விருச்சிகம்:
கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக விருச்சிக ராசிக்கு மட்டும் தனிக்கவனம்
எடுத்து ராசிபலன்களை எழுதிக் கொண்டும், தொலைக்காட்சிகளில் சொல்லிக் கொண்டும்
வருகிறேன்.
விருச்சிகத்தினர் படும் துயரம் அந்த அளவிற்கு இருக்கிறது. பனிரெண்டு
ராசிகளிலும் விருச்சிகத்தினர் மட்டும்தான் அதிக அளவில் துன்பங்களை
அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். வலுவான பிறந்த ஜாதகத்தைக் கொண்ட சிலருக்கு
மட்டும்தான் துன்பங்கள் இல்லை. மற்றவர்கள் நிலைமை துயரம்தான்.
என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் 80 சதவீதம் பேர் விருச்சிக
ராசிக்காரர்கள், அல்லது விருச்சிகத்தினை கணவன், மனைவி, மகன், மகள் போன்ற
உறவினர்களாக வீட்டில் கொண்டவர்கள் என்பதனை ஒவ்வொரு முறையும் எழுதுகிறேன்.
சென்ற ஆண்டிற்கு முன்பு வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வந்து
கொண்டிருந்தார்கள், தற்போது கேட்டை நட்சத்திரக்காரர்கள் அதிகமாக வருகிறீர்கள்
என்பதைத் தவிர மாற்றம் ஒன்றும் இல்லை. கடந்த சில மாதங்களாக தினமும்
அலுவலகத்தினுள் நான் நுழைந்ததும் முதலில் ஜாதகம் பார்க்கும் நபர் கேட்டை
நட்சத்திரக்காரராகத்தான் இருப்பார்.
விருச்சிகத்திற்கு மட்டும் எப்படி பிரச்சினைகளைத் தரலாம் என்று சனிபகவான் ரூம்
போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறாரோ, உலகில் இப்படியெல்லாம் பிரச்சினை வருமா?
என்று நினைக்கும் அளவிற்கு விருச்சிகம் வேதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது.
ஒரு வீட்டில் இன்னொருவரும் விருச்சிகமாகவோ, மேஷமாகவோ இருந்தால் அந்த குடும்பம்
பட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தைகளை சொல்லி மாளாது. ஜாதக வலுவுள்ள சில
ஆசீர்வதிக்கப்பட்ட விருச்சிகத்தினர் மட்டுமே தொல்லைகள் இன்றியும் அல்லது
சமாளிக்கக்கூடிய அளவிற்கு அல்லல்களை சந்தித்தும் இருக்கிறீர்கள். பெரும்பாலான
விருச்சிகத்தின் நிலைமை சங்கடத்திலும் சங்கடமான ஒன்றுதான்.
போனதெல்லாம் போகட்டும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும்
தமிழ்ப் புத்தாண்டு ஒரு மிகப்பெரிய விடியலையும், விடுதலையும் தந்து உங்களை
மீட்டெடுக்கும் ஆண்டாக இருக்கும். வருடம் பிறந்த முதல் வாரத்தில் இருந்தே
விருச்சிகத்தின் கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
வருடத்தின் ஆரம்ப நாளில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருப்பது ஒரு
நல்ல அமைப்பு. மேலும் தற்போது சனிபகவான் அதிசார அமைப்பில் உங்களின் ராசியில்
இருந்து விலகி இருப்பதும் ராசிநாதன் செவ்வாய் தனது எட்டாம் பார்வையாக ராசியையே
பார்ப்பதும் விருச்சிக ராசிக்கு நன்மைகளை தரக்கூடிய ஒரு அமைப்பாகும்.
வருடத்தின் பிற்பகுதியில் சனிபகவான் ஜன்மச் சனி அமைப்பிலிருந்து முழுக்க
விலகுவதும், இதுவரை இருந்துவந்த பகை வீட்டிலிருந்து மாறி, தனக்கு மிகவும்
பிடித்த வீடான குருவின் வீட்டில் அமர்வதும் விருச்சிகத்திற்கு நன்மைகளை
செய்யக்கூடிய அமைப்பு.
சனி விலகுவதால் சொந்த வாழ்வில் பிரச்சினைகள், நெருங்கிய உறவினர் மரணம்,
பிரிவு, வேலையிழப்பு, ஆரோக்கியக் குறைவு, வேலை, தொழில், பிரச்சினைகள்,
வழக்குகள், கடன் தொல்லைகள் போன்றவைகளால் நிம்மதி இன்றி இருப்பவர்களுக்கு இந்த
வருடத்தில் இருந்து அனைத்தும் விலகி சந்தோஷம் தரக்கூடிய அமைப்புகள் உருவாகும்.
இந்த வருடம் நடக்க இருக்கும் மற்ற பெயர்ச்சிகளான ராகுகேது, குருப்பெயர்ச்சிகள்
கூட விருச்சிகத்திற்கு சாதகமான அமைப்பில்தான் இருக்கின்றன. எனவே எப்படிப்
பார்த்தாலும் விருச்சிக ராசியின் அனைத்துப் பிரச்னைகளையும், மன அழுத்தத்தையும்
தீர்த்து, மற்றவர்களைப் போல சகஜமான வாழ்க்கைக்கு உங்களை வர வைக்கின்ற வருடமாக
இது இருக்கும்.
கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை
இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத்
தரும். இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை
உடனடியாக கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி
வைக்கப் பட்டிருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும்.
தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில்
முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கும்
விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம்
என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச்
செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போது வாங்க முடியும். பயணம் தொடர்பான
விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். தொலைதூர
பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு
முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.
வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. இதுவரை திருமணம் ஆகாத இளைய
பருவத்தினருக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு
திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு
அந்தக்கவலை இப்போது நீங்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன்
நீங்கள் நினைத்தவரை மணமுடிப்பீர்கள்.
இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர
காரகனாகிய குருபகவான் குழந்தைச் செல்வத்தை வழங்குவார். தாத்தா பாட்டிகள்
உங்கள் வீட்டில் பேரக்குழந்தையின் மழலைச்சத்தத்தை கேட்கப் போகும் நேரம்
வந்துவிட்டது.
அரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும்
வேலைப்பளுவும் இனிமேல் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’
வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு
அனுசரணையானவர் வருவார்.
வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள்.
வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல
விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு
வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இனிமேல்
முயற்சி பலிதமாகும்.
அரசு ஊழியர்களுக்கு இந்தப் புத்தாண்டால் நல்ல நன்மைகள் உண்டு. குறிப்பாக
அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும்,
அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி
புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.
பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும்
அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக
இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும்.
நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன்
சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள்
மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை
புனிதப்படுத்திக் கொள்வீர்கள்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக
எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து
திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும்.
பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு
உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். மகன்
மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல்
சந்தோஷம் இருக்கும்.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான
நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும்
உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள்
நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள்
செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆலய
சீரமைப்பு பணிகளில் சிலர் புகழ் பெறுவீர்கள்.
குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல்
நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின்
எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.
தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள்,
பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம்
வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி
சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த
வருடம் நல்ல பலன்களையே தரும்.
பெண்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நல்லபலன்களைக் கொடுக்கும். பிள்ளைகளால்
பெருமைப்படுவீர்கள். கணவன்மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும்
இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும்
பிள்ளைகளும் கேட்பார்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில்
மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.
மொத்தத்தில் விருச்சிகம் விடியலை உணரும் வருடம் இது.
No comments :
Post a Comment