Wednesday, December 25, 2024

விருச்சிகம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு  பிறக்க இருக்கும் புத்தாண்டான 2025-ம் வருடம் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களைக் கொடுக்கின்ற வருடமாக இருக்கும். 

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீச்சம், மற்றும் வக்ரம் எனும் பலவீன நிலையை அடைந்திருக்கிறார். ஜூன் மாதத்திற்கு பிறகே அவர் இயல்பு நிலைக்கு திரும்புவார். அதேநேரத்தில் இப்பொழுது ஏழாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருக்கும் குருவும் எட்டாமிடத்திற்கு மாறுவார் ஆகவே பெரிய முன்னேற்றங்கள், கஷ்டங்கள் எதுவும் இல்லாத ஒரு இயல்பான வருடமாகவே இது அமையும்.

இளைய பருவ விருச்சிக ராசிக்கார்கள் பலர் கடந்த இரண்டு வருடங்களாக அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் நான்காமிடத்து சனியின் பாதிப்பினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பாதிப்புகளை அடைந்து தன்னம்பிக்கையை இழந்திருக்கிறீர்கள். 

சிலருக்கு நல்லவேலை இல்லை, சிலருக்கோ வேலையே இல்லை. இன்னும் சிலருக்கு கிடைத்த வேலை கை நழுவிப் போய்விட்டது. இன்னும் சிலரின் வாய்ப்பை அடுத்தவர்கள் தட்டிப்பறித்து சென்றுவிட்டார்கள் என்ற நிலைதான் சென்ற வருடம் வரை விருச்சிக ராசிக்கு நடந்து கொண்டிருந்தது.

அதிலும் கோட்சார ரீதியில் நான்காமிடச் சனி ஒரு அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சங்கடங்களையும், நிர்வாகச் சிக்கல்களையும் தரும் என்பதன்படி பொறுப்பில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களின் ஆளுமைத்திறன் சனியின் ராசிப் பார்வையால் பாதிக்கப்பட்டு சிலர் நற்பெயரை இழந்து விட்டிருப்பீர்கள். இது போன்றவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு புத்துணர்வும், நற்பெயரும் கிடைக்கும் என்பதால் பெரிய வருத்தங்கள் எதுவும் இந்த வருடம் விருச்சிகத்திற்கு இல்லை.

உங்களை தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த அர்த்தாஷ்டமச் சனி அமைப்பு இந்த வருடம் மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் விலகுகிறது. இன்னொரு பாபரான  கேது இந்த வருட ஆரம்பத்தில் மிகவும் நல்ல பலன்களை தரக்கூடிய பதினோராமிடத்தில் இருப்பதும் நல்ல அமைப்பு.

ராகு,கேதுக்கள் பதினோராமிடத்தில் அமரும் நிலையில் பெரிய லாபங்களை தருவார்கள் என்பது ஜோதிட விதி. அதன்படி பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை வருகின்ற வாய்ப்பான ஒரு நல்ல கோட்சார நிலை இந்த வருடம்  கேதுவின் மூலம் அமைந்துள்ளதால் விருச்சிக ராசிக்காரர்களின் தொழில் அமைப்புகள் மேன்மை பெறும். எனவே இந்த ஆண்டில் சனி மற்றும் கேது நிலைகளின் மூலம் நல்ல தொழில் முன்னேற்றங்களையும், பொருளாதார லாபங்களையும், பணவரவுகளையும் எதிர்கொண்டு சந்தோஷப்படுவீர்கள்.

உங்களில் சிலருக்கு இந்தவருடம் மேற்கு நாடுகளுக்கு வேலை, தொழில் விஷயமாக பயணப்படுதலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வேலை அமைதலும் இருக்கும். இன்னும் சிலருக்கு முஸ்லிம், கிறித்துவ நண்பர்கள், அமைப்புகள், பங்குதாரர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பிறப்பால் முஸ்லிம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதத்தினர் மூலம் நல்லவைகள் நடக்கும்.

கேது, பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோகநிலையில் அமரும் போது மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைத் தந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவார். அதன்படி இம்முறை அவர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் இருப்பதால் சாதுர்யமான வழிகளில் உங்களை ஈடுபடுத்தி தனலாபத்தைத் தருவார்.

வருடத்தின் பிற்பகுதியில் விருச்சிக ராசிக்காரர்கள் சிலர் திடீர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் இந்த வருடம் உங்களால் சாதிக்க முடியும்.

சனியின் ஆதிக்கத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு இந்த வருடம் மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன்  வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.

இதுவரை பணவரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப்பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். குரு இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும்.

குடும்பம் உண்டாகாத இளைய பருவத்தினருக்கு வாழ்க்கைத் துணை அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள். முதல் வாழ்க்கை முரணாகிப் போனவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடந்து அந்த அமைப்பின் மூலம் நிம்மதியும், சந்தோஷமும் நீடித்து இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தைச்செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். இதுவரை குடும்பத்திற்கு வாங்க முடியாத அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு ஹவுசிங் லோன் போன்றவைகளின் மூலம் வீடுவாங்கும் அமைப்பு ஏற்பட இருக்கிறது. வங்கிக்கடன் ஏற்படும். ஏற்கனவே இருக்கின்ற வாகனத்தையோ, சொத்தையோ விற்றுவிட்டு மேற்கொண்டு கடன் வாங்கி அதை விட நல்ல வாகனமோ, சொத்தோ வாங்குவீர்கள்.

நடுத்தரவயது தாண்டிய விருச்சிக ராசிக்காரர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கப்படும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

வருடத்தின் பிற்பகுதி மாதங்களில் எட்டில் குரு இருப்பதால், திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற அதிர்ஷ்ட விளைவுகளில் குறிப்பிட்டதக்க அளவிற்கு பணலாபம் கிடைக்கும். அதேநேரத்தில் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்தாது. ஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத விருச்சிக ராசிக்காரர்களுக்கு பங்கு சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால் இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வெளிநாட்டுக்கு போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

வருடம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

பெரும்பாலான கிரகங்கள் தற்போது  ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு இதர வருமானங்கள்சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு இந்த வருடம் நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

கடன் தொல்லைகள் இருக்காது. புதிய கடன்கள் வாங்க வேண்டிய தேவையின்றி போதுமான வருமானம் தாராளமாக வரப் போகின்றது. எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

ஐந்தாமிடல் சனி இருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

மொத்தத்தில் தொட்டது துலங்கும் காலம் என்பதால் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி விருச்சிகத்தினர் தங்கள் எதிர்கால நல்வாழ்க்கைக்கான அடிப்படைகளை இப்போது அமைத்துக் கொள்ளுங்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment