Saturday, December 14, 2019

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (16-12-19 முதல் 22-12-2019 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

மேஷம்:

ஒன்பதுக்குடைய யோகாதிபதி குருவும், பத்துக்குடைய சனியும் சேர்ந்து கேதுவுடன் இணைந்திருக்கும் அற்புதமான வாரம் இது. இதுவரை நீங்கள் செய்யாமல், சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்த சில விஷயங்களில் தயக்கங்கள் விலகி பளிச்சென்று தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எத்தகைய நிர்ப்பந்தங்கள் வந்தாலும் எடுத்த முடிவில் பின்வாங்காமல் உறுதியாகவும் இருப்பீர்கள். மேஷ ராசிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் வாரம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது நிச்சய வெற்றியைத் தரும்


உங்களில் சிலர் மனதிற்குள் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை செயல்படுத்தி சோதனை செய்வீர்கள். இளைஞர்களுக்கு இந்த வாரம் கையில் காசு நடமாட்டம் அதிகம் இருக்கப் போவதால் தேவையில்லாத சில பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. கிரகங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள். கெட்டுப் போகாதீர்கள். இளைய சகோதரர்களால்  நன்மை அடைவீர்கள். வெளிநாடுகளில் பணிபுரியும் மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இருக்கும். முன்னேற்றம் தரும் வாரம் இது.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதில் இருந்தாலும் சூரியன் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் எதிலும் உங்களுக்கு தயக்கம் வரும் வாரம் இது. குறிப்பாக இது ரிஷப ராசி இளைய பருவத்தினர் சோம்பலை விட்டு ஒழிக்க வேண்டிய வாரம். இளைஞர்கள் அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். உங்களில் சிலருக்கு கடன் வாங்கி வீடு வாங்கும் யோகம் இருக்கிறது. தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். வீட்டில் சொத்து சேர்க்கை, நகை வாங்குதல் போன்றவைகள் இருக்கும். மங்கள நிகழ்ச்சிகளும் உண்டு. இப்போது அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ், கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசியல்துறையில் இருப்பவர்கள் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் நன்மை அடைவார்கள்.

மிதுனம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் புதன் ஐந்தாமிடத்தில் இருப்பதும், ஏழாமிட குரு ராசியைப் பார்ப்பதும் மிதுன ராசிக்கு நன்மை தரும் அமைப்பு. பணவரவிற்கு காரணமான தனாதிபதி சந்திரன் இந்தவாரம் வலுவான இடங்களில் இருப்பதால் உங்களுக்கு பணவரவுகளும், தொழில் மேன்மைகளும், குடும்பத்தில் சந்தோஷ நிகழ்ச்சிகளும் இருக்கும். புதன், செவ்வாய் இணைவதால் நெருப்பு சம்பந்தப்பட்ட துறையில் வேலை செய்பவர்கள் மட்டும் இன்னும் நான்கு வாரங்களுக்கு கவனமாக இருப்பது நல்லது. பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும்.

சனி குருவுடன் இணைந்து பத்தாமிடத்தைப் பார்ப்பதால் பணத்திற்காக பொய் பேச நேரலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால் அடுத்த வருடம் பிரச்னைகள் வரும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். அஷ்டமச்சனி ஆரம்பிக்க இருப்பதால் இப்போதிருந்தே எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே திறம்பட செய்வது நல்லது.

கடகம்:

நான்காமிடத்தில் அறிவுக்கிரகமான புதனுடன் இணைந்து செவ்வாய் உள்ளதால் தொழில் ஸ்தானம் வலுப் பெறுகிறது கடக ராசிக்காரர்களுக்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத வாரம் இது. வேலை செய்யுமிடங்களில்  நல்ல பலன்கள் இருக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி  நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது.

உங்களில் சிலர் இந்த வாரம் காற்றோட்டமான, வசதியுள்ள நல்ல வீட்டிற்கு குடி போவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் உண்டு.. பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். கடக ராசிப் பெண்களுக்கு குடும்பத்திலும், வேலை செய்யுமிடத்திலும் பிரச்னைகள் எதுவும் இருக்காது. வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.  பொதுவில் உற்சாகமான வாரம் இது.

சிம்மம்:

ராசியின் யோகாதிபதிகள் குருவும், செவ்வாயும் ஐந்து, மூன்றாமிடங்களில் இருப்பது நன்மை தரும் அமைப்பு என்பதால் இது சிம்மத்திற்கு நல்ல வாரமே. அதேநேரத்தில் பஞ்சமாதிபதி குரு, சனியுடன் இணைவதால் எந்த விஷயமும் நேரிடையாக முடிவு பெறாமல் சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் விஷயமாகவே அமையும். சுக்கிரன் ஆறில் வலுவாக இருப்பதால் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும். காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது  சந்திப்பீர்கள்.

இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலை செய்வோர் போன்ற எல்லாத்துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும் வாரம் இது. சிம்மத்திற்கு இப்போது வளர்பிறை காலம். இது மூன்று ஆண்டு நீடிக்கும்.

கன்னி:

முயற்சி ஸ்தானாதிபதி மூன்றுக்குடைய செவ்வாயும், ராசிநாதனும் இரண்டில் இணைந்திருக்கும் நல்ல வாரம் இது. நான்கில் குரு, ஆறுக்குடைய சனியுடன் இணைவதால் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு கடன் வாங்க வேண்டி இருக்கும். உங்களில் சிலருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். இளைஞர்களுக்கு இப்போது காதல் வரும். காதலுக்குப் பின்னாடியே பிரச்னைகளும் அணிவகுத்து வரும். பெண்களுக்கு இது சுமாரான வாரம்தான். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல வீட்டிலும் வேலை செய்து, அலுவலகத்திலும் எல்லாவேலையையும் உங்கள் தலைமேல்தான் சுமத்துவார்கள்.

தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும். யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும் கை கொடுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். அரசு, தனியார்துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத் தரப்பினருக்கும் நல்லவாரம் இது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரி தொல்லைகள் இல்லாமல் ஜாலியான அனுபவங்கள் இருக்கும்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் வாரம் முழுவதும் நான்காமிடத்தில் அதிநட்பு வலுவுடன் இருக்கிறார். அதேநேரத்தில் ராசியில் புதன் செவ்வாய் இணைவதால் இந்த வாரம் துலாம் ராசிக்கு எதிலும் முதலில் தடைகள் வந்து பிற்பகுதியில் சாதகமாக மாறி தீர்வு கிடைக்கும். வார பிற்பகுதியில் பணவரவு இருக்கும். எனவே எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும். வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் சுமாராகவே இருக்கும். கோர்ட், கேஸ் இருப்பவர்கள் இன்னும் மூன்று மாதங்களுக்கு வழக்கை முடிக்குமாறு அவசரப்பட வேண்டாம்.

மூன்றில் குரு இருப்பதால் அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்யுங்கள். 

விருச்சிகம்.

ராசிநாதன் செவ்வாய் புதனுடன் இணைந்திருப்பதும், இரண்டில் குரு இருப்பதும் விருச்சிகத்திற்கு நன்மைகளை தரக்கூடிய அமைப்பு என்பதால் விருச்சிக ராசிக்கு அனைத்தும் வெற்றிகரமாகவும் சாதகமாகவும் முடியும் வாரம் இது. செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு படிப்படியாக நல்ல திருப்பங்கள் இருக்கும். வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். இனிமேல் விருச்சிகத்திற்கு ராசிபலன் நன்றாக மட்டுமே எழுதுவேன்.

நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். கணவன் மனைவி உறவு, கூட்டுத் தொழில் நன்மைகள் இருக்கும். பங்குவர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் முதலீடு செய்யலாம். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கும் வேலை கிடைக்கும் கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் இனிமேல் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை.

தனுசு:

வாரம் முழுவதும் ராசிநாதன் குரு ராசியில் இருப்பதும், பதினொன்றில் செவ்வாயும், புதனும் இணைந்திருப்பதும் தனுசுக்கு ஒரு திருப்புமுனையைத் தரும். தனுசுராசி இளைஞர்கள் இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்து விடுதலையும் தீர்வும் இப்போது  கிடைக்கும். கிரகங்களின் நற்பலன் இந்த வாரம் உங்களுக்கு முழுமையாகக் கிடைப்பதால் இப்போது நீங்கள் எடுத்த காரியம் வெற்றி பெறும். நம்பிக்கையை கை விடாதீர்கள். வரும் புத்தாண்டில் இருந்து வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இனிமேல் தனுசுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சர்க்கரை, ரத்தஅழுத்தம் என நீண்டகால குறைபாடுகள் உள்ளவர்கள் அசட்டையாக இருக்க வேண்டாம். சிறு உடல்நலக்குறைவு என்றாலும் உடனே கவனிப்பது நல்லது. தந்தைவழி உறவினர்களிடமும், பங்காளிகளிடமும், குறிப்பாக அத்தைகளிடம் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் எதற்கும் பொறுத்துப் போங்கள்.

மகரம்:

நான்கிற்குடைய செவ்வாய் ஆறுக்குடைய புதனுடன் பத்தில் இணைவதால் இந்த வாரம் மகர ராசிக்காரர்களுக்கு தாயார் விஷயத்தில் வருத்தங்களும், செலவுகளும் இருக்கும். சிலருக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்ற நிலையும், வாகனங்களால் வீண் விரையங்களும் இருக்கலாம். செலவுகளில் கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது.  சூரியன் பதினொன்றில் இருப்பதால் அரசாங்கம், மின்சாரம், தந்தைவழி, எலக்டிரிகல் போன்றவற்றில் லாபம் வரும். புதிதாக இப்போது எந்த தொழிலும் ஆரம்பிக்க வேண்டாம்.

நேர்த்திக் கடன்களை செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக நிறைவேற்றுங்கள். குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் உடனே அதைச் செய்யுங்கள். பெண்கள் மேன்மை அடைவீர்கள். மாமியார் மாமனார் வகையிலும் நல்லபலன்கள் இருக்கும். 19,20,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ந்தேதி அதிகாலை 2.47 மணி முதல் 19-ந்தேதி காலை 5.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது. இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.  

கும்பம்:

பனிரெண்டில் சுக்கிரன், லாபஸ்தானமான பதினொன்றில்  குரு, சனி, கேது எனும் கிரகநிலை இந்த வாரம் கும்ப ராசிக்கு அனைத்து நன்மைகளையும் தரும் என்பதைக் காட்டுகிறது. இதுவரை எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். நடுநிலை உள்ளம் கொண்ட உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு.

கும்பத்தினர் அனைவரின் மதிப்பு, மரியாதை, கௌரவம்  அந்தஸ்து மிகவும் நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். வீடு கட்ட ஆரம்பங்கள் சிலருக்கு இப்போது உண்டு. பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல் வாங்குவீர்கள்.  17,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ந்தேதி காலை 5.39 மணி முதல் 21-ந்தேதி காலை 8.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

மீனம்:

இரண்டு, ஒன்பதுக்குடைய ராஜயோகாதிபதி எட்டாமிடத்தில் புதனுடன் இணைந்து  தனஸ்தானத்தைப் பார்க்கும் யோக வாரம் இது. செவ்வாயின் இந்த நிலை மீன ராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு என்பதால் இந்த வாரம் முழுமையும் மீனத்திற்கு நன்மை தருவதாக அமையும். சிலருக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் உறவு, நட்புகளின் ஆதரவுகள் கிடைக்கும். ஆன்மபலம் கூடும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு நேரம் கை கொடுக்கும்.

எதிர்பார்த்த பாகப் பிரிவினைகள் முடிந்து உங்கள் பங்காக ஒரு நல்லதொகையோ, சொத்துக்களோ கிடைக்கும். பூர்வீக சொத்து ஒன்றும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 17,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ந்தேதி காலை 8.28 மணி முதல் 23-ந்தேதி காலை 11.52 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகளோ, முயற்சிகளோ செய்வதை தள்ளி வைப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாரிடமும் சண்டையோ, வீண் வாக்கு வாதமோ செய்ய வேண்டாம்.

16.12.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 


தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


No comments :

Post a Comment