Friday, July 19, 2019

நீங்கள் எப்போது கோடீஸ்வரன் ஆவீர்கள்..? (A-008)



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ஒரு காலத்தில் நீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா... இப்படிச் செலவு செய்கிறாய்?” என்று அடுத்தவரைக்  கேள்வி கேட்கப்  பயன்பட்ட உதாரணங்கள் தற்போது அவன் பெரிய அம்பானிப்பா...!என்று மாறி விட்டன.

டாட்டாக்களும், பிர்லாக்களுமாவது பாரம்பரியமான நல்ல வசதியான குடும்பத்தின் வழி வந்தவர்கள். ஆனால் இன்றைய அம்பானிகளின் தந்தை ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் எளிய குடும்பத்தில் பிறந்தவர். தன் வாலிப வயதில் மும்பையில் பிளாட்பாரத்தில் பீடாக் கடை வைத்திருந்தவர்.

மும்பையின் நடைபாதையில் கடை வைத்திருந்த அம்பானி இந்தியாவின் பணக்கார அடையாளமாய் மாறியது எப்படி? நீங்களும் அம்பானி போன்ற மகா கோடீசுவரராக எப்போது ஆவீர்கள்? உங்கள் ஜாதகமும் அது போன்ற வலுவுள்ளதா?

திருமகளைத் தன்னகத்தே வரவழைக்கும் அந்த ஜோதிட சூட்சுமங்கள் என்ன? ஒவ்வொரு மனிதனையும் ஏங்க வைக்கும் அந்தப் பணத்தை எப்போது சம்பாதிக்க முடியும்? 

இது பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?

  • எந்த லக்னமாயினும் லக்னாதிபதி  வலுவடைந்து, லக்னத்தை ஐந்து, ஒன்பதுக்குடையவர்கள் வலுப்பெற்றுப் பார்த்து, அவர்களின் தசையும் நடைபெறுமானால் பிரபலமானவராகவும், கோடீசுவரனாகவும் மாறும் யோகம்.
  • தொழிலுக்குரிய பத்தாம் பாவகாதிபதியும், செயல்புரியும் லக்னாதிபதியும், பணம் தரும் தனாதிபதியும் வலுப் பெற்றிருந்தால் பணக்கார யோகம்.
  • பணத்தைக் கொடுக்கும் குருவும், அதை அனுபவிக்க இயலும் சுக்கிரனும் வலுப் பெற்றிருந்தால் பணக்கார யோகம்.
  • இரண்டு, ஐந்து, ஒன்பது, பதினொன்றாம் பாவகத்தின் அதிபதிகள் வலிமை குறையாமல் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் பெறுவது பணக்கார யோகம்.
  • ஒன்பது, பத்துக்குடையவர்கள் பரிவர்த்தனையாதல், இணைந்திருத்தல், ஒருவரை ஒருவர் பார்த்தல் போன்ற ஏதாவது ஒரு அமைப்புடன் இருந்து, இருவரது தசா, புக்தியும் சரியான பருவத்தில் ஜாதகருக்கு நடந்தால் அவர் கோடீசுவரன் ஆவார்.

இவையனைத்தும் பொதுவான அம்சங்களே...

ஜோதிடத்தில் பொதுவான விதிகளை விட சூட்சுமமான சில நிலைகளே ஒருவரை உயர்நிலைக்கு கொண்டு செல்கின்றன. எல்லோருக்கும் அதுபோன்ற உன்னத அமைப்புகள் இருந்து விடுவதில்லை. நம்மில் எல்லோருமே எல்லாம் கிடைத்தவர்கள் இல்லை. கோடியில் ஒருவருக்கே அனைத்தும் கிடைக்கிறது. அவரே கோடீஸ்வரன் எனப்படுகிறார்.

இனி சூட்சும விதிகளைக் காண்போம்.

  • காலபுருஷனின் கேந்திர ராசிகளான  மேஷம், கடகம், துலாம், மகரம் எனப்படும் சர ராசிகளை லக்னங்களாகக் கொண்டு பிறந்தவர்கள் விடாமுயற்சியுடன் எதையும் சாதிக்கப் பிறந்தவர்கள்.
  • மேற்கண்ட சர ராசிகளில் சுப கிரகங்கள் நேர் வலுவுடனும், பாபக் கிரகங்கள் சூட்சும வலுவுடனும் இருந்து அவர்களுடைய தசையும்  நடக்கும் போது மிகப்பெரிய தனலாபங்கள் கிடைக்கும். குறிப்பாக லக்னாதிபதி சுபரானால் நேர்வலுவும், பாபரானால் சூட்சும வலுவும் அடைந்திருக்க வேண்டும்.
  • மூன்று கிரகங்கள் திக்பலம் பெற்றிருந்து, அவர்கள் லக்ன யோகர்களாகவும் இருந்து, அவர்களின் தசை நடக்கும்போது ஜாதகர் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கோடீசுவரனாவார்.
  • பணத்திற்கு அதிபதி குருவே...! தன காரகனான குரு ஜாதகத்தில் சுப வலுவுடன் இருப்பது பணக்கார அமைப்பை உருவாக்கும். அவர் சீக்கிர கதியில் (அதாவது சூரியனுக்கு இரண்டில்) ஸ்திர ராசியில், பதினொன்றாமிடத்தில் இருந்து தசை நடத்தினால் (இந்த மூன்று அமைப்பும் ஒரு சேர இருந்தால்) பணம் கொட்டும்.
  • 3, 11 மிடங்களில் ராகு இருந்து, அது சர ராசியாகி, ராகு ஐந்து ஒன்பதுக்குடையவர் சாரம் பெற்று, ராகுக்கு வீடு கொடுத்தவர் அவருக்கு கேந்திரத்தில் (சர ராசியில்) உச்சமாகி, ராகுதசை நடக்கும் போது எப்படி பணம் வந்தது என்று மலைக்குமளவிற்கு முறைகேடான வழியில்  பணமழை பொழியும்.

(தசாநாதனுக்கு வீடு கொடுத்தவர் 6,8,12 ல் மறையக் கூடாது என்ற விதி உண்டு. அதற்கு இந்த அமைப்பு விதிவிலக்கு. இதில் ராகுவுக்கு வீடு தரும் இயற்கைப் பாபிகள் சனியும், செவ்வாயும் லக்னத்திற்கு 8, 12 ல் மறைந்து உச்சம் பெறுவார்கள்.)

  • விருச்சிகம் லக்னமாகி, சந்திரனோ சூரியனோ வலுப்பெற அமாவாசை அல்லது, பௌர்ணமியில் பிறப்பது, அல்லது ஜாதகர் ஆடி மாதம் சிம்ம ராசியில் விருச்சிக லக்னத்தில் பிறப்பது மஹா தனயோகம்.

(இந்த அமைப்புப்படி சூரியனும் சந்திரனும் ஒன்பது  பத்துக்குடையவர்களாகி, இணைந்தோ, பார்த்துக் கொண்டோ இருப்பார்கள். ஆடிமாதம் சிம்மராசி என்பது சூரியனும், சந்திரனும் பரிவர்த்தனை ஆவார்கள். இதில் அமாவாசை நிலையில் சந்திரனும், சூரியனும் இருக்கும்போது, இவர்களை சுப கிரகங்கள் பார்த்தோ, இணைந்தோ சுபத்துவப் படுத்தி இருக்க வேண்டும். இல்லையெனில் யோகம் பலன் தராது.)

  • தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் செவ்வாய் இருப்பது தசம அங்காரஹாஎன நமது கிரந்தங்களில் உயர்வாக சொல்லப்படுகிறது. இதன் சூட்சுமம் என்னவெனில் செவ்வாய் தைரியத்திற்கான கிரகம். தொழில் செய்வதற்கு தைரியம் (ரிஸ்க்) வேண்டும். செவ்வாய் இந்த இடத்தில் திக்பலம் பெறுவார். இங்கே செவ்வாய் தனித்து ஆட்சி, உச்சம் பெறாமல் வெறும் திக்பலம் மட்டும் பெற்றிருந்தால் ஜாதகர் மகா கோடீசுவரன் ஆவார்.

(தனித்து ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் அதீத கோபம் மற்றும் அசட்டுத் தைரியத்தில் தவறான முடிவெடுத்து தொழில் சரிவை சந்திப்பார். எனவே செவ்வாய் பத்தாமிடத்தில் ஸ்தான பலம் பெறாமல் வெறும் திக்பலம் மட்டும் பெற்றிருக்க வேண்டும்.) 

  • உத்தரகாலாம்ருதத்தில் சொல்லியபடி இந்து லக்னத்தில் சுப கிரகம் வலுவுடன் இருந்து அதன் தசை நடந்தால் நேர்வழியில் பணமும், பாபகிரகம் இருந்தால் மறைமுக வழியில் பணமும் ஏராளமாய் வரும்.

உத்தர காலாம்ருதத்தில் மகா புருஷர் காளிதாசர் இந்து லக்னம் என்ற அமைப்பைப் பற்றி சொல்கிறார்.

காளிதாசர் பிறப்பில் அப்பாவியாக, ஏதும் அறியாதவராக இருந்தவர். ஒரு காளி கோவிலில் தனக்கு எற்பட்ட துன்பங்களை மனப்பூர்வமாக முறையிட்டுத் தூங்கியவருக்கு, விழித்தவுடன் கவிதா ஞானமும், ஜோதிட ரகசியங்களும், பரம்பொருளிடமிருந்து நேரிடையாகக் கிடைக்க ஆரம்பித்தன.

இதையே பெரியவர்கள் சக்திஅவருடைய நாக்கில் எழுதினாள் என்று பூடகமாகச் சொன்னார்கள். (நம் காலத்தில் வாழ்ந்த கணிதமேதை ராமானுஜம் சில சிக்கலான சூத்திரங்களுக்கான விடை கனவில், தனது குல தெய்வத்திடமிருந்து கிடைத்தது என்று சொன்னது இங்கு கவனிக்கத்தக்கது.)

மகரிஷி பராசரர் அருளிய விம்சோத்ரி உடுமகாதசை கணக்கைப் போலவே (நாம் இன்று கணிக்கும் உடுமகாதசை வருடங்களான கேது 7, சுக்கிரன் 20, சூரியன் 6, சந்திரன் 10, செவ்வாய் 7, ராகு 18, குரு 16, சனி 14, புதன் 17, என்பனவற்றை நமக்குத் தந்தவர் மகரிஷி பராசரரே...!) மகாபுருஷர் காளிதாசரும் நமக்கு இந்து லக்னம் என்ற ஒப்பற்ற அமைப்பைத் தந்திருக்கிறார்.

காளிதாசர் மற்ற கிரகங்களால் பூமிக்கு கிடைக்கும் கதிர் அல்லது ஒளி அளவை மிகத் துல்லியமாக கிரககளா பரிமாணம்என்ற பெயரில் சொல்லுகிறார்.

கிரககளா பரிமாண எண்களாவன.... 

 

சூரியன்

30

சந்திரன்

16

செவ்வாய்

6

புதன்

8

குரு

10

சுக்கிரன்

12

சனி

1

நம்மை ஒளியால் மூழ்கடிக்கும் சூரியனுக்கு 30 எண்களையும், ஒளியைத் தர இயலாத அளவுக்கு வெகு தூரத்தில் இருக்கும் சனிக்கு எண் ஒன்றையும் அவர் தருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சனியின் ஒளிவீச்சே ஒன்று என்ற குறைந்த அளவில் நம்மை வந்து அடைவதால்தான் அதற்கு அப்பால் உள்ள யுரேனஸ், நெப்டியூன் போன்ற கிரகங்களின் தாக்கம் நம்மை பாதிப்பதில்லை என்று இந்திய ஜோதிடம் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் கதிர்வீச்சு மொத்த அளவை அவர் பராசரரின் உடுமகாதசை அளவைப் போலவே 120 எனக் கொண்டது இங்கு குறிப்பிடத் தக்கது.

இந்து லக்னத்தை எப்படிக் கணிப்பது என்றால், காளிதாசரால் கிரகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கிரககளா பரிமாண எண்களின்படி லக்னத்திற்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும், ராசிக்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும் கூட்டி வரும் எண்ணை, பனிரெண்டால் வகுத்து, மீதி வரும் எண்ணை, ராசியிலிருந்து எண்ணினால் வருவதே இந்து லக்னம்.

உதாரணமாக ஒருவர் துலாம் லக்னம், கன்னி ராசியில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருக்கு லக்னத்திற்கு ஒன்பதுக்குடையவராக புதனும், ராசிக்கு ஒன்பதுக்குடையவராக சுக்கிரனும் வருவார்கள்.

இதன்படி லக்னத்திற்கு ஒன்பதுக்குடையவரான புதனின் எண்ணாகிய எட்டையும், ராசிக்கு 9-க்குடைய சுக்கிரனின் எண் பன்னிரண்டையும் கூட்டிய எண்ணிக்கை இருபதை, பனிரெண்டால் வகுக்க, மீதி எண்ணாக எட்டு வரும். இந்த எட்டாம் எண்ணை ராசியிலிருந்து அதாவது சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து, சந்திரனையும் ஒன்று என சேர்த்து எண்ணும் போது, ராசியிலிருந்து எட்டாம் இடமான மேஷம் அவருக்கு இந்து லக்னமாக வரும்.

இந்து லக்னத்தை கணிப்பதிலும் சில குழப்பங்கள் இருக்கும். மீதி எண் ஒன்று என வரும் நிலையில் எதனை இந்து லக்னம் எனக் கொள்வது அல்லது மீதியே இல்லாமல் பூஜ்ஜியமாக வரும் நிலையில் எதனை எடுத்துக் கொள்வது போன்ற குழப்பங்கள் ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக வரும்.

பன்னிரண்டால் வகுத்து மீதி பூஜ்ஜியமாக வரும் நிலையில், ஜாதகரின் ராசிக்கு முந்தைய ராசி அதாவது ஜாதகர் கன்னி ராசி எனில், அவருக்கு முந்தைய சிம்ம ராசி இந்து லக்னம் எனப்படும். மீதம் ஒன்று என எண்ணிக்கை வரும் நிலையில் ஜாதகரின் சொந்த ராசியே அதாவது சந்திரன் இருக்கும் வீடே இந்து  லக்னமாகும்.

இந்து லக்னத்தில் இயற்கைச் சுப கிரகங்களோ, லக்ன யோகர்களோ வலுவுடன் அமர்ந்து அவர்களின் தசை நடந்தால் அந்த ஜாதகன் கோடீசுவரன் ஆவான்.

அதேநேரத்தில் இந்து லக்கினத்தில் கிரகங்கள் இருந்து அதனுடைய தசை வந்து விட்டாலே நாம் கோடீஸ்வரனாகி விடுவோம் என்று எண்ணி விடக்கூடாது.

இந்து லக்னம் என்பதும் கோடீஸ்வரன் ஆவதற்கு ஜோதிடத்தில் சொல்லப்படும் ஏராளமான விதிகளில் ஒன்று. அது மட்டுமே ஒருவரை கோடீஸ்வரன் ஆக்கி விடாது. ஒருவரின் இந்து லக்னத்தில் கிரகங்கள் இருப்பது மட்டுமே அவர் கோடீஸ்வரர் ஆவதற்கான தகுதி அல்ல.

எது எப்படி இருப்பினும் ஜாதகப்படி ஒருவருக்கு லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். இந்தக் கட்டுரையில் நான் சொல்லியுள்ளபடி 2, 9, 11-க்குடையவர்கள் வலுவாக இருக்க வேண்டும். ஒருவரை தொழிலதிபராக்கும் பத்துக்குடையவன் மிக உயர் வலுவுடன் அமைந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் ஒருசேர அமைந்து, இந்து இலக்மும் அங்கே கை கொடுக்கும் போது, அதில் அமர்ந்துள்ள தசையும் பருவத்தில் வரும்போது மட்டுமே ஒருவர் கோடீஸ்வரன் ஆவார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.



1 comment :

  1. திரு ஆதித்ய குருஜி, கதிர் வீச்சு மொத்த அளவை காளிதாசர், பராசரரின் உடுமகாதசை அளவைப் போலவே 120 எனக் கொண்டது இங்கு குறிப்பிடத் தக்கது, என்று சொல்லுகிறீர்கள். கதிர் வீச்சு மொத்த அளவு, காளிதாசர் கொடுத்துள்ள கிரக களா பரிமாண எண்கள்தானா? அப்படி என்றால், அவற்றின் கூட்டித்தொகை 120 வரவில்லையே. கிரககளா பரிமாண எண்கள் வேறு என்றால், காளிதாசர் சொல்லும் கதிர் வீச்சு அளவு 120 எதன் அடிப்படையில்? விளக்கவும்.

    ReplyDelete