Saturday, December 15, 2018

2018 Markali Matha Palankal – 2018 -மார்கழி மாத பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி: 8681 99 8888

மேஷம் 

மாத ஆரம்பத்தில் செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருந்தாலும், பிற்பகுதியில் பனிரெண்டிற்கு மாறி குருவின் பார்வையில் அமர்வது யோக அமைப்பு என்பதால் மார்கழி மாதம் மேஷராசிக்கு ஏற்றங்களும் மாற்றங்களும் உள்ள மாதமாக இருக்கும். மாத பிற்பகுதியில் ஆறாம் அதிபதி புதன், சனி சம்பந்தம் பெறுவதால் தொழில் இடங்களில் உங்களைப் பிடிக்காத மறைமுக எதிரிகள் எங்கே உங்களை கவிழ்க்கலாம் என்று திரிவார்கள். எனவே அனைத்திலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம். 

பத்தாமிட கேதுவினால் சிலர் ஆன்மிகப் பயணங்கள் செய்வீர்கள். புனிதத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக் கடன் செலுத்தாதவர்கள் அவற்றை முடிப்பீர்கள். தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். சிலருக்கு வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். முன்னேற்ற திட்டங்களை நீங்கள் செயல்படுத்திப் பார்க்கும் மாதம் இது. 

ஐந்துக்குடைய சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் அனைத்து தடைகளும் விலகும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புக்களும் லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு சிறப்புகள் சேரும். சுக்கிர பலத்தால் பெண்கள் உதவுவார்கள். நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும். மாணவர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான மாதம். 

ரிஷபம் 

ராசிநாதன் சுக்கிரன், குரு இருவரும் இணைந்து ராசியைப் பார்ப்பதும், யோகரான புதன் சனி சம்பந்தம் பெறுவதும் இந்த மாதம் ரிஷபராசிக்கு நற்பலன்களைத் தருகின்ற அமைப்பு என்பதால் உங்களில் சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த தனலாபங்கள் உள்ளிட்ட அனைத்தும் இப்போது கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்தில் வேலை உண்டு. திருமணப் பருவத்தினர் சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தையும் மீறி சில நன்மைகள் நடக்கும் மாதம் இது. 

உறவு, நட்புகளில் இருந்த மனக்கசப்பு விலகும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு நன்மைகள் உண்டு. குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் சிலருக்கு பொருள் சேர்க்கையும் இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப நிகழ்ச்சிகள் உண்டு. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். தம்பதிகள் உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 

ரிஷபநாதன் சுக்கிரன் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசியைப் பார்க்கும் நிலையில் இருப்பதும், ராசியின் யோகாதிபதிகளான சனியும், புதனும் நல்ல நிலையில் இருப்பதும், உங்களின் பணவரவுகளையும், தனலாபம் மற்றும் பொருளாதார மேன்மையை அதிகப்படுத்தும் ஒரு அமைப்பு என்பதால் மார்கழி மாதம் பணச்சிக்கல்கள் உங்களுக்கு இருக்காது. சிலருக்கு பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் நன்மைகளும் பணவரவும் இருக்கும். பொதுவில் அதிக நன்மைகள் இருக்கும் மாதம் இது. 

மிதுனம் 

மார்கழி மாதம் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் ஏழாமிடத்தில் அமர்ந்து தன் ராசியைத் தானே பார்த்து வலுப்படுத்துகிறார். இந்த அமைப்பால் உங்களில் சிலருக்கு வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடு மற்றும் சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் மூன்றாவது மனிதரால் இருந்து வந்த சந்தேகங்களும், தேவையற்ற பயங்களும் விலகும் மாதம் இது. மிதுன ராசிக்கு மார்கழி மனச்சங்கடங்களை நீக்கி மகிழ்ச்சியைத் தரும். 

ராஜ கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இந்தமாதம் முடித்துக் காட்டுவீர்கள். 

நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு கெடுதல்கள் எதுவும் இருக்காது. பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இது சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. வெகுநாட்களாக முடியாத பிரச்னைகள் சாதகமாக முடிவுக்கு வரும். 

கடகம் 

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் இரண்டுக்குடைய தனாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்திருப்பதால் மார்கழி மாதத்தில் கடகத்திற்கு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றின் மூலம் நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு நினைத்தது நிறைவேறும் மாதமாகவும் இது இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். பெண்கள் விஷயத்தில் நன்மைகள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கு அஸ்திவாரம் தரும் மாதம் இது. 

ஐந்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கும் குருவின் பலத்தால் எதையும் சமாளிக்கும் மனோபலமும், சக்தியும் உங்களுக்கு கிடைக்கும். கடக ராசிக்கு இன்னும் சில காலத்திற்கு பின்னடைவுகள் எதையும் சொல்வதற்கு இல்லை. உங்களில் பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. குறிப்பாக தையல் கலைஞர்கள் சந்தோஷப் படும் அளவிற்கு வருமானம் உண்டு. சிலருக்கு மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். 

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். சில தொழில் முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெறுவீர்கள். சாதகமான கிரகநிலையால் கடகத்தினர் விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம். 

சிம்மம் 

மார்கழி மாதம் முழுவதும் சிம்மநாதன் சூரியன் சனியுடன் இணைந்து பலவீனமாகி தனித்தன்மையை இழந்திருக்கிறார். ஆனாலும் அவர் குருவின் வீட்டில் பலம் பெறுவதும் வீடு கொடுத்த குருபகவான் சுக்கிரனுடன் இணைந்திருப்பதும் சிம்மத்திற்கு வலுத் தரும் அமைப்புகள் என்பதால். அனைத்தும் நல்லபடியாக நடக்கும் மாதம் இது. இதுவரை நிரந்தர வருமானம் இன்றி பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நிலையான வருமானம் வரும் மாதம் இது. 

இந்த மாதம் ஒரு குறிப்பிட்ட பலனாக நிலுவையில் இருந்த கடன்தொகையோ சம்பள தொகையோ நல்லபடியாக செட்டிலாகி உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மாதம் முழுவதும் தொழில், வியாபாரம் போன்றவைகள் சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். 

பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். மாத பிற்பகுதியில் செவ்வாய் எட்டில் மறைவதால் எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். 

கன்னி 

கன்னிநாதன் புதன் நான்காவது கேந்திரத்தில் இருந்து பத்தாம் வீட்டைப் பார்ப்பதும், அவருக்கு வீடு கொடுத்த குருபகவான் யோகாதிபதி சுக்கிரனுடன் இணைந்திருப்பதும் லாபகரமான அமைப்புகள் என்பதால் இந்த மாதம் கன்னிக்கு தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும். ஒரு முக்கிய பலனாக உங்களில் கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள். பிரச்னைகள் தீரும் மாதம் இது. 

வேலையில் சிக்கல்கள் இருந்தவர்களுக்கு சரியாகும். சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். அரசு ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாத முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் நல்ல பலன்களும் உண்டு. தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் உண்டு. 

சிலருக்கு வீண் விரயங்களும், செலவுகளும் இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே, எனவே வருமானமும் தாராளமாகவே இருக்கும். செவ்வாய் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் பேச்சில் நிதானத்தைக் காட்டுங்கள். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. சிலர் குல தெய்வ வழிபாட்டிற்கு செல்வீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். 

துலாம் 

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரனும், குருவும் இணைந்திருக்கிறார்கள். இந்தச் சேர்க்கை இரண்டாமிடத்தில் நடப்பதால் துலாத்திற்கு பொருளாதார மேன்மை உண்டு. குரு, சுக்கிர சேர்க்கையால் துலாம் ராசிக்கு பண நெருக்கடிகளை சமாளிக்கக்கூடிய அளவிற்கு வருமானம் இருக்கும். எதிர்பாராத பணம் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக மார்கழி மாதம் துலாம் ராசிக்கு ஏமாற்றங்களையோ, நெருக்கடிகளையோ தராத மாதமாகவே இருக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 

இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். நடுநிலை தவறாத துலாம் ராசியில் தராசை சின்னமாகக் கொண்டு பிறந்தவர் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு. நீண்ட காலமாக இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும். கலைஞர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் இந்த மாதம் உண்டு. 

மார்கழி மாதம் உங்களுக்கு தொல்லைகள் தரும் என்று சொல்ல எதுவும் இல்லை. மாதம் முழுவதும் ஆன்மிக எண்ணங்களும் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மனதில் வருவதும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் நல்லசெய்திகள் கேள்விப்படுவதும் இருக்கும். ராசியை செவ்வாய் பார்ப்பதால் ஒருசிலர் எதிர்மறை பலன்களை சந்தித்து குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை சிறிது நாட்கள்தான். 

விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதம் மிகப்பெரிய நல்ல மாற்றங்களைத் தரும். முக்கியமாக கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மனநிம்மதி இருக்கும். என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் எண்பது சதவிகிதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் என்பதை அடிக்கடி எழுதி வந்தேன். விருச்சிகத்தினர் ஜாதகம் பார்க்க வருவது குறைந்து தனுசு ராசியினர் வந்து கொண்டிருக்கிறார்கள். விருச்சிகத்தினர் அனைவரின் பிரச்னைகளும் விலகிக் கொண்டிருக்கிறது. நிம்மதி கிடைக்கப் போகிறது. அதை நீங்களும் உணரும் மாதம் இது. 

விருச்சிக ராசிக்கு இனி வேலை, தொழில் விஷயங்களில் நல்ல மாறுதல்களும், புதியவைகளும் இருக்கும். இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் நல்லபடியாக முடிவுக்கு வரத் துவங்கும். எதையும் சமாளிப்பீர்கள். உங்களில் சிலர் அனுபவித்த கஷ்டங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. அவர்களுக்கெல்லாம் சந்தோசம் வரும் மாதம் இது. இனி நீங்கள் எந்த விஷயத்திற்காகவும் கலங்கத் தேவையில்லை. 

இந்த மாதம் முதல் உங்களுக்கு பிரச்னையாக இருந்த விஷயங்களில் மாறுதல்கள் தெரியும். இரண்டு விருச்சிகம் வீட்டில் இருந்தாலோ, அல்லது வேறு ஒருவர் மேஷராசியாக இருந்தாலோ அந்தக் குடுமபத்தில் கஷ்டங்கள் அதிகமாக இருந்தது. விருச்சிக ராசிக் குழந்தைகள் இருக்கும் வீட்டிலும் தகப்பனுக்கு பொருளாதாரக் கஷ்டங்கள் இருந்தது. அனைத்தும் இனி தீரப் போகிறது. இனி ஆனந்தமாய் இருப்பீர்கள். கவலை வேண்டாம். பரம்பொருள் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டார். 

தனுசு 

ராசிநாதன் குருவும் லாபாதிபதி சுக்கிரனும் பனிரெண்டாம் வீட்டில் இணைந்திருப்பதால் மார்கழி மாதம் தனுசு ராசிக்கு நல்ல மாதமாக அமையும். சனி ராசியில் இருப்பதால் சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். எட்டில் இருக்கும் ராகு இளைய பருவத்தினருக்கு இனம் தெரியாத கலக்கத்தை தருவார். மூலம்,பூராடம் நட்சத்திர இளைஞர்கள் பேச்சில் கவனம் தேவை. எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. 

ஜென்மச் சனி நடப்பதால் முப்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு முதுகில் குத்தும் எதிர்ப்புகள் இருக்கும். சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. 

ராசியில் சனி இருப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். பணவரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

மகரம் 

மாதம் முழுவதும் குருபகவான் பதினொன்றாமிடத்தில் பத்தாம் அதிபதி சுக்கிரனுடன் இருப்பதால் மகரத்தினருக்கு இது பதவி உயர்வு, தொழில் மேன்மை, பொருளாதார நன்மைகளைத் தரும் மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு எதிர்மறையான பலன்கள் இல்லாமல் நல்லவை நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். பின்னடைவுகள் விலகி முன்னேற்றப் பாதையில் செல்ல வைக்கும் மாதம் இது. 

வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லவிதமாக செயல்பட்டு நன்மைகளை தரும். ராசிநாதன் சனி எட்டுக்குடைய சூரியனுடன் இணைந்திருப்பதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பரபரப்பாக கோபத்துடன் இருப்பீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் சண்டை போட வேண்டாம். நிதானம் தேவை. கலைத்துறையினருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. 

நடுத்தர வயதினர் சிலருக்கு சிறுசிறு உடல்நலப்பிரச்னைகள் வரும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். தந்தை வழி பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். தந்தை வழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். குடும்பப் பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். 

கும்பம் 

இந்த மாதம் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுக்கிரன், குரு இணைந்திருப்பதால் கும்பத்திற்கு வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் நல்ல பலன்கள் இருக்கும். ஜீவன ஸ்தானம் வலுப்பெறுவதால் சீட்டுப் பிடிப்பவர்கள், மகளிர் சுயஉதவிக்குழு நடத்துபவர்கள், பணம் அதிகம் புரளும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வங்கித் துறையினர் போன்றவர்களுக்கு நன்மைகள் நடக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. 

கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் மாதம் முழுவதும் உங்களின் தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். அதிர்ஷ்டம் செயல்பட ஆரம்பித்து செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக முடியும். பொருளாதார சிக்கல்கள் இருக்காது. 

அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு இனி பதவி உயர்வு உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும். 

மீனம் 

மீனராசிக்கு இதுவரை தடைகளைத் தந்து வந்த அனைத்தும் நீங்கி சரளமாக பணம் கிடைக்கத் துவங்கும் மாதம் இது. பொருளாதாரம் மேன்மை பெறும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். ராசியில் அமரும் செவ்வாய் சில நேரம் எரிச்சலையும், செலவுகளையும் தருவார் என்பதால் யோசித்து செலவு செய்வது நல்லது. தனாதிபதி செவ்வாய் குருவின் பார்வையில் வலுவாக இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப் போவது இல்லை. 

குரு, சுக்கிர இணைவால் பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். சகோதரிகளால் செலவு உண்டு. வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். 

சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். வேலை செய்யுமிடங்களில் நல்லபலன்கள் இருக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும்.

1 comment :

  1. எல்லா பயலுவலையும் வச்சு செய்யறீங்க குருஜி

    ReplyDelete