Friday, April 26, 2019

சனி, செவ்வாயின் சுபத்துவ, சூட்சும வலு...D-056


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888

பாபக் கிரகங்களான சனி, செவ்வாயின் சுபத்துவ சூட்சும நிலைகளைப் பற்றி ஏற்கனவே “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் விளக்கியிருக்கிறேன்.

ஒரு கிரகத்தின் “சுபத்துவம்” என்பது அந்தக் கிரகம் மனிதனுக்கு நன்மை செய்யும் அமைப்பில் இருப்பது என்று பொருள்படும். சுப ஒளி பொருந்திய கிரகங்களே மனிதனுக்கு தேவைப்படும் நன்மைகளைத் தரும் தகுதிகளை பெறுகின்றன.

சுபக் கதிர்கள் இல்லாத கிரகங்கள், பாபர்கள் எனவும், மனிதனுக்கு நன்மை செய்ய இயலாத தீய செயல்பாடுகளை கொண்டவைகளாகவும் ஜோதிடத்தில் நமக்கு பிரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒளியிழந்த நிலையில் இருக்கும் பாபக் கிரகங்கள், சுபக் கோள்களிடம் இருந்து ஒளியைப் பெறும் போது மட்டும் மனிதனுக்கு நன்மை தரக்கூடிய சுபத்துவம் எனும் நிலையை அடைகின்றன. அதாவது பாபர்கள் சுபரின் பார்வையைப் பெறும் போதும், அவர்களுடன் சேரும் போதும் சுபத்துவமடைந்து தங்களின் இயல்பு நிலை மாறி மனிதனுக்கு நன்மைகளைச் செய்கின்றன.

இந்த சுபத்துவ நிலையிலும் ஒரு நுணுக்கமான சூட்சும நிலையாக, பாபர்கள் தங்களின் அருகில் இருக்கும் சுபரிடம் இருந்து ஒளியைப் பெறும் போது மட்டுமே அதிக நன்மைகளைத் தரும்.

செவ்வாய் தனக்கு அருகில் இருக்கும் ஒளி பொருந்திய கிரகமான சந்திரனின் தொடர்பை பெறும்போது மட்டுமே அதிக நன்மைகளைச் செய்வார். தன்னிடமிருந்து அதிக தூரத்தில் இருக்கும் குருவின் பார்வையை விட அருகே இருக்கும் சந்திரனின் பார்வை மற்றும் இணைவு மட்டுமே செவ்வாயை அதிக  சுபத்துவம் அடையச் செய்யும்..

அதேநேரத்தில் இந்த சுபத்துவம் என்பது சந்திரனின் வலுவைப் பொருத்தது. அதாவது சந்திரன், பவுர்ணமி தினத்தை நெருங்கி அதிக ஒளியுடன் வளர்பிறைச் சந்திரனாக, சூரியனுக்குக் கேந்திரங்களில் இருந்து செவ்வாயைப் பார்க்கும் போதோ, அல்லது இணையும் போதோ செவ்வாய் அதிக சுபத்துவம் அடைவார். பூரண பவுர்ணமிச் சந்திரனின் தொடர்பைப் பெறும் செவ்வாய் முழுச் சுபராகும் தகுதி படைத்தவர்.

சந்திரன் மற்றும் குருவுடன் தொடர்பு கொள்ளும் செவ்வாய், சுபத்துவம் அடைந்து தனது சுப காரகத்துவங்களை, அதாவது மனிதனுக்குத் தேவையான நல்ல செயல்பாடுகளைச் செய்வார். இதில் பூரணச் சந்திரனாக பவுர்ணமிக்கு அருகில் அல்லது பவுர்ணமியாக இருந்து செவ்வாயை நிலவு பார்க்கும் நிலையில், இன்னொரு சுபரான குருவின் தொடர்பும் கிடைக்கப் பிறந்தவர் மிக உயர் நிலைக்குச் செல்வார்.

இதுவே சுபத்துவத்தின் சூட்சுமம்.

இந்த சுபத்துவ நிலைகளில் சனியைப் பற்றி பார்ப்போமேயானால், சனி, சந்திரன் மற்றும் தனது நண்பரான சுக்கிரனின் பார்வையைப் பெறுவதை விட தனக்கு அருகில் இருக்கும் குருவின் பார்வை எனும் ஒளி வீச்சினை பெறும் போது மட்டுமே, அந்த மனிதனுக்கு நன்மைகளைத் தரும் தகுதியை பெறுவார்.

குருவுக்கு அடுத்து அவர் சுக்கிரனின் பார்வையாலும், சேர்க்கையாலும், அதனையடுத்து வளர்பிறைச் சந்திரனின் பார்வையாலும், சேர்க்கையாலும், அதனையடுத்து தனித்த புதனின் சேர்க்கை, பார்வையாலும், பாபத் தன்மை நீங்கி சுபத்துவம் எனப்படும் நன்மை தரும் அமைப்பைப் பெறுவார்.

இதில் ஒரு முக்கிய சூட்சுமமாக சனியை சுபத்துவப் படுத்தும் சுப கிரகம் முழுப்பார்வைத் திறனுடனும், வலிமையுடனும் இருக்கும் பட்சத்தில் சனி பூரண நன்மைகளைச் செய்வார். இல்லையெனில் சம்பந்தப்படும் சுபக் கோளின் வலுவுக்கேற்ப சனியின் சுபத்துவம் இருக்கும்.

அதாவது சனியுடன் தொடர்பு கொள்ளும் சுபக் கோள் தனது முழுத் திறனுடன் இருக்க வேண்டும். உதாரணமாக, விருச்சிகத்திலோ அல்லது சிம்மத்திலோ அசுபத் தன்மையுடன் இருக்கும் சனியை குரு, தனுசிலோ, மீனத்திலோ ஆட்சி பெற்று தனது ஒன்பதாம் பார்வையாக திறனுடன் பார்க்கும் போது சனி நன்மைகளைத் தரக்கூடிய சுபத் தன்மை பெறுவார்.

ஆனால் பார்வை தரும் குரு தனித்திராமல், அவருக்கு எதிரான வேறு கிரகங்களுடன் இணைந்தோ, சூரியனுடன் இணைந்து அஸ்தமனமாகியோ, ராகுவுடன் சேர்ந்து பலவீனம் பெற்றோ அல்லது இது போன்ற வேறு சில பலவீனமான அமைப்புகளில் இருந்தோ, சனியைப் பார்த்தாரானால் சனி சுபத்துவம் அடைய மாட்டார். சனியால் நன்மைகள் இருக்காது. சனி கொடூரமான பலன்களை செய்வார்.

மேற்கண்ட ஏதாவது ஒரு நிலையில் குரு வலுவிழந்திருக்கும் போது, மேம்போக்காக அந்த ஜாதகத்தில் குரு ஒன்பதாம் பார்வையாக சனியைப் பார்க்கிறார் என்று தோன்றினாலும், குருவுக்கே பார்வை இல்லாத நிலையில் நமது கணிப்பு தவறும்.

எனவே ஒரு பாபக் கிரகம் சுபத்துவம் அடைந்திருக்கிறதா என்று கணிப்பதற்கு முன்பு அதனை சுபத்துவப் படுத்தும் அந்த சுபக் கோள் வலிமையுடன் இருக்கிறதா என்று ஆராய வேண்டியது அவசியம்.

பலன் சொல்வதில் முழுமையாக்குவது மற்றும் துல்லியமாக்குவது கிரகங்களின் சுபத்துவமும், சூட்சும வலுவும் தான்.

மேலே சொன்னபடி குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோரின் பார்வையைப் பெறும் சனி புனிதமடைந்து, அந்த ஜாதகருக்கு ஆதிபத்திய சுபராக இருக்கும் பட்சத்தில் தனது தீய செயல்பாடுகளில், அதாவது தனது காரகத்துவங்கள் எனப்படும் தீய செயல்பாடுகளின் வழியே ஒரு மனிதனுக்கு நன்மைகளைத் தருவார்.

தன்னுடைய நேர்வலு மூலம் ஒரு மனிதனுக்கு தேவையற்றவைகளை மட்டுமே தர விதிக்கப்பட்டிருக்கும் சனி, சுபத்துவம் மற்றும் சூட்சும வலுப் பெறும் நிலைகளில் தனது இயல்பு நிலை மாறி அந்த ஜாதகருக்கு நன்மைகளைச் செய்வார்.

மேற்கண்ட இரு நிலைகளில் சனியின் சுபத்துவப் படிநிலைகளை தெளிவாகப் புரிந்து கொண்டால் ஒரு ஜாதகத்தில் சனி நன்மைகளைத் தருவாரா அல்லது தீய பலன்களைச் செய்வாரா என்பதை துல்லியமாகச் சொல்ல முடியும்.

சனியின் சுபத்துவப் படிநிலைகளை பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.

1.   வலிமை பெற்ற குரு சனியைப் பார்ப்பது,

2.   குருவுடன் சனி இணைவது,

3.   குருவின் வீட்டில் இருப்பது,

4.   சுக்கிரன் சனியைப் பார்ப்பது,

5.   சுக்கிரனுடன் சனி இணைவது,

6.   பூரண அல்லது வளர்பிறைச் சந்திரன் பார்ப்பது,

7.   வளர்பிறைச் சந்திரனுடன் இணைவது,

8.   தனித்த புதன்  பார்ப்பது,

9.   புதனுடன் இணைவது,

10. சுக்கிரன் மற்றும் புதனின் வீட்டில் சனி இருப்பது.

மேற்கண்ட அமைப்புகளில் சனி திரிகோணங்களில் இல்லாமல், கேந்திரங்கள் மற்றும் 3, 6, 11 போன்ற உபசய ஸ்தானங்களில் இருக்கும் போது உச்சபட்ச சுபத்துவம் அடைந்து ஜாதகருக்கு முதல் தர நன்மைகளைச் செய்வார்.

இதில் குருவின் வீட்டில் இருக்கும் சனிக்கு மூன்றாவது நிலையைத் தந்து, சுக்கிரனின் வீட்டில் இருக்கும் சனிக்கு பத்தாவது நிலையைத் தந்திருக்கிறீர்களே.... சுக்கிரனின் வீடான, துலாத்தில்தானே சனி உச்சம் பெறுகிறார் என்ற சந்தேகம் ஒருவருக்கு வருமானால், அவர் இன்னும் சனியைப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம்.

உச்சத்தில் இருக்கும் சனி நேர் வலு மட்டுமே அடைவார். ஆனால் குருவின் வீட்டில் இருக்கும் சனி சுப வலு அடைவார் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

சனி என்பவர் ஒரு சுப ஒளியற்ற கிரகம். எனவே மனிதனுக்குத் தேவையான நன்மைகளை அவர் செய்ய வேண்டும் என்றால் அவர் தன்னுடைய தீய ஒளிக் கதிர்களை இழந்து வடிகட்டப்பட்டு, சுபக் கிரகங்களின் ஒளியைப் பெறவேண்டும். இதில் தன்னுடைய தீய ஒளியை எவ்வளவுக்கு எவ்வளவு இழந்து, அடுத்த சுப கிரகத்தின் ஒளியைப் பெறுகிறாரோ, அந்த அளவுக்கு சனியிடமிருந்து ஒரு மனிதனுக்கு நற்பலன்கள் இருக்கும்.

மிக முக்கியமாக சனிக்கு ஒளி தரும் கிரகமும் வலுவான நிலையில் இருக்க வேண்டும். எனவேதான் இங்கே சந்திரனின் நிலையைக் குறிப்பிடும்போது பூரணச் சந்திரன் மற்றும் வளர்பிறைச் சந்திரன் என்று வேறுபடுத்திக் காட்டியிருக்கிறேன்.

இயற்கைச் சுப கிரகங்களில் குருவை விட, சுக்கிரனே சனிக்கு நண்பர் என்றாலும் சுக்கிரன், சனியிடமிருந்து அதிக தூரத்தில் இருப்பதாலும், குரு, சனிக்கு மிக அருகில் இருப்பதாலும், குருவின் தொடர்பே சனியைச் சுபராக்கும். அதிலும் குருவின் இணைவை விட, பார்வையே சனியைப் புனிதப்படுத்தும்.

சுபத்துவத்தோடு, சூட்சும வலுவும் இணைகையில் சனி, முழுக்க முழுக்க ஒருவருக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் அதிகாரம் பெறுவார். இன்னொரு முரண்பட்ட நிலையாக, சனியைப் புனிதப் படுத்தும் சுபக் கோள் சனியோடு இணைந்தோ, அல்லது சனியை சம சப்தமமாக பார்க்கும் நிலைகளில், தான் அந்த ஜாதகருக்கு தனது சுப நிலைகளைத் தரும் தன்மைகளை இழக்கும்.

இதுபோன்ற நிலையில் அந்த சுபக் கோளின் வலிமையிழப்பு என்பது சம்பந்தப்பட்ட லக்னத்திற்கு அந்த சுப கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உட்பட்டது மற்றும் அந்த சுபர் எந்த வீட்டில், எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்தது. 

சூட்சும வலு என்று நான் குறிப்பிடுவது பாபக் கிரகங்களுக்கு மட்டுமே உரித்தானது. சனியும், செவ்வாயும் கேதுவுடன் சேரும் நிலையில் அவர்களின் பாத் தன்மை நீங்கி இயல்புக்கு மாறான நல்ல பலன்களைத் தருவதை அனேக ஜாதகங்களில் நான் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் தெளிவாக சொல்லப் போனால் ஆட்சி, உச்சம் அடைந்த பாப கிரகங்கள் மறைவு ஸ்தானங்களில் இருப்பதே ஒரு மிகப் பெரிய சூட்சும வலுதான். ரிஷப லக்னத்திற்கு அனைத்தையும் தர வேண்டிய ஒன்பது, பத்திற்குடைய சனி, ஆறில் மறைந்து உச்சமாவதன் தாத்பர்யம் அதுதான்.

அதேபோல காலம் காலமாக இங்கே கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, அல்லது புரிந்து கொள்ளப்படாத ஷட்பலத்தின் ஒரு பகுதியான, திக்பலத்தை, நான் சூட்சும வலுவில் சேர்க்கிறேன். இதுவும் ஒரு மிக முக்கியமான ஒன்றாகும்.

ஜோதிடத்தில் கிரகங்களின் ஆட்சி, உச்சம் எனப்படும் ஸ்தான பலத்திற்கு அடுத்த அல்லது அதற்கு இணையான ஒரு நிலையாக திக்பலம் சொல்லப்படுகிறது. ஷட்பலத்தில் கிரகங்களின் பார்வை பத்தை விட மேலானதாக, ஆட்சி, உச்சத்திற்கு இணையானதாக சொல்லப்படும் இந்த திக்பலத்தை இதுவரை சரிவர புரிந்து கொள்ளாமலேயே இருந்திருப்பதால்தான், இப்போது இதை நான் தனித்துக் குறிப்பிடுவது பெரிதாகத் தெரிகிறது.

திக்பலத்தின் மிக முக்கிய நிலை என்னவெனில், ஒரு கிரகம் ஸ்தான பலத்தை இழந்திருந்தாலும், அது திக்பலத்தை அடைந்திருந்தால் வலுவாகவே இருக்கிறது என்பதுதான். அதாவது நீச்சமான ஒரு கிரகம் திக்பலத்தை பெற்றிருந்தால், அது வலிமையாக இருக்கிறது என்றுதான் பொருள்.

ஆட்சி, உச்சம் போன்ற ஸ்தான பலத்தை அடையாமல், முற்றிலும் நீச்சமடைந்து, திக்பலம் பெற்ற பா கிரகங்கள் மிகவும் நல்ல பலன்களை தருகின்றன. இதுவே பா கிரகங்களுக்கும், சுப கிரகங்களுக்கும் உள்ள மிக நுண்ணிய வித்தியாசத்தை நமக்கு உணர்த்தும்.

பாபக் கோள்கள், மனிதருக்கு அதனுடைய பாப அளவிற்கேற்ப துன்பங்களை மட்டுமே தர கடமைப்பட்டவை. அவை சுபத்துவ, சூட்சுமவலு நிலையினை அடையும்போது மட்டுமே தன்னுடைய இயல்புநிலை மாறி மனிதருக்கு நன்மையைத் தர விதிக்கப்படுகின்றன. இந்த நுணுக்கமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள இயலாதவர்களுக்கு, நான் சொல்லும் சூட்சும வலுவையும் புரிந்து கொள்ள முடியாது.

பரிணாம வளர்ச்சிக்கு ஜோதிடமும் அப்பாற்பட்டது அல்ல. பாரம்பரிய ஜோதிடம் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொருவராலும் செதுக்கப்பட்டே வந்திருக்கிறது. தற்போது நான் சொல்லும் சுபத்துவ, சூட்சும வலு கோட்பாடு நூறு சதவிகிதம் பேருக்கு புரியாது போனாலும், என் காலத்திற்கு பிறகு இன்னும் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்தக் கோட்பாடு முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537


9 comments :

  1. இறைநிலையின் பரிபூரண ஆசி உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கட்டும்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. At the very outset ,the reach of Guruji's Articles and Videos are amazing...from the neighbouring SriLanka...Australia..USA..now a very penetrating query from Damascus,Syria..Guruji's elaborate answer ,stating the position clearly ,logicaly with references to texts.Krishnamurti Padhadhi's (K.P)Stellar Astrology System Comes to mind.Thanks a lot to the legion of Readers,MalaiMalar Evening NewsPaper,WIN TV,Googles You Tube ,Above All to Aditya Guruji.

    ReplyDelete
  3. ராசி கட்டம் என்பது மனிதனையும், நவாம்சம் கட்டம் மனிதனின் நிழல் எனும் உண்மையை, பல கோடி தமிழ் மக்களுக்கு ஜோதிடம் எனும் மகா அற்புதம் கட்டுரைன் மூலம் உனர்த்திய ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு தமிழ் மக்கள் சற்பாக கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு ராணிப்பேட்டை சரவணன்.

    ReplyDelete
  4. எளிய ஜோதிடர் எங்கள் ஆதித்ய குருஜி

    ReplyDelete
  5. ஐயா, ஏகப்பட்ட நூல்களை படித்த தாங்கள் | வளரும் ஜோதிட ஆர்வலர்கள் எந்த மூல நூல்களை படிக்க வேண்டும் என்று ஒரு list தர வேண்டுகிறேன். இரண்டாவது தடவையாக நான் கேட்டு கொள்கிறேன். மற்று விளக்க நூல்களை வாசித்து குழம்பாதீர்கள் என்று தாங்கள் கூறியிருக்கிறீர்கள். Please.

    ReplyDelete
  6. 6812 மறைவு ஸ்தான விளக்கம் அருமை குருஜி இது போன்ற நுட்பமான பதிவை எதிர்பார்க்கிறோம் குருஜி

    ReplyDelete
  7. Thank you very much, Guruji. Also kudos to Dr.Nagashanmugam for wonderful question posed to Guruji, thereby, bringing out convincing explanation from him. In fact, we are all privileged to go through Guruji's articles which throw light on unexplained aspects of Astrology. May God Bless Guruji long life for continuing his service to mankind.

    ReplyDelete