Wednesday, December 25, 2024

மீனம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

மீனம்:

மீன ராசிக்கு இந்த வருடம் மார்ச் மாதம் 29 ஆம் தேதி ஜென்மச் சனி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் 2025 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. அதே நேரம் உங்கள் ராசிநாதன் குருபகவானும் இந்த வருடம் முழுவதும் சாதகமான பலன்களை செய்யும் நல்ல இடங்களில் இல்லை.

உங்கள் ராசிக்கான பலன்களை இரண்டு பிரிவாக பிரித்துச் சொல்லுவேன். அதாவது இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்திற்கான அனைத்து விஷயங்களிலும் முனைப்புடனும் அக்கறை மற்றும் கவனத்துடனும் இருக்க வேண்டும். அதேநேரத்தில் ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு ஜென்மச் சனி அமைப்பு பொங்கு சனி எனப்படும் இரண்டாம் சுற்றுக்கான நன்மைகளைச் செய்யும்.

எனவே இளைய பருவத்தினர் எந்த ஒரு விஷயத்திலும் அகலக்கால் வைக்காமல் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டிருக்கும். என்னதான் இருந்தாலும் உங்களுடைய ராசியான மீனம், குருவின் வீடு என்பதாலும், குருவின் ராசிகளில் இருக்கும் சனி நல்லவர் ஆவார் என்பதன்படியும் மிகப் பெரிய கெடுதல்கள் எதையும் மீன ராசிக்கு சனி கண்டிப்பாக செய்யவே மாட்டார். எனவே ஜென்மச் சனி தாங்க முடியாத கெடுபலனைச் செய்யுமோ என்று கவலைப்பட வேண்டாம்.

ஆயினும் பணத்தின் அருமையை உங்களுக்கு சனிபகவான்தான் புரிய வைக்க வேண்டும் என்பதால் வெயிலில் இருக்கும் போதுதான் நிழலின் அருமை தெரியும் என்ற பழமொழியின்படி வருடத்தின் பிற்பகுதியில் இருந்து பணத் தட்டுப்பாட்டினையும், பொருளாதாரச் சிக்கல்களையும் கடன் வாங்க வேண்டிய அளவிற்கு நிலைமையையும் உருவாக்குவார்.

எனவே எதிலும் அகலக்கால் வைக்காமல், புதிதாக எதையும் தொடங்காமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தால் மட்டும் போதும்.

இதுபோன்ற நேரங்களில் சனி புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி 1 லட்சம் போட்டால் 10 லட்சம் எடுத்துவிடலாம் என்றோ, வெறும் 10 ஆயிரத்தில் பல கோடி சம்பாதிக்கலாம் என்றோ சில தூண்டில்களை போட்டு ஒரு தொழில் ஆரம்பிக்க வைத்து அல்லது உங்களை புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தில் நுழைத்து, புலி வாலைப் பிடிக்க வைப்பார்.

பிறகு அதனை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலுக்குள்ளாக்கி பரிதவிக்க வைப்பார் என்பதால் இந்த வருடம் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடமோ, இதுவரை தெரியாத ஒரு தொழிலை பற்றி தெரிய வந்தாலோ கவனமாக இருங்கள்.

இன்னொரு சிறப்பு பலனாக மீனத்திற்கு ராகு, கேதுக்கள் இந்த வருடம் ஆறு  மற்றும் பனிரெண்டாம் இடங்களுக்கு மாறுகிறார்கள். இது நற்பலன்களை தருகின்ற நிலை என்பதால் சிலர் வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு சென்று பொருள் சம்பாதிப்பீர்கள். இதுவரை வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ இருந்த தடை நீங்குகிறது. அயல்தேசத்தில் செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு இப்போது கிடைக்கும்.

50 வயதிற்கு மேற்பட்டவர்கள் உங்களின் இளமை காலத்திலேயே ஜென்மச்சனி அமைப்பை அனுபவித்து விட்டீர்கள் என்பதால், அவர்களுக்கு வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் சிக்கல்கள் இருக்காது. மாறாக நல்ல லாபங்கள் வரக்கூடிய அமைப்பு இந்த வருடம் இருக்கிறது. நடுத்தர வயதினருக்கு வீடு, வாகனம் போன்ற பொருள் சேர்க்கைகள், நிலம் வாங்குவது, வீட்டிற்கான மனை வாங்குவது, கையில் இருக்கும் பணத்தை நல்லவிதமாக செலவு செய்வது போன்ற நற்பலன்கள் இந்த வருடம் இருக்கும். இளையவர்களுக்கு மட்டுமே சில சோதனைகள் இருக்கும்.

இளைய பருவத்தினரின் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம்.

சுயதொழில் நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது  முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும். வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு  இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருப்பது கடினம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள். முதுகுக்குப் பின்னே பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.

மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சம்பளம் தவிர்த்த இதரவருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம்.

பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இந்த வருடம் பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம்.  வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

தொழிலாளர்களுக்கும் வேலைசெய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்த ஆண்டில்  அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே சிலருக்கு அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு. விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். குறிப்பிட்ட சிலர் சனியின் ஆதிக்கத்தினால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள்  இருக்கும்.

பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். சிலருக்கு  மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இருக்கும்.

ராகு பனிரெண்டில் இருப்பதால் யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். பேராசை பெருநஷ்டம் போன்ற நிலைமைகள் இப்போது இருக்கும் என்பதால் ஸ்பெகுலேஷன் துறை பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். அதேபோல வட்டித்தொழில் செய்பவர்கள் கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு தகுதியற்ற நபர்களுக்கு கடன் கொடுக்காதீர்கள். கொடுத்த பணம் திரும்பி வராது.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். கம்ப்யூட்டர் சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும், மறதிகளும் ஏற்படும். பொறியியல் துறை மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டிய காலம் இது.

பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும்  எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம். குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது.

பெண்களுக்கு நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தில்  செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம்.  வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும்.

சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

நிறைவாக மீன ராசிக்கு ஆரம்பத்தில் அனைத்தையும் தந்து பிற்பகுதியில் கவனத்துடன் இருக்க வைக்கும் வருடமாக இது இருக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment