Friday, March 22, 2019

கும்பம்: 2019 - விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

கும்பம்: 

(அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி, 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸீ, ஸோ, த ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) 

புதிய விகாரி தமிழ்ப் புத்தாண்டு கும்பத்தினருக்கு நல்லவைகளையும், பொருளாதார வளர்ச்சியினையும் தருகின்ற வருடமாக இருக்கும். 

கடந்த சில வருடங்களாக எவ்வித நன்மைகளும் நடைபெறாத கும்ப ராசிக்காரர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் புத்தாண்டின் ஆரம்பத்திலேயே சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சியும், அதன்பிறகு நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும் அமைகின்றன. 

நவம்பர் மாதத்திற்குப் பிறகு பதினொன்றாமிடத்தில் குரு,சனி,கேது என மூன்று கிரகங்கள் சுபத்துவ நிலையில் அமைவதால், புது வருடத்தின் பிற்பகுதியில் இருந்து கும்பத்திற்கு மேன்மையான பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். 

விகாரி வருடத்தின் பிற்பகுதி முதல் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் செட்டில் ஆகாதவர்கள் மேம்பட்ட வருமானங்களைத் தரக் கூடிய வகையில் நிரந்தர அமைப்புகளை பெறுவீர்கள். மாதம் பிறந்தால் நிலையான வருமானம் வரும் அமைப்பு இந்த வருடம் முதல் ஆரம்பிக்கும். 

இதுவரை கை கொடுக்காத சொந்தத் தொழிலும், வியாபாரமும் இனிமேல் லாபகரமாக நடக்கத் துவங்கும். வேலை இடங்களில் இருந்த சிக்கல்களும், எதிர்ப்புகளும் புத்தாண்டு முதல் விலக துவங்கும். வீண்செலவு மற்றும் விரையங்களை தடுத்து நிறுத்தி சேமிக்கும் அளவிற்கு வருமானம் வரும். பிறக்க இருக்கும் விகாரி வருடத்தில் துன்பங்கள் எதுவுமின்றி இன்பங்களை மட்டுமே கும்பத்தினர் பெறுவீர்கள் என்பது உறுதி. 

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். 

வியாபாரிகளுக்கு தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சொந்தத்தொழில் செய்பவர்கள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம். சுயதொழிலர்களுக்கு பணவரவு தடைப்படாது. 

வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு. 

தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்துப் பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வரும். 

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும். 

வீடு வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலி மனையோ, குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டோ வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. 

பெண்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் இருக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும். 

வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். 

திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது இப்போது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கலாம். 

சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். 

தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும். 

குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். தனிப்பட்ட வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கசப்பான அனுபவங்கள் நீங்கி இனிமேல் வாழ்க்கை சரியான பாதையில் போகத் துவங்கும். 

அதிர்ஷ்டம் இனிமேல் உங்களுக்குக் கை கொடுக்கும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முடியும். 

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் கை கொடுக்கும். பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற அரசுவேலைகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். 

காவல், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும், மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும். 

வேறு இன மொழி மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள். 

தொழிலாளர்களுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த நன்மையை அளிக்கும். வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். தொழிலதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். 

பொதுவாக கும்பராசியினர் ஆளுமைத் திறன் மிக்கவர்களாக இருப்பீர்கள். அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். ஒரு நிமிடம் நீங்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் குடும்பத்திலோ, அல்லது தொழில் அமைப்புகளிலோ ஏமாற்றப்படுவீர்கள். பெண்களில் சிலர் மறைமுகமாக கணவரின் தொழிலை நிர்வகிப்பீர்கள். 

சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடிவரும். அரசியல்வாதிகள் புகழ் பெறுவீர்கள். வரும் தேர்தலில் வெற்றி கிடைக்கும். 

தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இந்த வருடம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைப்பதால் நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெற்று உங்கள் வாழ்வில் நல்ல ஒரு வருடமாக இது அமையும். மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப்பளுவும் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். 

மொத்தத்தில் நல்ல விஷயங்களைத் தரும் தமிழ்ப் புது வருடம் இது என்பதால் கும்ப ராசியினர் எதிலும் துணிந்து இறங்கி வெற்றி காண்பீர்கள்.

தொடர்பு எண்கள்செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment