Tuesday, June 18, 2019

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள்- 241 (18.06.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ஆர். விஜயலட்சுமி, பாண்டிச்சேரி. 

கேள்வி. 

நான் ஒரு நடுத்தர குடும்பத் தலைவி. எனது ஒரே பெண் ப்ளஸ் டூ படிக்கும் போதே ஒரு பையனைக் காதலித்தாள். எங்கள் குடும்பத்திற்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவன் அவன். எவ்வளவோ அறிவுரை கூறியும் என் மகள் கேட்கவில்லை. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது அந்தப் பையனின் வீட்டிற்கே சென்று விட்டாள். அனைவரும் எடுத்துச் சொல்லியும் அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று எங்களை உதாசீனப்படுத்தியதால் வேறுவழியில்லாமல் அவர்களுக்கு மார்ச் 2016 அன்று திருமணம் செய்து வைத்தோம். 

இந்த திருமணத்தால் எங்களுக்கு உறவினரிடம் தலைகுனிவும், அவமானமும்தான் கிடைத்தது. என் உடன்பிறந்தவர்கள் தற்போது என்னுடன் பேச்சுவார்த்தையில் இல்லை. பெண்ணை சரியாக வளர்க்கவில்லை என்று எனக்குத்தான் அதிகமான அவமானம். திருமணமான பிறகு ஒரு வருடம் படிப்பைத் தொடர்ந்து கல்லூரிப் படிப்பையும் என் பெண் முடித்து விட்டாள். அந்தப் பையன் தனியார் கம்பெனியில் பியூன் வேலையில் இருக்கிறான். மணமாகி ஆறுமாதம் மட்டுமே அவர்கள் வாழ்க்கை நல்லபடியாக சென்றது. அதன் பிறகு அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. அவனைப் பிரிந்து அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து விடுவாள். நாங்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைப்போம். 

நகைப் பிரச்னை வந்ததால் ஒருமுறை பத்து பவுன் நகை போட்டு அனுப்பி மகளை வைத்தோம். அந்த நகையையும் விற்று செலவு செய்து விட்டார்கள். மருமகன் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளதால் முடிந்த உதவியை நாங்கள்தான் செய்து வருகிறோம். ஆனாலும் என் பெண் ஏதாவது கேட்டால் அவளை அடிப்பதும் எனக்கு நீ தேவையில்லை உங்கள் வீட்டிற்கு சென்று விடு என்று மிரட்டுவதுமாக இருக்கிறான். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையும் பிறந்து இருக்கிறது. 

இவர்கள் சேர்ந்து வாழ்வார்களா? என் பெண்ணின் வாழ்க்கையை நினைத்து மிகவும் வேதனை அடைகிறேன். வயதான என் மாமனாரும், மாமியாரும் தினமும் மனமுடைந்து அழுது கொண்டிருக்கிறார்கள். என் பெண்ணின் பிரச்னையால் என் கணவரால் தொழில் சரியாக செய்ய முடியாமல் அதுவும் சரிவுக்கு உள்ளாகியிருக்கிறது. என் மகளின் பிரச்சனை எப்போது தீரும்? அவர்கள் ஒற்றுமையாக வாழ்வார்களா? 

பதில். 

(கணவன் 27-10- 1991 மாலை 5-7 புதுச்சேரி, மனைவி 18-5-1997 காலை 6-30 புதுச்சேரி) 

இதுபோன்று 18, 19 வயதில் பெற்றோரை கோபித்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்வது என்பது எல்லா பெண்களுக்கும் நடப்பதில்லை. ஆயிரத்தில், லட்சத்தில் ஒரு பெண் மட்டுமே இதுபோன்று தன்னிலை மறந்து, கிரகங்களின் ஆதிக்கத்தினால் பெற்றோரையும் வெறுத்து, தகுதி இல்லாத ஒருவரை நம்பி திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார். இதுபோன்ற காலங்களில் தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதையே அந்தப் பெண் நினைவில் கொள்ளாமல் முழுக்க, முழுக்க காதல் எண்ணங்களால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டு, சில காலங்கள் காதலின் பிடியில் சிக்கியிருப்பார். 

உங்கள் மகளுக்கு 15 வயதில் ஆரம்பித்த ராகுதசை வயதுக்கு மீறிய சில செயல்களை செய்ய வைத்திருக்கும். மகளின் ஜாதகப்படி ராகு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து, ரிஷப லக்னத்தின் மாரகாதிபதியான சந்திரனோடு இணைந்து, அம்சத்தில் சூரியன், சனியோடு சேர்ந்து பாபத்துவம் பெற்றது அவளுடைய வாழ்க்கையைத் தலைகீழாக்கும் அமைப்பு. 

ரிஷப லக்ன பாவியான அஷ்டமாதிபதி குருவின் புத்தியில் அவளுக்குத் திருமணம் நடந்திருக்கிறது. ரிஷபத்திற்கு குரு எப்போதும் நன்மைகளைச் செய்வதில்லை. இங்கே நீசமான குரு பரிவர்த்தனை அடையாமல் இருந்திருந்தால், நன்மைகளைச் செய்திருப்பார் மகளின் ஜாதகப்படி திருமணத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு மார்ச் 2015ல் ஆரம்பித்த குரு புக்தியில் இருந்தே மகள் தன்வசம் இல்லை. ரிஷபத்திற்கு குரு கொடுத்த எதுவும் நிலைப்பதில்லை. மேலும் பதினொன்றாம் அதிபதி பரிவர்த்தனையாகி வலுத்த நிலையில், ராசிக்கு ஏழில் சனி, ராகு-கேதுக்கள் தொடர்புகொண்டு, லக்னத்திற்கு 7ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பது பலவீனம். 

மருமகனுக்கு ராசிக்கு ஏழில் ராகு, எட்டில் சனி, லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் என கடுமையான களத்திரதோஷ அமைப்புள்ள ஜாதகம். இதுபோன்ற ஜாதகத்திற்கு இளம் வயதில் திருமணம் நடந்திருக்க கூடாது. கணவன்-மனைவியைப் பிரிக்கும் குருதசை, சுக்கிர புக்தி வரும் அக்டோபர் முதல் மருமகனுக்கு ஆரம்பிக்க இருக்கிறது. இது நல்ல பலன்களைத் தராது. மருமகனின் சுக்கிரபுக்தி கணவன்-மனைவி இருவரையும் கசப்புக்கு உள்ளாக்கி பிரிக்கவே செய்யவும். 

குழந்தையின் ஜாதகப்படியும், தந்தையைக் குறிக்கும் சூரியன், ராகு-கேதுக்களுடன் இணைந்து, ராசிக்கு ஒன்பதாமிடத்தை செவ்வாய், சனி இருவரும் பார்ப்பதும், ஒன்பதாம் இடத்தில் அஷ்டமாதிபதி சுக்கிரன் இருப்பதும், தந்தைக்கு சரியான நிலை அல்ல. உங்கள் மகளின் வாழ்க்கை அமைப்பிற்கு நல்ல பதில் சொல்ல முடியாது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மருமகனுக்கு அஷ்டமச்சனி ஆரம்பிக்க இருப்பதால், இவர்கள் இருவருக்குள்ளும் பிரிவினை இருக்கும். 

சு. வேல்முருகன், பாண்டிச்சேரி, 

கேள்வி. 

எனது மகன் பூர்வீகச் சொத்தை விற்று அரசியலில் வீண் செலவு செய்கிறார். ஜாதகப்படி அரசியல் மேன்மையடைவாரா அல்லது வீண்விரயம் நடக்குமா? அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? நிறைய கடன் வாங்கி ஆடம்பர அரசியல் செய்து வருகிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றேன். மனம் அமைதி இல்லாமல் தவியாய் தவிக்கிறது. எனது மூதாதையர் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களை விற்றுச் செலவு செய்யும் என் மகனின் மனநிலை எப்போது மாறும்? 

பதில். 

(மிதுன லக்னம், தனுசு ராசி, 1ல் கேது, 3-ல் குரு, 4-ல் சுக், 5ல் சூரி,செவ், 6-ல் புத, 7ல் சந், ராகு, 8ல் சனி, 11-11-1991 இரவு 8-15 சென்னை) 

மகனுக்கு பூராட நட்சத்திரமாகி, தற்போது அவரது தனுசு ராசிக்கு ஜென்மச் சனி நடந்து வருகிறது. கூடுதலாக மிதுன லக்னத்திற்கு வரவே கூடாது என்று நான் சொல்லும் செவ்வாய் தசையும் நடக்கிறது. ஆறுக்குடையவன் தசையும், ஜென்மச் சனியும் சந்திப்பது நன்மைகளைத் தராது. நடப்பு தசாநாதன் செவ்வாய், நீச சூரியனோடு இணைந்து, நீச சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் முன்னோர் சொத்துக்கள் விரயம் செய்ய வேண்டும் என்பது விதி. இது 2020 ஆண்டு வரை நீடிக்கும். இதை உங்களால் தடுக்க இயலாது. அதேபோல தற்போது இவர் விரயம் செய்யும் இந்த சொத்துக்களை இவரால் திரும்ப வாங்கவும் இயலாது. 

அரசியலில் மந்திரி, எம்எல்ஏ போன்ற மிக உயர்பதவிகளை ஒருவர் அடைய வேண்டுமெனில் லக்னாதிபதி உயர்நிலையில் இருக்க வேண்டும். மகனுக்கு லக்னாதிபதி புதன் ஆறில் மறைந்தாலும் வர்கோத்தமமாக இருப்பதும், ராசியை வ,லுப்பெற்ற குரு பார்ப்பதும் அவர் மிகவும் கீழான நிலைக்குச் சென்று விட மாட்டார் என்பதை காட்டுகிறது. 

அடுத்து நடக்க இருக்கும் ராகுதசை, சிம்மத்தில் இருக்கும் குருவின் பார்வையைப் பெற்று இருப்பதால், விட்ட இடத்தில்தான் பிடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் அரசியலில் மகன் தொடர்ந்து நீடிப்பார். வீண் செலவுகளும் நீடிக்கும். ராகு தசை புதன் புக்திக்குப் பிறகு அரசியலில் அவருக்கு ஒரு மாற்றம் உண்டாகி ஓரளவிற்கு நல்ல நிலைமையில் இருப்பார். தற்போதய அவரது அரசியல் ஆர்வங்கள் 46 வயதிற்கு பிறகு நடக்கும் குரு தசை முதல் அவருக்கு கை கொடுக்கும். சிம்மத்தில் குரு இருப்பதால் 46 வயதிற்குப் பிறகு அரசியலில் மேன்மையடையும் ஜாதகம் மகனுடையது. நீங்கள் என்ன சொன்னாலும் அரசியல் ஆர்வத்தை மகன் கைவிடமாட்டார். வாழ்த்துக்கள். 

கே, சத்யநாராயணன். திருவண்ணாமலை. 

கேள்வி. 

கடந்த சனிதசை, கேது புக்தியில் அம்மாவும், சுக்கிர புக்தியில் அப்பாவும் தவறி விட்டார்கள். பி.டெக் ஐடித்துறை படித்த நான் குடும்பச் சூழ்நிலை காரணமாக தந்தையின் தொழிலான புத்தகக் கடையை எடுத்து நடத்தி வருகிறேன். தொழிலில் பெரிய அளவில் சாதிப்பேனா? இதில் சம்பாதிக்க முடியுமா? வருமானம் எப்படி இருக்கும்? எப்போது திருமணம் நடக்கும்? திருமணம் சொந்தத்திலா, அன்னியமா? 

பதில். 

(துலாம் லக்னம், மிதுன ராசி, 3ல் சனி, 5ல் ராகு, 9ல் சூரி, சந், புத, குரு, 10ல் சுக், செவ், 11ல் கேது, 3-7-1989 மதியம் 2-5 வேலூர்) 

ஜாதகப்படி புதன் பாக்யாதிபதியாகி குருவோடு மிக நெருக்கமாக இணைந்து சுபத்துவம் பெற்று, அம்சத்திலும் சுக்கிரன், குருவோடு இணைந்துள்ளதால் உங்களுக்கு புத்தகக் கடை மிகவும் ஏற்றது. பத்தாமிடத்தில் லக்னாதிபதி அமர்ந்து செவ்வாய் அங்கே திக்பலமாக இருப்பதால் உங்களால் தொழிலில் 2022க்குப் பிறகு சாதிக்க முடியும். அதுவரை கஷ்டப்படுவீர்கள். அடுத்து நடக்க இருக்கும் புதன் தசையில் புத்தகத் துறையில் உங்களால் உயர் நிலைக்கு வர முடியும். 

ராசிக்கு இரண்டில் செவ்வாய், ராசிக்கு ஏழில் சனி என்ற அமைப்பு இருப்பதால் உங்களுக்கு 33 வயதில் தாமதமாக திருமணம் நடக்கும். உங்களின் மிதுன ராசிக்கு அடுத்து வரும் அஷ்டமச் சனி காலத்தில், தொழில், சொந்த வாழ்க்கை இரண்டிலும் நல்ல பலன்கள் நடக்காது. ஆகவே 2020, 2021 ஆகிய இரண்டு வருடங்கள் பொறுமையாக இருங்கள். அதன் பிறகு ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள். அந்நிய மனைவிதான். வாழ்த்துக்கள்.

(18.06.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment