ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி: 8681 99 8888
மேஷம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் பாக்கியாதிபதி குருவுடன் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதாலும், மாத இறுதியில் ராசியிலேயே செவ்வாய் ஆட்சி நிலை பெறுவதாலும் தைமாதம் மேஷத்திற்கு யோக மாதமே. பத்தாம் வீட்டில் யோகாதிபதி சூரியன் இருப்பதால் கூடுதலாக இந்த மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் முன்னேற்றங்களும், லாபங்களும் இருக்கும். ராசிநாதன் வலுவாக இருப்பதால் அனைத்திலும் மனஉறுதியுடன் இருப்பீர்கள். நீங்கள் சாதிக்கும் மாதம் இது.
உங்களில் சிலருக்கு விவாகரத்து வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டு. ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணத்திற்கான நல்ல செய்திகள் கிடைக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு இது உயர்வு தரும் மாதம். அதேபோல கடல்துறை, மீனவர்கள், கடலோரங்களில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயங்கள் உண்டு, வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.
வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது மிகவும் நல்ல மாதம். கிரகங்கள் நல்ல அமைப்பில் இருப்பதால் நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும். கடந்த சில மாதங்களாக மனதைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள் தீர்வதற்கு ஆரம்பிக்கும். பாதித்துக் கொண்டிருந்த சங்கடமான பிரச்சினைகள் விலக ஆரம்பிக்கும்.
ரிஷபம்:
தை மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்ப்பதும், பிற்பகுதியில் இப்போது உங்களின் முன்னேற்றங்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் அஷ்டமச் சனியுடன் இணைந்து சனியை சுபத்துவப் படுத்துவதும் நல்ல அமைப்பு என்பதால் இது உங்களுக்கு நல்லவைகளை மட்டுமே தரும் மாதம். குறிப்பிட்ட பலனாக சனி எட்டில் இருப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். சனி, சுக்ர சேர்க்கையால் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
தேவையற்ற விஷயங்களில் செலவுகள் இருக்கும். பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம்.
வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். தாயார் வழியில் செலவுகள் வரலாம். தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.
மிதுனம்:
ராசிநாதன் புதன் ராசியைப் பார்ப்பதால் தைமாதம் வேலை, தொழில் விஷயங்களில் மிதுனத்திற்கு நல்ல மாதம்தான். ஆனால் ஏழில் இருக்கும் சனியினால் கூட்டுத்தொழில், நண்பர்கள், குடும்பம் பாதிக்கப்படும் என்பதால் உங்களில் சிலருக்கு வருமானக் குறைவால் இந்த மாதம் பணநெருக்கடிகள் இருக்கும். பணம் சம்பந்தமாக கொடுக்கும் வாக்கு பலிக்காது. ராசியை செவ்வாய் பார்ப்பதால் தேவையற்ற கோபத்தையும், அடுத்தவர் மேல் காட்ட வேண்டிய எரிச்சலையும் வீட்டில் காட்டுவீர்கள் என்பதால் எதிலும் நிதானம் தேவை.
சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும்.
குறிப்பிட்ட ஒருபலனாக இந்த மாதம் எதிலும் விட்டுக் கொடுத்து போங்கள். எல்லாவற்றிலும் ஈகோ பார்ப்பதே மிதுனத்தினரின் பலமாகவும் சிலநேரங்களில் பலவீனமாகவும் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். வரிகள் வசூலிக்கும் துறையினருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள்.
கடகம்:
யோகாதிபதிகளான செவ்வாய், சூரியன் நல்லநிலையில் இருப்பதோடு, குருவும், செவ்வாயும் பரிவர்த்தனையாக இருப்பதும் யோகமான அமைப்புகள் என்பதால் தை மாதத்தில் எதையும் சமாளிப்பீர்கள். கடக ராசிக்காரர்கள் ஒருமுறை ராகு பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத் தலங்களுக்கு சென்று ராகு பகவானுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. இன்னும் சில வாரங்களில் வர இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகம் தரும்.
குரு பார்வையால் ராசி வலுவாக இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் இந்த மாதம் வரப் போவது இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. ஆசிரியர்பணி, மார்கெட்டிங், விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், ஆலோசனை சொல்பவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்கள், இன்சூரன்ஸ், வெரிபிகேசன் துறை, தபால் மற்றும் கூரியர்துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
ராசிநாதனின் நண்பர்களான சூரியன், செவ்வாய் இருவரும் சுபத்தன்மை பெற்றிருப்பதால் இதுவரை உங்களை எதிர்த்து வந்தவர்கள் மனம் மாறி உங்கள் கருத்துகளை ஆதரிப்பார்கள். தொல்லை கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் தீரப்போகின்றன. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். சுக்கிரன் உங்களுக்கு பெண்களால் எரிச்சலையும், அவர்கள் மூலமான எதிர்மறை பலன்களையும், செலவுகளையும் தருவார் என்பதால் இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாக யோசித்து செய்வது நல்லது.
சிம்மம்:
சிம்மநாதன் சூரியன் ஆறில் மறைவது சிறப்பான நிலை அல்ல என்றாலும் யோகாதிபதி செவ்வாய், குருவுடன் பரிவர்த்தனை பெறுவதால் இந்த மாதம் கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது. பத்தாமிடத்திற்கு குருவின் பார்வை இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றின் மூலம் நன்மைகள் உண்டு. உங்களில் கடல்துறை, மீனவர்கள், கடலோரங்களில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்டகாலமாக நடக்கும் செக் ரிட்டர்ன், குடும்பபிரச்னை வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் இப்போது உண்டு.
சிலருக்கு திருமணத்திற்கான நல்ல செய்திகள் கிடைக்கும். மெஷினரி சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு இது உயர்வு தரும் மாதம்.
ராசிநாதன் ஆறில் இருப்பதால் சிலருக்கு எதிரிகளால மனக்கலக்கம் இருக்கும். எதிர்ப்புகளும் உண்டு. சிலருக்கு நம்பிக்கை துரோகங்கள் நடக்கும். யாரையும் நம்ப வேண்டாம். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரும். என்னதான் பிரச்னை என்றாலும் செவ்வாய் வலுவுடன் இருப்பதால் அனைத்தையும் ஜெயிப்பீர்கள்.
ஆறாமிடம் வலுப்பெறுவதால் பெரும்பாலானவர்கள் லோன் போட்டு வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.
கன்னி:
மாத ஆரம்பத்தில் தைரிய ஸ்தானாதிபதியான செவ்வாய் மூன்றில் இருக்கும் குருவுடன் பரிவர்த்தனை வலுப்பெற்ற அமைப்பில், இருப்பதால் கன்னிக்கு இது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் மாதமாக இருக்கும். வேலை தொழில் வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும். சிலருக்கு வேலைக்கு செல்லும் மனைவியால் உதவிகளும், பணத்தேவைகள் நிறைவேறுதலும் உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம்.
அழகுக்கலை, மாடலிங், முடி திருத்துவோர், சமையல், லாட்ஜிங் சம்பந்தப்பட்ட துறையினருக்கு சிக்கல்கள் தீரும் மாதம் இது. பொதுவாக அனைத்து தரப்பு கன்னி ராசியினரும் கொஞ்சம் நிம்மதியாக உணருவீர்கள். சிலருக்கு பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம்.. எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். இன்னும் சிலருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் பயத்தைக் கொடுக்கும். ஒன்றும் ஆகாது. பத்து நாட்களில் சரியாகி விடும். பயப்பட வேண்டாம்.
நான்காம் வீட்டில் சனி இருப்பதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் எவரிடமும் கோபப்படாமல் இருக்க வேண்டியது அவசியம். யாராவது நிதானம் இழந்து பேசிவிட்டால் இது தீவிரமான கருத்து வேறுபாடுடன் சண்டையாகி நிரந்தர பிரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதால் எங்கும் எதிலும் கவனம் அவசியம். வேலையில் பாராட்டப் படுவீர்கள். இளைய பருவத்தினருக்கு அவர்கள் தகுதிகேற்ற வேலை கிடைக்கும். சிலருக்கு தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும்.
துலாம்:
தை மாத ஆரம்பமே துலாமுக்கு மிகவும் நன்றாக இருக்கும். முக்கியமாக உங்களில் கடன் தொல்லைகளில் இருப்பவர்களுக்கு இப்போது கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். நன்மைகள் மட்டுமே உள்ள மாதம் இது. சிலருக்கு வீடு வாகன விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் துலாம் ராசிக்கு துன்பங்கள் எதுவும் இல்லை.
பத்தாம் வீட்டிற்கு குருபார்வை இருப்பது நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், பணவரவுகளும், லாபங்களும் இருக்கும். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் பிடித்தமான வேலை கிடைக்கப் பெறுவீர்கள்.
கறுப்பு நிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கு மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சி இருக்கும். பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் உண்டு. மனைவியால் நன்மைகள் இருக்கும். இதுவரை செய்து முடிக்க முடியாத விஷயங்களை தற்போது எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு சோதனைகள் விலகி விட்டன. நன்மைகள் நடக்க இருப்பது தெரியும் வகையில் சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் இருக்கும். ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் பரிவர்த்தனை நிலையில் ஆட்சியாக இருப்பதால் இதுவரை கஷ்டப்பட்ட உங்களுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முதுமொழிப்படி இப்போது நல்வழி பிறக்கும். இளைஞர்களுக்கு இதுவரை கிடைக்காத வேலை கிடைக்கும். மனக்கசப்புகளால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள்.
மாதம் முழுவதும் சூரியன் பலத்துடன் இருப்பதால் சந்தோஷமான செய்திகள் இருக்கும். சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் வருமானம் இருக்கும். இதுவரை கிடைக்காத உதவிகள் கிடைக்கும் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் அனைத்து விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இனிமேல் நல்ல காலம் உண்டு. கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், சொகுசுவாகனம், அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.
வேலையில் பாராட்டப் படுவீர்கள். என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். வேறு இன மொழி மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். இந்த மாதம் அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் தொடரும் உறவாக மாறுவார். கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
தனுசு:
இளம் பருவ தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது மாற்றங்களுக்கான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் உங்களில் எதிர்கால நல்வாழ்வுக்கு தேவையானதுதான். தைமாதம் தனுசுக்கு பெரிய பின்னடைவுகளை தராது. ஆனாலும் உங்களில் சிலருக்கு வேலையில் நிம்மதியின்மை, டார்கெட் போன்ற விஷயங்களால் மன அழுத்தம், மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடு போன்ற பலன்கள் இருக்கும். தனுசு ராசி இளையவர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்கு வாழ்க்கை சிறிது ஏமாற்றத்துடன்தான் செல்லும்.
தனுசுவினர் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது செய்ய வேண்டாம். இருக்கும் வேலை, தொழிலை கவனமாகப் பாருங்கள். அரசனை நம்பி புருஷனைக் கைவிடுவது போன்ற சில சம்பவங்கள் நடக்கும். எதிலும் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படுவது நல்லது. ராசியில் இருக்கும் சனியால் மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும். கடும் முயற்சிகளுக்குப் பிறகுதான் நல்லவைகள் நடக்கும். என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது.
கணவன், மனைவி யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது. சகோதர உறவு முன் பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம். சிலருக்கு உழைத்த கூலியை பெறுவதற்கு போராட வேண்டி இருக்கும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள்.
மகரம்:
மூன்று, பதினொன்றுக்கு உடைய செவ்வாய், குரு பரிவர்த்தனையால் நீங்கள் அன்னியரிடமிருந்து உதவிகளை பெறும் மாதமிது. சரியான நேரத்தில் ஆண்டவனே நேரில் வந்து இந்த உதவியை செய்தார் என்று நினைக்கும்படியான ஒரு உதவி இந்த மாதம் கிடைக்கும். கடவுளைப் போல சரியான நேரத்தில் வந்து உதவினீர்கள் என்று நீங்கள் ஒருவரிடம் சொல்லும் மாதம் இது. வாக்கு வீட்டை சனி பார்ப்பதால் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம்.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான நிகழ்ச்சிகள் நடக்கும். விட்டுக் கொடுத்து போங்கள். எல்லாவற்றிலும் ஈகோ பார்ப்பதே உங்களின் பலமாகவும் சிலநேரங்களில் பலவீனமாகவும் இருக்கும்.
ஆறாமதிபதி அந்த வீட்டையே பார்ப்பதாலும், எட்டுக்குடையவன் ராசியில் இருப்பதாலும் மறைமுக எதிர்ப்புகள் இந்த மாதம் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. நீண்டநாட்களாக வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும்.
கும்பம்:
கும்பத்திற்கு யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். உங்களில் சிலருக்கு கடந்த சில வாரங்களாக இருந்து வந்த பின்னடைவுகள் தற்போது நீங்க ஆரம்பிக்கும் கெடுதல்கள் உடனே நடக்கும், நல்லவைகள் மெதுவாகத்தான் நடக்கும் என்பதன்படி வரப்போகும் மாற்றம் நிதானமாகத்தான் இருக்கும். உங்களில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் சற்றுக் கூடுதலாக இருக்கும். கும்பத்தினர் நன்மை பெறும் மாதம் இது.
இரண்டு, பத்துக்குடைய செவ்வாய், குரு பரிவத்தனை மூலம் வலுவாக இருப்பதால் நீங்கள் தொழில்ரீதியாக செய்யும் முயற்சிகள் வெற்றிபெற்று பணவரவு இருக்கும். தொழில் ஸ்தானம் வலிமை பெறுவதால் தொழில், வேலை போன்ற விஷயங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் எதிலும் சாதிக்கும் மாதம் இது. வியாபாரம் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
தொழிலாளர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில் அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும். அனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில் உங்களுக்கு சாதகமாகவே முடியும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் உண்டு. சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். தந்தைவழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு முக்கியமான மாற்றங்கள் இருக்கும். பொதுவில் இது நல்ல மாதம்தான்.
மீனம்:
மீன ராசிக்கு எதிர்மறை பலன்கள் எதுவும் தைமாதம் இருக்காது. உங்கள் திறமைகள் வெளிவரும் மாதம் இது. அதிர்ஷ்டம் இப்போது கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பது உங்கள் விஷயத்தில் நடக்கும். நல்லது நடக்கும் நல்லது நடக்கும் என்று வீட்டுக்குள்ளேயே சோம்பி இருக்காதீர்கள். வெளியே வந்து முயற்சிகளை செய்யுங்கள்.
கோட்சார கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் மீனத்தினர் மனதளவிலும் உடல்நிலையிலும் பத்துவயது குறைந்த புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள். இதையும் மீறி உங்களுக்கு நல்லவைகள் நடக்கவில்லை என்றால் பிறந்த ஜாதகப்படி கடுமையான தசா புக்திகள் நடக்கிறது என்று அர்த்தம். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.
ராசிநாதனின் நண்பர்களான செவ்வாய், சூரியன் இருவரும் சுபத்தன்மை பெற்றிருப்பதால் இதுவரை உங்களை எதிர்த்து வந்தவர்கள் மனம் மாறி உங்கள் கருத்துகளை ஆதரிப்பார்கள். பத்தாமிடத்தில் சனியுடன் சேரும் சுக்கிரன் பெண்களால் செலவுகளை தருவார் என்பதால் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாக யோசித்து செய்வது நல்லது. தொல்லை கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் தீரப் போகின்றன. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். குறைகள் இல்லாத மாதம் இது.
No comments :
Post a Comment