Tuesday, December 3, 2019

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள்- 265 (03.12.2019)


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ஏனாதி மணி அம்பலம், மதுரை.

கேள்வி:

குருஜி அவர்களுக்கு 75 வயது முதியவரின் விண்ணப்பம். சில வாரங்களுக்கு முன் மாலைமலரில் ஜோதிடத்தில் எதையும் முன்பே சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு தங்களின் பதிலை பார்த்தேன். எல்லாம் தெரிந்த ஜோதிடர் இல்லவே இல்லை. அனைத்தும் அறிந்து விட்டால் அவர் ஜோதிடரே இல்லை, ஒரு ஜோதிடனால்தையும் சொல்ல முடிந்தால் அவன் கடவுளுக்கு அருகில் செல்வான் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில் சில ஜோதிடர்கள் நான் கடவுளுக்கு சமம் என்று ஒரு வேகத்தில், ஆர்வத்தில், ஆணவத்தால் சொல்லியும் எழுதியும் விடுவார்கள். ஆனால் நீங்கள் அனைத்தையும் சொல்ல முடிந்தால், அவன் கடவுளுக்கு அருகில் செல்வானென்ற கருத்தை பரிமாறி இருக்கிறீர்கள். இது உங்களுடைய தன்னடக்கம், நன்னடத்தை, தெய்வத்தின் மேல் நீங்கள் வைத்துள்ள பற்றையும் பக்தியையும் காட்டுகிறது. ஒரு பகுத்தறிவாளனாக இருந்த நான் உங்களுடைய ஒவ்வொரு கருத்தையும் படித்தவுடன் தெய்வத்தின் மேலும், ஜோதிட மேதை உங்கள் மேலும் பற்றுள்ளனவனாகவும், பக்தி இருப்பவனாகவும் மாற்றிக் கொண்டேன். உங்கள் எழுத்தாற்றலால் என் கொள்கையை திருத்திக் கொண்டேன். எனது பேரன் கல்லூரிப் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான். மகன் கட்டிட வேலை பார்த்து வறுமையிலும் பேரனை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். எங்கள் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிப்பவன் இவன்தான். பேரனின் எதிர்காலம் நல்லமுறையில் அமையுமா? அரசுவேலை கிடைக்குமா? தாய், தந்தைக்கு உறுதுணையாக இருந்து காப்பாற்றுவானா? சகோதரியை கவனித்துக் கொள்வானா என்பதை இந்த 75 வயதில் அறிய ஆசைப்படுகிறேன். தெய்வத்திடம் கேட்டு விட்டேன். பதில் இல்லை. உங்களை நம்புகிறேன்.

பதில்:

பேரனின் பிறந்தநாள், வருடம், மாதத்தை மட்டும் குறிப்பிட்டிருக்கும் நீங்கள், அவர் பிறந்த மணி நேரம் மற்றும் இடத்தையும் குறிப்பிடவில்லை. மீண்டும் ஒருமுறை முழு பிறந்த விவரங்களை எழுதி அனுப்புங்கள். பதில் தருகிறேன்.

எஸ். சண்முகராஜ், கோவில்பட்டி.

கேள்வி:

திருக்கணிதம்-வாக்கியம் என்று இரண்டுவகையான பஞ்சாங்கம் இருப்பது என்னைப் போல் பலருக்கும் தெரிந்தது மாலைமலர் மூலம்தான். என் ஜாதகத்தில் தனுசு ராசி, விருச்சிக லக்கனம், மூல நட்சத்திரம் என்று உள்ளது. இது சரியா, தவறா? வாழ்க்கை போர்க்களம் போல் உள்ளது. சொத்துப் பிரச்சனை, கடன் பிரச்சனை, வீடு பிரச்சனை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. ஏழு வயதில் தாயை இழந்த எனக்கு தகப்பன்தான் இன்னும் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார். எனக்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் அனுப்புங்கள். அதன்படி நடப்பேன்.

பதில்:

(விருச்சிக லக்னம், தனுசு ராசி, 2ல் சந், 5ல் சுக், 6ல் சூரி, புத, குரு, கேது, 8ல் செவ், 9ல் சனி12ல் ராகு, 19-4-1976 இரவு 8-15 கோவில்பட்டி)

மிகவும் சரியான, துல்லியமான திருக்கணித பஞ்சாங்கப்படி, உங்களுக்கு மூல நட்சத்திரத்திற்கு பதிலாக பூராடம் நட்சத்திரம் வரும். 40 வயதுகளில் இருக்கும் தனுசு ராசிக்காரர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள். 2020ம் ஆண்டு உங்களுக்கு விடியலை தருகின்ற ஆண்டாக இருக்கும்.

ஜாதகப்படி புதனும், செவ்வாயும் பரிவர்த்தனையாகி வலுவான நிலையில் இருப்பதாலும், ராகு-கேதுக்கள் ஆறு, பனிரெண்டாம் வீடுகளோடு தொடர்பு கொண்டிருப்பதாலும், உங்களால் கடன் பிரச்சினைகளை தீர்க்க முடியும். தற்போது நடக்கும் ராகு தசையில் புதன் புக்தி முடிந்த பிறகு, கேது புக்தி முதல் உங்களுடைய வளர்ச்சி ஆரம்பமாகும். வாழ்க்கையின் பிற்பகுதியில் மிகவும் சந்தோஷமாக, செல்வாக்கோடு இருக்கக்கூடிய ஜாதகம் உங்களுடையது. மனம் தளர வேண்டாம். சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள் பாலிக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வாருங்கள். வெகு சீக்கிரம் விடிவு பிறக்கும்.

ஜி. ஆனந்தராஜ், கோவை-108,

கேள்வி:

2012ல் திருமணமானது முதல் எனக்கு பிரச்சனைகள் ஆரம்பம். தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த தவறால் தலைத் தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு செல்லாமல் சிறைக்குச் சென்றேன். அதுமுதல் சில தவறான பழக்கங்கள் சூது, லாட்டரி போன்றவற்றாலும், வியாபாரம் என்ற பெயராலும் பெரும் கடனாளியாகி விட்டேன். ஆனால் நான் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. கடன் தொல்லை தாங்காமல் சொந்த வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். பெற்றோர் பின்பு அதை விற்று எனக்காகத்தான் வீட்டை விற்றேன் என்று சொல்லி, எனக்கு ஒரு லட்சம் மட்டும் கொடுத்தனர். வந்த இடத்திலும் கடன்-வட்டி, கடன்-வட்டி என்றுதான் போய்க்கொண்டிருக்கிறது. கோர்ட் கேசும் ஆகியிருக்கிறது. இந்த நிலை மாறுமா? கடன் தீருமா? நிம்மதியாக தூங்க முடியுமா? ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் மனைவிதான் எனக்கு தைரியம் கொடுத்து வருகிறார். இங்குள்ள ஜோதிடர்கள் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். இதற்கு நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்.

பதில்:

(துலாம் லக்னம், மேஷ ராசி, 5ல் சூரி, புத, கேது, 6ல் சுக், 7ல் சந், 11-ல் செவ், குரு, ராகு, 12ல் சனி, 21-2-1980 இரவு 11-45 தூத்துக்குடி)

தலைத்தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்குப் பதில் மாமியார் வீட்டிற்குப் போய் வந்திருக்கிறீர்கள். அவ்வளவுதானே? இதற்கெல்லாம் இனிமேல் கவலைப்படக்கூடாது. துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு தசை அல்லது குரு புக்தி நடைபெறும் போதெல்லாம் சாதகமற்ற பலன்கள், கடன் தொல்லைகள் ஆரம்பிக்கும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். 2012ல் குருபுக்தி ஆரம்பித்த உடன் உங்களுக்கு பிரச்சினைகளும் ஆரம்பித்துவிட்டன.

சூதாட்டம், பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் பெரும் நஷ்டங்களை கொடுக்கக் கூடிய பாபத்துவ ராகுவின் தசை உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. ராகு 11ஆம் வீட்டில் இருந்தாலும் தனக்கு ஆகாத சூரியனின் வீட்டில், சூரிய, சந்திர, குருவோடு தொடர்பில் இருக்கிறார். இதுபோன்ற நிலையில் பதினொன்றாம் இடத்தில் இருந்தாலும் கடுமையான கெடுபலன்களை மட்டுமே உங்களுக்கு தருவார்.
அடுத்த வருடம் ஆரம்பிக்க இருக்கும் சுக்கிர புக்தி முதல் உங்களுக்கு சில நன்மைகள் இருக்கும். கடனை அப்போது ஓரளவு அடைக்க முடியும். ஆயினும் கடன் வாங்குவதில் நீங்கள்தான் அதிக விருப்பம் உள்ளவராக இருப்பீர்கள். தேவையற்ற வகையில் அதிக வட்டிக்கு கடனை வாங்கி, நீங்களே குழியையும் வெட்டி, உள்ளே படுத்துக்கொண்டு நீங்களே உங்களை மண்ணைப் போட்டு மூடிக் கொள்வீர்கள். 50 வயதிற்கு மேல் பிற்பகுதி வாழ்க்கை உங்களுக்கு நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

பி. கிரிஜா, ஆற்காடு.

கேள்வி:

ஒரே மகனுக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. தன்னுடைய சுய முயற்சியால் பகுதி நேரத்தில் தொலைதூரக்கல்வி மூலம் நன்கு படித்து பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். என் அன்பு மகன் வாழ்க்கை ப்படி உள்ளதே என்று தினமும் இறைவனிடம் கண்ணீர் விட்டு மனமுருகி வேண்டி வருகிறேன். மகனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? பரிகாரம் இருந்தால் அவசியம் சொல்லுங்கள்.

பதில்:

(மீன லக்னம், கும்ப ராசி, 2ல் புத, 3ல் சூரி, சுக், ராகு, 8ல் செவ், சனி, 9ல் கேது, 10ல் குரு, 12ல் சந், 24-5-1984 அதிகாலை 2-33 வேலூர்)

மகனது ஜாதகப்படி லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், சனி இணைந்திருப்பது கடுமையான குற்றம். அதிலும் சனி இங்கே உச்சமாக இருக்கிறார். இப்படிப்பட்ட அமைப்பில் சுக்கிரன் வலுவாக இருந்திருந்தால், இந்த குறை தீர்ந்து இருக்கும். ஆனால் தாம்பத்திய சுகத்தை கொடுக்க கூடிய சுக்கிரன் ராகுவுடன் 10 டிகிரிக்குள் இணைந்திருப்பதால் இதுவரை அவருக்கு திருமணம் நடக்கவில்லை. அடுத்த வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பிக்க இருக்கும் புதன் தசை, சுக்கிர புத்தியில் இவருக்கு திருமணம் நடக்கும்.

சுக்கிரன் ராகுவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இவரது ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலையே அதாவது சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே, ஸ்ரீகாளஹஸ்தி சென்று தங்கி அதிகாலை நடக்கும் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளச் சொல்லுங்கள். இன்னொரு ஜென்ம நட்சத்திரம் அன்று கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி சென்று வழிபட்டு ஒரு இரண்டரை மணி நேரம் அவர் கோவிலுக்குள் இருக்க வேண்டும்.

ஒரு வியாழக்கிழமை மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் (இதற்கு குரு ஹோரை என்று பெயர்) குருவின் வாகனமான யானைக்கு, அந்த யானைக்கு என்ன பிடிக்கும் என்பதை முன்னரே கேட்டு தெரிந்து கொண்டு அதற்குப் பிடித்த உணவை உங்கள் மகன் கையால் தரச் சொல்லுங்கள். 16 வியாழக்கிழமை பதினாறு லட்டு ஒவ்வொரு வாரமும் தட்சிணாமூர்த்தி சன்னதியில் நைவேத்தியம் செய்து விட்டு அங்கேயே வருபவர்களுக்கு தானம் செய்யச் சொல்லுங்கள். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்கள் மருமகள் யார் என்பது உங்களுக்கு தெரிந்துவிடும். வாழ்த்துக்கள்.

(03.12.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment