ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
மேஷம்:
வெகு நாட்களுக்கு பிறகு ராசிநாதன் செவ்வாய் ராசியில் ஆட்சி நிலையில் இருப்பதால் எதிர்ப்புகள் அனைத்தும் ஒழிந்து உங்களின் திறமையும், செயல்திறனும் வெளிப்படும் வாரம் இது. உங்களில் பிறந்த ஜாதக வலு இல்லாததால் கடந்த சில வாரங்களில் தொழில் நஷ்டம் வேலையிழப்பு போன்றவைகளை சந்தித்தவர்கள் இனிமேல் நல்ல மாற்றங்கள் நடந்து ஏற்கனவே இருந்து வந்தவைகளை விட நல்லதொழில், வேலை போன்றவைகளை அடைவீர்கள். அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கும்.
செலவுகள் இருந்தாலும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெற்று அதன் மூலமாக நல்ல பணவரவு
இருக்கும் என்பதை கிரக நிலைகள் காட்டுகின்றன. சுக ஸ்தானம் வலிமை பெறுவதால் இதுவரை
கிடைக்காத திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் இருக்கும். கணவர் மனைவி உறவு
சந்தோஷமாக இருக்கும். அம்மா வழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும். அம்மாவின்
ஆதரவும் உண்டு. மேற்படிப்பு படிப்பதற்கு முயற்சிகள் எடுத்திருந்த சிலருக்கு அவை
வெற்றி பெறும். வீடு வாங்குவது அல்லது
வீடு கட்டுவது சம்மந்தமான முயற்சிகளை சிலர் எடுப்பீர்கள்.
ரிஷபம்:
கடந்த சில நாட்களாக ராசிநாதன் சுக்கிரன் ராகுவுடன் இணைந்திருக்கும் நிலையால் ரிஷப
ராசிக்கு பொருளாதார ரீதியாக தடங்கல்களும், பணவரவுக்குத் தடையும், சிலருக்கு மன
அழுத்தங்களும் இருக்கிறது. அதே நேரத்தில் தனாதிபதி புதன் நல்ல நிலையில் இருப்பதால்
இது வருமானம் வரும் வாரமாக இருக்கும். முப்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு இப்போது
மாற்றங்களுக்கான விஷயங்கள் நடக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு
முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இருக்கும். வெகுநாள் இழுத்து கொண்டிருந்த விவகாரங்கள்
முடிவடைந்து பணவரவு உண்டு. பெண்கள் உதவுவார்கள்.
மூன்றில் புதன் இருப்பதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு வருவதற்கு
இடமிருக்கிறது. அது வராமல் இருக்கக்கூடிய முயற்சிகளை தம்பதிகள் எடுத்துக் கொள்வது
நல்லது.. மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது. முக்கியமான
விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. இதனால்
செலவுகள் குறையும். கணினி மென்பொருள், கணக்கு, ஆடிட்டிங்,
புத்தகம், பிரிண்டிங், எழுத்து மற்றும் பத்திரிகைத்துறையினர்
வளம்பெறும் வாரம் இது.
மிதுனம்:
ஏழில் குரு அமர்ந்து ராசியைப் பார்த்து வலுப்படுத்துவதாலும், ராசிநாதன் தன
வீட்டில் வலுவுடன் இருப்பதாலும் பொருளாதார சிக்கல்கள் தீரும் வாரம் இது. உங்களில் சிலருக்கு தொழில் மாறுவது போன்ற
பலன்களும் இருக்கும். ஏழாம் அதிபதி குரு ஆட்சி நிலையில் கேதுவுடன் இணைந்திருப்பதால்
திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான ஆரம்பங்கள் நடக்கும். முதல் திருமணம் தோல்வியடைந்து
வேதனையில் இருப்பவர்களுக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் அமையும்.
வாழ்க்கைத்துணையால் வளம் உண்டு.
பங்குச்சந்தை,
சூதாட்டம் போன்ற துறைகள் பக்கம் எட்டிக் கூடப்
பார்க்காதீர்கள். வேலையின் காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒரே இடத்திற்கு
மாற்றலாவார்கள். பேச்சால் தொழில் செய்யும் வழக்குரைஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், ஆசிரியர்கள் போன்ற சிலர் தங்களின் தனிச்சிறப்பான வாதத்தால் பிறரால் கவனிக்கப்
பெறுவார்கள். சிலருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பண வரவு கிடைக்கும்.
பணக்கஷ்டங்கள் தீரும். ஆன்மீக சம்பந்தப்பட்ட பயணங்கள் உண்டு. வெளிநாடு செல்ல
விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும்.
கடகம்:
இந்த வாரம் கடக ராசிக்காரர்கள் கையருகே சாப்பாடு இருந்தாலும் எடுத்துச்
சாப்பிடுவதற்கு நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். குரு,
கேது ஆறில் இருப்பதால் உங்களில் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம்
தரும் நிகழ்வுகள் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும் விரயங்களும் இருக்கும். சிலருக்கு
இளைய சகோதரரிடம் கருத்து வேறுபாடு வரும். ஜீவனஸ்தானம் வலுவாக இருப்பதால் தொழிலில்
வருமானங்களுக்கு குறை இருக்காது. அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை
இருக்கும்.
பனிரெண்டில் இருக்கும் ராகுவால் சிலருக்கு சூதாட்டம், பங்குச்சந்தை,
லாட்டரி போன்றவைகளில் ஆர்வம் வரும். அதனால் நஷ்டங்கள்
இருக்கும் என்பதால் தற்போது ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். பணத்தையும்
முதலீடு செய்ய வேண்டாம். வயது முதிர்ந்த ஆரோக்கியக் குறைவுள்ள தகப்பனாரைக்
கொண்டவர்கள் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கவும். செவ்வாய் பத்தில் ஆட்சியாவதால் உங்கள்
செயல்கள் அனைத்திலும் பதற்றமும், படபடப்பும்
காணப்பட்டாலும் தைரியத்தைக் கைவிடாமல் செயல்படுவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு தொந்தரவு கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் இந்த வாரம்
தீரும். எதிர்ப்புகள் விலகும். சுக்கிரன் ராகுவுடன் பதினொன்றில் இருப்பதால் வீண்
செலவுகளும் விரையங்களும் இருக்கும். எனவே இது சேமிப்பு செய்ய முடியாத வாரம். வாழ்க்கைத்துணை
வழியில் வரவுகளும்,
ஆதரவான நிலையும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு
திருமணம் நடப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் இருக்கும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால
வாழ்க்கைத்துணையை இன்னார்தான் என்று தெரியாமல் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வயதானவர்களுக்கு ஆன்மிக பணி செய்யும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்ப்புகள் இழுபறியாக
இருக்கும் என்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. பத்தாம் வீட்டோன் லாபத்தில்
இருப்பதால் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பு முனையான ஆர்டர்கள்
கிடைக்கும். சிலருக்கு வெளிமாநிலம் வெளிநாட்டில் இருந்து
நல்ல தகவல்கள் உண்டு. இதுவரை சொந்தவீடு அமையாதவர்கள் இப்போது செய்யும் முயற்சிகள்
பலன் அளிக்கும். சிறப்பான வாரம் இது.
கன்னி:
கன்னி ராசிக்கு வார ஆரம்பத்தில் மனக் குழப்பங்களும், முடிவெடுக்க முடியாத
தடுமாற்றங்களும் இருக்கும். தொழில், வியாபாரம், வேலை முதலிய ஜீவன அமைப்புகளில் இனிமேல் முன்னேற்றமான வகையில் நல்ல பலன்கள் நடக்கும். அலுவலகங்களில்
இருப்பவர்கள் சிக்கல்கள் நீங்கப் பெறுவீர்கள். இன்னும் சிலவாரங்களில் குரு ஐந்தாம்
வீட்டிற்கு மாறி ராசியை பார்க்கப் போவதால் கணவன்-மனைவி உறவுகள் மூலமாக நன்மைகள் நடக்கும்.
வாழ்க்கைத் துணையால் ஆதாயங்கள் இருக்கும். பிரிந்தவர்கள் இணைவீர்கள்.
கடந்த வாரங்களில் வேதனைகளையும் அவுமானங்களையும் சந்தித்தவர்கள் படிப்படியான
முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங், போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும். தந்தை வழி
உறவினர்களால் சங்கடங்கள் உண்டு. சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் இருக்கும்.
வருமானத்தை விட அதிக செலவு வரும். எதிலும் சிக்கனமாக இருங்கள். வயதான தந்தையை
கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறை வைக்க வேண்டும். கையில் பணம் இல்லாமல்
இருந்த நிலை மாறும்.
துலாம்:
ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் ராகுவுடன் இணைந்திருப்பது அதிர்ஷ்டத்தினை
தள்ளி வைக்கும் அமைப்புத்தான் என்றாலும் யோகாதிபதிகள் சனியும், புதனும் வலுவாக
இருப்பதால் தொழில் இடையூறுகளை சமாளித்து நீங்கள் வெற்றி பெறும் வாரம் இது. உங்களில்
அதிகாரம் செய்யும் வேலையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் மிகுதியாக உண்டு. ஆனாலும்
நல்ல பெயர் கிடைக்கும். செலவு செய்வதற்கு முன் யோசிப்பது நல்லது. ஆறுக்குடையவன்
மூன்றில் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புக்கள் எதையும் சரியாகச் செயல்படுத்த
முடியாத நிலையில் இருப்பீர்கள்.
கணவன்,
மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபங்கள்
இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். நண்பர்கள் உதவுவதாக சொல்வார்கள்.
வேலைதான் நடக்காது. எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. ராசிநாதன்
வலுவிழப்பதால் கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைக்குனிவை தரலாம். நடுத்தர
வயதுக்காரர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். இளைய
பருவத்தினருக்கு எதிர்கால வாழ்க்கைக்கான மாறுதலான சம்பவங்கள் இந்த வாரம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு இருந்து வந்த தடை அமைப்புகளும் கணவன்-மனைவிக்கு இடையே
இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் தீர்ந்து நன்மைகள் நடக்கும் வாரம் இது. உங்களில்
சிலருக்கு மறைமுக இலாபங்கள் மற்றும் வருமானங்கள் இப்போது இருக்கும். சிலர்
ரகசியமான காரியங்களை செய்வீர்கள். அவற்றில் வெற்றியும் பெறுவீர்கள். தந்தையின்
ஆதரவும் ஆசிகளும் இந்த வாரம் உண்டு. தந்தையைப் பிரிந்து இருப்பவர்கள் அவரைத்
தேடிச் சென்று நேரிடையாக அவரது ஆசிகளைப் பெற்று வாருங்கள். அனைத்தும் சிறக்கும்.
கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் நீங்கள் தொட்டதும், தொடாததும் துலங்கும். ராசிநாதன்
ஆட்சி வலுப்பெறுவதால் தொழில் விஷயமாக தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள்
கிடைக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இதர
வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு.
கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக்
கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். சூரியன் வலுப்பெறுவதால் எதிர்பாராத அதிர்ஷ்டம்
உண்டு.
தனுசு:
இந்த வாரம் தனுசு ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் வாரமாகவே இருக்கும். குடும்பத்தில்
சந்தோஷமும்,
மனமகிழ்ச்சியும் இருக்கும். கடன் சிக்கல்களில் இருப்பவர்களுக்கு
அதை தீர்ப்பதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். என்ன பிரச்னை என்றாலும் பணவரவு
நன்றாக இருக்கும். யாருக்காவது ஏதாவது செய்து தருவதாக கொடுக்கும் வாக்கை காப்பாற்ற
முடியும். முக்கியமான ஒரு விஷயத்தில் அன்னிய மத நண்பர் கை கொடுப்பார். தனுசு
எதையும் சமாளிக்கும் என்பதை உங்கள் செயல்களால் மற்றவர்களுக்குப் புரிய
வைப்பீர்கள்.
திருமணம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது
நல்ல வரன்கள் அமையும். முதல் திருமணம் கசப்பாக அமைந்து விவாகரத்து
பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான ஏற்பாடுகள் இப்பொழுது
நடக்கும். 22,23,24
ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம் தேதி அதிகாலை
12.53 மணி முதல் 19-ம்
தேதி அதிகாலை 4.08
மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனத்துடன்
இருக்க வேண்டும். மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள்,
பிரயாணங்கள் வேண்டாம்.
மகரம்:
வார ஆரம்பத்தில் ராசியை தனித்த புதன் பார்ப்பதால் இது மகர ராசிக்கு சிறப்பான
வாரம்தான். தொழில்,
வேலை, வியாபாரம் போன்ற ஜீவன
அமைப்புகள் நன்றாக இருக்கும். வாரத்தின் இறுதி சந்திராஷ்டமமாக அமைவதால் கைக்கு
எட்டியது வாய்க்கு எட்டாத நிலையிலும் சில விஷயங்கள் இருக்கும். இளைய சகோதரர்களால்
சிலர் நன்மை அடைவீர்கள். பணவரவிற்கு குறை இல்லை என்றாலும் சிலருக்கு கடன் வாங்க
வேண்டிய சூழல்கள் இருக்கும். நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
வார இறுதியில் புனித இடங்களுக்கு செல்வதோ, குல தெய்வ வழிபாடோ
செய்வீர்கள். கணவன் மனைவி உறவில் முணுமுணுப்புக்கள் உண்டு. குழந்தைகள் செலவு
வைப்பார்கள். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். பிரச்னைகள் வரும். 23,25
ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம் தேதி அதிகாலை 4.08
மணி முதல் 21-ம் தேதி அதிகாலை 5.15
மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
மேற்கண்ட நாட்களில் நீண்ட பிரயாணங்களோ, புதிய முயற்சிகளோ செய்வதை
தவிர்ப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசிக்கு கெடுபலன்கள் இல்லாத வாரம் இது. குறிப்பிட்ட ஒரு பலனாக ஏழுக்குடைய
சூரியன் இந்த வாரம் ஆட்சி வலுப் பெறுவதால் வாழ்க்கைத் துணையால் கோர்ட்டுக்குச்
சென்றவர்கள் சாதகமான தீர்ப்பை பெறுவதற்கான வழிகள் இப்போது பிறக்கும். எடுத்துக் கொள்ளும்
அனைத்துக் காரியங்களும் லாபகரமானதாகவும், எதிர்கால நன்மைக்கு
உபயோகப்படுவதாகவும் இருக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இப்போது கருவுறுதல்
இருக்கும். பதவி உயர்வு,
சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி
உண்டு.
வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. வியாபாரத்தில் இலாபம்
உண்டு. பதினொன்றில் இருக்கும் குரு பனிரெண்டாமிடத்திற்கு மாறப் போவதால் சிலருக்கு
மாற்றங்களும்,
பிரயாணங்களும் இருக்கும். வெளிமாநில அல்லது வெளிநாட்டு
பயணங்களும்,
டிரான்ஸ்பர் போன்ற இட மாறுதல்களும் இனிமேல் உண்டு. 24,25,26 ஆகிய
நாட்களில் பணம் வரும். 21-ம் தேதி காலை 5.15
மணி முதல் 23-ம் தேதி காலை 6.06
மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ
இந்த நாட்களில் செய்ய வேண்டாம். ஆயினும் கெடுதல்கள் எதுவும் நடைபெறாது.
மீனம்:
உங்களில் நடுத்தர வயதினருக்கு நன்மைகள் நடக்க தடைகள் ஏதும் இல்லை. இன்னும் சில
வாரங்களில் நடக்க இருக்கும் ராகு,கேது, குருப்பெயர்ச்சி
உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் என்பதால் மீனத்திற்கு துன்பங்கள் எதுவும்
இல்லை. பிறந்த ஜாதகத்தில் நன்மைகளைத் தரும் அமைப்புள்ள தசைபுக்தி நடப்பவர்களுக்கு
இரட்டிப்பு யோகங்கள் உண்டு. தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் சாதகமான
மாற்றங்கள் இருக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும். பாக்கி வசூல் ஆகும்.
யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள். அரசு தனியார் துறை
ஊழியர்களுக்கு வேலை நெருக்கடிகள் பணிச்சுமை போன்றவைகள் விலகும். போட்டி
பந்தயங்களில் இன்னும் சில வாரங்களுக்கு கலந்து கொள்ள வேண்டாம். எவருக்கும் எதுவும்
செய்து தருவதாக வாக்குக் கொடுத்தால் இனி நிறைவேற்ற முடியும், உதவுவதாக சொல்லிவிட்டு காணாமல் போன நண்பர்கள் திரும்ப வருவார்கள். ஒரு
சிலருக்கு மட்டும் ஏற்கனவே முடிந்து விட்டது என்று நினைத்து நிம்மதியாக இருந்த
விஷயங்கள் மீண்டும் கிளறப்படும்.

No comments :
Post a Comment