Friday, May 3, 2019

ஜோதிடத்தில் எதையும் முன்பே சொல்ல முடியுமா?...D-057


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி : 8681 99 8888

சுக்கிரனின் பா காரகத்துவம் கட்டுரையில் உதாரணமாகக் காட்டப்பட்ட ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தையின் ஜாதகத்தைப் பற்றி பேஸ்புக்கில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு அந்தக் குழந்தைக்கு ஆட்டிஸம் இருப்பது முன்னமே தெரியும். எனவே அதன் ஜோதிடக் காரணங்களை எளிதில் சொல்லிவிட முடிகிறது. ஜோதிடத்தில் இருக்கின்ற ஏராளமான விதிகள் எதற்குப் பயன்படுகிறதோ இல்லையோ, காரணங்களைச் சொல்வதற்கு எளிமையாக பயன்பட்டு விடுகிறது. இதுபோன்ற ஜாதகத்தைக் கொடுத்து, முன்பின் விவரங்கள் தெரியாத நபருக்கு இருக்கு ஆட்டிஸம் இருக்கிறது என்பதைச் சொல்ல முடியுமா? அப்படி நீங்கள் யாருக்காவது சொன்ன அனுபவம் உண்டா?” என்பதே அந்தக் கேள்வி.

எல்லாம் தெரிந்த ஜோதிடர் இல்லவே இல்லை. அனைத்தும் அறிந்து விட்டால் அவர் ஜோதிடரே இல்லை. இந்தக் கேள்விக்காகத்தான் ஒருமுறை ஒரு ஜோதிடனால் அனைத்தையும் சொல்ல முடிந்தால் அவன் கடவுளுக்கு அருகில் செல்வான் என்று எழுதினேன்.

கடந்த, நிகழ், எதிர்காலம் என மூன்றையும் அறிந்தது பரம்பொருள் மட்டுமே. அனைத்தையும் மாற்றுவதற்கு அதிகாரமுள்ள அந்த மகாசக்தியால், ஒரு ஜோதிடன் எவ்வாறு நடக்கும் என்று கணிப்பதைக் கூட மாற்ற முடியும்.

ஒரு ஜோதிடனால், ஒரு ஜாதகத்தில் நூறு சதவிகித துல்லிய பலனைச் சொல்ல முடிந்தாலும் வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சரியான பலனைச் சொல்ல முடியாது. ஒரு ஜாதகத்தைச் சரியாகக் கணிக்கலாம். அனைத்து ஜாதகத்தையும் நூறு சதவிகித வெற்றியுடன் கணிக்க முடியாது.

வருகின்ற பத்து வாடிக்கையாளர்களில், எட்டுப் பேருக்கு சரியான பலனை சொல்பவர் இங்கே உயர்ந்த ஜோதிடர். அப்படிப்பட்ட ஜோதிடர் கூட பத்தில் இருவருக்கு சொல்லும் பலன் தவறித்தான் போகும். எண்பது சதவிகித வெற்றியே இங்கே உயர்நிலைதான். எட்டைச் சரியாகச் சொல்லும் ஜோதிடரால் மீதி இரண்டையும் சரியாகச் சொல்ல முடியாமல் போவது ஏன்?

ஜோதிடரும் மனிதர்தான். அவரின் அப்போதைய மனநிலை சரியில்லாமல் இருக்கலாம். வரும்போதே மனைவியிடம் திட்டு வாங்கி விட்டு வந்திருக்கலாம். கால்வலி இருக்கலாம். இன்னும் சற்று நேரத்தில் கடன்காரன் வந்து விடுவானே என்று பதற்றத்தில் இருக்கலாம். இதைத்தான் கிராமப்புறங்களில் விதி, ஜோதிடரின் கண்ணை மறைத்து விட்டது என்பார்கள்.

சரியான பலன் என்பது ஏராளமான விதிகளையும் அதற்குச் சமமான விதிவிலக்குகளையும் ஒரேநேரத்தில் சமமாய்ப் பொருத்தி, ஆராய்ந்து அறிவது. அதாவது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது.

உண்மையான பலனை அறிவதில், ஜோதிடரின் ஞானத்திற்கு ஏற்ப பலனறியும் முறைகளும் வேறுபடும். சதுரங்க விளையாட்டைப் போல பலவிதமான வெவ்வேறு கோண நிலைகளைக் கொண்ட இக் கலையில் எதை, எப்போது, எப்படி நகர்த்துவது என்பது ஜோதிடரின் தகுதியையும், திறமையையும் பொருத்தது.

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்ததும் மனித மூளை அதனுடைய புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கு ஏற்ப, விதி, விதிவிலக்கு சாரங்களை உள்வாங்கி, பின் ஆய்ந்து தெளிந்து, முடிவில் பலனை அளிக்கிறது. ஆயினும் எல்லா நிலைகளிலும் முழுமையான பலனை ஒருவரால் சொல்ல முடியாது.

என்னுடைய ஜாதகத்தின்படி, நான் எனது நாற்பத்தி மூன்றாவது வயதிலிருந்து பிரபலமான எழுத்தாளனாக இருப்பேன் என்று என் இளம் வயதிலேயே கணித்திருந்தேன். நாற்பத்தி மூன்றாவது வயதில் எனக்கு ஆரம்பமாகும் ராகு தசையின் நிலை, ராகு மற்றும் குரு, சுக்கிரன் மற்றும் மூன்றாம் அதிபதியின் சில நிலைகளை ஒட்டி இது கணிக்கப்பட்டது. என்னுடைய சிறுவயது நட்பு வட்டாரங்களில் இருப்பவர்களுக்கு இது தெரியும்.

என்னைப் போன்ற ஜோதிட ஆர்வலர்கள் ஆரம்பகால ஜோதிட விவாதங்களில் தங்களது ஜாதகத்தில் என்ன நடக்கும் என்பதை விவாதிக்கும் போது, இதை என்னைச் சுற்றி இருந்தவர்களிடம் நான் விளக்கியிருக்கிறேன்.

ஆனால் என்னுடைய கணிப்பு நான் ஒரு கதை எழுதும் எழுத்தாளனாக வருவேன் என்பதாக இருந்தது. ஒரு தொழில்முறை ஜோதிடனாக நான் மாறுவேன் என்பதை என்னால் கணிக்க இயலாமல் போனது. இப்போதும் நான் எழுத்தாளனாகத்தான் இருக்கிறேன். பிரபலமாகவும் இருக்கிறேன். ஆனால் ஜோதிட எழுத்தாளனாக இருக்கிறேன். அவ்வளவே.

ஆட்டிசம் இருப்பது முன்னமே உங்களுக்கு தெரிந்தது என்பதால்தானே அதன் ஜோதிடக் காரணங்களை உங்களால் எளிதில் சொல்லிவிட முடிகிறது. முன்பின் தெரியாத நபருக்கு ஆட்டிஸம் இருக்கிறது என்பதை உங்களால் சொல்ல முடியுமா? அப்படி யாருக்காவது சொன்ன அனுபவம் இருக்கிறதா? இது கேள்வி.

வாடிக்கையாளர் வந்து உட்கார்ந்ததுமே, அவர் எதுவும் சொல்லாமலேயே, கடந்த மூன்று வருடங்களாக கடுமையான கடன் தொல்லைகளில் இருக்கிறீர்களா, பெண்டாட்டி டைவர்ஸ் கேஸ் போட்டிருக்கிறாளா என்பது போன்ற கேள்விகளை கேட்கும் எத்தனையோ ஜோதிடர்களை இந்தக் கேள்வி கேட்டவர் அறிய மாட்டார்.

நேற்று வெளிநாட்டிலிருந்து ஜாதக ஆலோசனைக்கு என்னிடம் தொடர்பு கொண்ட ஒரு குழந்தையின் தாயிடம் நான் கேட்ட முதல் கேள்வி என்ன குழந்தைக்கு இன்னும் பேச்சு வரவில்லையா? என்பதுதான். அடுத்த நொடி அங்கே அழுகை ஆரம்பித்தது. இதை எப்படி தாய் சொல்லாமலேயே என்னால் முன்னதாக சொல்ல முடிந்தது?

ஜோதிடத்தில் இருக்கின்ற ஏராளமான விதிகள் எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ, காரணங்கள் சொல்வதற்கு எளிமையாகப் பயன்பட்டு விடுகிறது என்றும் இவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜோதிடம் என்பது முழுமை பெற்றுவிட்ட ஒரு கலை அல்ல. உண்மையைச் சொல்லப் போனால் ஜோதிடம் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது.

ஏற்கனவே பலன்களை மிகத் துல்லியமாக, சம்பவ ரீதியாகச் சொல்ல இயலாது ஏன் என்பதை நான் விளக்கும்போது, ஒரு மனிதனின் செயல் அல்லது சம்பவத்தை துல்லியமாகச் சொல்ல உதவும் மூன்று காரணிகளான பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவைகளில் மூன்றாவதான இடம் என்பதை, நமது ஜோதிடக் கணிதங்களின்படி அடிக்கணக்கில் துல்லியமாக்கும்போது பலன்களை இன்னும் தெளிவாகச் சொல்ல முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

இரட்டைக் குழந்தைகள் இருவருக்கும் ஒரே போன்ற வாழ்க்கை நிலை அமைவதில்லையே ஏன் என்ற கேள்விக்கு, இருவரும் பிறக்கும் நேரத்தில் இருக்கும் சில நிமிட வித்தியாசத்தை நாம் சொல்வதைப்போல, ஒரே ஊரில், ஒரே நாளில், கிட்டத்தட்ட அல்லது ஒரே நேரத்தில் பிறக்கும் இருவரின் வாழ்க்கை நிலை ஒரே போல இல்லாதது ஏன் என்ற கேள்விக்கும் இதுதான் பதிலாக இருக்க முடியும்.

அதாவது நாற்பது கிலோமீட்டருக்கும் மேல் சுற்றளவு கொண்ட சென்னையில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் ஒரே இடத்தில் பிறப்பது போன்ற தோராயமான கணிதங்கள்தான் இப்போது நம்மிடம் இருக்கின்றன.

இதனை அடிக்கணக்கில் துல்லியமாக்கி, சென்னை-15, சைதாப்பேட்டை, பாலாஜி தெரு, 63 ம் எண், விஸ்வம் அபார்ட்மெண்டின், முதல் மாடி, எப்-1 பிளாட்டின் மூன்றாவது அறையில், வலது மூலை படுக்கையில் பிறக்கும் குழந்தைக்கு, இத்தனை டிகிரி துல்லியத்தில் கிரகங்கள் அமைந்திருக்கின்றன. தசா புக்தி இத்தனை மணி நேர, நிமிட, நொடி நேரம் பாக்கி இருக்கிறது என்று ஜோதிட கணிதங்கள் துல்லியமாக்கப் படும்போது, ஜாதக பலன்களை சம்பவ ரீதியில் துல்லியமாக, நிச்சயமாகச் சொல்ல முடியும். எதிர்காலத்தில் இது நடக்கும்.   

இப்போது நான் புதிதாக சொல்லும் சுபத்துவம், பாபத்துவம், சூட்சுமவலு விதிகள் கூட துல்லிய பலன்களை நெருங்கிச் செல்லும் ஒரு நிலைதான். அதாவது எதிர்கால பலன்களை அல்லது ஒன்று எவ்வாறு இருக்கும் அல்லது நடக்கும் என்பதை அறிய ஜோதிடத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள விதிகளை இன்னும் சற்று செம்மைப்படுத்தும் இன்னொரு நிலைதான்.

ஜோதிடம் ஒளியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதை ஓரளவிற்கு உணர்ந்ததால்தான், அதனை முறைப்படி வகைப்படுத்தும் சில விதிகளை நான் இங்கே முன் வைக்கிறேன்.

உதாரணமாக சென்ற செவ்வாய்க்கிழமை மாலைமலர் கேள்வி பதில் பகுதியில் ஒரு சகோதரிக்கு அளித்த பதிலில், அவரது கும்ப லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் இருக்கும் சூரிய, சந்திர, சுக்கிர, சனி, ராகு எனும் ஐந்து கிரக சேர்க்கையில் சுக்கிரன் மட்டும் இல்லாமல் இருந்தால் அவர் படிக்கவில்லை, சிந்திக்கும் திறன் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன்.

உண்மையில் அந்தச் சகோதரியின் ஜாதகப்படி, சுப ஒளி எனும் சுபத்துவத்தைத் தரக் கூடிய சுக்கிரன் அந்த இடத்தில் இல்லாமல் இருந்திருந்தால் அவரும் ஒரு ஆட்டிஸம் குழந்தையாகவே இருந்திருப்பார்.

ஏற்கனவே ஜோதிடம் என்னும் மகா அற்புதம் கட்டுரைகளில் சில வாரங்களுக்கு முன் இன்னொரு ஆட்டிசம் இளைஞனின் ஜாதகத்தை விவரித்திருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அந்த இளைஞனின் ஜாதகத்தை சமீபத்தில் அஸ்ட்ரோவிஷன் நிறுவனத்தின் சார்பில் நடந்த நேரடி உயர் வகுப்பில் கூட விளக்கியிருக்கிறேன்.

அந்த ஜாதகத்தை கீழே கொடுத்திருக்கிறேன். இதுவும் ஒரு மன வளர்ச்சிற்ற இளைஞரின் ஜாதகம்தான். இதைப் பார்த்தவுடன் இது மனநலக் குறைபாடுள்ள ஜாதகமா என நான் கேட்டேன். இவர் ஆட்டிசம் குறைபாடுள்ளவர் என்று பதில் சொல்லப்பட்டது.

சனி,

கேது

 

 

 

சூரி,சுக்,

புத   

ஆண்

2-3-1997 அதிகாலை 3-37 மதுரை   

 

குரு  

  

ல/

சந்

 

செவ்,

ராகு

இதில் லக்னாதிபதி குரு நீச்னாகி, லக்னம் ராகு, கேதுக்களால் பாபத்துவம் பெற்ற சனி, செவ்வாயால் ஒரு சேரப் பார்க்கப்பட்டு பலவீனமானதால் இவர் மனவளர்ச்சி ற்றவராக இருப்பார் என்று என்னால் கணிக்கப்பட்டது. லக்னம் மற்றும் லக்னாதிபதி சுப ஒளி இழந்ததால் இது இயல்பான வாழ்க்கை வாழத் தகுதியற்ற ஜாதகம் என்பதை ஞானமுள்ள ஜோதிடர் எவரும் முன்கூட்டியே சுலபமாக கணிக்க முடியும். ஆயினும் குரு, சனி பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதால் உயிருடன் இருப்பார் என விளக்கப்பட்டது.

ஆக சுபத்துவ ஒளி லக்னம், லக்னாதிபதிக்கு கிடைக்காத நிலையில் லக்னமும் லக்னாதிபதியும் பாபத்துவ அமைப்பில் இருக்கும்பொழுது ஒருவர் வாழத் தகுதியற்றவர் ஆகிறார் என்பது நான் சொல்லும் சுபத்துவ, சூட்சும வலு விதி. இந்த சுப ஒளியும், பாப ளியும் எத்தகைய விகிதாச்சாரத்தில் எப்படி எந்த முனையில் இணைகின்றன அல்லது கலக்கின்றன என்பதைப் பொருத்து அவரது உடல், மனநிலைகள் அமையும்.

ஜோதிடத்தை நம்புபவர்களாகட்டும் அல்லது பகுத்தறிவுக் கொள்கைகளைக் கொண்டவராக இருக்கட்டும், இந்த மகா கலையில் அனைவரும் குற்றம் சாட்டும் முக்கியக் கேள்வி என்னவெனில், ஜோதிடத்தில் எதையும் முன்கூட்டியே சொல்ல முடியாது, ஆனால் நடந்த பிறகு அதற்கான காரணங்களை தெளிவாக விளக்க முடியும் என்பதுதான்.

ஆயினும் இப்போதிருக்கும் விதிகளைக் கொண்டு ஞானமும், அனுபவமும் கொண்ட ஒரு நல்ல ஜோதிடரால் பத்து  ஜாதகங்களில் குறைந்தபட்சம் எட்டிற்காவது சரியான பலன்களைச் சொல்ல முடியும் என்பதற்காகவே இந்த நீண்ட விளக்கக் கட்டுரை எழுதப்பட்டது. ஆனால் அரைகுறை ஜோதிடரால் இது முடியாது.

எண்பது  சதவிகித வெற்றித்திறன் கொண்ட ஜோதிடர்கள் நாடு முழுவதும் இருக்கவே செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக குடத்திலிட்ட விளக்குப் போல நம்முடைய தமிழக கிராமங்களில் இது போன்றவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். மீதி இரண்டு ஜாதகங்களில் பலன் தவறுவது என்பது கூட ஜோதிடரின் தவறாகத்தான் இருக்குமே தவிர, ஜோதிடத்தின் தவறாக இருக்காது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

5 comments :

  1. vanakam iyya
    vargothama laknam epadi eduthu kollvathu iyya

    ReplyDelete
  2. ஐயா மிகவும் அரிதான கட்டுரை இது.எனக்கு தெரிந்து இவ்வளவு ஆழமாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் யாருமே இதுவரை எழுதியதில்லை.அபாரம்.அற்புதம்.

    ReplyDelete
  3. ஐயா,இதுவரை யாருமே வர்கோத்தமம் பற்றியும்,இராகு கேது வர்கோத்தமத்தில் செய்யும் பலன்கள் பற்றியும் இவ்வளவு ஆழமாகவும் எளிதாகவும் சொன்னதில்லை.அற்புதம் அபாரம்.வாழ்த்துக்கள் ஐயா...காதல் சரவணன் திரைப்பட நடிகர்

    ReplyDelete
  4. AYYA.... KUMBA LAGNATHIRKU SANI SIMATHIL THIG PALATHUDAN RAGUVUDAN INNAIDU RESAPTHIL ULLA SEVAIN PARVAY PETRU INDU LAGNATHIL SUBATHUVAM ILLAMAL THITHI SOONIA RASIL... VARGOTHAMA ADINTHA SANI DESAI PALAN EVVARU IRRUKUM

    ReplyDelete