தனுசு:
தனுசு ராசிக்கு பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு எதிர்காலத்திற்கான
மாற்றங்களை தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும்.
வருடத்தின் ஆரம்ப நாளில் உங்களின் நட்பு கிரகங்களான சூரியன், செவ்வாய்,
சந்திர, குரு ஆகியோர் வலுப் பெற்ற அமைப்பில் இருப்பது உங்களுக்கு நன்மைகளை
தருகின்ற ஒரு அமைப்பாகும்.
தனுசுக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் அக்டோபர்
மாதம் 26-ம்தேதி நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் சனிபகவான்
உங்களின் ராசியில் அமரும் நிலை பெற்று ஜென்மச்சனி எனும் அமைப்பில்
இருக்கிறார்.
சனிபகவான் ஜென்மச்சனியாக தர இருக்கும் பலன்களுக்கு ஒரு முன்னோட்டமாக தற்போது
அதிசார அமைப்பில் உங்கள் ராசியிலேயே இருந்து கொண்டிருக்கிறார். ஜென்மச்சனி
நடக்கும்போது வேலை, தொழில் விஷயங்களில் சாதகமான பலன்கள் நடக்காது என்பது ஒரு
ஜோதிட விதி.
ஒன்பது கிரகங்களிலும் சனிபகவான் மட்டுமே ஒருவருக்கு அஷ்டம, ஏழரைச் சனி
நேரங்களில் பொருளாதாரச் சிக்கல்களை கொடுத்து பணத்தின் அருமையைப் புரிய
வைக்கின்ற கிரகம் என்பதால் இந்த வருடம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம்
போன்ற ஜீவன அமைப்புகளில் உங்களுக்கு விருப்பமற்ற, சாதகமற்ற நிலைகள் இருக்கும்.
எனவே தொழில் விஷயங்களில் நீங்கள் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது.
“அரசனை நம்பி புருஷனை கைவிடும்” கதையாக சில விஷயங்கள் தனுசு ராசிக்கு இப்போது
நடக்கும் என்பதால் முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினர் வேலை
விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
ராசியில் இருக்கும் சனி, பத்தாமிடத்தை பார்ப்பதால் உங்களுடைய தெளிவான
சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு உங்களுடைய மனதை மாற்றி இருக்கும் வேலையை
பறிக்க முயற்சிப்பார் என்பதால் எதிர்காலத் திட்டமிடுதல்களில் கவனமுடன்
இருக்கவேண்டியது அவசியம்.
அதேநேரத்தில் இளைஞர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும்
காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம்
காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித் தயங்கி ஒரே இடத்தில்
உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில்
உதைத்து வெளியே தள்ளும்.
அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும்
சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும்.
அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது உங்களுக்கு புரியும்.
எனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு
மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும்.
எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத்
தயாராகுங்கள்.
செப்டம்பர் மாதம் 12-ம்தேதி நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம்
குருபகவான் நல்லபலன்களைத் தரும் 11-ம் இடத்திற்கு மாறுவதால் மிகப்பெரிய
கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு நடந்து விடப்போவது இல்லை.
ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகு
பகவான் தற்போது இருக்கும் பாக்கியஸ்தானம் எனப்படும் 9-ம் இடத்தில் இருந்து
8-ம் இடத்திற்கு மாற இருக்கிறார். இது ஒருவகையில் உங்களுக்கு நன்மை தரும்
அமைப்புத்தான்.
தனுசு ராசியினர் அதிர்ஷ்டத்தையும், அதன் மூலம் கிடைக்கும் பாக்கியங்களை
அனுபவிப்பதையும் கடந்த சில காலங்களாக 9-ம் பாவத்தில் இருந்து தடுத்துக்
கொண்டிருந்த ராகுபகவான் அங்கிருந்து விலகுவது உங்களுக்கு மறுபடியும்
அதிர்ஷ்டம் கிடைக்கின்ற ஒரு அமைப்பு. எனவே 8-ல் ராகு வருவதால் ஏதேனும்
கெடுபலன்கள் நடந்து விடுமோ என்று நினைப்பவர்கள் அவ்வாறு பயப்படத் தேவையின்றி
ராகு உங்களுக்கு நன்மைகளை தந்தருள்வார்.
ராகுகேது பெயர்ச்சியின் மூலம் இதுவரை வெளிநாடு செய்வதற்கு தடை
இருந்தவர்களுக்கு தடைகள் விலகும். வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கவோ அல்லது
வேலைக்கு சொல்லவோ இனிமேல் தடைகள் இருக்காது. ஒரு சிலருக்கு
இந்தியாவிற்குள்ளேயே ஐதராபாத், டெல்லி, பாம்பே போன்ற வடமாநிலங்களில் கல்வி
கற்கவோ, வேலை செய்யவோ வாய்ப்புகள் கிடைக்கும்.
புது வருடத்தின் கடைசி மாதங்களிலும் அடுத்த வருட ஆரம்பத்திலும் சனியின்
தாக்கம் தனுசுக்கு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த வருடமே நீங்கள்
புதிய முயற்சிகள் எதையும் தொடங்காமல் விழிப்புடன் இருப்பது நல்லது.
அஷ்டமச்சனி, ஏழரைச்சனி காலங்களில் சனிபகவான் புதிய தொழிலையோ, அல்லது
வியாபாரத்தையோ தொடங்க வைத்து அதை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல்
புலிவாலைப் பிடித்த கதையாக அதன் போக்கில் ஓட வைப்பார் என்பதால் தனுசுவினர்
இந்த வருடம் தொழில், வியாபாரம் போன்றவைகளில் கவனமாக இருப்பது நல்லது.
குறிப்பிட்ட சிலருக்கு இந்த நேரங்களில் இருப்பதை விட்டு பறப்பதைப்
பிடிப்பதற்கு ஆசை வந்து அதைப் பறந்து பிடிக்கப் போய் “உள்ளதும் போச்சுடா
நொள்ளைக் கண்ணா” கதை வரும் என்பதால் வேலை பார்க்கும் இடங்களில் கவனமாக இருக்க
வேண்டியதும் அவசியம்.
இருக்கும் வேலையை விடுத்து அடுத்த வேலைக்கு மாற நினைப்பவர்கள் கண்டிப்பாக
வேலையில் இருந்து கொண்டே மாறுதலுக்கு முயற்சி செய்து அடுத்த வேலைக்கான உறுதி
ஆர்டர் வந்த பின்பு இருக்கும் வேலையை விடுவது நல்லது. சிலநேரங்களில்
வேலைமாற்றத்திற்குப் பின் முன்பிருந்த வேலையே அருமை என்று நினைக்க வைப்பார்
சனி.
முப்பது வயதுகளில் இருப்பவர்கள் இந்த வருடமும் அடுத்த வருடமும் செட்டிலாக
விடாமல் அலைக்கழிக்க வைக்கப் படுவீர்கள். குறிப்பாக பொருளாதார சிக்கல்கள்,
பணவரவில் திருப்தியின்மை, பாக்கெட்டில் பணம் வைக்க முடியாத நிலை போன்றவைகள்
இருக்கும்.
பிறந்த ஜாதகத்தில் யோகவலுவுள்ள தசாபுக்திகள் நடக்கும். தனுசு
ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற பலன்கள் சற்றுக் குறைவாக இருக்கும். ஆயினும்
ஜென்மச்சனி என்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி
ஏமாறாமல் இருப்பது மற்றும் எப்படித் தொழில் நடத்துவது. போன்ற வாழ்க்கை
அனுபவங்களை கற்றுத்தரும் என்பதால் இளைய பருவத்தினரைப் பொறுத்தவரை இந்த வருடம்
அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும்.
தொழில் விரிவாக்கங்கள் மற்றும் புதிய தொழில் ஆரம்பிப்பதை நன்கு யோசித்து
செய்யுங்கள். புதிதாக எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் அனைவரையும் கலந்து
ஆலோசித்து செய்யவும். புதிய வீடு வாங்குவது அல்லது இருக்கும் வீட்டை
விரிவாக்குவது அல்லது புதிதாக சொத்து வாங்குவது போன்றவைகளில் மிகுந்த கவனம்
தேவைப்படும். நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள்
போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம்
போன்றவைகளும் இப்போது கை கொடுப்பது கடினம்.
அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் போன்ற முறைகேடான வருமானங்கள்
இப்போது வருவது கடினம். எனவே மேல் வரும்படி இல்லாததால் செலவுகளை சமாளிக்க
திண்டாடுவீர்கள்.பணியிடங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
அதனால் நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே
பகைத்துக் கொள்ள வேண்டாம். ஏற்கனவே கடன் சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய
கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக
வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும் என்பதால்
அவசியமில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி
தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட
செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
ஆன்மீக உணர்வுகள் சிலருக்கு அதிகமாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்
சிலரைத் தேடிவரும். ஆலயத்தில் பணி செய்ய சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இதுவரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கியிருந்த புனிதத்தலங்களுக்கு சென்று
மனநிறைவுடன் திரும்பி வருவீர்கள். ஞானிகளின் ஆசிர்வாதமும் அவர்களின் தொடர்பும்
கிடைக்கும்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும்.
மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு
வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும்.
எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால்
அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி
இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு
இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும்,
வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு
எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.
சில விஷயங்களில் எதிர்மறையான பலன்களைக் கொடுத்தாலும் வாழ்க்கைக்குத் தேவையான
நல்ல மாற்றங்களை புதுவருடம் கொடுக்கும் என்பதால் கவலைப் பட தேவையில்லாத வருடம்
இது.
No comments :
Post a Comment