Wednesday, December 25, 2024

2025 - புத்தாண்டு பொதுப்பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

2025புத்தாண்டு இம்முறை செவ்வாய்க்கிழமை இரவு, புதன் அதிகாலை, மார்கழி 17ம் நாள்,  பிரதமை திதி, பூராடம் நட்சத்திரம்,  தனுசு ராசி, கன்னி லக்னத்தில் உதயமாகிறது.

எந்த வருடமாக இருந்தாலும் டிசம்பர் மாதம் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி எப்போதுமே கன்னி லக்னமாகவே இருக்கும். இது நிலையானது. ஒருபோதும் மாறாதது.

மாறிக் கொண்டே இருக்கும் வருடத்தின் பலன்களை, மாறாத ஒரு லக்னத்தை வைத்துக் கணிப்பது சரியானதல்ல. சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நிராயன முறையை பின்பற்றும் நமது இந்திய ஜோதிட முறைப்படி வருடாவருடம் புத்தாண்டு நாளில் ராசி மாறும் என்பதால் சந்திர ராசிப்படி ஆண்டுப் பலன்களைக் கணிப்பதே பொருத்தமானதாகவும் சரியானதாகவும் இருக்கும். அதன்படியே நான் ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு பலன்களையும் எழுதி வருகிறேன்.

இந்த ஆண்டின் சிறப்பு பலனாக, வருடம் பிறக்கும் நாளில் தனுசு ராசியில் சூரியனும், சந்திரனும் அமாவாசைக்கு அருகே, பிரதமை திதியில் கூடியிருக்க, ராசிக்கு  மூன்று, ஆறாமிடங்களில் சுக்கிரனும், குருவும் இருக்கிறார்கள். ராசிக்கு 12 ல் உள்ள புதனை மட்டும் குரு பார்க்கிறார். வேறு எந்த கிரகத்தோடும் குருவிற்கு தொடர்பு இல்லை. ஒரு பின்னடைவு நிலையாக பூமிகாரகனாகிய செவ்வாய், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் நீச்சம் மற்றும் வக்கிரம் எனும் பலவீன நிலையை அடைந்திருக்கிறார்.

இந்த வருடத்தின் முக்கிய சிறப்பு என்று பார்த்தால், வருடக் கிரகங்களான குரு, சனி, ராகு-கேது மூன்றுமே இந்த வருடம் பெயர்ச்சி ஆகின்றன.

முதல் அமைப்பாக அனைவரும் எதிர்பார்க்கும் சனிப்பெயர்ச்சி, இந்த வருடம் மார்ச் மாதம் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. அடுத்து, மே மாதம் 14 ஆம் தேதி குருப் பெயர்ச்சி நடக்க இருக்கிறது. ஜூன் மாதத்தில் ராகு-கேது. இருவரும் இடம் மாறுவார்கள். ஆக, மூன்று முக்கிய பெயர்ச்சிகளும் நடக்கும் ஒரு சிறப்பு வருடமாகவே இந்த 2025 இருக்கும்.

உலகியல் ஜோதிட விதிகளின்படி நமது இந்தியத் திருநாடு மகர ராசியைச் சேர்ந்ததாகும். பெரும் மக்கள் கூட்டத்தையும், அவர்கள் கூடும் இடங்களையும் சனியும் அவரது மகர, கும்ப ராசிகளும் குறிப்பிடுகின்றன என்பதால் உலகில் அதிக ஜனத்தொகைகளைக் கொண்ட சீனா, கும்ப ராசியையும், இந்தியா மகர ராசியையும் குறிக்கும்.

நமது நாட்டைக் குறிக்கும் மகர ராசிக்கு ஐந்தாமிடத்தில் குரு அமர்ந்து மகரத்தைப் பார்ப்பதாலும், மகரநாதன் சனி, வருடத்தின் ஆரம்ப நாளில் சுக்கிரனோடு இணைந்து சுபத்துவத்தை அடைந்திருப்பதாலும், 2025ம் ஆண்டு அனைவருக்கும் ஒரு அமைதியான ஆண்டாகவே இருக்கும். எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி இருக்கும். பெரிய பின்னடைவுகள் எதுவும் இருப்பதற்கு இந்த 2025 ல் வாய்ப்புகள் இல்லை.

தனிமனித சுதந்திரம் காக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் இரண்டும் பொதுமக்கள் நன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றும். நாடு ஒரு சீரான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதை இந்த வருடம் பொதுமக்கள் உணர முடியும்.

மத்திய, மாநில தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வெளிநாடுகளில் இந்தியர்கள் மேன்மை பெறுவார்கள். உலக அரங்கில் இந்தியாவின் தனித்தன்மை பளிச்சிடும். வருட பிற்பகுதியில் குருவின் வீடான தனுசு, குரு பார்வையில் வலிமை பெறுவதாலும், இன்னொரு குருவின் வீடான மீனத்தில் இருக்கும் ராகு, ஜூன் மாதம் அங்கிருந்து விலகுவதாலும், மக்களிடம் இந்த வருடம் பெரும்பாலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. எல்லோருடைய கையிலும் பண நடமாட்டம் இருக்கும். நாட்டின் பொருளாதார நிலையும் சரிவடையாமல் சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.

குருவின் இரண்டு வீடுகளும் வலிமை பெறுவதால் ஆலயங்களுக்கும், ஆன்மிகப்பற்று உடையவர்களுக்கும் புத்தாண்டு நன்மைகளை தரும். ஆன்மிகவாதிகள் உயர்வு பெறுவார்கள். ஆலயங்கள் பொலிவு பெறும். பழமையான திருக்கோவில்கள்  புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். மக்களுக்கு ஆன்மிகப் பற்று கூடுதலாக ஏற்படும். அனைத்தும் அவன் செயல் என்ற எண்ணம் மேலோங்கும்.

வருட ஆரம்பத்தில் எளிய மக்களை குறிக்கும் சனி, சுக்கிரனோடு இணைந்து வலுப் பெற்றுள்ளதால் அடித்தட்டு மக்கள், உழைப்பாளிகள், தொழிலாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்டவர்கள், வாகன ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், மாற்றுத் திறனாளிகள், மதுபானத் தொழிலில் உள்ளோர், எண்ணைத் தொழில், தோல்பொருட்கள் செய்வோர், அமைச்சர்கள், அரசுப்பணி செய்வோர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் வாழ்க்கைத் தரம் உயரும். பெண்கள் இந்த வருடம் உயர்ந்த நிலையில் இருப்பார்கள், பெண்ணினம் மதிக்கப்படும்.

மே மாதத்திற்கு பிறகு, குருபகவான் சம்பந்தப்பட்ட துறையினரான ஜுவல்லரிக்காரர்கள், ஆன்மிகத் துறையினர், வட்டித்தொழில் செய்பவர்கள், வங்கித்துறை, நிதித்துறை, சட்டம் சம்பந்தப்பட்டோர், நீதியரசர்கள், சொல்லிக் கொடுப்போர், மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்டவைகளும், சுக்கிரனின் செயல்பாடுகளான ஏ.சி, டி.வி, செல்போன். ப்ரிஜ் போன்ற தொழில் செய்பவர்களும் நன்மைகளை பெறுவார்கள்.  செவ்வாய் நீச்சம் பெறுவதால் கட்டிடத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் தேக்க நிலையை பெறுவார்கள்.  

வருட ஆரம்பத்தில் குருவின் நேர் பார்வையை புதன் பெறுவதால், அறிவுசார்ந்த துறைகளான சாப்ட்வேர், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங், வியாபாரிகள், தகவல் தொழில் நுட்பத்துறை, கணக்கு, புத்தகம் சம்பந்தப்பட்டோர், எழுத்தாளர், பத்திரிக்கைத்துறை, கவிஞர்கள், செல்போன்துறை, கமிஷன் துறையினரும் சிறப்புப் பெறுவார்கள். மக்களின் பொருளாதார நிலைமை மேம்பட்டு வாங்கும் சக்தி அதிகரிக்கும். விலைவாசி கட்டுக்குள் இருக்கும். குருவின் பலத்தால் எல்லோரும் தங்கம் வாங்கமுடியும்.

இளைஞர்களுக்கு அனைத்து துறைகளிலும் வாய்ப்பு கிடைக்கும். மாறுபட்ட எண்ணங்களை உடைய இளைஞர்கள் ஜெயிப்பார்கள். முதியவர்களை பின்னுக்குத் தள்ளி இளைய பருவத்தினர் தங்கள் செயல் திறமையால் முதலிடம் பெறுவார்கள். வியாபாரிகள், மற்றும் விவசாயிகள் வளம் பெறுவார்கள். தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் சிறப்பான பலன்கள் இருக்கும். விவசாய முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்படும். பிறக்கும் புது வருடம் மழைக்குப் பஞ்சமில்லாத வருடமாக இருக்கும். நீர்வழி சம்மந்தப்பட்ட திட்டங்களின் ஆரம்பங்களும் இப்பொழுது இருக்கும்.

தனிநபர்களுக்கான பலன்கள் என்று பார்க்கப் போனால் கடகம், மகரம், கும்பம்  ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முதல் அனைத்திலும் நன்மைகள் உண்டு. கடுமையான மன அழுத்தம் தரும் சம்பவங்களால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த கும்பம், கடகத்தினருக்கு இந்த வருடம் முதல் ஜன்மச்சனி, அஷ்டமச்சனி விலக இருப்பதால் இனி இவர்கள் இருவருக்கும் நிம்மதி கிடைக்கும்.

மகர ராசிக்கு ஏழரைச்சனி முழுவதுமாக நீங்க உள்ளதால் அவர்களுக்கு கொண்டாட்டம்தான். சனியால் பெரிதும் பாதிக்கப்பட்ட இன்னொரு ராசியான விருச்சிகத்திற்கும் அர்த்தாஷ்டமச் சனி விலக இருக்கிறது. இதனால் இதுவரை பொருளாதார சிக்கல்களில் இருந்து வரும் விருச்சிகத்தினர் அது நீங்கப் பெறுவார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கும் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கும்.

மீனத்திற்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இந்த வருடம் ஜென்மச்சனி அமைப்பில் வருகிறார்கள். எனவே மீன ராசி இளைய பருவத்தினர் வேலை தொழில் போன்றவைகளில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த வருடம் காதல் கத்திரிக்காயை வேக வைக்காமல் இருந்தால் போதும். இல்லையெனில் அடுத்த வருடம் மனம் வெந்து விடும். அதேநேரத்தில் ஐம்பது வயதை நெருங்கும் நடுத்தர வயது மீனத்தினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

சிம்மத்திற்கு அஷ்டமச் சனி நடக்க இருக்கிறது என்றாலும், சனிப்பெயர்ச்சியை அடுத்து மே மாதம் நடக்க இருக்கும் குருவின் மாற்றம் மூலம் குரு, பதினோராம் இடத்திற்கு  வருவதால் சிம்ம ராசிக்கு இந்த 2025 ம் ஆண்டு அஷ்டமச்சனியின் தாக்கம் பெரிதாக இருக்கப் போவதில்லை. அதேநேரம் அடுத்த வருடம் சிம்மத்திற்கு அஷ்டமச்சனியின் தாக்கம் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். சிம்மத்தினர் இந்த வருடம் புதிய தொழில் முயற்சிகள் எதையும் தொடங்க வேண்டாம். சுப காரியங்களுக்கும் தடை இருக்கிறது.

மேஷம், தனுசு ராசிக்காரர்களுக்கு வருடம் முழுவதும் தொல்லைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இந்த இருவருக்கும் நிதானமான, அதேநேரத்தில் கெடுதல்கள் ஏதும் இல்லாத ஆண்டு இது. மிதுனம், கன்னி, ஆகிய இரண்டு  ராசிகளுக்கும் வருடம் முழுவதும் கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் குறைகள் எதுவும் சொல்வதற்கு இல்லை. இவர்களுக்கு நல்ல திருப்பங்களைக் கொடுக்கும் ஆண்டு இது. ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சனி 11 லும் குரு இரண்டிலும் வருவது மிகச்சிறப்பு. ஆகவே அவர்களுக்கு எல்லா நிலைகளிலும் நற்பலன்கள் இருக்கும்.

நிறைவாக, துலாம் ராசியினர் சிறப்பு நற்பலன்களைப் பெறுவார்கள். துலாத்திற்கு மட்டும் இந்த வருடம் நடக்க இருக்கும் மூன்று பெயர்ச்சிகளும் சாதகமான அமைப்பில் இருக்கின்றன. சனி ஆறிலும், குரு ஒன்பதிலும், கேது பதினொன்றிலும் இருப்பது மிக விசேஷம். பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகளும் நன்றாக இருந்தால் துலாம் ராசியினர் சாதிக்கும் ஆண்டாக இது இருக்கும்.

அனைவருக்கும் இனிய 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எல்லோரும் நன்றாக இருப்பீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment