பிப்ரவரி மாதம் 29-ம்தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.20 மணி வரையிலும் மாலை 2
மணி முதல் 4 மணி வரையிலும் மகாமக குளத்தில் புனித நீராடுவது மிகவும் புண்ணியம் தரும் ஒன்றாகும்.
திருக்குளத்திற்கு வர இயலாதவர்கள் அவரவர் ஊர்களுக்கு அருகில் இருக்கும் புனித தீர்த்தங்களில் மகாமகம் அன்று திருநீராடலாம். அன்று ஏழை மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகை அல்லது நோட்டு புத்தகம் பேனா பென்சில் போன்றவைகளை தானமாக வழங்குவது வெகு சிறப்பு.
பூசநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமகத் திருநாள் அன்று ஏழைகளுக்கு முடிந்தவரையில் அன்னதானம் செய்வது நல்லது. மகாமக திருக்குளத்தில் அன்று புனித நீராட
இயலாதவர்கள் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.40 முதல் 11.47 மணி வரை திருக்குளத்தில் நீராடுவதன் மூலம் அடுத்த பிறவி இல்லாத நிலையை அடையலாம்.
மகாமக தினத்தன்று அருகில் இருக்கும் புனித தீர்த்தங்களில் நீராடுவதும் நன்மை பயக்கும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று தங்கள் பகுதியில் உள்ள ஏழை மாணவன், மாணவி யாரேனும் ஒருவருக்காவது கல்விக்கு உதவி செய்வது மிகவும்
புண்ணியத்தை தரும். மகாமக திருக்குளத்தில் அன்றைய நாள் நீராட இயலாதவர்கள் பிப்ரவரி மாதம் 24-ம்தேதி புதன்கிழமை அன்று காலை 9.32 முதல் 11.47 மணி வரையிலும் மாலை
5.15 முதல் 5.55 மணி வரையிலும் மகாமக திருக்குளத்தில் நீராடுவதன் மூலம் பிறவிப்பயனை அடையலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் அடங்கியுள்ள இந்த மகாமக நாளின் மகத்துவத்தை உணரவைக்கும் மகோன்னத மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக திருக்குளத்தில் அன்று முழுவதும் ஏதேனும்
ஒரு நேரத்தில் புனித நீராடுவதால் சகல நற்பலன்களையும் பெற முடியும் என்பதால் மகம் நட்சத்திரத்திரக்காரர்கள் அன்று கும்பகோணத்திற்கு செல்வது சாலச்சிறந்தது.
இயலாதவர்கள் அன்று அருகில் இருக்கும் புனித தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் இப்பிறவி கர்மவினைகளை நீக்கிக் கொள்ளலாம். மாற்று தினமாக 25-ம்தேதி வியாழக்கிழமை காலை
6.41 மணி முதல் 9.20 மணி வரையிலும் மாலை 6.50 மணி முதல் 8.45 மணி வரையிலும் மகாமகத் திருக்குளத்தில் நீராடலாம். மகாமக தினத்தன்று தங்களின் பொருளாதார வசதியைப்
பொறுத்து ஒன்று அல்லது ஒன்பது சுமங்கலிப் பெண்ணிற்கு மஞ்சள்\நிற வெண்கல காமாட்சி விளக்கு தானம் செய்வது அனைத்து கர்மாக்களையும் நீக்கி முக்திதரும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாசி பவுர்ணமி தினத்தன்று ஒரு ஏழை பெண்ணிற்கு புடவை தானம் தரலாம். வசதி இருப்பவர்கள் தாலிக்கு தங்கம் அல்லது திருமண உதவி
செய்வது ஏழு பிறவிக்கும் சேர்த்து புண்ணியத்தை தரும். திருக்குளத்தில் அன்று நீராட இயலாதவர்கள் பிப்ரவரி 26-ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 7.40 முதல் 11.20 மணி வரை
திருக்குளத்தில் தீர்த்தமாடுவது மகாமகத்தின் முழு பயனையும் பெறமுடியும்.
உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று முன்னோர்களின் நினைவாக ஏதேனும் புண்ணியகாரியங்கள் செய்வது நல்லது. மகாமக திருக்குளத்தில் அன்று நீராட
இயலாதவர்கள் 26-ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 7.40 முதல் 11.15 வரை புனித நீராடுவதன் மூலம் இனி பிறவாத நிலை பெறலாம்.
கன்னி:
உத்திரம் 2, 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்கள் மகாமக புனித நாளன்று தந்தையை விட்டு பிரிந்து வேறு ஊரில் இருந்தால் அன்றைய தினம் தந்தையிடம் பேசி ஆசிகளை பெற்று
அவரது விருப்பம் ஏதாவது ஒன்றை நிறைவேற்றுவதால் கோடி புண்ணியம் உண்டாகும்.
திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் பிப்ரவரி 28-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.40 மணி வரை மகாமக குளத்தில் நீராடுவதன் மூலம் அதே புண்ணிய
பலன்களை அடையலாம்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்றைய தினம் தாயின் வயதை ஒத்த பெண்மணி ஒருவருக்கு அவருடைய கஷ்டத்தை தீர்க்கும் வகையில் உதவி செய்வது சாலச் சிறந்தது.
இதன்மூலம் மிகச்சிறந்த கர்மபலன்கள் அவருக்கு கிடைக்கும். மகாமக திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் பவுர்ணமிக்கு மறுதினம் செவ்வாய்கிழமை அன்றும் மகம் நட்சத்திரம்
நீடிப்பதால் அதிகாலை 4.40 மணி முதல் காலை 7.20 மணி வரை புனித நீராடலாம்.
சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதங்களில் பிறந்த கன்னி ராசிக்காரர்கள் அன்றைய தினம் உடன்பிறந்த சகோதாரர்களுக்கு உதவிகள் செய்து அவர்களின் விருப்பத்தை
நிறைவேற்றுவதால் மிகச்சிறந்த புண்ணியம் கிடைக்கும். மகாமக குளத்தில் நீராட இயலாதவர்கள் 25-ம்தேதி வியாழக்கிழமை காலை 6.30 மணி முதல் 8.40 மணி வரையிலும் மாலை 4.30
மணிக்கு மேல் 5.20 மணி வரையிலும் திருக்குளத்தில் நீராடலாம்.
துலாம்:
துலாம் ராசியில் உள்ள சித்திரை 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று தனது உடன்பிறந்த அக்கா, தங்கைகள் அல்லது ஒன்றுவிட்ட சகோதரிகளுக்கு புடவை,
ரவிக்கை எடுத்துக் கொடுத்து அவர்களது மனதை குளிர்விப்பது மிகச்சிறந்த புண்ணியம் கிடைக்கச் செய்யும்.
மகாமக குளத்தில் புனித நீராட இயலாதவர்கள் 27-ம்தேதி சனிக்கிழமை காலை 5.35 முதல் 8.35 வரையிலும் மாலை 4.40 மணி முதல் 6.20 மணி வரையிலும் புனித நீராடுவதன் மூலம்
அனைத்துவித புண்ணியங்களையும் ஒரு சேரப் பெறலாம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமகம் அன்று அருகில் உள்ள வயதான விதவைப்பெண்மணி ஒருவருக்கு தேவையான அன்னம், உடை அல்லது மருத்துவ உதவி உள்ளிட்ட ஏதேனும்
ஒன்றைச் செய்வதன் மூலம் நற்கருமங்களை கூட்டிக்கொள்ளலாம். பித்ரு தர்ப்பணம் விட்டுப் போய் இருந்தால் ஏதேனும் ஒரு நீர்க்கரையில் இதைச் செய்வது உகந்தது. அன்று
திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 26-ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 6.45 மணி முதல் 8.17 மணி வரை திருநீராடுவது காசியில் நீராடிய புண்ணியத்தை தரும்.
விசாகம் நட்சத்திரம் 1, 2, 3-ம் பாதங்களில் பிறந்தவர்கள் அன்று ஏதேனும் ஒரு பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது அதற்கு விருப்பமான பொருளை வயிறு நிரம்பும் வரை எதிரே
நின்று கொடுப்பது ஏழுதலைமுறைக்கும் இல்லத்தில் மகாலட்சுமியை குடியிருக்க செய்யும் ஒரு தானமாகும். புனிதக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 28-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை
அதிகாலை 5.51 மணி முதல் 8.37 மணி வரை புனித நீராடுவதன் மூலம் அனைத்து பாக்கியங்களையும் பெறலாம்.
விருச்சிகம்:
விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவை பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு குரு ஹோரையில் ஓரளவு
வயிறு நிரம்பும் அளவிற்கு தானம் செய்வது தற்போது இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்கும் வல்லமை படைத்த தானமாகும். திருக்குளத்தில் நீராட
இயலாதவர்கள் மறுநாள் 23-ம்தேதி மாலை செவ்வாய்க்கிழமை மாலை 5.11 மணி முதல் இரவு 8.25 மணி வரை புனித நீராடலாம்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமகத்தன்று யாரேனும் ஒரு வயதான பரதேசி அல்லது சன்னியாசிக்கு காவி அல்லது கருப்பு உடைகள் தானம் செய்து வயிறு நிரம்ப
அன்னதானமும் அளிப்பது மிகச்சிறந்த புண்ணியத்தை தரும். அன்று திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 25-ம்தேதி வியாழக்கிழமை காலை 7.41 மணி முதல் 9.50 மணி வரையிலும்
மாலை 6.25 மணி முதல் 7.45 மணி வரையிலும் நீராடலாம்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று முன்னோர்களுக்கு நீர்க்கரையில் தர்ப்பணம் செய்து அவர்களை உளமார வேண்டி ஆசீர்வதிக்க கேட்டு கொள்வது
மூன்றுபிறவிக்கு மேலான புண்ணியங்களை தரும். அன்று திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் பிப்ரவரி மாதம் 1-ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணி முதல் 7.10 மணி வரை
திருநீராடுவது சகல விதமான புண்ணியங்களையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
தனுசு:
தனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று சமுதாயத்தில் கீழ் நிலையில் இருப்பவர்கள் ஒன்பது பேருக்கு குறையாமல் அன்னதானம் செய்வது
அல்லது யாரேனும் வயதான சன்னியாசி ஒருவருக்கு உடுப்பு தானம் செய்து அவரின் ஆசிகளைப் பெறுவது சிறப்புகளைத் தரும்.
மகாமக திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 24-ம்தேதி புதன்கிழமை காலை 7.15 மணி முதல் 9.35 மணி வரையிலும் மாலை 7.43 மணி முதல் 8.20 மணி வரையிலும் மகாமக
திருக்குளத்தில் நீராடுவது மிகப்பெரிய புண்ணியங்களை தரும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக திருநாள் அன்று ஒரு திருமணமாகாத கன்னிப்பெண்ணிற்கு தாலிதானம் அல்லது திருமணத்திற்கான சிறு உதவியை செய்வது
மிகச்சிறந்த புண்ணியங்களை சேர்க்கும். மகாமக திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் மறுநாள் 23-ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 5.40 மணி முதல் 7.20 மணிக்குள் நீராடி
பிறவிப்பயனை அடையலாம்.
உத்திராடம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மகாமகத்திருநாள் அன்று தந்தைக்கு ஏதேனும் மனக்குறை இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அதை அவர் விருப்பபடியே
உடனடியாக நிறைவேற்றி தருவதோ அல்லது காலம் பிடிக்கும் செயலாக இருந்தால் முழுமனதுடன் அவருக்கு உறுதி தந்து அவர் மனதைக் குளிர வைப்பதும் ஏழு பிறவி பாவத்தை ஒரே
நாளில் தீர்க்கும் அம்சமாகும். திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 27-ம்தேதி தேதி சனிக்கிழமை காலை 6.40 மணி முதல் 8.50 மணி வரையிலும் இரவு 9.05 மணி முதல் 9.45
மணி வரையிலும் புனித நீராடுவது சாலச்சிறந்தது.
மகரம்:
மகர ராசியில் அடங்கிய உத்திராடம் 2, 3, 4-ம் பாதங்களை சேர்ந்தவர்கள் அன்றைக்கு முன்னோர்களுக்கு செய்யாமல் விடுபட்டு போன தர்ப்பணங்களை ஏதேனும் ஒரு நீர்க்கரையில்
அதிகாலையில் சூரிய உதயத்தின் போது செய்வது மிகச்சிறந்த ஆத்ம திருப்தியை முன்னோர்களுக்கு தரும். அன்று திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 29-ம்தேதி திங்கட்கிழமை
அதிகாலை 4.40 மணி முதல் காலை 7.20 மணி வரை புனித நீராடுவதன் மூலம் ஏழு பிறவிக்கான புண்ணியங்களை மொத்தமாக பெறலாம்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்றைய தினம் யாரேனும் ஒரு ஏழை வீட்டு குழந்தைக்கு கல்வி சம்பந்தமான புத்தகம், நோட்டு போன்ற தானங்கள் செய்வதோ ஸ்கூல்
கட்டண உதவி போன்ற பண உதவிகளை செய்வதோ மிகப்பெரிய புண்ணியங்களை சேர்த்து தரும். அன்று திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 28-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20
மணி முதல் 7.35 மணி வரையிலும் இரவு 7.10 மணி முதல் 8.25 மணி வரையிலும் புனித நீராடுவது நன்மை பயக்கும்.
அவிட்டம் 1, 2-ம் பாதங்களில் பிறந்த மகர ராசிக்காரர்கள் யாரேனும் ஒரு வயதான நோயாளிக்கு அன்றைய தினம் மருத்துவ உதவி செய்தல் அல்லது நீண்ட கால நோய்களுக்கு தேவையான
மருந்து மாத்திரைகளை குறிப்பிட்ட நாட்களுக்கு வாங்கித் தருவது மிகச்சிறந்த நற்கர்மம் ஆகும். திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 25-ம்தேதி வியாழக்கிழமை அன்று
காலை 6.45 மணி முதல் 8.15 மணி வரையிலும் இரவு 8.40 மணி முதல் 9.20 மணி வரையிலும் புனித நீராடுவது மிகச்சிறந்த நன்மைகளை தரும்.
கும்பம்:
கும்பத்தில் அடங்கியுள்ள அவிட்டம் 3, 4-ம் பாதங்களை சேர்ந்தவர்கள் மகாமக புனித தினத்தன்று ஏற்கனவே திருமணமாகி புகுந்த வீடு சென்றுள்ள சகோதரிகளுக்கு அல்லது
சகோதரிகளின் குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி தந்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த செயலாகும். மகாமக திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 27-ம்தேதி சனிக்கிழமை 8.43
மணி முதல் 9.20 மணி வரையிலும் மாலை 6.40 மணி முதல் 9 மணி வரையிலும் புனித நீராடுவது மிகவும் நன்மைகளை தரும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முன்னோர்களுக்கு விடுபட்டு போன தர்ப்பணங்களை நீர்க்கரைகளில் முறையாகச் செய்து பித்ருக் கடனை தீர்ப்பது மகாமகத்தன்று
மிகச்சிறந்த புண்ணியங்களை தரும். திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 23-ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணி முதல் 9.30 மணி வரையிலும் இரவு 8.40 மணி முதல் 9.55
மணி வரையிலும் நீராடுவது மேன்மைகளையும், நன்மைகளையும் தரும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் 1, 2, 3-ம் பாதங்களில் பிறந்தவர்கள் அன்றைய தினத்தில் மஞ்சள் நிறமுள்ள இனிப்பு பொருட்களான லட்டு, கேசரி, மைசூர்பாகு போன்றவைகளை
நதிக்கரை, குளக்கரை போன்ற நீர் நிலை ஓரங்களில் வைத்து தானம் செய்வது மிகச்சிறந்த புண்ணியமாகும். திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 26-ந்தேதி வெள்ளிக்கிழமை
அதிகாலை 5.15 மணி முதல் 7.10 மணி வரையிலும் மாலை 5.35 மணி முதல் 6.40 மணி வரையிலும் நீராடுவது மிகச்சிறந்த புண்ணியங்களை தரும்.
மீனம்:
மீனத்தில் அடங்கிய பூரட்டாதி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மகாமக புனித தினத்தன்று ஏதேனும் ஒரு திருக்குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவிடுதல்
மிகச்சிறந்தது. இந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் மகாமகத்தன்று பக்தர்களுக்கு குளிர்ந்த நீர், மோர், பழச்சாறு போன்ற திரவ தானங்களை செய்வது மிகச்சிறந்த புண்ணியங்களை
தரும். திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் மார்ச் மாதம் 1-ம்தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.50 மணி முதல் 7.25 மணி வரையிலும் இரவு 9.10 மணி முதல் 10.40 மணி
வரையிலும் புனித நீராடலாம்.
உத்திராடம் நட்சத்திரம் அன்று பிறந்தவர்கள் மகாமக புனித தினத்தன்று வயதான மாற்றுத்திறனாளியான உடல் ஊனமுற்றோருக்கு அவர்களுக்கு ஊனத்திற்கு பயன்படும் வகையில்
செயற்கைக் கருவிகளை தானம் செய்வது மிகச்சிறந்த புண்ணிய பலன்களை தரும். திருக்குளத்தன்று நீராட இயலாதவர்கள் 25-ம்தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.45 மணி முதல் 7.30
மணி வரையிலும் இரவு 7.15 மணி முதல் 8.50 மணி வரையிலும் நீராடுவது மிகச்சிறந்த புண்ணிய பலன்களை தரும்.
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் மகாமக புனித தினத்தன்று ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்கள், நோட்டு புத்தகம், பாட புத்தகம் போன்றவைகளை
தானம் செய்வது ஏழு பிறவிக்கும் சேர்த்து மொத்தமான புண்ணியங்களை தரும். திருக்குளத்தில் மகாமகதினத்தில் நீராட இயலாதவர்கள் 27-ம்தேதி சனிக்கிழமை காலை 5.40 மணி
முதல் 7.25 மணி வரையிலும் மாலை 6.28 மணி முதல் இரவு 9.03 மணி வரையிலும் புனித நீராடுவது நற்கர்மங்களை வாரி வழங்கும்.
No comments :
Post a Comment