கைப்பேசி எண் : 8681 99 8888
இயற்கைப் பாபக் கிரகமான சனி ஒரு ஜாதகத்தில் நேர்வலு அடையக் கூடாது என்பதை
சென்ற அத்தியாயத்தில் விளக்கினேன்.
இதை இன்னும் துல்லியமாகச் சொல்லப் போனால் ஒரு ஜாதகத்தில் எந்த ஒரு பாபக்
கிரகமுமே நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை மட்டும் அடைந்தால் அந்த
ஜாதகருக்கு நல்ல பலன்களைச் செய்யாது.
பாபக் கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற ஸ்தான பலங்களை அடைந்தால் அவை ஏதேனும் ஒரு
சுப கிரகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது மறைவு ஸ்தானங்களில் இருக்க
வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவை தமது தசைகளில் நன்மைகளைச் செய்யும்.
நமது ஞானிகளால் ஒரு கிரகத்தின் வலிமையை அளவிட சொல்லப்பட்ட ஸ்தானபலம்,
திக்பலம், திருக் பலம், கால, அயன, சேஷ்ட பலம் ஆகிய ஆறு வித பலங்களில், ஒரு
கிரகம் இருக்கும் வீட்டை வைத்து அதன் வலுவைக் கணக்கிடச் சொல்லப்பட்ட ஸ்தான
பலம், திக்பலம் ஆகிய இரண்டு விதமான வலுக்களில், திக் பலம் என்பது பாபக்
கிரகங்களுக்குக்காகவே சொல்லப்பட்டது.
இந்த இரு நிலைகளில் பாபக் கிரகங்கள் ஸ்தான பலத்தை விட ஒரு ஜாதகத்தில் திக்பலம்
அடைவதே நல்லது. அதேநேரத்தில் சனியும் செவ்வாயும் ஸ்தான பலம், திக்பலம்
இரண்டையும் சேர்த்துப் பெறுவதும் நல்லநிலை அல்ல. சனியும், செவ்வாயும் ஸ்தான
பலத்தை முற்றிலும் இழந்து திக்பலத்தை மட்டும் பெறும் நிலையில் நல்ல யோகத்தைச்
செய்வார்கள்.
ஸ்தான பலத்தை இழப்பது என்பது ஒரு கிரகம் தனது சொந்த காரகத்துவங்களை, அதாவது
தன் குணங்களைத் தரும் வலிமையை இழக்கிறது என்று பொருள்.
உச்சம், மூலத் திரிகோணம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீசம் என்று
வகைப்படுத்தப்பட்ட ஒரு கிரகத்தின் வலு அமைப்பில், உச்சத்தில் இருக்கும் கிரகம்
தனது குணங்களை ஒரு ஜாதகருக்கு முழுமையாகச் செய்யும்.
பின் படிப்படியாக மூலத் திரிகோணம், ஆட்சி, நட்பு என தனது குணங்களைத் தரும்
வலிமையை படிப்படியாகக் இழந்து கொண்டே வந்து கடைசி நிலையான நீசத்தில் தனது
செயல்பாடுகளைத் தரும் வலிமையை இழந்து முற்றிலும் செயலாற்றுப் போகும் என்பது
இதன் அர்த்தம்.
சனி ஒரு இயற்கைப் பாபக் கிரகம். ஒரு மனிதனுக்கு கடன், நோய், தரித்திரம், உடல்
ஊனம், அழுக்கு இடங்களில் இருக்கும் நிலைமை, உடலைப் பயன்படுத்தி பிழைக்கும்
தன்மை ஆகியவற்றைக் கொடுக்க விதிக்கப்பட்ட கிரகம்.
சனி உச்சத்தில் இருக்கும் போது, சுபத்துவமோ, சூட்சும வலுவோ அடையாமல் வெறுமனே
உயர் வலுவில் மட்டும் இருக்கும் போது மேலே நான் சொன்ன அவரது இயல்பான குணங்களை
மட்டுமே செய்வார். ஒரு மனிதனுக்கு கடன், நோய், தரித்திரம் ஆகியவைகளை மட்டுமே
தருவார்.
அவர் முற்றிலும் ஸ்தான பலம் இழந்து நீச நிலையை அடையும்போது தனது செயல்பாடுகளை
அந்த ஜாதகனுக்குத் தரும் சக்தியற்றவர் ஆகிறார். அதாவது கடன், நோய் இவைகளைத் தர
இயலாதவர் ஆகிறார்.
இதுபோன்ற ஒரு நிலையில் தனது கெட்ட குணங்களைத் தரும் சக்தியை இழந்து, தனது தீய
குணங்கள் வடிகட்டப் பட்ட நிலையில், குரு போன்ற சுபர்களின் தொடர்பை பெறும்போது
மட்டுமே சனி நன்மையைச் செய்வார். அப்போது கூட தனது தீய வழிகளின் மூலம்தான்
நன்மையைச் செய்வார்.
ஒரு ஜாதகத்தில் உச்சம் பெற்று வக்ர நிலையை அடைந்து குருவின் தொடர்பை அவர்
அடையும்போதோ அல்லது நீசம் பெற்று சுபத்துவத்தை அடையும் போதோ தனது தொழில்
காரகத்துவங்களில் ஒரு மனிதனை அளப்பரிய பணத்திற்குச் சொந்தக்காரன் ஆக்குவார்
சனி.
அதேநேரத்தில் சுபர்களின் தொடர்பு இல்லாமல், வெறும் உச்சம் மட்டும்
அடைந்திருந்து தசை நடத்தும்போது அந்த ஜாதகனை கைவண்டி அல்லது ரிக்சா இழுக்க
வைத்து, மூட்டை தூக்கி சில்லறைகளை எண்ணிப் பிழைக்க வைப்பார்,
அடுத்து மிக முக்கிய விஷயமாக, சனி ஒரு இரக்கமற்ற நீதிபதி. மனிதனின் கர்ம
வினைகளின்படி அவனைத் தண்டிக்கும் அதிகாரம் பெற்ற ஒரே கிரகம் இவர்தான்.
மற்ற கிரகங்களை வழிபடுவதைப் போல அல்லாமல் சனிக்கு மட்டும் சில குறிப்பிட்ட
வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் நமது தெய்வாம்சம் பொருந்திய
ஞானிகளும், சித்தர்களும் சொல்லியிருக்கிறார்கள். காலப்போக்கில் அவைகளை சரிவரப்
புரிந்து கொள்ளாமல் அவற்றை நாம் தலைகீழாக செய்து கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக நமது ஞானிகள் சனிக்கு எதிரே போய் நிற்கக் கூடாது என்று நம்மைத்
தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நாம் அதைப் புரிந்து கொள்ளாமல்
ஒதுங்கி நின்று சனியை வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு தெய்வத்தின் முன்பு சட்டையின்றி, திறந்த மார்பு காட்டி, நேருக்குநேர்
நின்று வணங்கும் உன்னத முறைகளைக் கொண்ட நமது உலகின் மேலான இந்து மதத்தில் ஒரு
கிரக மூர்த்திக்கு முன்பு போய் நிற்காதே என்று நமது ஞானிகள் சொன்னதற்கு
உண்மையான அர்த்தம் “நீ சனியை வழிபட வேண்டாம்” என்பதுதான்.
ஒரு கிரகத்தை எதற்காக வணங்குகிறோம்?
அந்தக் கிரகம் அதனிடம் இருக்கும் நமக்கு வேண்டியவைகளை, நமக்குத் தேவையானவைகளை
அருள வேண்டும் என்பதற்காகத்தான்.
அதன்படி குருவை வணங்கினால் அவர் தன, புத்திரகாரகன் என்பதால் அவரிடம் இருக்கும்
பணத்தையும், குழந்தை பாக்கியத்தையும் நமக்கு அருளுவார். சுக்கிரனை வணங்கினால்
அவரிடம் இருக்கும் வீடு, வாகனம், நல்ல மனைவி ஆகியவை கிடைக்கும். சந்திரனை
வழிபட்டால் மனோபலமும், மாதா நலமும் தரப்படும். புதனைப் பற்றினால் அறிவாற்றல்
நிச்சயம். செவ்வாயைச் சரணடைந்தால் கூட சகோதர ஆதரவும், தைரியமும் உண்டு.
சனியை வணங்கினால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? தருவதற்கு அவரிடம் என்ன
இருக்கிறது? தன்னை வணங்கும் மனிதனுக்கு எதைக் கொடுக்க அதிகாரம்
அளிக்கப்பட்டவர் அவர்?
கடன், நோய், தரித்திரம், உடல் ஊனம், ஆயுள் இவைகள்தானே அவரிடம் இருக்கின்றன?
அவர் ஆயுள் காரகன் மட்டும்தானே? அதனால்தான் நமது ஞானிகள் சனிக்கு எதிரே
நிற்காதே என்று சொன்னார்கள்.
செல்போன் யுகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆன்மீக விஷயத்தில் நம்
முன்னோர்களை விட அறிவாளிகளா நாம்?
அனைத்து தெய்வங்களின் திருவுருவப் படங்களை நம் வீட்டிற்குள் வைத்து வணங்கி
வழிபட நமக்குச் சொல்லித் தந்த நமது மூதாதையர்கள் சனியின் படத்தை மட்டும் ஏன்
வீட்டிற்குள் வைத்து வணங்கக் கற்றுக் கொடுக்கவில்லை? சனியை வழிபட்டாலும் அதன்
பிரசாதங்களை ஏன் வீட்டிற்குள் கொண்டு வராதே, சனி சம்பந்தப்பட்டதை வீட்டிற்குள்
சேர்க்காதே என்றார்கள்?
( இப்போது சில சனி கோவில்களில் பிரசாதங்களை வீட்டுக்கு எடுத்துப் போகலாம் என்ற
பிரச்சாரமும் நடக்கிறது. சனியின் உருவப் படங்களும் வந்து விட்டன.)
சரி...
கும்பிடக் கூடாது என்றால் கோவிலை ஏன் கட்டி வைத்தார்கள்? சில கோவில்களில் ஏன்
சனிக்கென்று தனி சன்னதிகள் இருக்கின்றன?
ஒரு எண்பது வயதுக் கிழவன் தனது பேத்தியின் திருமணத்தைக் காண விரும்புகிறான்.
தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி சனி முன்பு நின்று “இன்னும் ஒரு வருடம் மட்டும்
எனக்கு ஆயுள் கொடு. என் கண்ணுக்குக் கண்ணான என் செல்வத் திருமகளின் கல்யாண
வைபவத்தை கண் குளிரப் பார்த்துவிட்டு பரமபதம் அடைகிறேன்” என்று வேண்டிக்
கொள்ளவும், ஒரு வாழப் பிறந்த வாலிபன் கர்ப்பிணி மனைவியை விட்டு விட்டு
விபத்தினால் சாகக் கிடக்கிறான், அவனுக்கு ஆயுள் கொடு, வரும்போதே இருதய
வால்வில் ஓட்டையோடு வந்து விட்டது இந்தப் பிஞ்சு, இதனை வாழவிடு என்று வேண்டிக்
கொள்ள மட்டுமே உருவாக்கப்பட்ட சன்னதிகள் இவை.
ஆயுளை வேண்டிக் கட்டப் பட்டவை இவை. அதிர்ஷ்டம் கொடு என்று கேட்பதற்காக இல்லை.
திருநள்ளாறு ஸ்தல வரலாற்றில் கூட நள மகராஜன் ஏழரைச் சனி முடிந்த பிறகு அங்கு
வந்து குளத்தில் குளித்து எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான்
தர்பாரண்யேஸ்வரரைத்தான் தரிசித்து வணங்கிச் சென்றான்.
இந்த இடத்தில் ஒரு வேதனையான விஷயத்தை கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
அனைத்துக் கிரகங்களும் நமது மேலான மதத்தின் ஆதி மூர்த்தியான சர்வேஸ்வரனுக்குள்
அடக்கம். நவ கிரகங்களும் ஈசனது வேலைக்காரர்கள் மட்டுமே. ஈசன் காலால் இடும்
பணியை, கர்மாவை, தண்டனையை நமக்குத் தலையால் அளிக்கக் கடமைப்பட்டவைகள் இந்த நவ
கிரகங்கள்.
கிரகங்கள் எவையும் தெய்வங்கள் அல்ல. இதனை நமக்கு உணர்த்தவே ஒவ்வொரு
கிரகத்திற்கும் அதிதேவதைகளை தெளிவாகச் சொல்லி கிரகங்களுக்கும்,
தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாட்டை நமது ஞானிகள் தெளிவாக்கியிருக்கிறார்கள்.
ஆனால் சமீபகாலமாக நமது திருக்கோயில்களில் வேத நாயகனான எம்பெருமான் மூலவரை
விடுத்து கிரக சந்நிதிகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
சமீபத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு நவ கிரக திருத்தலத்திற்கு
சென்றிருந்தேன். மூலவர் சந்நிதி காலியாக அர்ச்சகர் கூட இல்லாத நிலையில், தனிக்
கிரக சந்நிதி நிற்கக் கூட இடமின்றி பரபரப்பாக இருந்தது. நான் மட்டும் மூலவரின்
திருமேனி முன்பு ஆனந்தமாய் ஒருமணி நேரம் குடும்பத்துடன் அமர்ந்து தரிசித்தேன்.
எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்?
நம் தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளும், முன்னோர்களும் வகுத்துத் தந்த மேலான
முறைகளை விட்டு மெதுவாக விலகி, முறையற்ற வழிபாட்டு முறைகளுக்குள் சென்று
கொண்டிருக்கிறோம்.
இன்றும் பரிகாரக் கோவில்களுக்கு செல்லும் போது முதலில் மூலவரை முறைப்படி
தரிசித்து, அவர் திருமுன்பு வணங்கி, அவரைத் தொழுது அதன் பின்பே தனிக் கிரக
சந்நிதிகளுக்குச் செல்லும்படி என் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறேன்.
சனிக்கு மட்டும் எப்படி ஈஸ்வர பட்டம் வந்தது?
சனிக்கு இறைவன் “ஈஸ்வர” பட்டதை அருளியதாக நம் தமிழகத்தில் மட்டும் ஒரு
பொருத்தமற்ற கதை நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறு.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட நமது பாரத
தேசத்தில் அனைத்து தெய்வங்களின் பெயரும் நாடு முழுமைக்கும் ஒன்றாகத்தான்
இருக்கிறது. சில இடங்களில் மட்டும் அந்தப் பகுதி மொழிக்கேற்ப பொருள் மாறாமல்
பெயர்கள் மாறும். இங்கே முருகு என்றால் அழகு என்ற அர்த்தத்தில் முருகனாக
இருப்பவர் வட மாநிலத்தில் கார்த்திகேயனாக மாறுவார். அவ்வளவுதான்.
ஆனால் சனிக்கு, தமிழ்நாட்டில் மட்டும் ஒரு அடைமொழி சேர்த்து சனீஸ்வரன் என்று
கொண்டாடுகிறோம். வடபாரதத்தில் அவர் சனிதேவ், சனி மகாத்மா, சனி பகவான்
மட்டுமே..! சனீஸ்வரன் இல்லை.
நமது மேலான இந்து மதத்தில் சர்வேஸ்வரன் ஒருவன் மட்டுமே. அவர் இந்த சனியைப் போல
கோடிக்கணக்கான கிரகங்களைப் படைத்த எல்லாம் வல்ல பரம்பொருள். அவனுக்கு மட்டுமே
அந்தப் பட்டம். அவன் படைத்த எந்தப் பொருளுக்கும் இல்லை.
இந்த ஈஸ்வரப் பட்டம் தமிழில் எப்படிப் புகுந்தது?
சனியை நமது தெய்வ மொழியான மகோன்னத சம்ஸ்கிருதம் “சனைச்சர” என்று
குறிப்பிடுகிறது. இதன் அர்த்தம் மெதுவாக நகர்பவர் என்பதாகும். ஆலயங்களில்
நன்கு கற்றறிந்த அந்தணர்கள் ஸ்பஷ்டமாக மந்திரங்களைச் சொல்லும் பொழுது
உன்னிப்பாக கவனித்தால் சனிபகவான் துதியில் “சனைச்சராய சுவாமி” என்று
உச்சரிப்பதைக் கவனிக்கலாம்.
இதுவே நாளடைவில் சனீஸ்வர சுவாமி என்று மருவியதே தவிர கிரகங்களில் அவருக்கு
மட்டும் ஈஸ்வரப் பட்டம் என்பது பொருத்தமற்ற, புகுத்தப்பட்ட கதை.
சனியை, சனீஸ்வரன் என்று அடைமொழியிட்டுச் சொல்வதால் ஒருவருக்கு தோஷம்
அதிகரிக்குமேயன்றி நன்மைகள் எதுவும் இல்லை.
(
நவ
6 - 2015
மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
Arumaiyana vilakkam ayya.
ReplyDeleteNo..சரம் ஸ்திரம் உபயத்தில் வரும் சர என்ற பதத்தை குறிக்கும்..சனைச்சரம் என்பதே சரி..
ReplyDelete