Friday, March 8, 2019

சுக்கிரனின் பாபத்துவம்...D-049


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

எந்த ஒரு ஜாதகத்திலும் இயற்கைச் சுபர்களான குருவும், சுக்கிரனும் பலவீனம் அடையக் கூடாது என்பது ஜோதிடத்தின் ஒரு மறைமுகமான விதி. ஒரு மனிதன் எதையும் நல்ல விதமாக அனுபவிக்க இந்த இரு கிரகங்களின் தயவு தேவை.

பூமிக்கு வலதுபுறமும், இடதுபுறமும் இருவேறு நிலையில் இவ்விரு கிரகங்களும் இருப்பதால், ஜோதிடத்தில் இவ்விரண்டு கிரகங்களும் வட துருவம், தென் துருவம் எனும் அமைப்பில், இரண்டின் எதிர், எதிர் நிலையைக் குறிக்க ஜென்ம விரோதக் கிரகங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

இவ்விரண்டு கிரகங்களின் செயல்பாடுகளைச் சொல்ல வேண்டுமெனில், ஒரு மனிதனை இப்படித்தான் வாழ வேண்டும் என வகைப்படுத்துபவர் குரு. அவனை எப்படியும் வாழலாம் என உற்சாகப்படுத்துபவர் சுக்கிரன். உலகில் உள்ள அனைத்து சொகுசான விஷயங்களுக்கும் சொந்தக்காரர் சுக்கிரனாவார்.

பணத்தைப் பணம் என்று பாராமல் தண்ணீர் போல செலவழிக்கும் குணத்திற்கும், நீரைப் போல செலவு செய்தாலும், அது ஊற்றைப் போல சுரந்து கொண்டே இருக்கும் நீடித்த வருமானத்திற்கும் ஒரு மனிதனின் ஜாதகத்தில் சுக்கிரன் மிகவும் வலுவாக இருக்க வேண்டும்.

ஜோதிடத்தின் பல்வேறு விதிகளை ஒட்டுமொத்தமாக, ஒரே குடைக்குள் கொண்டு வந்து, சுருக்கமாக சுபத்துவம், பாபத்துவம் மற்றும் சூட்சுமவலு என்கின்ற கோட்பாட்டினை தற்போது சொல்லி வருகிறேன். இந்த அமைப்பில் ஒரு கிரகத்தை சுத்துவப்படுத்துவதில் முன்னிலை வகிப்பவர்கள் குருவும், சுக்கிரனும்தான்.

பாரம்பரிய ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு அரைப்பார்வை மட்டுமே உண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை குருவின் பார்வையோடு ஒப்பிடும்போது சுக்கிரனின் பார்வை ஐம்பது சதவிகித நற்பலன்களைத் தரும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது பார்வை பலத்தில் குருவுக்கு நிகர் குருதான். குருவின் பார்வையால் ஒரு கிரகமோ, பாவகமோ அடையும் சுபத்துவத்தில், பாதி அளவிற்கே சுக்கிரனின் பார்வை சுபத்துவப்படுத்தும் என்பதே இங்கே சுட்டிக் காட்டப்படும் உண்மை.

இந்தப் பார்வை பலம், இவ்விரு கிரகங்களின் அளவு, இவை பூமியில் இருந்து இருக்கும் தூரம், சூரியனிடமிருந்து இவை பெறும் ஒளி நிலை, மற்றும் அதனைப் பிரதிபலிக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய அளவிலும், ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மையில் வாயுக் கிரகமாகவும் குரு இருப்பதால்தான், குருவின் பார்வைக்கு ஜோதிடத்தில் மிகப் பெரிய சிறப்பு இருக்கிறது.  சுக்கிரன், குருவை விட அளவில் மிகச் சிறியது. தவிர ஒளியை அதிகத் திறனோடு பிரதிபலிக்கும் வாயுக் கிரகம் அல்ல அது.

சுக்கிரன் நமது பூமியைப் போன்ற கல்லும், மண்ணுமான திடப் பொருட்களால் ஆனது. இந்த விஞ்ஞானக் காரணங்களாலேயே ஜோதிடத்தில் குருவின் ஒளிப் பிரதிபலிப்புப் திறனிற்கும், சுக்கிரனின் ஒளிப் பிரதிபலிப்பு திறனிற்கும் வித்தியாசங்கள் கண்டறியப்பட்டு, குருவின் பார்வையை விட சுக்கிரனுக்கு பாதிளவே பார்வை உள்ளது என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டது.

ஒரு கிரகத்தின் சுபத்துவத்தை அளவிடும்போது இது போன்ற மிக நுணுக்கமான விஷயங்களைக் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். சுபத்துவ, சூட்சும வலுக்  கோட்பாட்டின் மூலம் ஒரு கிரகம் என்ன பனைத் தரும் என்பதையும், ஒரு ஜாதகத்தின் உயர், தாழ்நிலையையும் துல்லியமாக அறியலாம் என்பதால்தான் இக்கட்டுரையில் குருவின் பார்வைக்கும், சுக்கிரனின் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை குறிப்பிடுகிறேன்.

இது போன்ற விஷயங்களை நாம் ஆழமாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஜோதிட, விஞ்ஞான உண்மைகள் புராணக் கதைகளாக குறிப்பிடப்பட்டன.

 

பதினைந்தாம் நூற்றாண்டு வரை ஜோதிடமும், விஞ்ஞானமும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. குறிப்பாகச் சொல்லப் போனால் இன்றைய நவீன விஞ்ஞானத்தின் வானவியல், பண்டைய ஜோதிடத்தின் அஸ்திவாரத்தில்தான் அமர்ந்திருக்கிறது.

வாமனர் - மகாபலிச் சக்ரவர்த்தி கதையில் ஒரு நிகழ்ச்சி சுக்கிரனின் பார்வையின் சூட்சுமத்திற்காக சொல்லப்பட்டது.

அசுரர் குல அரசனான மகாபலியின் ராஜகுருவாக சுக்கிரனை உருவகப்படுத்தி, மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மூன்று உலகையும் மகாபலியிடம் தானம் கேட்கையில், வந்திருப்பவரின் நோக்கத்தை அறிந்த சுக்ராச்சாரியார் மகாபலியை தடுப்பதாகவும், குலகுருவின் பேச்சைக் கேட்காமல் அரசன் தானம் கொடுக்க எத்தனிக்கும்போது, தாரை வார்த்துக் கொடுக்கப்படும்  பாத்திரமான கமண்டலத்தின் நீர் வெளியேறும் துவாரத்தில் சுக்ராச்சாரியார் வண்டாக மாறி உள்ளே நுழைந்து அடைத்துக் கொள்ள, தர்ப்பைப் புல்லால் நோண்டப்பட்டு சுக்கிரனின் ஒரு கண் குருடானது என்பது சுக்கிரனின் பார்வைத் திறனை நாம் உணர்ந்து கொள்ள ஜோதிடத்திற்காகச் சொல்லப்பட்ட கதைதான்.

ஜோதிடத்தில் சுக்கிரனுக்கென சில தனிப் பண்புகள் இருக்கின்றன. சுக்கிரன் வலுவான நிலையைக் கொண்ட அமைப்பில் பிறந்தவர், எந்த ஒரு நிலையிலும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டவராக இருப்பார். ஆண், பெண் இருபாலாரும் தனது எதிர்பாலினத்தைக் கவர வகை செய்யும் அனைத்து நிலைகளுக்கும் சொந்தக்காரர் சுக்கிரன் ஒருவர் மட்டுமே.

அடுத்தவரை நம்மீது ஈர்ப்புக் கொள்ள வைக்கும் அழகு, கலை, திறமை, சொக்க வைக்கும் பேச்சு, கண்களால் கவர்தல், எதிலும் ஒரு நளினம் போன்ற அனைத்திற்கும் சுக்கிரனே சொந்தக்காரர். அனைத்தையும் விட மேலாக உலகின் ஆதார நிகழ்வான குழந்தைப் பிறப்பிற்கு தேவைப்படும் காமம் சுக்கிரனுக்கானது. ஒரு மனிதன் காமத்தில் அதிக ஈடுபாடும், செயல்திறனும் கொண்டிருக்க வேண்டுமெனில், அவனுக்கு சுக்கிரன் எந்த வகையிலும் பலவீனமாகாமல் இருக்க வேண்டியது அவசியம்.

அதேநேரத்தில் சுக்கிரன் தன்னுடைய சுபத்துவத்தை விட்டு விலகி, மிகுந்த பாபத்துவம் அடைந்திருக்கும் நிலைகளில், ஒரு மனிதனை காமத்தின் அடிப்படையில் மிகுந்த தொல்லைகளுக்கு உண்டாக்குவார்.

 

ஆண், பெண் எவராயினும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அவர்களுக்கு காமம் கண்டிப்பாகத் தேவை. சுக்கிரன் சுபத்துவமாக இருக்கும் நிலைகளில் மட்டுமே ஒருவருக்கு சமூகத்தின் அங்கீகாரத்துடன், நேரடியான, நல்லவிதமான அவரது உடல் மற்றும் மனதிற்கு ஒத்த சரியான காமம் வழங்கப்படும்.

 

சுக்கிரன் பாபத்துவ நிலைகளில் அமர்ந்து, அவருடைய தசையோ அல்லது சுக்கிரனோடு இணைந்த மற்றும் சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்த பாபக் கிரகங்களின் தசை, புக்தியோ நடக்கும் ஒருவருக்கு முறையற்ற காமம் அல்லது தகுதியற்ற காமம் கிடைக்கும். இந்த முறையற்ற, தகுதியற்ற என்பதை சுருக்கமாக ஒரே வரியில் இப்படித்தான் என்று சொல்லி விட முடியாது. சுக்கிரன் தனது சுபத்துவ அல்லது பாபத்துவ வலிமைக்கேற்றார்போல ஒரு மனிதரை காமத்தின் மூலம் அளவற்ற இன்பத்தை அள்ளித் தருவார் அல்லது தொல்லைப் படுத்துவார்.

 

இளம் வயதில், பள்ளிப் பருவத்தில் ஒருவருக்கு பாபத்துவ அமைப்பில் இருக்கும் சுக்கிர தசையோ அல்லது சுக்கிரனோடு தொடர்பு கொண்ட கிரகங்களின் தசா புக்திகளோ வரும் பொழுது, மிக இளம் வயதிலேயே ஆண், பெண் இருவரையும் சுக்கிரன் தன்னுடைய பாலியல் எண்ணங்களால் ஆக்கிரமித்து அலைக்கழிப்பார். படிக்கும் பருவத்தில் வரும் பாபத்துவ சுக்கிரனின் சம்பந்தப்பட்ட தசா புக்திகள் ஒருவருக்கு கொடுமையான அனுபவங்களைத் தருபவை.

 

இதுபோன்ற அமைப்பில், நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் ஒருவரை சுக்கிரன் தன்னுடைய தசா, புக்தி அமைப்புகள் எனப்படும் ஆளுமைக் காலம் வந்த உடனேயே, ஜாதகரது கவனத்தை படிப்பிலிருந்து விலக்கி, முற்றிலும் பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அறிமுகப்படுத்துவார்.

 

எதிர்பாலினத்தவர்  மீது ஈர்ப்பினை உண்டாக்கி, அவருடன் பேசுவது, அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது, அவருடன் உறவு வைத்திருப்பது போன்ற கற்பனைகள், எந்த நேரமும் கனவு கண்டு கொண்டிருப்பது, மனம் உலகத்தோடு ஒட்டாத நிலை, தனிமையில் இருக்கும் பொழுதோ அல்லது இரவு நேரங்களிலோ பாலியல் நினைவுகளை விட்டு அகல முடியாமல் இருப்பது, காமத்திற்காக பெற்றவர்கள், கல்வி எதையும் துறக்கத் தயாரான நிலை போன்ற விஷயங்களை சுக்கிரன் செய்வார்.

 

விருப்பம் இல்லாத காமத்தை தருபவரும் சுக்கிரன்தான். சமீபத்தில் தமிழகத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களில், துன்புறுத்தப்பட்ட பெண்களின் ஜாதகங்கள் அனைத்திலும் சுக்கிரன் பாபத்துவ  அமைப்பில் இருப்பார் என்பது நூறு சதவீதம் உறுதி.

 

அதேபோல பாபத்துவ சுக்கிரன் அல்லது சுக்கிரனோடு இணைந்த பாபர்கள், அல்லது பாபர்களோடு இணைந்த சுக்கிரனின் தசா, புக்திகளில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். இதை சம்பந்தப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களின் ஜாதகத்தில் என்னால் முழுமையாக நிரூபிக்க முடியும்.

 

பாபத்துவ சுக்கிரன் சம்பந்தப்பட்ட தசா,புக்தி அமைப்புகள் ஒருவருக்கு மாணவப் பருவத்தில் வரும் பொழுது, கூடுதலாக கோட்சார நிலையிலும் ஏழரைச்சனி, ஜென்மச்சனி, அஷ்டமச் சனி போன்ற கெடுபலன் தரும் நிலைகள் வருமாயின், அவரது மனம் முற்றிலும் பாலியல் விஷயங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர் தன்னுடைய வாழ்க்கையைத் தொலைப்பது நடக்கும்.

 

இதுபோன்ற நேரங்களில் குடும்பத்தில் பெற்றோருக்கும் சரியில்லாத கோட்சார நிலைகள், தசா புத்திகள் நடந்தால் ஜாதகர் தடம் மாறுவார் அல்லது குடும்பத்தை தலை குனிய வைப்பார்.

 

சுக்கிரனின் தசா புக்திகள் வரும் நிலையில் பருவ வயது குழந்தைகளை பாதுகாப்பதும், எதிர்கொள்வதும் மிகவும் சங்கடமான ஒன்று. எப்படி இவர்களை வழி நடத்துவது, மாற்றுவது என்று தலையை பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு பெற்றோர்களுக்கு சோதனைகளை பருவ வயதினர் தருவார்கள். இதுபோன்ற நிலைமைகளில் குழந்தைகளை பாம்பு என்று அடிக்கவும் முடியாமல், கயிறு என்று தாண்டவும் இயலாத ஒரு நிலையில் பெற்றவர்கள் சிரமங்களுக்கு உள்ளாக வேண்டி இருக்கும்.

 

பத்தாம் வகுப்பு வரை பள்ளியிலேயே முதல் மாணவ, மாணவியாக இருந்த ஒருவரை பன்னிரண்டாம் வகுப்பு வரும்போது பாபத்துவ சுக்கிரன் அல்லது சுக்கிரனின் சம்பந்தப்பட்ட தசா புக்திகள் தலைகுப்புற கீழே தள்ளி இவர் தேர்ச்சி அடைவாரா  மாட்டாரா என்று சந்தேகப்படும் அளவிற்கு முற்றிலும் தலைகீழ் சம்பவங்கள் நடக்கும். இப்போது நான் சொல்லும் சம்பவங்கள் மற்றும் ஜாதகரின் மனநிலை அமைப்புகள் சுக்கிரனின் பாபத்துவ அமைப்பிற்கேற்றார்போல கூடுதல் குறைவாக இருக்கும்.

 

சுக்கிரனின் பாபத்துவம் என்பது சுக்கிரன் இருக்கும் ஸ்தான பலம் மற்றும் பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகுவுடன் அவர் சேரும் நிலையை பொறுத்தது. மிக முக்கியமாக கேதுவுடன் அவர் சேருவது கடுமையான பாபத்துவம்  இல்லை.

 

ஒரு முக்கிய சூட்சுமமாக, பாபக் கிரகங்களுடன் கேதுவை சேர்க்கக் கூடாது. கேது என்பவர் பாபரும் அல்லாத சுபரும் அல்லாத ஒரு கிரகம். நம்முடைய கிரந்தங்களில் கேதுவை பாபர்களுடன் சேர்த்திருப்பது எனது ஆய்வுகளின்படி மறுபரிசீலனைக்கு உரியது.

 

கேதுவுடன் சேர்ந்த ஒரு கிரகம் தனது காரகத்துவங்களில் நல்லவைகளை மட்டுமே தருகின்றது என்பதே உண்மை. ராகுவுடன் இணையும் கிரகம் மட்டுமே, இணையும் நிலையைப் பொறுத்து தனது கெட்ட காரகத்துவங்களை தருகிறது. இதனாலேயே நான் ஒரு பாபக்கிரகம் கேதுவுடன் சேரும் அமைப்பை “சூட்சும வலு” என்று சொல்லி வருகிறேன்.

 

காமக் காரகனான சுக்கிரன், பாபர்களான சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களுடன் கடுமையான அமைப்பில் இணையும் நிலையில், சுக்கிர அல்லது சனி, செவ்வாய், ராகு தசை புக்திகளில் ஜாதகருக்கு வயதிற்கேற்ற பாபத்துவ  காம அமைப்புகள் நடக்கும்.

 

அடுத்த அத்தியாயத்தில் பாபத்துவ சுக்கிரனால் பாதிக்கப்பட்ட சில உதாரண ஜாதகங்களைப்  பார்ப்போம்.


அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 


தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...


https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537


3 comments :

  1. செவ்வாய் தனது பத்தாம் பார்வையாக லக்னத்தை பார்ப்பதாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. செவ்வாய்க்கு 10 ம் பார்வை கிடையாது. 4,7,8 பார்வை மட்டுமே உள்ளது

      Delete
  2. செவ்வாய்க்கு 10 ம் பார்வை கிடையாது. 4,7,8 பார்வை மட்டுமே உள்ளது

    ReplyDelete