ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு
2020-ம் வருடம் நல்லபலன்களைத் தரும் வருடமாக இருக்கும். குறிப்பாக சென்ற வருடத்தை
விட பொருளாதார மேன்மைகளும் நல்ல பணவரவும் நிலையான வேலை, தொழில்,
வியாபாரம் அமைப்புகளும் இந்த வருடம் இருக்கும்.
ஏற்கனவே சில
வாரங்களுக்கு முன் நடந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நல்லவிதமாக அமைந்துள்ள
நிலையில், வருட ஆரம்பத்தில் ஜனவரி 24ம் தேதி நடக்க விருக்கும் சனிப்பெயர்ச்சியும்
உங்களுக்கு மிகப் பெரிய நன்மைகளையும், அடுத்தவர்களிடமிருந்து சரியான
நேரத்தில் நேர்மையான வகையில் உதவிகளையும், நல்ல பெயரையும்
பெற்றுத் தரும் என்பதால் 2020 ம் வருடம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறந்த வருடமாகவே இருக்கும்.
வருடம் முழுவதும்
சனிபகவான் ஆறாமிடத்தில் இருப்பது மன உறுதியையும், பிரச்னைகள் எதையும்
நேரே நின்று எதிர்கொள்ளும் ஆற்றலையும், சிறந்த நிர்வாகத்
திறமையையும் உங்களுக்கு அளிக்கும் என்பதால் சிம்மத்தினர் நல்ல முன்னேற்றங்களை இந்த வருடம் அடைவீர்கள்.
குறிப்பாக முப்பது
வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்குள் ஒளிந்திருக்கும் புத்திசாலித்தனமும், திறமைகளும்
இப்போது வெளிப்பட்டு சிலர் வெற்றிகளைக் குவிப்பீர்கள். கோட்சார
ரீதியில் ஆறாமிடத்தில் சனி இருக்கும்போது ஒருவர் தன்னுடைய செயற்கரிய செயல்களால்
புகழ் மற்றும் வெற்றிகளைப் பெறுவார் என்பது ஜோதிட விதி அதன்படி அவரவருடைய பிறந்த
ஜாதக அமைப்பின்படி வெற்றிகள் உங்களுக்கு உண்டு.
வருடத்தின் முக்கிய
பலனாக இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய
பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. இதுவரை வசதிகுறைந்த வாடகை வீட்டில்
குடியிருந்தவர்கள் கூட இந்த வருடம் வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர்
ஒத்திக்கு வீடு எடுப்பீர்கள்.
அரசு, தனியார்துறை
பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.
மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில்
பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.
குறிப்பிட்ட சிலருக்கு
இதுவரை மனதில் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள்
இனிமேல் இருக்காது. எதை நினைத்து கலங்குகிறோம் என்று தெரியாமல் இதுவரை இனம்
புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இந்த வருடத்தில் இருந்து புது உற்சாகம் அடைவீர்கள்.
வேறு இன மொழி
மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம்
நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம்
அமையும். பிரயாணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக
இருப்பீர்கள்.
வீட்டில் மங்கள
நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும்.
நீண்டகாலமாக மகன்,
மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக்
கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது நீங்கும். புத்திரபாக்கியம்
தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு
குழந்தை பிறக்கும்.
வேலை தேடிக் கொண்டிருந்த
இளைஞர்களுக்கு நல்லவேலை கிடைக்கும். பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல்
இருந்தவர்களுக்கு மாற்றங்கள் உருவாகி
நினைத்த மாதிரியான வேலை அமையும். மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன்
தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக்
கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் உண்டு.
சுயதொழில், வியாபாரம்
போன்றவைகளில் இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக
நடக்கும். விவசாயிகளுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த நன்மையை அளிக்கும்.
தொழிலதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து
வந்த முட்டுக்கட்டைகள் விலகும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள்
இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம்.
பெண்களுக்கு
குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஆண்களால்
ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற
நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும்
ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு
கிடைக்கும்.
குடும்பத்தில் சொத்துச்
சேர்க்கை,
வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள் வாங்குதல்,
சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின்
எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.
வெளிநாடு
சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை
செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள்
இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள்
இருக்கும் கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள்
இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க
முடியும்.
சொந்தத் தொழில்
செய்பவர்கள் தொழில்அதிபர்கள் வியாபாரிகள் ஆகியவர்களுக்கு தொழிலில் பங்குதாரர்களை
சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.
சில தொழில் முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப்
பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம்
கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.
கூட்டுத் தொழிலில்
இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி
தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும்
உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக
இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு.
தர்ம காரியங்கள் செய்ய
முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆலய சீரமைப்பு
பணிகளில் சிலர் புகழ் பெறுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகாரப்
பதவிகள் தேடிவரும். அரசியல்வாதிகள் புகழ் பெறுவீர்கள்.
தொலைக்காட்சி, சினிமாத்துறை
போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர்,
வாகனங்களை இயக்குபவர்கள்,
அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், வெளிநாட்டுத்
தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற
அனைத்துத் தரப்பினருக்கும் இந்த
வருடம் நல்ல பலன்களையே தரும்.
வழக்கு கோர்ட்
காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும்
நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள
முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு
நல்ல வழி பிறக்கும்.
இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும்
சிந்தனைகள் திசைமாறும் வருடம் இது.
புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். அது கைகூடும் காதலாகவும் இருக்கும். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த
வருடம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு இந்த வருடம் அறிமுகமாகும் நபர்
ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார்.
அம்மாவின் அன்பும், ஆதரவும்
கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும்.
உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே
இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.
வயதான தாயாரை நன்கு
கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர
இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின்
ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.
ஏற்கனவே திருமணமாகி
முதல்வாழ்க்கை கோணலாகி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது
நல்லபடியாக நடந்து அந்த வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும். பணவரவு நன்றாக
இருக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. சேமிப்பு என்பதை மனதில்
இருத்தி கொஞ்சமாவது சேமித்தீர்களானால் வாழ்க்கையில் ஆனந்தம்தான்.
உடல்நலம் சரியில்லாமல்
இருந்தவர்கள் விரைவில் குணம் அடைவார்கள். மருத்துவத்திற்கு கட்டுப்படாமல்
போக்குக்காட்டிக் கொண்டிருந்த வியாதிகள் இனிமேல் நல்ல பிள்ளையாக உங்களை விட்டு
விலகும். கடந்த காலங்களில் மகன், மகள் விஷயத்தில் உங்களுக்கு கவலைகள்
இருந்து வந்தன. சிலர் பிள்ளைகளுக்கு எத்தனையோ வரன் பார்த்தும் திருமணம் முடிக்க முடியாமல்
இருந்தீர்கள். அவை அனைத்தும் இப்போது நீங்கி பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய
கடமைகளை சிறப்பாகச் செய்வீர்கள்.
குலதெய்வத்தின் அருள்
உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட
நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின்
தரிசனமும் அருளும் கிடைக்கும்.
2020-ம் வருடத்தில் சிம்ம
ராசிக்கு மிகச்சிறந்த நல்ல பலன்களும் கவுரவம், அந்தஸ்து உயரும் சம்பவங்களும்
நடக்கும் என்பதும் இதுவரை பொருளாதார சிக்கலில் இருந்து வந்தவர்கள் அதிலிருந்து
மீண்டு நல்ல பணவரவை அடைவீர்கள் என்பதும் உறுதி.
தெய்வத்தின் அருளும், கிரகங்களின்
ஆசியும் இந்த வருடம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைப்பதால் இந்த வருடம் நீங்கள்
எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெற்று உங்கள் வாழ்வில் நல்ல ஒரு வருடமாக இது
அமையும். மொத்தத்தில் சிம்ம ராசிக்கு இந்த புத்தாண்டு நன்மைகளை செய்வதோடு
எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment