Friday, February 1, 2019

RISHABAM : 2019 - RAHU KETHU PEYARCHI ரிஷபம் : 2019 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ரிஷபம் 

(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்) 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரை சாதகமான மூன்றாம் இடத்தில் இருந்து வந்த ராகு அங்கிருந்து மாறி தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் இரண்டாமிடத்தில் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு இருக்கப் போகிறார். அவரின் துணைக் கிரகமான கேது, தற்போது இருக்கும் ஒன்பதாமிடத்தில் இருந்து அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டாமிடத்திற்கு வருவார். 

நமது மூலநூல்கள் இரண்டு, எட்டாம் இடங்களில் ராகு, கேதுக்கள் இருப்பதை சிறப்பான ஒரு அமைப்பாகச் சொல்லவில்லை. இரண்டில் இருக்கும் ராகுவால் தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் மூன்றும் பாதிக்கப்படும் என்றும், இந்த ஸ்தானத்தில் ராகு அமர்வதன் மூலம் ஒருவருக்கு பொருளாதார சிக்கல்களும், வாக்குறுதி பலிக்காத நிலையும், குடும்பத்தில் பிரச்சினைகளும் இருக்கும் எனவும் நமது ஞானிகளால் சொல்லப்பட்டிருக்கிறது. 

இருப்பினும் கோட்சாரபலன்களில் எதையும் மேலோட்டமாகச் சொல்லாமல் நுட்பமாக கணித்துச் சொல்லியே பழக்கப்பட்ட நான் இம்முறை ராகுவின் இந்தப் பெயர்ச்சிப் பலனை ரிஷப ராசிக்காரர்களுக்கு இரண்டு நிலைகளாகப் பிரித்துச் சொல்லுவேன். 

முதலாவதாக சென்ற குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு தற்போது ஏழாமிடத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களால் எதையும் சமாளிக்க முடியும். அடுத்து வரும் நவம்பர் மாதம் முதல் குரு எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டமச்சனியாக இப்போது உங்கள் வளர்ச்சியைத் தடுத்துக் கொண்டிருக்கும் சனியுடன் இணைந்து, அவரை சுபத்துவப்படுத்தி சனியின் கெடுதல்களில் இருந்து உங்களை காத்து அருள்வார். 

அதைவிட மேலாக சனியுடன் இணையும் குரு, தனது ஏழாம் பார்வையால் ராகுவையும் பார்த்து புனிதப்படுத்துவார் என்பதால், முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு ரிஷப ராசியினருக்கு ராகு, கேது பெயர்ச்சியாலும், அஷ்டமச் சனியினாலும் பாதிப்புகள் இருக்காது. எனவே ரிஷபத்தினர் எவ்விதமான பின்னடைவுகளும் இல்லாமல் நிச்சயமாக இந்த ராகு-கேதுப்பெயர்ச்சிக் காலத்தை கடந்து விட முடியும். 

குருவின் பார்வையை பிற்பகுதி ஒருவருடம் முழுவதும் ராகு பெறுவதால் கெடுபலன்கள் எதையும் ரிஷப ராசிக்கு ராகுவால் தர இயலாது. அதேபோல அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டாம் வீட்டில் பாபக்கிரகங்கள் அமர்வது கெடுபலன்களைத் தரும் என்று நமது மூல நூல்கள் சொல்லுவதால் கேது எட்டில் இருப்பதும் ஒரு சாதகமற்ற நிலைமைதான். 

ஆயினும் குருவின் இணைவைப் பெற்ற கேது கெடுதல்களை செய்யமாட்டார் என்ற விதிப்படியும், தனுசில் அமரும் கேது நல்லபலன்களை மட்டுமே தருவார் என்ற விதிப்படியும் அஷ்டம கேது அப்படி ஒன்றும் பெரிய கெடுபலன்களை ரிஷபத்திற்குத் தந்துவிடப் போவதில்லை. 

அதேநேரத்தில் எட்டாமிடம் சூதாட்டம், பங்குச்சந்தை, எம்.எல்.எம். எனப்படும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் போன்ற பண இரட்டிப்பு விஷயங்களைக் குறிப்பிடும் இடம் என்பதால் இது போன்ற துறைகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏகப்பட்ட லாபங்களை சம்பதிக்கலாம் என்று ஆசை காட்டி கேது மோசம் போகச் செய்வார். 

எனவே இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தின் முழுமையான ஒன்றரை வருட காலத்திற்கும் சூதாட்டம், பங்குச்சந்தை போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டாமல், அதிகவட்டிக்கு ஆசைப்படாமல், சுலபமாக பணம் சம்பாதிக்கலாம் என்று தூண்டில் போடப்படும் விஷயங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். இதன் மூலம் எட்டாமிடத்து கேது ஏமாற்றங்களைத் தருவார். 

ஏற்கனவே பங்குச்சந்தை துறையில் இருப்பவர்கள் அகலக்கால் வைக்காமல், அதிகமான முதலீடு செய்யாமல் கவனமுடன் இருப்பது நல்லது. மேலும் லாட்டரி போன்ற சூதாட்டங்களில் அதிகமாக ஈடுபட்டு பணத்தை இழக்கும் அமைப்பு இருப்பதால் லாட்டரி, கிரிக்கெட் போன்ற சூதாட்டங்களின் பக்கம் தலை வைத்துப் படுகாமல் இருப்பது உங்கள் பணத்திற்குப் பாதுகாப்பு. 

குறிப்பாக பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், சீனியர் சிட்டிசன் எனப்படும் முதியவர்கள், மற்றும் ஏதேனும் ஒருவழியில் ஒரு பெரியதொகை கிடைக்கப்பெற்று அதை முதலீடு செய்து வட்டி மூலம் வாழ்க்கை நடத்த விரும்புபவர்கள் அதிக வட்டிக்கு ஆசைப்படாமல் பொதுத்துறை வங்கிகள் போன்ற நம்பகமான அமைப்புகளில் மட்டும் டெபாசிட் செய்து வாழ்க்கை நடத்துவது நல்லது. 

பேராசைப்பட வைத்து இருப்பதையும் இழக்க வைப்பவர் அஷ்டமகேது என்பதால் இந்த ராகு கேது பெயர்ச்சியில் பண விவகாரங்கள் அனைத்திலும் கூடுதல் விழிப்புடன் இருங்கள். 

அஷ்டமச் சனி நடப்பதால்; அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். 

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இந்தப்பெயர்ச்சி கெடுபலன்கள் எதுவும் தராது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும். 

எட்டில் சனி, இரண்டில் ராகு எனும் கிரக நிலையால் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். 

வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும்.. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம். 

பெண்களுக்கு இந்தப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும். 

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அஷ்டமச் சனி விலக இன்னும் ஒரு வருடம் இருப்பதால் அனைத்திலும் கவனம் தேவை. 

பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மந்தநிலை இருக்கும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் வழக்குரைஞர்கள் போன்றவர்களுக்கு தீவிர முயற்சிக்குப் பின்பே காரியங்கள் நடக்கும். யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். 

யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். குறிப்பிட்ட சிலருக்கு சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு. என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் குறை சொல்வதையும் கேட்டு சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும். 

பொதுவில் ரிஷபத்திற்கு இந்த ராகு, கேது பெயர்ச்சியில் சுமாரான பலன்கள்தான் என்றாலும் ராகு, கேதுக்கள் குருவின் பார்வை, இணைவு என்ற நல்ல அமைப்பில் இருப்பதாலும் சனி, கேது இருவரும் சுபத்துவ, சூட்சும வலு அடைவதாலும் அனைத்தையும் சமாளிப்பீர்கள் எனபது உறுதி. 

பரிகாரங்கள். 

அஷ்டமச்சனி நடப்பில் உள்ளதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் மண் அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஒருகுறையும் வராமல் சனியின் குருநாதராகிய காலபைரவப் பெருமான் உங்களைப் பாதுகாப்பார்.

1 comment :

  1. மிகவும் நன்றி குருஜி

    ReplyDelete