ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி:8681 99 8888
2019- ஆங்கிலப் புத்தாண்டு இம்முறை செவ்வாய்க்கிழமை அதிகாலை, மார்கழி 17-ம் நாள், தசமி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம்ராசி, கன்னி லக்னத்தில் உதயமாகிறது.
இந்த ஆண்டின் சிறப்புபலனாக புது வருடம் பிறக்கும் துலாம் ராசியின் நாதனாகிய சுக்கிரன் ராசியிலேயே ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார். ராசிக்கு இரண்டு, ஆறாம் பாவகங்களின் அதிபதிகளான செவ்வாயும், குருவும் பரிவர்த்தனை யோக நிலையில் வருடத்தின் ஆரம்ப நாளில் இருக்கிறார்கள்.
தனாதிபதி வருட ஆரம்பத்தில் வலுவடைவது மிகச் சிறப்பு. இந்த அமைப்பால் இதுவரை பொருளாதாரப் பிரச்னைகளால் அவதிக்கு உள்ளாகி இருக்கும் சாதாரண பொதுஜனங்களின் பணச்சிக்கல்கள் தீரும். ஏழை எளியோருக்கு வருமானம் வரும். இதனால் நாட்டின் பொருளாதாரமும் உயரும்.
புத்தாண்டு தொடங்கும் நாளில் சுப கிரகங்களான சுக்கிரன் நேர்நிலையில் ஆட்சி, குரு பரிவர்த்தனை முறையில் ஆட்சி எனும் நல்ல நிலையில் இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் நல்ல விஷயங்கள் மட்டுமே மேலோங்கிய நிலையில் இருக்கும்.
உலகியல் ஜோதிட விதிகளின்படி நமது இந்திய நாடு மகர ராசியைச் சேர்ந்ததாகும். நமது நாட்டைக் குறிக்கும் ராசிக்கு பத்தாமிடத்தில் தொழில் ஸ்தானாதிபதி வலுப் பெற்று உள்ளதால் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக வேலை, தொழில் போன்றவைகள் நல்ல நிலையில் இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு தொழில் நல்ல முன்னேற்றம் அடையும்.
குறிப்பாக ஹோட்டல், டிராவல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள், லாட்ஜிங், ஆடம்பர பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி, பேன்சி பொருட்கள், போன்றவைகள் சம்பந்தப்பட்டவருக்கு இந்தப் புத்தாண்டு செழிப்பாக இருக்கும். சனி, கேது இணைவால் அடித்தட்டு மக்கள், உழைப்பாளிகள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், மாற்றுத்திறனாளிகள், டீக்கடை, மதுபானம் போன்ற திரவத் தொழிலில் உள்ளோர், தோல்பொருட்கள் செய்வோரின் வாழ்க்கைத் தரம் உயரும்.
குரு, செவ்வாய் பரிவர்த்தனையால் தங்கம், வட்டித்தொழில், வங்கித்துறை, நிதித்துறை, சட்டம் சம்பந்தப்பட்டோர், நீதியரசர்கள், சொல்லிக் கொடுப்போர், மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்டவைகளும், சுக்கிரன் ஆட்சியாவதால் ஏ.சி, டி.வி, செல்போன், ப்ரிஜ் போன்ற தொழில் செய்பவர்களும் நன்மைகளை பெறுவார்கள்.
புதன் தனித்திருப்பதால் சாப்ட்வேர், மார்க்கெட்டிங், வியாபாரிகள், தகவல் தொழில் நுட்பத்துறை, கணக்கு, புத்தகம் சம்பந்தப்பட்டோர், எழுத்தாளர், பத்திரிக்கைத்துறை, கவிஞர்கள், நடிகர்கள், கமிஷன் துறையினரும் சிறப்புப் பெறுவார்கள். சுபக் கிரகங்கள் வலுப்பெறுவதால் மக்களின் பொருளாதார நிலைமை மேம்பட்டு வாங்கும் சக்தி அதிகரிக்கும். விலைவாசி கட்டுக்குள் இருக்கும். எல்லோரும் தங்கம் வாங்கமுடியும்.
இளைஞர்களுக்கு அனைத்து துறைகளிலும் வாய்ப்பு கிடைக்கும். மாறுபட்ட எண்ணங்களை உடைய இளைஞர்கள் ஜெயிப்பார்கள். வியாபாரிகள், மற்றும் விவசாயிகள் வளம் பெறுவார்கள். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் சிறப்பான பலன்கள் இருக்கும். பிறக்கும் புது வருடம் மழைக்குப் பஞ்சமில்லாத ஆண்டாக இருக்கும். குடியானவனுக்கு குறை இருக்காது.
செவ்வாய் குரு பரிவர்த்தனை பெறுவதால் பணத்தட்டுப்பாடு புது வருடத்தில் நீங்கும். வருட ஆரம்பத்தில் மார்ச் மாதம் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு எல்லோருடைய கையிலும் பண நடமாட்டம் இருக்கும். நாட்டின் பொருளாதார நிலையும் சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.
புது வருடம் பிறக்கும் ராசியின் அதிபதி சுக்கிரன் ராசியிலேயே ஆட்சியாக இருப்பதாலும், சுக்கிரன் ஒரு பெண் கிரகம் என்பதாலும் இந்த வருடம் அனைத்து துறைகளிலும் பெண்கள் அதிகமாக சாதிக்கின்ற ஒரு வருடமாக இருக்கும். குறிப்பாக அரசியலில் பெண்களை முன்னிறுத்தி செய்யப்படும் காரியங்கள் வெற்றி பெறும். ஆண்களை விட பெண் அரசியல்வாதிகளுக்கு லாபம் அதிகம் இருக்கும். பெண் அரசியல்வாதிகளின் கூட்டணி முயற்சிகள் வெற்றி பெறும்.
பெண்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தேசம் முழுமைக்கும் கவனிக்கப்படுவார்கள். பெண்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படும். பெண்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள், பெண்ணினம் மதிக்கப்படும். துணிச்சலான பெண்கள் இந்த வருடம் உருவாவார்கள்.
பரிவர்த்தனையின் மூலம் குருபகவான் வலுப்பெறுவதாலும், மார்ச் மாதத்திற்கு பிறகு குருவின் வீட்டில் சனியும் கேதுவும் இணைவதாலும், இந்த வருடம் ஆன்மீகச் சிறப்பு ஆண்டாக இருக்கும். குறிப்பாக ஆன்மிகவாதிகள் சிறப்பு பெறுவார்கள் சனி, கேது இணைவால் பக்தி உணர்வுகள் தழைத்தோங்கும். சில துறவிகளின் தலையீட்டினால் அரசியல் சுத்தமாகும்.
புது வருடத்தில் அரசியலும். ஆன்மீகமும் அதிகமாக இணைந்திருக்கும். அரசியலில் இருக்கும் தனுசு, ரிஷப ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் இருக்கும். தமிழ்நாட்டு அரசியலில் வரும் அக்டோபர் மாதம் மாற்றம் இருக்கும். மக்களின் மத உணர்வுகள் தூண்டப்படும். சகிப்புத்தன்மை இன்றி ஒவ்வொருவரும் தங்களுடைய மதமே பெரியது என்று நினைக்கும்படியான சம்பவங்கள் நடக்கும். மதப்பிரச்சினைகள் தலை தூக்கும்.
கலைத்துறையினர் செழிப்படைவார்கள். கலைத்துறையில் இருக்கும் இன்னும் சிலர் அரசியல் ஆசையை வெளிப்படுத்துவார்கள். புதிய இசை அமைப்பாளர்களும் இயக்குனர்களும் வசனகர்த்தாக்களும் சூப்பர் ஸ்டார்களும் உருவாகும் ஆண்டு இது. இதுவரை அங்கீகாரம் இல்லாதவர்களுக்கு அரசு விருது கிடைக்கும். இசை, நடனம், பாட்டு போன்ற பாரம்பரிய இசைக்கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். நமது பாரம்பரியமும் பண்பாடும் இணைந்த விஷயங்கள் மேன்மை பெறும்.
செவ்வாய் வலுப்பெற்றுள்ளதால் கடந்த சில வருடங்களாக சரிவிற்கு உள்ளாகியிருக்கும் கட்டுமானத் துறையும் ரியல் எஸ்டேட் துறையும் இந்த வருடம் அதிலிருந்து மீண்டு உயர்வை நோக்கி செல்லும். அனைத்து இந்தியருக்கும் சொந்த வீடு எனும் லட்சியம் நிறைவேறுவதற்கான ஆரம்ப ஆண்டாக புது வருடம் இருக்கும்.
காவல்துறையினருக்கு இந்த வருடத்தில் பெரும் முக்கியத்துவம் கிடைக்கும். சில முன்னாள் ஐ,ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேசம் முழுமைக்கும் கவனிக்கப்படும் அளவிற்கு புகழ் பெறுவார்கள். சிலர் அரசியலுக்கு வருவார்கள். ராணுவத்தினரின் அபிலாஷைகள் நிறைவேற்றி வைக்கப்படும். அதிகாரம் செய்ய விரும்பும் மனிதர்களின் எண்ணம் பலிக்கும்.
அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். யாரும் எதிர்பார்க்காத புதிய மனிதர்கள் அரசியலில் முக்கியத்துவம் பெறுவார்கள். 2019-ம் ஆண்டு தமிழகத்திலும், இந்தியாவிலும் மத்திய, மாநில அரசியலில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படும்.
யானை இவருக்குத்தான் மாலை போடப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் நிலையில், பின்னால் நிற்பவனை தேடிப்பிடித்து மாலையைப் போட்டது போல, ஒரு பதவிக்கு ஒருவர் காத்துக் கொண்டிருக்க அப்பதவி இன்னொருவரை தேடிச்செல்லும் நிலை இந்த வருடம் இருக்கும்.
செவ்வாய்க் கிரகம் இளைஞர்களை குறிக்கின்ற கிரகம் என்பதால் 2019-ம் ஆண்டு இளையவர்களுக்கு, முதியவர்கள் வழிவிடும் ஆண்டாக இருக்கும். இதுவரை ஒரு கட்சி அமைப்பிலோ, ஆட்சி அமைப்பிலோ அதிகாரம் செலுத்திய முதியவர்கள் தவிர்க்க முடியாத நிலையில், புதிதாய் வரும் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி வேண்டியிருக்கும். கடந்த சில வருடங்களாக உச்சத்தில் இருந்தவர்கள் இந்த வருடம் கீழே இறங்க ஆரம்பிப்பார்கள்.
அறிவால் சாதிக்கும் துறைகள் இளைஞர்களை அதிகம் ஈர்க்கும். வடிவமைப்பு உருவாக்கம் ஆகிய துறைகளில் இளைஞர்கள் சாதிப்பார்கள். குறிப்பிட்ட சிலர் புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துவீர்கள். ஆண்டின் முதல் ஆறுமாதங்களில் நல்லவர்கள் பாதிக்கப்படுவார்கள். நல்லவர்கள் நினைப்பது நடக்காது. வருடத்தின் பிற்பகுதியில் உண்மை தெரியவந்து நிலைமை மாறும்.
தொழில்துறை நன்றாக இருக்கும். புதிய தொழிற்சாலைகள் துவங்கப்படும். தொழில் அதிபர்களுக்கு நல்ல காலகட்டமாக இது இருக்கும்.. நதிகளை ஒட்டிய பிரதேசங்கள் வளர்ச்சி பெறும். காய்கறி விளைவிப்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள், மாட்டுப் பண்ணைகள் நடத்துவோருக்கு உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்கும்.
இனி தனிநபர்களான, பனிரெண்டு ராசிக்காரர்களுக்கும் இந்தப் புத்தாண்டு என்ன பலன்களைத் தரும் என்பதை பார்த்தோமேயானால், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு பலனாக கடந்த சில வருடங்களாக பெரும் அவஸ்தையிலும், மன அழுத்தத்திலும், தாங்க முடியாத சோதனைகளிலும் இருக்கும் விருச்சிக ராசியினர் இந்த வருடத்திலிருந்து நல்லவைகள் நடப்பதை காண ஆரம்பிப்பீர்கள்.
புதுவருட இறுதியில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி அமைப்பு முற்றிலுமாக விலகுவதால், இனிமேல் உங்களுக்கு வசந்தகாலம்தான். விருச்சிக ராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். அடுத்த ஆண்டு முதல் விருச்சிகத்தினர் நல்வாழ்வு வாழ்வதற்கான ஆரம்ப கட்ட அமைப்புகள் இந்த வருடம் நடக்க ஆரம்பிக்கும்.
அடுத்து மீனம், கடகம், துலாம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகச் சிறப்பான நற்பலன்கள் இந்த ஆண்டு உண்டு. இந்த மூன்று ராசிக்காரர்களும் இந்த வருடம் எந்த ஒரு விஷயத்திலும் துணிந்து செயலாற்றி வெற்றியினைப் பெறுவீர்கள். ராஜ கிரகங்கள் என்று சொல்லப்படக்கூடிய அனைத்தும் மீனம், கடகம் மற்றும் துலாமிற்கு சாதகமான நிலையில் இருப்பதால் இந்த வருடத்தின் நல்ல பலன்களை இந்த மூன்று ராசியினரும் முழுமையாக அனுபவிப்பார்கள்.
அடுத்து மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, கும்பம், மகரம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கும் நிதானமான நற்பலன்கள் இந்த ஆண்டு நடைபெறும். மேற்கண்ட இந்த ராசிக்காரர்களுக்கு கெடுபலன்கள் எதுவும் நடக்காது. அதே நேரத்தில் நீங்கள் செய்யும் முயற்சிகளின் அளவுகளுக்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும்,
நிறைவாக தனுசு, ரிஷப ராசிக்காரர்களுக்கு முறையே ஜென்ம, அஷ்டமச்சனி நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இந்த வருடம் நிதானமான பலன்கள்தான் நடக்கும். நல்லவை நடப்பதற்கு கடுமையான முயற்சிகள் தேவைப்படும். மேற்கண்ட இரு ராசிகளுக்கும் அதீத முயற்சிகளுக்குப் பிறகு வெற்றிகளை தருகின்ற ஆண்டு இது.
இந்த இரு ராசிக்காரர்களும் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அகலக்கால் வைத்து விடவேண்டாம். குறிப்பாக இந்த ராசிகளின் இளைஞர்கள் இருப்பதை விட்டு விட்டு பறப்பதைப் பிடிக்கும் காரியத்தில் இறங்காமல், தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்களோ அதே நிலை நீடிக்குமாறு பார்த்துக் கொண்டாலே பரம்பொருள் உங்களைப் பாதுகாக்கும்.
கோட்சார பலன்கள் எப்படியிருந்தாலும் பிறந்த ஜாதகத்தில் யோகமான தசை,புக்தி நடப்பவர்களுக்கு இந்த வருட பலன்கள் பாதிக்காது. அவர்களுக்கு மிக நல்ல யோக பலன்களே நடக்கும். கோட்சாரப்படி கெடுதலான பலன்கள் நடக்கும் காலகட்டம் என்றாலும் கூட நமது சித்தர்களும் ஞானிகளும் நமக்கு சொல்லியுள்ள முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நம்மை கெடுதல்களில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.
அனைவருக்கும் எனது 2019 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
(01.01.2019 மாலை மலரில் வெளிவந்தது)
No comments :
Post a Comment