Wednesday, December 26, 2018

மறுபடி அந்தப் பெண் கிடைப்பாளா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888


எஸ். ஆறுமுகசாமி, திருப்பூர். 

கேள்வி. 

அன்பும் ஆதரவும் காட்டி வழிகாட்டும் குருஜி அவர்களுக்கு வணக்கம். முதல் வாழ்க்கை கோணலாகிப் போன நான் சில வருடங்களுக்கு முன் உங்களிடம் கேள்வி கேட்டிருந்தேன். அப்பொழுது தாங்கள் கூறியபடி ஒரு வேற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணின் தொடர்பு கிடைத்தது. சென்ற ஜனவரியில் அந்தப் பெண்ணின் தந்தை இறந்தபோது, அந்தப் பெண் உங்களிடம் மாலைமலரில் கேள்வி கேட்டு அதற்கு நீங்கள் ஒரு தந்தையாகவே பதில் கொடுத்திருந்தீர்கள். அதன்பிறகு அந்தப் பெண் என் தொடர்பை விட்டு விட்டார். நானும் அவருக்கு எந்த இடைஞ்சலும் செய்யவில்லை. இப்பொழுது தனியாக தொழில் தொடங்கி நல்ல நிலைமையில் இருக்கிறேன். கடந்த சில வாரங்களாக அவரின் நினைவுகள் என்னை பாடாய்ப்படுத்தி எடுக்கின்றன. அவர் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்று எதுவும் எனக்குத் தெரியாது. 20 மாதங்களாக கட்டுப்படுத்தி வைத்த உணர்வுகள் எல்லாம் இப்பொழுது திடீரென ஏன் வெளியே வருகிறது என்றும் தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலாக உள்ளது. தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை. நாங்கள் என்றாவது ஒருநாள் மீண்டும் சேர முடியுமா அல்லது இனி அந்தப் பெண் என் வாழ்க்கையில் இல்லையா என்பதை தயவுசெய்து கூறும்படி கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாமிய பெண்ணாக இருந்தாலும் உங்களுடைய எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். இந்த கேள்வி மாலைமலரில் வெளியானால் நிச்சயம் அவள் படிப்பாள். இறைவனிடம் நான் எதிர்பார்ப்பது எனக்காக ஒரு மனைவி, ஒரு குடும்பம், ஒரு வாழ்க்கை மட்டுமே. இது கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்று தாங்கள் கூறுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். 

பதில். 

(விருச்சிக லக்னம், கடக ராசி. 1ல் செவ், 2ல் சூரி, புத, சனி. 3ல் சுக், 5ல் குரு, ராகு, 9ல் சந், 11ல் கேது. 6-1-1988 அதிகாலை 3-21 சாத்தூர்) 

காதலுக்கு தூது போகும் அளவிற்கு மாலைமலர் கேள்வி-பதில் பகுதி உபயோகப்பட போகிறது என்று தெரிந்திருந்தால், இதன் தலைமை நிர்வாகி இந்தப் பகுதிக்கு அனுமதி கொடுத்திருக்கவே மாட்டார். 

கடவுள் காரணமின்றி யாரையும், எதற்காகவும் அறிமுகப்படுத்துவதில்லை. எல்லா சம்பவங்களுக்கும் காரணங்கள் கண்டிப்பாக இருந்தே தீருகின்றன. கிரகங்களின் சுழற்சியால்தான் நம்முடைய வாழ்க்கைச் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சில நிரந்தரமானதாகவும் சில தற்காலிகமானதாகவும் இருக்கிறது. 

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் மற்றும் புதனின் வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் நன்மையை செய்வதில்லை. அப்படிச் செய்ய வேண்டுமாயின் ஒரு சிக்கலான, சூட்சும அமைப்பில் புதன் இருக்கவேண்டும். உங்களுக்கு கடந்த ஆறு வருட காலமாக புதனின் வீட்டில் அமர்ந்த, குரு பார்த்த கேதுவின் தசை நடப்பதால் இஸ்லாமியப் பெண்ணின் தொடர்பு கிடைக்கும் என்று பதில் கொடுத்திருப்பேன். அது நீடிக்க வழி இல்லை. 

தற்போது கேது தசையில், புதன் புக்தி நடப்பதால் உங்களுக்கு மன உளைச்சல் தரும் விதமாக அந்தப் பெண்ணின் நினைவு அதிகமாக இருக்கிறது. இனி உங்கள் வாழ்க்கையில் அந்நிய மத பெண்ணிற்கு இடமில்லை. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சுக்கிரதசை ஆரம்பிக்க இருப்பதாலும், சுக்கிரன் லக்னாதிபதி செவ்வாயின் சாரத்தில் அமர்ந்து, பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனின் பார்வையை பெற்றிருப்பதாலும், சுயபுக்தியிலேயே உங்களுக்கு இரண்டாவது நல்ல வாழ்க்கை அமையும். தொழில் முன்னேற்றங்களும் இருக்கும். அந்தப் பெண்ணையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம். 

நான் என்னதான் சொன்னாலும் அடுத்த ஆகஸ்ட் மாதம் வரை அந்தப் பெண்ணின் நினைவுகளால் மன உளைச்சல் அடையத்தான் செய்வீர்கள். ஒரு செவ்வாய்க் கிழமை காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள சித்திரகுப்தன் கோவிலுக்கு சென்று ஒரு அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். அந்தப் பெண்ணின் நினைப்பு குறையும்.

(25.12.2018 மாலை மலரில் வெளிவந்தது)

No comments :

Post a Comment