Monday, January 25, 2021

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (25-01-2021 முதல்31-01-2021 வரை)

 


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மேஷம்:

இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வாரம். ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே இருக்கிறார். யோகாதிபதி குரு நீச்ச பங்க வலுவாக உள்ளார். இது அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் உங்களைப் பாதுக்காக்கும் ஒரு கேடயம் போன்ற அமைப்பு. மேஷத்திற்கு கெடுதல்கள் எதுவும் இல்லை. பணிபுரியும் இடங்களில் பிரச்சனைகள் எதுவும் வராது. ராசிநாதன் வலுவாக இருப்பது ஜீவன அமைப்புகளை வளப்படுத்தும் என்பதால் இந்த வாரம் எல்லாத் துறையினருக்கும் வருமானம் இருக்கும். மேஷத்திற்கு இது வருமான வாரம்.

வாரம் முழுவதும் பணவரவு நல்லபடியாக உண்டு. உங்களில் பலரை தூங்க முடியாத நிலையை உருவாக்கியிருந்த கடன்கள் தீருவதற்கான நிலைகள் இனி உருவாகும். அதற்கு அடிப்படையான விஷயங்களை இனிமேல் செய்ய முடியும். இதுவரை அடைபட்டிருந்த அனைத்து வழிகளும் திறப்பதை உணருவீர்கள். உங்களை மன அழுத்தத்தில் வைத்திருந்த அனைத்தும் நீங்கப் போகிறது. இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். நான் சொல்வதை உங்களில் சிலர் கடந்த சில வாரங்களாக உணர்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்.

ரிஷபம்:

அஷ்டமச்சனி விலகி, ராசியைக் குரு பார்ப்பதால் ரிஷப ராசி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும் வாரம் இது. ஒரு குறிப்பிட்ட சிறப்பு பலனாக உங்களால் வளர்க்கப்பட்ட, உங்களால் தூக்கி விடப்பட்டவர்கள் உங்களின் எண்ணத்திற்கு மாறாக நடப்பார்கள் என்பதால் அடுத்தவரின் மேல் நம்பிக்கை வைக்காமல் உங்களை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டிய வாரம் இது. ரிஷபத்திற்கு இனிமேல் சோதனைகள் இல்லை. உங்களின் சோதனையான காலம் அனைத்தும் முடிந்து விட்டது. இனிமேல் எதையும் உங்களால் சமாளிக்க முடியும்.

பெண்களுக்கு அலுவலகத்தில் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும் தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தையிடம் ஒரு காரியத்தை சாதிக்க நேரம் எதிர்பார்த்து இருந்தவர்கள் இந்த வாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். குரு நீச்ச பங்க வலுவில் ஒன்பதாமிடத்தில் இருப்பதால்   அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலில் உள்ள தக்ஷிணாமூர்த்திக்கு  ஒரு வியாழக்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது இனிமேல் எந்த சிக்கலும் வராது சிரமங்களை குறைக்கும்.

மிதுனம்:

யோகாதிபதிகள் புதனும், சுக்கிரனும் வலுவாக இருந்தாலும் எட்டில் குரு உள்ளதால் மிதுனத்திற்கு இது சுமாரான வாரம்தான். அதேநேரத்தில் சூரியன், சனி இணைந்திருப்பதால் வயதான தந்தையைக் கொண்டவர்கள் அப்பாவின் மேல் அக்கறை கொள்ள வேண்டிய வாரம் இது. உங்களில் சிலருக்கு பெற்றோர்கள் மூலம் விரயங்கள் இருக்கும். செவ்வாயின் ஆட்சி நிலையால் சகோதரர்கள் உங்கள் விருப்பத்திற்கு இணங்கி நடப்பார்கள். உங்களில் மூத்தவர்கள் சில கடமைகளை செய்வீர்கள்.

சொல்லிக் கொடுப்போர், பேச்சுத் திறமையால் வேலைசெய்பவர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் போன்றவருக்கு பணியிடங்களில் நெருக்கடி வரும் என்பதால்  அனுசரித்து போவது நல்லது. திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை, தொழில் அமைப்புகள் இப்போது அமையும். இதுவரை உங்களின் பேச்சைக் கேட்காதவர்கள். உங்களின் சொல்லைக் கேட்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து போனவர்கள் தவறை உணர்ந்து இணையத் தூது விடும் நேரம் இது.

கடகம்:

வாரம் முழுவதும் ராசி குருவின் பார்வையில் இருப்பதால் உங்களுடைய அந்தஸ்து கெளரவம் உயரும் சம்பவங்கள் இப்போது நடக்கும். ஆனால் வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் ராகுவுடன் இணைந்திருப்பதால் நன்மைகள் அனைத்தையும் முழுமையாக  அனுபவிக்க முடியாதபடி நெருடல்கள் இருக்கும். கடகத்திற்கு இப்போது தாமத பலன்கள் நடக்கும் நேரம் என்பதால் ஜீவன அமைப்புகளான வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் இந்த வாரம் மட்டும் அகலக்கால் வைக்க வேண்டாம். எதிலும் ரிஸ்க் எடுக்காதீர்கள்.

அலுவலகத்தில் பெண்கள் உதவுவார்கள். பெண்களை மேலதிகாரியாக கொண்டவர்களுக்கு நன்மை உண்டு. இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். சிலர் தாயாரைக் காண சொந்த ஊருக்குச் செல்வீர்கள். அம்மாவின் ஆசீர்வாதங்களை பெறுவீர்கள். தாயை இழந்தவர்கள் தெய்வமாகி விட்ட அவரிடம் உங்கள் பிரச்னைகளை மனம் விட்டு கூறி வேண்டினால் தேவைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார்.

சிம்மம்:

யோகாதிபதிகள் குருவும், செவ்வாயும் நல்ல நிலையில் இருப்பதால் இந்த வாரம் சிம்ம ராசியினருக்கு அந்தஸ்து, கௌரவம் உயரும்படியான நல்ல சம்பவங்களும், குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளும் இருக்கும். உடல்நலம் மனநலம் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி பூசல்கள் எதுவும் இருக்காது. ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். சூரியன் வலுவாக இருப்பதால் அரசுஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் வாரம்.

வீடு வாகனம் போன்ற விஷயங்களில் இதுவரை நிறைவேறாத எண்ணங்கள் நிறைவேறும். சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு திடீர் லாபம் உண்டு. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை தள்ளிப் போடுவது  நல்லது. சிலருக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புனித யாத்திரைகளும், நவக்கிரக சுற்றுலாக்களும் இருக்கும். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். பணவரவிற்கு குறையில்லை. தேவைப்படும் உதவிகள் சரியான சமயத்தில் கிடைக்கும்.

கன்னி:

கன்னியினருக்கு இந்த வாரம் வேலை வியாபாரம் தொழில் போன்ற அமைப்புக்களில் நல்ல பலன்கள் இருக்கும். குருபகவான் நீச்ச பங்க நிலையில் ஐந்தில் அமர்ந்து தொழில்யோகம் உண்டாவதால்  பணவரவுக்கும் பஞ்சமில்லை. தொழில், வியாபாரம், வேலை செய்யுமிடங்களில் இருந்து வந்த அதிருப்தி, ஏமாற்றம் ஆகியவை விலகி மனம் போல காரியங்கள் நடைபெறும். குழந்தை பிறக்காதவர்களுக்கு இன்னும் ஆறுமாதத்திற்குள் குழந்தை உருவாகும். பிள்ளைகளால் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு.

இதுவரை இருந்த தடைகள் விலகும். இருட்டில் இருந்தவர்கள் வெளிச்சத்திற்கு வருவீர்கள். உங்களில் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கான ஆரம்ப சம்பவங்கள் இந்த வாரம் நடக்கும். சாதகமான கிரக அமைப்புகள் இருந்தும் உங்களில் சிலருக்கு நல்ல விஷயங்கள் நடக்கவில்லை. இளைஞர்கள் சிலருக்கு இன்னும் வாழ்க்கைக்கு தேவையான எதுவுமே கிடைக்காத நிலை இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு சித்தரின் ஜீவசமாதியில் வியாழக்கிழமை தோறும் வழிபடுவது நல்லது.

துலாம்:

துலாநாதன் சுக்கிரன் தனது எதிரியான குருவுடன் இணைந்திருக்கிறார். நீங்களும் உங்கள் எதிரியும் ஒரே அறையில் தர்ம சங்கடத்துடன் இருப்பது போன்ற ஒரு நிலை இந்த வாரம் இருக்கும். வாரம் முழுவதும் மந்தமான போக்கு இருக்கும். சனி நான்கில் இருந்தாலும் ஆட்சியாக இருப்பதால் எல்லா விஷயங்களும் நன்மையில் முடியும். துலாமுக்கு இப்போது வளர்பிறை காலம். சோம்பலின்றி சுறுசுறுப்பாக செயலாற்றினால் அனைத்தையும் ஜெயிக்கலாம். உங்களில் வழக்கு சம்மந்தமாக போலீஸ், கோர்ட் என்று அலைந்தவர்கள் சாதகமான திருப்பங்களை காண்பீர்கள்.

கணவன்-மனைவி உறவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெரிய உரசல்கள் இன்றி சந்தோஷமாகவே இருக்கும். விரயாதிபதி சுபவலுப் பெறுவதால் செலவு செய்து ஏதேனும் ஒரு பொருள் வாங்குவீர்கள். கூட்டுத் தொழில் சிறப்படையும். தந்தைவழி உறவினர்களால் விரயச்செலவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து தலையிடவும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல வாரம்தான். நண்பர்களால் ஆதாயம் உண்டு. தந்தையின் தொழிலைச் செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்:

இந்த வாரம் சந்திராஷ்டம அமைப்பில் சந்திரன் எட்டில் மறைந்தாலும் அதையும் மீறி விருச்சிக ராசிக்கு தடைகள் நீங்கி நல்லது நடக்கும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த ஒன்று  உங்கள் எண்ணம் போலவே நடைபெறும்.  வார ஆரம்பத்தில் சிலருக்கு பணவரவு குறைந்து நெருக்கடிக்குள்ளாக்கும் என்பதால் எதையும் யோசித்து செய்யுங்கள். குறிப்பிட்ட ஒரு சிறப்பு பலனாக உங்களில் சிலருக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். அந்த வருமானத்தை நல்ல விதத்தில் செலவழிக்கத்தான் முடியாது.

கலைஞர்களுக்கு மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். மனைவி வழி உறவினர்களுடன் மனவருத்தம் ஏற்படலாம். பெண்கள் விஷயத்தில் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. மனதை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. 25-ம் தேதி மதியம் 1.02 முதல் 27-ம் தேதி இரவு 9.43 வரை சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

தனுசு:

யோகக் கிரகங்கள் செவ்வாயும், குருவும் வலுவாக இருப்பதால் தனுசு ராசிக்கு இனிய சம்பவங்கள் நடக்கும் வாரம் இது. சிலருக்கு எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையக்கூடிய நிகழ்ச்சிகள் இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள். நீண்ட நாள் பார்க்காத நண்பர்கள் உறவினர்களை இந்த வாரம் பார்த்து மனம் மகிழ உரையாடலாம். விருந்து கொடுக்கலாம். வசதிக்குறைவான வீட்டில் இருப்பவர்கள் வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். பிரச்சினைகள் எதுவும் கிட்டே வராது.

எதிலும் வெற்றி கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களும் வலிய வந்து உதவுவார்கள். சூதாட்டம், பங்குச் சந்தை கை கொடுக்கும். பெண்கள் தொடர்பான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். எதையும் சாதிக்க முடியும் வாரம் இது. உங்களின் கௌரவம், மதிப்பு, மரியாதை புத்துயிர் பெறும். 27-ம் தேதி இரவு 9.43 முதல் 30-ம் தேதி அதிகாலை 3.21 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள்.

மகரம்:

மகர ராசிக்கு இது கெடுதல்கள் எதுவும் இல்லாத வாரம்தான்.  அதே நேரத்தில் ராசியில் சனி இருப்பதால் எந்த ஒரு விஷயத்திற்கும் எரிச்சல் படுவீர்கள் என்பதோடு கோபமும் தலை காட்டும். சிலருக்கு இது எதிர்ப்புக்களை உருவாக்கி குழப்பத்தில் ஆழ்த்துகின்ற வாரமாக இருக்கும். ஜென்மச் சனி நடப்பதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு பேச்சுக்களில் நிதானம் தேவை. எவரிடமும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள்.

மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் உண்டு. உயர்பதவியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருக்கும். தலைவலியாக உணர்வீர்கள். அரசு ஊழியர்களுக்கு வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். 30-ம் தேதி அதிகாலை 3.21 முதல் 1-ம் தேதி காலை 6.58 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.

கும்பம்:

கும்ப ராசிக்கு இது கெடுதல்கள் எதுவும் இல்லாத நன்மையான வாரமாகவே இருக்கும். நல்ல பணவரவு உள்ள வாரம் இது. ராசிநாதன் சனி சூரியனுடன் இணைந்தாலும், புதனும், சுக்கிரனும் நன்மை தரும் அமைப்பில் இருப்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் மட்டுமே நடைபெறும். ஒரு சிறு குறையாக இரண்டாம் அதிபதி குரு நீச்ச பங்கம் பெற்றுள்ளதால் அனைத்திலும், தடைகளும், தாமதங்களும் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் முயற்சிக்குப் பின்பு சிறிய தடையுடன் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. யாரிடமும் கடுமையான வாக்குவாதமோ, கருத்து மோதல்களோ வேண்டாம். சிலருக்கு தடைகளுக்குப் பிறகு வெற்றி உண்டு. உயரதிகாரிகளாக இருப்பவர்களுக்கு சில நிர்ப்பந்தங்கள் வரும். கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ண வேண்டுமென்றே சிலர் திரிவார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள். வயதான தாயாரை கொண்டவர்கள் அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. வீடு, வாகனம் சம்பந்தப்பட்டவைகளை இரண்டுவாரம் ஒத்திப் போடுங்கள்.

மீனம்:

மீனத்திற்கு இது நல்ல வாரம்தான். சாதகமற்றவை எதுவும் நடக்காது. குரு, செவ்வாய் வலுவாக உள்ளதால் பணவரவுகளும் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்கு விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. சென்டிமென்டுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். மாமன், மச்சான் அண்ணன், தம்பி என்றாலும் வாயும், வயிறும் வேறு என்று புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

இரண்டில் செவ்வாய் உள்ளதால் எவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கூடுமான வரையில் சண்டையை தவிர்ப்பது நல்லது. யாரையாவது நீங்கள் திட்டினால் அது பலித்து பெரிய மனஸ்தாபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். எதிலும் இப்போது தைரியமாக இறங்கலாம். கிரக நிலைகள் நன்றாக உள்ளன. இளையவர்கள் சிலருக்கு இந்த வாரம் வேலையில் மாறுதல்கள் உண்டு. வெளிமாநிலத்தில் சிலருக்கு வேலை கிடைக்கும். மீனத்திற்கு நல்ல மாற்றம் ஆரம்பிக்கும் வாரம் இது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment