Friday, February 1, 2019

KUMBAM : 2019 - RAHU KETHU PEYARCHI கும்பம் : 2019 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

கும்பம் 

(அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி, 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸீ, ஸோ, த ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) 

கும்ப ராசிக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் இடமாக நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஆறாமிடத்தில் இருந்து ஐந்தாமிடத்திற்கு ராகுவும், பனிரெண்டாமிடத்தில் இருந்து மிக நல்ல பலன்களைத் தரக்கூடிய பதினொன்றாம் இடத்திற்கு கேதுவும் இந்த பெயர்ச்சியின் மூலம் மாறுகிறார்கள். இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால் மிகவும் நல்லபலன்களை அடையப் போகும் ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று. 

ராகு-கேதுகளுக்கு பதினொன்றாமிடம் சந்தேகத்திற்கு இடமில்லாத நன்மைகளைத் தரக்கூடிய பாவம் என்பதால் லாபஸ்தானத்திற்கு மாறப்போகும் கேதுவால் நன்மைகள் இருக்கும் என்று சொன்னாலும் வரும் நவம்பருக்குப் பிறகு கேது குருவின் வீட்டில் குருவோடு இணைந்தும் இருப்பார் என்பதால் பருத்தி புடவையாய்க் காய்த்தது என்பதைப் போல கும்பராசிக்கு இம்முறை இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும். 

இன்னும் ஒரு முக்கியபலனாக நமது மூலநூல்களில் ஐந்தாமிடத்தில் ராகு இருப்பது அதிர்ஷ்டக்குறைவானதாகவும், பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும், மனவருத்தமும், விரையங்களும், பெற்றவர்களின் பேச்சை பிள்ளைகள் கேட்க மாட்டார்கள் என்றும் எதிர்மறை பலனாக சொல்லப்பட்டிருகிறது. 

இருப்பினும் ராகு-கேதுக்கள் தன்னைப் பார்க்கும் கிரகத்தின் பலனைக் கவர்ந்து அந்தக் கிரகபலனைச் செய்பவர்கள் என்பதால் நவம்பர் மாதத்திற்குப் பிறகு கிடைக்கும் குருவின் பார்வையால் ராகு ஐந்தாமிடத்தில் குருவே இருக்கும் நிலை உண்டாகி தானே குருவாக நன்மைகளைச் செய்வார். 

மேலும் பதினொன்றாமிடத்தில் இருக்கும் கேதுபகவானால் உங்களின் ஆன்ம பலம், மனஉறுதி, செயல்திறன், அறிவாற்றல், சொல்வன்மை கூடும் என்பதால் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு நான் சொன்ன இத்தனை அம்சங்களும் வலிமை பெற்று உங்களது வாக்குறுதியும் சொல்லும் பலித்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி அந்தஸ்து, கௌரவத்தை உயரவைக்கும். 

எனவே ராகு-கேதுக்களின் இரண்டுநிலைகளிலும் இம்முறை கும்பராசி நன்மைகளையே அதிகமாகப் பெறும் என்பதால் இந்தப் பெயர்ச்சியை கும்ப ராசிக்காரர்கள் பரிபூரணமாக உபயோகப்படுத்திக் கொண்டு உயர்வது நிச்சயம். 

அதேநேரம் இந்த வருடக் கடைசி வரை ராகு சனியின் பார்வையில் இருப்பார் என்பதால் சுமார் ஒரு வருட காலம் பிள்ளைகளால் விரையங்களையும், பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கங்களையும், பருவ வயதுக் குழந்தைகளின் முதிர்ச்சியற்ற வயதுக்கேயுரிய போக்கால் உங்களுக்கு மனக்கஷ்டங்களையும் தருவார். 

எனவே பெயர்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே சில விஷயங்களை திட்டமிட்டுக் கண்காணித்து அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும். 

ஒரு சிலருக்கு பிள்ளைகளின் கல்வித்தடை, அவர்களுக்கு நல்லவேலை அமையாத நிலை, திருமணம் போன்ற சுபகாரியத் தடைகளையும் ராகு தருவார். தற்போதே மேற்கண்ட அமைப்புகளை கவனத்தில் கொண்டு உங்களுடைய எதிர்காலத் திட்டமிடலை அமைந்துக் கொண்டால் வாழ்க்கை ஒரு குறையும் இல்லாமல் செல்லும் என்பது உறுதி. 

அதேநேரத்தில் மேற்கண்ட ஐந்து, பதினோராம் இடங்களால் வியாபாரம், தொழில் போன்ற ஜீவனஅமைப்புகள் பாதிக்கப்படாது என்பதால் சுயதொழில் செய்பவர்களுக்கோ, அரசு-தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ, கலைஞர்களுக்கோ, பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கோ தொழில் அமைப்புகளில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது. 

அடுத்து கேதுபகவானின் பதினொன்றாமிட மாறுதலால் செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும். 

பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாபநிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இருக்கப் போவது இல்லை. 

குறிப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம் எனப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும். 

பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் கும்ப ராசிக்காரர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது. 

யூக வணிகத்துறையில் இந்த வருடம் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். கடன் பெற்று வீடு வாங்கும் அமைப்பு இந்த வருடம் உள்ளது. புதிய வாகனம் அமையும். 

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம். 

வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் போன்றவைகளில் பிரச்னை எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல பலனைத்தரும் பெயர்ச்சிதான். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும். கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நன்மை தரும் பெயர்ச்சி இது. 

முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்லமாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இந்தப் பெயர்ச்சியால் இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் 

பெண்களால் லாபம் கிடைக்கும். அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குறிப்பிட்ட சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு. 

பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இந்தப் பெயர்ச்சியால் இருக்காது. அதேநேரம் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அலைச்சல்கள்தான் இருக்கும். 

தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும். மாணவர்கள் என்பதால் மிகவும் பயனுள்ள அமைப்பாக இது இருக்கும். இந்த வருடம் அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். 

வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இப்போது நல்ல நண்பர்களாகக் கிடைப்பார்கள். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். 

பரிகாரங்கள். 

தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள ராகுபகவானின் திருத்தலமான திருநாகேஸ்வரத்திற்கு ஜென்ம நட்சத்திரம் அன்று சென்று வழிபட்டுத் திரும்புவது ராகுபகவானால் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும். வடமாவட்டங்களில் இருப்பவர்கள் காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள அருள்மிகு சித்திரகுப்தன் ஆலயத்தில் ஒரு அபிஷேகம் செய்யுங்கள்.

No comments :

Post a Comment