Monday, July 15, 2019

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (15.07.19 முதல் 21.07.19 வரை)


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 


கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களின் தனித்திறமைகள் அடையாளம் காணப்படும் சம்பவங்கள் இருக்கும். எந்த ஒரு செயலும் அதிக முயற்சி இன்றி வெற்றியாக முடியும். சந்தோஷம் தரும் வாரம் இது. சுயதொழில், வியாபாரம் போன்றவைகள் சுறுசுறுப்பாக நடக்கும். இதுவரை செய்யாமல் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்த சில விஷயங்களில் தயக்கங்கள் விலகி பளிச்சென்று தெளிவான  முடிவுகளை எடுப்பீர்கள். எத்தகைய நிர்ப்பந்தங்கள் வந்தாலும் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காமல் உறுதியாக இருப்பீர்கள்.


செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். பெண்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைத் தரும். தந்தைவழி உறவினர்களால் லாபம் உண்டு. நீண்ட நாட்களாக சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் தெய்வ அருள் உங்களுக்கு உண்டு. பிள்ளைகளால் பெருமை வரும். குலதெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற முடியும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு தனலாபம் உள்ள வாரம் இது. அதேநேரத்தில் கையில் இருந்த சேமிப்பும் கரையும். செலவுகள் வரும். சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் நடக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் உண்டு. சாப்ட்வேர் துறைகளில் இருப்பவர்களுக்கு பரிசு அல்லது விருது கிடைக்கும். வேலையில் பாராட்டப் படுவீர்கள். ஆனால் பிரயோஜனம் இருக்காது. இனம்புரியாத ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

எல்லா வகையிலும் மாற்றங்கள் உண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம். எவரையும் நம்ப வேண்டாம். சுக்கிரனின் வலுவால் தொழிலிலும், அலுவலகத்திலும் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. ஏற்கனவே இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். 

மிதுனம்:

ராசிநாதன் புதன் செவ்வாயுடன் இணைந்திருப்பதால் சிலருக்கு கடன் வாங்கி செலவு செய்யவேண்டி வரும்.. வாங்கும் கடனை என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது. மதிப்பு மரியாதை கெடாது என்றாலும் சின்னச் சின்ன சிக்கல்கள் உண்டு. எல்லாவற்றிலும் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் நன்மைகள்தான். ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில்  போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். 

பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு. குடும்ப வழக்கு உள்ளவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும். பங்காளிச்சண்டை தீரும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். தந்தையிடம் இருந்து உதவிகளோ பொருள் வரவுகளோ இருக்கும். வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அருகில் இருக்கும் வாரம் இது. வாழ்க்கைத் துணை மூலம் சந்தோஷங்கள் உண்டு. கணவன் மனைவி இருவரும் புரிந்து பேசி வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள். பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் ஒன்று இந்த வாரம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். 

அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு  பிரச்னைகள் எதுவும் இருக்காது. சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். என்னதான் செய்தாலும் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று அவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டியிருக்கும். வாகன யோகம் இருப்பதால் நினைத்த மாடலில் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது. தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும்.

சிம்மம்:

இந்தவாரம் ராசிநாதன் சூரியன் நீசனுடன் இணைவதால் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் கீழே வேலை செய்பவர்களை நம்ப வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. உதவிகள் கிடைப்பதற்கு தடைகள் உண்டு. எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும். தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுய தொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். உற்சாகம் தரும் வாரம் இது.

குடும்பத்தில் ஒருவர் கோபத்தைக் காட்டினாலும் இன்னொருவர் பணிந்து போவது ஒன்றும் கௌரவக் குறைச்சல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.  ஜீவனாதிபதி சுக்கிரன் உங்களின் தொழில், வேலை விஷயங்களில் நல்ல மாற்றங்களை தருவார். மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதற்கு வாய்ப்பிருப்பதால் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 

கன்னி:

பதினொன்றில் இருக்கும் புதனின் வலுவால் பின்னடைவுகள் அனைத்தையும் சுலபமாக சமாளிப்பீர்கள். குறிப்பாக வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவும் வாரம் இது. புதன், செவ்வாய் சேர்க்கையால் சிலர் கோர்ட்,கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அனைத்திலும் கவனம் தேவை. வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக் குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள். 

முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதை நான்கு வாரம் ஒத்திப் போடுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அவசரப்படக் கூடாது. வருமானம் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். மேலும் தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளில் குறைகள் இருக்காது. ஆறாமிடம் வலுப் பெறுவது விரோதிகளை உருவாக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.  எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வது பகைமையில் கொண்டு போய்விட்டு விடும். குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு செய்வீர்கள்.

துலாம்:

உங்களின் புத்திசாலித்தனத்திற்கும், திறமைக்கும் ஏற்ற வாரம் இது. மனதிற்குள்  போட்டு வைத்திருக்கும் திட்டங்களை செயல்படுத்தி சோதனை செய்வீர்கள். குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும். சகோதர உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் இருக்கும். 

ஒரு சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் தற்போது புரிந்து கொண்டு பக்கத்தில் வருவார்கள். நண்பர்களால் மகிழ்ச்சி இருக்கும். வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ செய்ய முடியும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதிலிருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.

விருச்சிகம்:

உங்களை நீங்களே புரிந்துகொள்ளும் அற்புதமான புதிய வாரம் இது. அனுஷம் நட்சத்திரத்திற்கு துயரங்கள் விலகத் தொடங்கி விட்டது. கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும் சம்பவங்கள் இன்னும் சில வாரங்களில் விலகும். ஏழரைச்சனி கொடுக்கும் அனுபவங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் நன்மையைத் தரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நெருக்கடியான நேரமாக இருந்தாலும் எதையும் இழக்க மாட்டீர்கள். இழந்தாலும் சனி முடிந்ததும் இரு மடங்கு சம்பாதிப்பீர்கள். 

பங்குச்சந்தை, யூகவணிகம், ரேஸ், லாட்டரி போன்றவைகள் கை கொடுக்காது. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. திறமையை முதலீடாகக் கொண்டவர்கள், விவசாயிகள் போன்றவர்களுக்கு வருமானங்களும், மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகளும் உண்டு. வழக்கு, காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். 

தனுசு:

தனுசு ராசிக்கு எப்படி இந்த வருமானம் வந்தது என்று அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள முடியாத பணவரவு கிடைக்கும் வாரம் இது. எந்த ஒரு விஷயமும் முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடின உழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். ஜென்மச் சனியால் சில நேரங்களில் விரக்தி ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது. மிகவும் நம்பும் ஒருவரிடமிருந்து ஏமாற்றங்கள் வரும். 

குடும்பச் சிக்கல்களினால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். பெண்களுக்கு சிறப்புக்கள் வரும். தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். தாயார் வழி நன்மைகள் உண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் வரும். 

மகரம்:

இந்த வாரம் உங்களின் தெய்வ பக்தி அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும் காலம் இது. சனி, கேது இணைவால் ஆன்மிக எண்ணங்கள் அதிகமாக இருக்கும். சிலருக்கு தெய்வ திருப்பணி செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். சிலருக்கு வேலை பற்றிய நல்ல தகவல்கள் வரும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை தள்ளிப் போடுவது நல்லது. தவிர்க்கமுடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யுங்கள். 

தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும். யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும் கை கொடுக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். யாரையும் நம்ப வேண்டாம். சுயதொழில் புரிவோருக்கும் கலைஞர்களுக்கும் நல்ல வாரம் இது. நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருப்பவருக்கு திருமண உறுதி செய்யும் நிகழ்ச்சிகள் இருக்கும். கூட்டுத் தொழில் சிறப்படையும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள்.

கும்பம்:

உங்களில் அவிட்டம், சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவுகளும், சந்தோஷங்களும் கிடைக்கும். சிலர் தாத்தா, பாட்டியாக உயர்வு பெறுவீர்கள். பிள்ளைகளிடமிருந்து சந்தோஷச் செய்திகள் வரும். சிலருக்கு வாகனம் வீடு மாற்றம் உண்டு. இதுவரை இருந்ததைவிட நல்ல வீட்டிற்குப் போவீர்கள். பழைய வாகனத்தை விற்று விட்டு அதைவிட உயர்ந்த வாகனம் வாங்குவீர்கள். எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் அது விலகுவதை  உணருவீர்கள். 

எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் மிக நல்ல வாரம் இது. ராசிநாதன் சுபத்துவமுடன் இருப்பதால் நல்ல பலன்கள் நடைபெறும். எந்த ஒரு விஷயத்தையும் வெற்றிகரமாக முடிக்க முடியும். இளையபருவ கும்ப  ராசிக்காரர்களுக்கு கல்வி சம்பந்தமான முன்னேற்றங்கள் இருக்கும் வாரம் இது. குறிப்பாக முனைவர் பட்டம், எம்.பில் போன்றவைகளை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்கள் இந்தவாரம் தடைகள் அனைத்தும் விலகி பட்டம் பெறுவதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்வீர்கள்.

மீனம்:

மீனத்தினர் இந்த வாரம் சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் சாதகமாகத் திரும்பும். தாயார் விஷயத்தில் அன்பும், ஆதரவும் உண்டு. சிலருக்கு தாயார் வகையிலான சொத்து விவகாரங்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் முடியும். திரவ ரீதியிலான பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு நல்ல பணவரவு உண்டு. விவசாயிகள், காய்கறி வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களும் அரசு, தனியார் துறை ஊழியர்களும் நல்லசெய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். 

தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைஞர்கள் சிறப்புப் பெறுவீர்கள். வேலை வியாபாரம் தொழில் போன்ற அமைப்புகள் வலுப் பெறும். குறைகள் எதுவும் சொல்ல முடியாத வாரம் இது. குறிப்பிட்ட சிலர் இப்போது செய்யும் தொழிலை மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். இன்னும் சிலருக்கு தொழில் இடமாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் இப்போது  நடைபெறும். நடைபெறும் மாற்றங்கள் உங்களுக்கு நன்மைகளையே தரும் என்பதால் மீனத்திற்கு  துன்பங்கள் இல்லாத வாரம் இது. 



(15.07.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.



1 comment :

  1. ஐயா, ஜோதிடத்தை ஒளியாக விவரித்து இருக்கிறீர்கள். சுப கிரகங்கள் ஒளியை reflect பண்ணும் என்றும் கூறியிருக்கிறீர்கள். ஆனால் பாப கிரகங்கள் இருள் சூழ்ந்தது என்றும் அவைகளில் சனிக்கு ஒளியை பிரதிபலிக்கும் தன்மை 1 % என்று கூறியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியிருக்க, சனிக்கு எப்படி 3, 7, 10 ஆகிய பார்வை இருக்க முடியும்? இந்த ஸ்தானங்களை சனி பார்க்கிறது என்று சொல்வது எப்படி?

    ReplyDelete