பாரம்பரிய ஜோதிடத்தில் மூலவிதிகளாக முதலில் கணக்குகள்தான் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஒரு நிலையைக் கடந்து எதிர்கால பலன் அறிவதற்கு ஒருவர் வரும்பொழுது கேந்திரங்கள், கோணங்கள், மறைவு ஸ்தானங்கள் போன்ற 12 ராசி வீடுகளை பிரிக்கும் அமைப்புகளுக்குள் நுழைகிறோம்.
இந்த நிலையில் கேந்திர, கோணங்களில் கிரகங்கள் இருப்பின் அவைகள் நல்லது செய்யும் என்றும், ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் அதிர்ஷ்டத்தைத் தரும் என்றெல்லாம் பாரம்பரிய ஜோதிடத்தில் இதுவரை நம்மால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
அனைத்தையும் உண்மையான கோணத்தில், முறையான ஒரு பரிணாமத்தில் விளக்கும் ஜோதிடனாகிய நான், ஏற்கனவே பாபக் கிரகங்களின் சூட்சும வலு கோட்பாட்டின்படி, சனி செவ்வாய் போன்ற இயற்கைப் பாப கிரகங்கள் நேர்வலு எனப்படும் நேரிடையான ஆட்சி உச்சத்தை பெற்றால் நல்ல பலன்களை தருவதில்லை என்பதை ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறேன்.
மேற்கண்ட இரு பாபர்களும் என்னால் சூட்சுமவலு என்று சொல்லப்படும் ஷட்பல வரிசையில் முதல் நிலையான ஸ்தான பலத்தை அடையாமல் இரண்டாம் நிலை வலுவான திக் பலத்தை அடைந்திருப்பதும், நேரடியாக ஆட்சி, உச்சம் போன்றவைகளை அடைந்தால் கேந்திர, கோணங்களில் இல்லாமல் மறைவு ஸ்தானங்களில் அமர்ந்திருப்பதும், உச்சமடைந்த சனி வக்ரத்தை பெற்றிருப்பதும், இருவரும் சாயா கிரகங்களான ராகுவுடன் இணையாமல் கேதுவுடன் சேர்ந்து இருப்பதுமான நிலைகளில் நற்பலன்களை தருவார்கள் என்பதை முன்னரே சொல்லியிருக்கிறேன்.
மிக முக்கியமாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு கிரகம் ஒன்றில் இருந்தால் இந்த பலன், இரண்டில் இருந்தால் இந்த பலன் என்பது மேம்போக்கான ஒரு அமைப்பில் ஒருவாறாக கிரகச் செயல்களின் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக மட்டும்தான் என்பதே உண்மை. அவை நிச்சயமாக முழுமையானவை அல்ல.
உதாரணமாக ஜோதிடத்தின் தலைவனான சூரியன், ஒருவருடைய ஜாதகத்தில் உபசய ஸ்தானம் என்று சொல்லப்படக்கூடிய 3, 6, 10, 11 இருந்தால் முதன்மையான நல்ல பலன்களைச் செய்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு மூல விதி, ஒரு லக்னத்திற்கு நன்மை செய்யும் கிரகங்கள், கேந்திர கோணங்களில் இருந்தால் நல்லவைகளை செய்யும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த இரு விதிகளையும் இங்கே பொருத்திப் பார்த்தோமேயானால் பொதுவாக சூரியன் ஒரு ஜாதகத்தில் 3, 6, 10, 11ல் இருந்தால் நல்லது என்பதை எடுத்துக் கொள்ளலாமா அல்லது கேந்திர, கோணங்கள் என்று சொல்லப்படும் 1, 4, 7, 10, 5, 9 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் நல்லது என்று எடுத்துக் கொள்ளலாமா என்ற குழப்பம் வரும். இறுதியில் கேந்திர, கோணங்களுக்கும் உப சய ஸ்தானத்திற்கும் பொதுவாக சொல்லப்பட்டிருக்கும் பத்தாமிடத்தில் சூரியன் இருப்பின் நல்லது என்கின்ற முடிவிற்குத்தான் வரவேண்டும்
அதே நேரத்தில் கிரகங்களின் சுப அசுப வலிமையில் சூரியன் அரைப் பாபர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கிரகங்களின் தன்மைகளின் அடிப்படையில் சுபக்கிரகங்கள் கோணத்தில் இருந்தால் நன்மைகளையும் பாபர்கள் கேந்திரங்களில் இருந்தால் நன்மைகளையும் செய்யும் என்பதும் பாரம்பரிய ஜோதிடத்தின் மிக முக்கிய விதிகளில் ஒன்று.
இங்கே பாதி சுபர், பாதி அசுபர் என்ற இரண்டும் கெட்டான் நிலையைக் கொண்ட சூரியன் எந்த இடத்தில் இருந்தால் எப்படி என்ன பலன்களைச் செய்வார் என்பதை எண்களின் ரீதியில் அதாவது எத்தனையாவது இடத்தில் இருந்தால் எது போன்ற பலன்களை செய்வார் என்பதை உறுதியாக கணிப்பதற்கு கண்டிப்பாக இயலாது.
மேலும் ஒரு கிரகம் ஐந்தில் இருந்தால் இதைச் செய்யும், ஆறில் இருந்தால் அதைச் செய்யும் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் சொல்லப்படும் அனைத்து நிலைகளும் பொத்தாம்பொதுவாக சொல்லப் பட்டவைதான். அவைகள் எந்த நிலையிலும் துல்லியமானவை அல்ல.
இது போன்ற எண்களின் அடிப்படையில் மட்டும் கிரகங்களின் நிலையை கொண்டு பலன் அறிய முற்படும் போதுதான் கணிப்புத் தவறுகள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக எட்டில் செவ்வாய் இருந்தால் ஒருவருக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைவதில்லை என்கின்ற ஒரு விதி பாரம்பரிய ஜோதிடத்தில் உண்டு. நடைமுறையில் பார்க்கும்போது எட்டில் செவ்வாய் அமைந்திருக்கின்ற லட்சக்கணக்கானோர் நல்லவிதமான வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார்களே என்கின்ற முரண்பட்ட நிலைதான் ஜோதிடத்தைப் பொய்யாக்குகிறது. இதுபோன்ற நிலைகளின்தான் என்னுடைய சுபத்துவ சூட்சுமவலு கோட்பாடு துணைபுரிந்து இங்கே சரியான நிலையை அறிய உதவுகிறது.
மேற்சொன்ன கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு கிரகம் எந்த அமைப்பை எந்த நிலையில் எப்போது செய்யும் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பு.
உண்மையில் கிரகங்கள் தான் அமர்ந்திருக்கும் வீட்டின் சுபத்துவ மற்றும் பாபத்துவ நிலைக்கு ஏற்பவும், தனக்கு கிடைக்கும் சுப பாப ஒளிகளுக்கு ஏற்பவும்தான் பலன்களைத் தருகின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப தன்னுடைய காரகத்துவங்களை, தான் இருக்கும் வீட்டின் ஆதிபத்தியங்களோடு கலந்து தன்னுடைய தசையில் தருகின்றன என்பதே உண்மை.
ஒரு மனிதனுக்குள் நல்ல தன்மையும், கெட்ட தன்மையும் ஒளிந்திருப்பதை போலவே ராசி வீடுகள் என்று சொல்லப்படக்கூடிய கிரகங்கள் அமர்ந்திருக்கின்ற பனிரெண்டு பாவங்கங்களுக்கும், ஆதிபத்தியங்கள் எனப்படும் இருவேறான நல்ல தன்மைகளும் கெட்ட தன்மைகளும் இருக்கின்றன.
மிக முக்கியமாக கிரகங்களின் சுபத்துவம் எனப்படும் ஒரு கிரகத்தின் சுயமான சுப ஒளியையும், அது மற்ற கிரகத்திடம் இருந்து பெற்ற சுப ஒளியையும், பாப கிரகமாக இருந்தால் அது பெற்ற பாபத்துவத்தையும் புரிந்து கொள்ளும் நாம் பெரும்பாலும் பாவக சுபத்துவம் எனப்படும் இராசி வீடுகளின் சுப, பாப நிலைகளை துல்லியமாக கவனத்தில் கொள்வதில்லை.
கிரகங்களின் சுப, பாப தன்மையையும், அவைகள் அமர்ந்திருக்கின்ற வீடுகளின் சுப பாப தன்மையையும் பொருத்திப் பார்க்கும் பொழுது தான் ஒரு ஜாதகத்தின் உண்மையான பலனை அறிய முடியும்.
நிஜத்தில் கிரகங்கள் துர் ஸ்தானங்கள் என்று சொல்லப்படக்கூடிய ஆறு எட்டு பனிரெண்டில் மறைந்திருந்தால் கூட அவை சுபத்தன்மை பெற்றிருக்கின்ற நிலையில் அந்த வீடுகளுக்குள் இருக்கின்ற சுப ஆதிபத்தியங்களை மட்டுமே ஒரு மனிதனுக்கு தருகின்றன என்பதே உண்மை. இதனால்தான் 12 பாவகங்களும் ஒரு மனிதனுக்குத் தேவை என்று பாரம்பரிய ஜோதிடத்தில் வலியுறுத்தப்படுகிறது.
ஆறு மற்றும் எட்டாம் பாவகங்கள் இயல்பாகவே நமக்கு கெட்ட ஸ்தானங்களாக போதிக்கப்பட்டு இருப்பதால்தான் பாரம்பரிய ஜோதிடத்தில் 6, 8 என்றாலே பயப்படுகிறோம். ஆறு எட்டாம் அதிபதிகளின் தசை வரும்போது கெடுபலன்கள் நடக்கும் என்று கணிக்க துவங்குகிறோம்.
ஆனால் ஒரு மனிதனுக்கு மிகவும் தேவையான நிம்மதியான வேலை என்கின்ற அமைப்பு ஆறாம் பாவகத்தின் மிக முக்கிய ஆதிபத்தியமாகும். அதேபோல திடீர் அதிர்ஷ்டம் எனப்படும் பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவற்றில் ஒரு மனிதன் உழைப்பில்லாமல் பெறக்கூடிய பணத்தை எட்டாம் பாவகம் சுட்டிக்காட்டுகிறது.
எனவே எப்பொழுது ஒரு கிரகத்தின் சுபத்துவத்தையும், அவை இருக்கின்ற வீடு எனப்படும் எண்களைத் தாண்டி, அந்த பாவகங்களின் சுப, பாபத்துவத்தையும் கணக்கிடும் போது மட்டுமே நாம் உண்மையான பலன் அறிய பெறுகிறோம்.
இதுபோன்ற நிலைகளில் மட்டும்தான் ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கின்ற உண்மையான சம்பவங்களையும், அவன் பிறந்தது முதல் அந்திம காலம் வரை எத்தகைய வேலை அமைப்புகளை பெறுவான், எப்போது திருமணம் நடக்கும், எப்போது குழந்தை பாக்கியத்தை அடைவான் என்பது போன்ற மிக முக்கிய பலன்களையும் துல்லியமாகச் சொல்ல முடிகிறது.
கிரகங்கள் மற்றும் பாவகங்களின் சுபத்துவம் என்பது இயற்கை சுப கிரகங்களான பௌர்ணமி சந்திரன், குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் ஆகியவைகளின் அடிப்படையிலும், பாபத்துவம் என்பது பூரண அமாவாசை சந்திரன், சனி, ராகு, செவ்வாய், அரைப்பாபரான சூரியன், தேய்பிறைச் சந்திரன், பாபியருடன் இணைந்த புதன் ஆகிய பாப கிரகங்களின் அடிப்படையிலும் அமைகிறது.
இவர்களுள் நான் சொல்லாமல் விட்டிருக்கும் கேது கிரகம் மட்டும் மிகுந்த தனித்தன்மையானவர் ஆவார். இவரை சுப கிரகத்தோடும் சேர்க்க முடியாது. பாபர்களோடும் இணைக்க முடியாது. கேது கிரகம் பாபர்களோடு இணையும் சில முக்கியமான நிலைகளை நான் சூட்சுமவலு என்று சொல்கிறேன். ஆகவே கேதுவை ஒரு இரண்டுங்கெட்டான் கிரகமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே கேதுவைப் பற்றிய உண்மைத்தன்மையை ஜோதிடம் எனும் தேவரகசியம் மற்றும் ஜோதிடம் எனும் மகா அற்புதம் கட்டுரைகளில் விளக்கி இருக்கிறேன். அதன்படி கேது ஒரு முழுமையான பாப கிரகம் அல்ல. ராகுவை போல எந்த ஒரு கிரகத்தையும் அவரால் முழுமையாக கிரகணம் செய்ய முடியாது.
கேது என்பவர் ஒரு நிலையின் விளிம்பு மட்டுமே. இருளும் ஒளியும் கலக்கின்ற இடமாக கேது அமைவதால் அவரை சுபத்துவம் மற்றும் பாபத்துவத்தின் விளிம்பில் இருக்கிற கிரகமாகவே எடுத்துக்கொண்டு, ஒரு சூட்சும நிலையில்தான் அவருடைய பலனை கணிக்க வேண்டும்.
நிறைவாகச் சொல்லப்போனால் ஒரு கிரகம் நல்ல ஸ்தானங்கள் என்று சொல்லப்படக்கூடிய 5, 9-ல் இருந்து விடுவதாலோ, 6, 8, 12 என்று சொல்லக் கூடிய கெட்ட ஸ்தானங்களில் இருப்பதனால் மட்டுமோ தனது நல்ல கெட்ட பலன்களை தருவதில்லை.
ஒரு கிரகம் சுப ஒளி மிகுந்து இருக்கின்ற நிலையில், ஒரு மனிதனுக்கு அமர்ந்திருக்கும் பாவகங்களின் சுபத்துவத் தன்மையைப் பொறுத்து மிக நல்ல பலன்கள் நடக்கின்றன. சில நிலைகளில் கிரகணம், அஸ்தமனம், நீச்சம் போன்ற முழுமையான பாபத்துவத்தை கிரகங்கள் அடைந்திருக்கின்ற நிலையில் கூட இந்த சுபத்துவம் எனப்படும் சுப ஒளிக்கலப்பு அவர்களின் பலவீனத்தை மாற்றி நல்ல பலன்களையே தர வைக்கின்றன.
அடுத்தடுத்த அத்தியாயங்களில் சுபத்துவ, சூட்சுமவலு நிலைகளை இன்னும் விரிவாக எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.
புரியும் படி உள்ளது.நன்றி...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteAmazing predictions you shared. I bookmark your blog for such kind of informative post.
ReplyDeleteSearching for Best Astrologer in Bangalore People trust on Sai Balaji Anugraha
Best Astrologer Bangalore