Saturday, December 7, 2019

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (09-12-19 முதல் 15-12-2019 வரை)



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி


கைப்பேசி : 9768 99 8888

மேஷம்:

மேஷ ராசியின் யோகவாரம் இது. ராசிநாதன் செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் இருந்து ராசியைப் பார்ப்பது உங்களுக்கு நல்லவைகளைச் செய்யும் என்பதால் இளைய பருவ மேஷ ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலை சம்பந்தமான முன்னேற்றங்கள் இருக்கும். குறிப்பாக முனைவர் பட்டம், எம்.பில், சி.ஏ போன்றவைகளை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்கள் தடைகள் விலகி பட்டம் பெறுவதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்வீர்கள். ராசிநாதன் சுபத்துவமாக இருப்பதால் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும், எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும்.


இளைய பருவத்தினரின் திடமான மன ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தன ஸ்தானம் வலுவடைவதால் எதிர்பாராத பணவரவும் இருக்கும். அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் சாதிக்கும் நேரம் வந்து விட்டதால் இனி கவலை ஒன்றும் இல்லை. மேஷத்தில் பிறந்த அனைவருக்கும் இப்போது நல்லவைகள் மட்டுமே நடக்கும். இதுபோன்ற நல்ல கோட்சார கிரகநிலை இருந்தும் ஒரு மேஷ ராசிக்காரர் கஷ்டப்படுகிறார் என்றால் பிறந்த ஜாதகப்படி அவருக்கு கடுமையான தசா, புக்திகள் நடந்து கொண்டிருக்கும்

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களின் தயக்கங்களும், பயங்களும் விலகும் வாரம் இது. அதே நேரத்தில் ராசிநாதன் சுக்கிரன் எட்டாமிடத்தில் குருவுடன் இருப்பதால் சிலருக்கு வேலையில் மாற்றங்களும், சங்கடங்களும் இருக்கும். சனியும்  எட்டில் அமர்ந்து பத்தாமிடத்தை பார்ப்பதால் சிலர், தொழிலை மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். இப்போது எதுவும் வேண்டாம். இருக்கும் நிலையே தொடருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது நடைபெறும் மாற்றங்கள் எதிர்காலத்தில் நன்மைகளையே தரும் என்பதால் ரிஷபத்திற்கு துன்பங்கள் இல்லாத வாரம் இது.

வார ஆரம்பத்தில் சிலர் தவறுகளை செய்தாலும், வாரத்தின் இறுதியில் அவற்றை சீர்படுத்திக் கொண்டு உங்கள் செயல்திறனை பிறருக்குக் காட்டுவீர்கள். சிலருக்கு இதுவரை இருந்து வந்த மனக்குழப்பம் விலகத் தொடங்கும். அடுத்த மாதம் முதல் அஷ்டமச் சனி முழுவதுமாக விலக இருப்பதால் நீங்களே உங்களின் சொந்தக் காலில் நிற்பதற்கு ஏதுவாக விஷயங்கள் நடக்கும். வேலை விஷயங்களில் தன்னம்பிக்கையை அடைவீர்கள். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தயக்கமும், மெத்தனமும் விலகி சுறுசுறுப்பு அதிகமாகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களின் எண்ணங்கள் நிறைவேறும் வாரம் இது. உங்களில் சிலர் இந்த வாரம் சுயநலமாக செயல்படுவீர்கள். குறிப்பாக உங்களுக்கு தேவைப்படும் ஒரு சுகத்திற்காக எதையும் செய்ய நீங்கள் தயாராகும் வாரம் இது. உயர்கல்வி கற்பதற்கு இருந்த தடைகள் தற்போது நீங்கும். சுக்கிரன் ஏழில் வலிமையாக இருப்பதால் பெண்கள் விஷயத்திலும், சங்கடங்களும், சச்சரவுகளும் உண்டாகும். அறிமுகமில்லா பெண்களிடம் கவனமாக இருங்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் திறமையைக் காட்ட முடியும்.

நண்பர்களால் மதிக்கப்படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவருக்கு வேலை கிடைக்கும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். மனைவி சொல்லைக்  கேளுங்கள். வாழ்க்கை மேம்படும். தாமதித்து வந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் இப்போது உண்டு. பெண்களுக்கு இது உற்சாகமான வாரமாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். சிலர் வெளிநாடு செல்வீர்கள்.

கடகம்:

கடக ராசியினர் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துப் போகவேண்டிய வாரம் இது. மற்றவரை புரிந்து கொள்ளாமல் கணவன்-மனைவிக்குள் கருத்து வேற்றுமை வரும் என்பதால், மூன்றாம் மனிதரை எதிலும் நம்பாமல் உங்களை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டிய வாரம் இது. சிலருக்கு அம்மா வழியில் ஆதாயங்கள் உண்டு. வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். ஒரு சிலர் கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவீர்கள். பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். குழந்தைகள் விஷயத்தில் செலவுகள் உண்டு.

உங்களில் ஆயில்யம் நட்சத்திரக் காரர்களுக்கு எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகள் அமையும். பூசம் நட்சத்திரத்தினருக்கு அதிகமாக நம்பிக்கை வைத்து எதிர்பார்த்திருந்த விஷயத்தில் தடைகள் இருக்கும். காரணமின்றி மற்றவர்கள் மீது எரிந்து விழுவீர்கள். சிலருக்கு தீர்த்த யாத்திரை, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரிகள் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இது சிறப்பான வாரம். அரசு, தனியார்துறை ஊழியருக்கு நல்ல சய்திகள் உண்டு.

சிம்மம்:

சிம்மத்திற்கு வளர்பிறை காலம் இது.  நட்புக் கிரகங்கள் நல்லநிலையில்  இருப்பதோடு, ராசிக்கு குருபார்வை இருப்பது நன்மைகளை தரும் என்பதால் சிம்மத்தினர் எதிலும் துடிப்புடன் இறங்கி செயலை முடித்து காட்டும் வாரம் இது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பெண்களால் லாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம்.

மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் இருந்த பிரச்னைகள் தீரும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். யாருக்காவது எதாவது செய்து தருவதாக கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை உங்கள் செயல்களால் மற்றவர்களுக்கு புரிய வைப்பீர்கள். நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இப்போது முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும் வாரம் இது.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சந்தோஷம் தரும் வாரம் இது. உங்களில் சிலர் எத்தனையோ முயற்சிகளுக்கு பின் அடைய முடியாத விஷயங்களை இந்த வாரம் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். சிலருக்கு வேலை விஷயமான நல்ல தகவல்கள் வரும். சிலகாலமாக உடல்நலம் குறைந்திருந்தவர்கள், கடன் தொல்லைகளால் கஷ்டபட்டவர்கள், எந்த ஒரு விஷயத்தையுமே நல்லவிதமாக முடிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இந்த வாரம் அனைத்து பின்னடைவுகளும் நீங்கி சந்தோசம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு.

நீண்ட நாட்களாக சொந்தவீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு இப்போது நனவாகும். திருமணமாகாமல் இருப்பவருக்கு திருமண உறுதி செய்யும் நிகழ்ச்சிகள் உண்டு. கூட்டுத் தொழில் சிறப்படையும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். 12,13, ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ந்தேதி அதிகாலை 1.27 மணி முதல் 10-ந்தேதி காலை 11.17 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது. ராசிநாதன் வலிமை இழப்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.  

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன், குருவுடன் இணைந்திருப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனைத்தும் சுமூகமாகவும், பிரச்னைகள் எதுவும் இல்லாமலும் இருக்கும். தொந்தரவுகள் வராது. சுக்கிரனின் வலுவால் தூரதேசங்களில் தொழில் வைத்திருப்பவர்கள், வெளிநாட்டுக் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். தேவைப்படும் பணம் எப்படியும் கடைசி நேரத்திலாவது கிடைத்து விடும். மூன்றுக்குடைய குரு ஆட்சி நிலை அடைவதால் துலாத்தினரின் தைரியம் அதிகரிக்கும் வாரம் இது.

இதுவரை எந்த ஒரு விஷயத்திலும், யார் உதவியும் கிடைக்காமல் தனி மனிதனாகவே போராடி கொண்டிருந்தவர்களுக்கு இனி அடுத்தவர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். உங்களில் சிலர் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். 11;15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ந்தேதி காலை 11.17 மணி முதல் 12-ந்தேதி மாலை 6.23 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல் எதுவும் நடக்காது. இருந்தாலும் நீண்ட தூர பிரயாணங்கள் புதிதாக தொழில் ஆரம்பித்தல், முக்கிய முடிவுகள் எதுவும் எடுத்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம்.

விருச்சிகம்:

சாதனைகளைச் செய்ய நீங்கள் தயாராக வேண்டிய வாரம் இது. உங்கள் எண்ணங்களிலும், செயல்களிலும் இதுவரை இருந்து வந்த தயக்கங்கள் நீங்கி புத்துணர்வும், சந்தோஷமும் இப்போது உண்டாகும். வார இறுதியில் சூரியன் வலுப் பெறுவதால் செயல்திறன் உண்டாகப் பெறுவீர்கள். ராசிநாதன் செவ்வாய் வலுப் பெறுவதால் இனிமேல் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். நான்கு பேர் இருக்கும் இடத்தில் உங்களின் பேச்சு கவனிக்கப்படும்.  தொழிலில் முன்னேற்றம் படிப்படியாக இருக்கும். எதிலும் நல்ல பேர் எடுப்பீர்கள்.

ஏழரைச் சனி முழுவதுமாக விலக இருப்பதால் விருச்சிகத்தின் தனித்துவம் வெளிப்படும் வாரம் இது. இதுவரை அடுத்தவரின் ஆதிக்கத்திலும், குறிப்பாக சகோதரர், சகோதரிகளின் ஆதரவிலும், பெற்றோர்களின் கையை எதிர்பார்த்தும் இருந்து வந்த விருச்சிகத்தினருக்கு இனி அது தேவை இருக்காது. 11,12,13 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ந்தேதி மாலை 6.23 மணி முதல் 14-ந்தேதி இரவு 11.16 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்திக் கொள்வதும் இந்த நாட்களில் வேண்டாம்.

தனுசு:

தனுசுவினர் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகப் புரிந்து கொண்டு ஜெயிக்கும் வாரம் இது. இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புக்கள் விலகும். குறிப்பாக பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும்.  நண்பர்கள் உதவுவார்கள். சகோதர உறவு மேம்படும். தொழிலில், வேலையில் நல்ல அனுபவங்களும், வளர்ச்சியும் இருக்கும். பிறரால் பாராட்டப் படுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். சுற்றுலா சென்று வருவீர்கள். கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கின்றன.

பணவரவு நன்றாகவே இருக்கும். சிலருக்கு மட்டும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. வேலைமாற்றம் செய்யப்பட்டவர்கள் பழைய இடத்திற்கே திரும்பி வருவீர்கள். 10,15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ந்தேதி இரவு 11.16 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 2.47 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நிச்சயமாக நடைபெறாது. ஆயினும் புதிய முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

மகரம்:

இளைய பருவ மகர ராசியினருக்கு அடுத்த மாதம் முதல் ஜென்மச்சனியின் பாதிப்புக்கள் இருக்கும் என்பதால் சனிக்கிழமைதோறும் அருகில் இருக்கும் ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. கடந்த சில மாதங்களாக மன அழுத்ததில் இருக்கும் மகரத்தினருக்கு தீர்வுகள் ஆரம்பிக்கும் வாரம் இது. சிலருக்கு பணவரவு உண்டு. எதிர்பார்க்காத இடங்களில் இருந்து லாபங்களும், பொருள்வரவும் கிடைக்கும். உங்களில் வழக்குரைஞர்கள் சிலர் தங்களின் தனிச்சிறப்பான வாதத்தால் பிறரால் கவனிக்கப் பெறுவார்கள்.

இளைஞர்கள் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. ஒரு சிலர் இந்த வாரம் தங்களின் எதிர்கால வாழ்க்கைத்துணையை இன்னார்தான் என்று தெரியாமல் சந்திப்பீர்கள். சிலருக்கு ஆன்மிக யாத்திரை செல்லும் வாய்ப்பு ஏற்படும். நடுத்தர வயதினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். பணியாளர்களுக்கு வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும். வேலை செய்யுமிடங்களில் வீண் வாக்குவாதம் வேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் இலாபங்களும், வரவுகளும், ஆதரவான நிலையும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு உறுதி நிகழ்ச்சிகள் உண்டு.

கும்பம்:

கும்பத்திற்கு எதிர்மறை பலன்கள் இல்லாத வாரம் இது. சுக்கிரன் லாப ஸ்தானத்தில் வலுவான நிலையில் இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். சிலருக்கு மட்டும் ஏற்கனவே முடிந்து விட்டது என்று நினைத்து நிம்மதியாக இருந்த விஷயங்கள் மீண்டும் கிளறப்படும். சுக்கிரனின் வலுவால் சிலருக்கு  இந்த வாரம் திருமணத்திற்கான ஆரம்பங்களோ அல்லது திருமணமோ நடக்கும். முதல் திருமணம் தோல்வி அடைந்து வேதனையில் இருப்பவர்களுக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் அமையும்.

பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகளில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒரே இடத்திற்கு மாற்றலாவார்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டு விடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்த நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களின் செயல்கள் அனைத்திற்கும் இந்தவாரம் தடைகள் இருக்கும். உங்களில் சிலருக்கு எதிலும் ஒரு சந்தேகப் பார்வையும், யாரையுமே நம்ப முடியாத மன சஞ்சலமும் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் லாபம் தரும். அதேநேரத்தில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையிலும் சில விஷயங்கள் இருக்கும். சிலருக்கு எல்லாவற்றிலும் முதலில் பிரச்னைகள் தோன்றி பிறகு அனைத்தும் நல்லபடியாக முடியும். பணவரவிற்கு குறை இல்லை.

நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வார இறுதியில் புனித இடங்களுக்கு செல்வதோ, குல தெய்வ வழிபாடோ செய்வீர்கள். கணவன் மனைவி உறவில் முணுமுணுப்புக்கள் உண்டு. குழந்தைகள் செலவு வைப்பார்கள். இளைய சகோதரரிடம் கருத்து வேறுபாடு வரும். தந்தைவழி உறவினர் வகையில் மனக்கசப்புக்கள் இருக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இது நல்லவாரம். அதிகாரப் பதவி வரும். நகைச்சுவை நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.


09.12.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment