Thursday, December 31, 2020

Dhanush: 2021 New Year Palangal - தனுஷ்: 2021 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு 2021-ம் வருடம் நல்லபலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும். கடந்த மூன்று வருடங்களாக கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத தனுசுவினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.

கடந்த சில வருடங்களாக ஏழரைச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான தனுசுவினர் சாதகமற்ற பலன்களை அனுபவித்து வந்தீர்கள். சென்ற வருட ஆரம்பத்தில் ஜனவரி மாதம் 24ம் தேதிதான் உங்கள் ராசிக்கு ஜென்மச்சனி விலகியது.

ஜென்மச்  சனி முடிந்த பிறகு வாழ்க்கை படிப்படியாக செட்டில் ஆகும் என்பது ஜோதிடப்படி உறுதியான ஒன்று. எனவே 2021-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே மிகவும் நல்ல பலன்கள் நடந்து, இப்போது இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து இந்த ஆண்டு முதல் தனுசுவினர் அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள் என்பது உறுதி.

ராசிநாதன் குருவின் நிலையை மேம்போக்காகப் பார்க்கையில் புத்தாண்டின் ஆரம்பத்தில் குருபகவான் நீச்ச நிலையில் இருப்பது போல தோன்றினாலும், அவர் சனியுடன் இணைந்து நீச்ச பங்க அமைப்பில் இருப்பதால் உங்களுக்கு கெடுதல்களைச் செய்ய மாட்டார்.

கூடுதலாக ராகுவும் ஆறாமிடத்தில் சுப ராகுவாக இருக்கிறார். எனவே முக்கிய கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால் 2021-ம் வருடம் உங்களுக்கு நல்ல திருப்புமுனைகளையும், எதிர்கால நல்வாழ்க்கைக்கு தேவையான அஸ்திவாரங்களையும் அடிப்படைகளையும் அமைத்து தரும்.

சொந்தத் தொழில் தொடங்க அருமையான நேரம் இது. இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம் வந்து விட்டது. வியாபாரிகளுக்கு இது வசந்த காலம். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

பணியாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் நினைத்து போலவே வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லையாக இருந்தவைகள் அனைத்தும் விலகி ஓடும். சில தொழில் முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெறுவீர்கள். விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை  வந்திருக்கிறது. இந்த வருடம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி மேன்மையான நிலையை அடைவீர்கள்.

அருமையான வீடு கட்டலாம். பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். மாற்றங்கள் நிச்சயம் உண்டு. வாகனயோகம் சிறப்பாக இருக்கிறது. பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல் வாங்குவீர்கள்.

வருட ஆரம்பத்தில் வாக்குஸ்தானம்  வலுப்பெறுவதால் பேச்சினாலேயே மற்றவர்களை கவர்ந்து அதனால் லாபமும் அடைவீர்கள். பேசுவதன் மூலம் பணம் வரும் துறைகளான ஆசிரியர் பணி, மார்கெட்டிங் போன்ற விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், கவுன்சிலிங் போன்ற ஆலோசனை சொல்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நன்மைகளைத் தரும்.

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடங்கலின்றி மனநிறைவுடன் நடக்கும். புத்திர பாக்கியம் தாமதமானவர்களுக்கு வாரிசு உருவாகி தவழ்ந்து விளையாடப் போகிறது. பெண்கள் மிகுந்த மேன்மை அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறி அவஸ்தைப்பட்ட நிலைமை இனிமேல் மாறி நிம்மதி கிடைக்கும் வருடம் இது.

இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட எல்லோருக்குமே இது மிகவும் நல்ல பலன்களை அளிக்கும் வருடமாக இருக்கும்.

மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும். நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பு  இருக்கும். மகன் மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்த முடியும். பேரன் பேத்திகள் மூலம் நல்ல சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். வயதானவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

முதியவர்களின் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் நடக்கும். தள்ளிப் போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்குச் செல்லலாம். இதுவரை இருந்துவந்த போட்டிகள் எதிர்ப்புகள் விலகும்.

கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நல்லபலன்கள் அவர் மூலமாக கிடைக்கும்.  யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும் கை கொடுக்கும். எதிர்காலத்திற்கான சேமிப்புகள் செய்ய முடியும். பிறப்பு ஜாதகத்தில் தசாபுக்திகள் சாதகமாக அமைந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் பிரபலமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எல்லா வகையிலும் நல்ல மாறுதல்கள் இருக்கும் வருடம் இது. பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்றவைகளில் சிலருக்கு வருமானம் வரும். மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத் துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல ஒரு தொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

மாணவர்களுக்கு இது மனதில் பதிந்து படிக்கும் வருடம். எல்லா வகையிலும் ஜாலியான இருப்பீர்கள். இளைஞர்களும், யுவதிகளும் தங்களின் வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். காதல் வரும் வருடம் இது.

சிலருக்கு பாகப்பிரிவினையாக உங்கள் பெயரில் ஏதேனும் சொத்து கிடைக்கும். சகோதர உறவு அனுசரணையாக இருக்கும். சிலர் அறப்பணிகளில் ஈடுபடவோ, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கோ வாய்ப்பு இருக்கிறது. வருட பிற்பகுதியில் வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள்.

சிலருக்கு வெளிநாட்டுக் கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பு கிடைப்பதும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமைவதும், வெளிதேச நட்பு மூலம் தொழில் லாபங்கள் இருப்பதும் வடக்கு நோக்கிச் செல்வதும் நடக்கும். பணவரவில் தடைகளோ, பொருளாதார கஷ்டங்களோ இருக்காது. வருமானம் சீராக இருக்கும் என்பதால் எவ்வித கஷ்டங்களும் உங்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.

வாக்கு ஸ்தானம் வலுப்பெறுவதால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். வருடத்தின் ஆரம்பத்திலேயே சிலருக்கு குடும்பம் அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள்.

இளைய பருவத்தினருக்கு இதுவரை தாமதமாகி வந்த திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நல்லபடியாக நடந்து நீடித்தும் இருக்கும்.

கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்.,

ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள், வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு  இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த யோகத்தை தரும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

கிரகநிலைமைகள் சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும்.

எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த மேன்மைமிகு புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment