ஜெ. ரஹ்மத் அலாவுதீன், நாகப்பட்டினம்.
கேள்வி :
நான் பிறந்த தேதி 12-6-1965. கடந்த 20 வருடங்களாக என் குடும்பத்தில் தொடர்ந்து
எல்லா முயற்சிகளும் தோல்வி. கடுமையான கடன் தொல்லைகள் இருந்து வருகிறது. என்
பெயரை நியூமராலஜிப்படி எப்படி மாற்றி வைத்துக் கொள்ளலாம்?
பதில் :
பெயரை மாற்றி வைத்துக் கொள்வதால் 20 வருட பிரச்சினைகள் தீர்ந்து விடும்
என்றால், உலகில் உள்ள அனைவருமே நல்ல பெயரை வைத்துக் கொண்டு ஆனந்தமாக வாழ்ந்து
விடலாமே? பிரச்னையுள்ள மனிதர்களே உலகில் இருக்க மாட்டார்களே?
இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் பெயர் மாற்றும் பைத்தியம் தமிழ்நாட்டில்
பிடித்தபோது பெயரை மாற்றிக் கொண்டவர்கள், இப்போது நன்றாக இருக்கிறார்களா
என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த நியூமராலஜி எனப்படும் பெயரியல்
கலையின் நம்பகத்தன்மை புரியும்.
இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் இக் கலையை பிரபலப்படுத்திய
நியூமராலஜியின் தந்தை என்று போற்றப்படும் சீரோ தனது அந்திம காலத்தில் கடைசி
ஆறு வருடங்கள் கடுமையான வறுமையில் அமெரிக்கத் தெருக்களில் பிச்சை எடுத்து
உயிர் வாழ்ந்தார். ஒரு பிளாட்பாரத்தில் அனாதையாக இறந்த மூன்று நாட்களுக்குப்
பிறகுதான் அவர் சீரோ என்பதே கண்டுபிடிக்கப்பட்டது. ஏன் அவர் தனது பெயரை மாற்றி
வைத்திருக்கலாமே?
நியூமலாரஜியில் உள்ள அனைவரும் ஒரு பெயருக்கு வாய்க்கு வந்தபடி விளக்கம்
தருகிறார்கள். கோமதி என்று பேர் இருந்தால் புத்தி போய்விடும் (கோ-மதி) என்று
ஒருவர் சொல்கிறார். நெல்லைப் பக்கம் போய் இந்த விளக்கத்தைச் சொன்னால் அடிக்க
வருவார்கள். சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் என் அய்யன் சங்கர லிங்கனின்
உடலில் பாதியைக் கொண்ட அன்னை கோமதித் தாயாரின் திரு நாமம் அது. அதற்கு இப்படி
ஒரு முட்டாள்தனமான விளக்கத்தை ஒருவர் தருகிறார். சென்ற தலைமுறை வரை நெல்லைப்
பகுதியில் வீட்டுக்கு ஒரு கோமதி இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் புத்தி
போயிருந்ததா என்ன?
ஒரு பெயருக்கு ஆங்கிலத்தில் விளக்கம் தர வேண்டும், அல்லது தமிழில் தர
வேண்டும். இரண்டையும் கலந்து தரக் கூடாது. இப்படி கோமதிக்கு விளக்கம்
தந்தவருக்குத்தான் மதி, கோ வாகி விட்டது.
ரன் என்று முடிந்தால் எல்லாம் ஓடிப்போய் விடும் என்று ராமச்சந்திரன் என்ற
பெயரை ஒருவர் மாற்றச் சொல்லியிருக்கிறார். அதேபோல கீழ்நோக்கி முடியும் ஆங்கில
எழுத்துக்கள் பெயரில் இருந்தால் முன்னேற முடியாது என்று ஒரு விளக்கம் வேறு.
மறைந்தும் தமிழ் மக்களின் மனங்களை இன்னும் ஆண்டு கொண்டிருக்கும் எம்ஜியாரின்
பெயர் ராமச்சந்திரன்தான். அதைவிட எம்.ஜி.ஆர் எனும் மூன்று எழுத்துக்களும்
கீழ்நோக்கி முடிபவைதான்.
கலையால் பிழைப்பவன் சந்தேகத்திற்கு உரியவனாக இருந்தாலும், ஒரு கலை அதற்கு
அப்பாற்பட்ட உண்மைத்தன்மையுடன் இருக்க வேண்டும். பெயரியல் எனப்படும்
நியூமலாரஜியில் இந்த இரண்டுமே இல்லை. வேதஜோதிடம் எனப்படும் மகா சமுத்திரத்தை
கற்றுக் கொள்ள இயலாதவர்களே இருபத்தி ஆறு எழுத்துக்களுக்கு கொடுக்கப்படும்
எட்டு எண்களை வைத்து மனம் போனபடி விதிகளை உருவாக்கி, விளக்கமும் தருகிறார்கள்.
உங்களது பிறந்த நேரத்தை கண்டுபிடிக்க முடியுமா என்று முயற்சி செய்யுங்கள்.
முடிந்தால் பிறந்த நேரம் மற்றும் இடத்தோடு மீண்டும் கேள்வியை அனுப்புங்கள்.
மதங்களுக்கு அப்பாற்பட்டு பரம்பொருளுக்கு மட்டும் கட்டுப்பட்ட, இந்திய வேத
ஜோதிடத்தின் மூலம் உங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியுமா என்று
பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
ENAKKUM KOODA PEYARIN IDAIYIL WAR (RAJESWARI) ENDRU VARUVATHAL MATTRA SONNARGAL. VITHIPAYANAI ANUPAVIKKA VENDUME. ITHANAL ELLAM PAYANILLAI ENDRU VITTUVITTEN. NALLA VILAKKAM KODUTHIRIGAL GURUJI
ReplyDelete