Tuesday, March 1, 2016

கன்னி: 2016 மார்ச் மாத பலன்கள்

கன்னி:

ராசிநாதன் புதபகவான் மாத ஆரம்பத்தில் ஆறில் மறைந்து நீசநிலையை நோக்கி போய்க் கொண்டிருப்பதாலும் மாதஇறுதியில் அவர் நீசமடைவதாலும் இந்த மாதம் கன்னிராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளில் முழுமையான ஈடுபாடு தேவைப்படும் மாதமாக இருக்கும். குறிப்பாக சாப்ட்வேர், கணக்கு போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்தமாதம் டார்கெட் போன்ற இலக்கு நிர்ணையிக்கப்பட்டு அலைச்சல்கள் அதிகம் உள்ள மாதமாகவும் இருக்கும். 

ராசிநாதன் வலுக்குறைந்து ஆறாம் வீட்டில் இருப்பதாலும் எட்டுக்குடைய செவ்வாய் ஆட்சி பெறுவதாலும் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை. நண்பர்களுக்கு இடையே கசப்பும் கருத்து வேறுபாடுகளும் இருக்கும் என்பதால் அதற்குரிய முன்னேற்பாடுகளை இந்த மாதம் செய்து கொள்ளுவது நல்லது.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு நிலுவைத் தொகையோ அல்லது பிறர் உங்களுக்கு தரவேண்டிய பாக்கித்தொகையோ இந்த மாதம் இன்ப அதிர்ச்சியாக திடீரென வசூலாகி உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய சம்பவங்கள் இந்த மாதம் இருக்கலாம். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள்களை இப்போது வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு மும்பை, டெல்லி என வடமாநில பயணம் இருக்கும். இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடி கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு தூரமான இடங்களில் வேலை கிடைக்கும்.

1,2,4,5,8,9,10,17,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம்தேதி மாலை 4 மணி முதல் 13-ம்தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது. அதே நேரத்தில் புதிய ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment