ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
அசுவினி
ஒரு குறிப்பிட்ட பலனாக அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் எதிலும் ஒரு நிம்மதி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. வியாபாரத்தில் இலாபம் உண்டு. சிலருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பணவரவு கிடைக்கும். மறைமுக இலாபங்கள் மற்றும் வருமானங்கள் இருக்கும் மாதம் இது. சிலர் ரகசியமான காரியங்களை செய்வீர்கள். அவற்றில் வெற்றியும் பெறுவீர்கள். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு இப்போது மாற்றம் உண்டாகும்.
பரணி
டிசம்பர் மாதம் முழுவதும் நட்சத்திர நாதன் சுக்கிரன் பலமாக இருப்பதால் பரணி நட்சத்திரக் காரர்கள் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சம் இல்லை. வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்ல அனுபவங்கள் இருக்கும். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திர பெண்களுக்கு இது நல்ல மாதம். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பிறகு வெற்றி உன்யு. தொழில், வியாபாரம் போன்றவைகள் விறுவிறுப்புடன் நடக்கும். கடன்தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். நண்பர்கள் உதவுவார்கள். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும், பணவரவும் உண்டு.
ரோஹிணி
டிசம்பர் மாதம் உங்களுக்கு வருமானம் குறையாது. வரவும் நன்றாக இருக்கும். மாத முற்பகுதியில் எதிர்பாராத லாபங்களும், அதிர்ஷ்டம் கை கொடுத்தலும் உண்டு. உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள். ரோகினிக்கு திருப்பு முனையான மாதமிது. பணம் வருவதற்கு உங்களில் சிலர் பொய் சொல்ல வேண்டி இருக்கும். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். முதல் திருமணம் முறிந்த சிலருக்கு இப்போது இரண்டாவது திருமணத்திற்கான அமைப்பு உருவாகும்.
மிருகசீரிடம்
உங்களில் சிலருக்கு இந்தமாதம் வாழ்க்கைத்துணையிடம் நெருடல்கள் இருக்கும். காதலர்கள் சண்டை போட்டுக் கொள்வீர்கள். அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய சம்பவங்களும் அறிமுகங்களும் உண்டு. அம்மாவின் வழியில் ஆதரவும் அனுகூலமும் கிடைக்கும். என்ன செலவு வந்தாலும் வருமானம் குறையாது. பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும்.
திருவாதிரை
உங்களின் செயல்திறன் கூடும் மாதம் இது. நல்ல வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக் கூடிய அமைப்புகள் இந்த மாதம் அமையும். மாதமானால் ஒரு நிரந்தர வருமானம் வரக்கூடிய முன்னேற்றம், இப்போது உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். எந்த விஷயத்திலும் தயக்கத்தை உதறித் தள்ளி தன்னம்பிக்கையுடன் முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை கடுமையான முயற்சி எடுத்தும் பயன் இல்லாமல் போன விஷயங்கள் இந்த மாதம் அதிர்ஷ்டத்தினால் பலன் அளிக்கும்.
புனர்பூசம்
புனர்பூசத்தினர் இந்தமாதம் விடாமுயற்சியுடன் சாதிப்பீர்கள். புனர்பூசத்திற்கு இது ஆகாத மாதமில்லை. வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நிம்மதியும், பிரச்னை இல்லாமையும் உள்ள மாதம் இது. ஏற்கனவே இருந்து வரும் சிக்கல்கள் அனைத்தும் இனி படிப்படியாக தீர ஆரம்பிக்கும். பிறந்த இடத்தை விட்டு வெளிநாடு வெளி மாநிலங்களில் வேலை செய்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்க பெறுவீர்கள். சிலருக்கு அலுவலகங்களில் மேலதிகாரியிடம் பாராட்டுகளும், நற்பெயரும் கிடைக்கும்.
பூசம்
கடந்த சில மாதங்களாக கஷ்டங்களை அனுபவித்த பூசத்தினர் இந்த மாதம் பிரச்னைகள் நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். இனி கஷ்டங்கள் வர வாய்ப்பில்லை. இனி உங்களுக்கு நல்ல காலம்தான். மாதம் முழுவதும் உங்களுக்கு மன தைரியத்தைத் தரும் நிகழ்வுகளே நடக்கும். டிசம்பர் மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித்தொழில் செய்வோர், வங்கிகளில் வேலை செய்வோர் போன்ற எல்லாத் துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும்.
ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தினர் துடிப்புடன் செயலாற்றி வெற்றி பெறும் மாதம் இது. சிலருக்கு சுபகாரியச் செலவுகள் இருக்கும். உதவிகள் கிடைக்கும். உறவினர், உடன்பிறந்தோர்ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். கூட்டுத்தொழில் நல்லபடியாக நடக்கும். பங்குதாரர் நண்பர்களால் லாபம் உண்டு. பெண்களால் லாபம் கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். காவல் துறையினருக்கு நல்லபலன்கள் நடக்கும். வியாபாரம் லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
மகம்
மகம் நட்சத்திரப் பெண்களுக்கு இது நல்ல மாதம். உங்களில் சிலருக்கு இந்த மாதம் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொழில் விரிவாக்கம், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்களை இந்த மாதம் செய்யலாம். எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிருங்கள்.
பூரம்
பூரத்தால் இந்த மாதம் எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் எதுவும் ஏற்படாது. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். முயற்சிகள் பலித்து நல்ல லாபம் வரும். வெளிநாடு, வெளி மாநில விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வெகுநாட்களாக மனதில் ஊறப்போட்டு வைத்திருந்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைப்பீர்கள். கணினித் துறையினருக்கு மன அழுத்தம் குறையும். சிலருக்கு தூரப் பயணங்கள் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு திருமணம் உறுதியாகும்.
உத்திரம்
இளைய பருவத்தினருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும் மாதம் இது. சூரியனின் சுப வலுவால் மாத முற்பகுதியில் நல்ல பணவரவு இருக்கும். சிலருக்கு வராது என்று கைவிட்ட தொகை வரும். சிரமங்கள் தீரும். மனோதைரியம் கூடுதலாகும். சிலருக்கு மாத பிற்பகுதியில் தூரப் பயணங்கள் அமையும். பிரயோஜனம் இல்லாத பயணத்தால் சலிப்படைவீர்கள். வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்லவேலை கிடைக்கும். மகன், மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்துவதற்கு. முன்னேற்பாடுகள் இந்த மாதம் உண்டு.
அஸ்தம்
உங்களில் சாப்ட்வேர் மற்றும் எழுத்து துறைகளில் இருப்பவர்கள் இந்தமாதம் உயர்நிலை முன்னேற்றம் அடைவீர்கள். உங்களுக்கு இப்போது நல்ல மாற்றம் உண்டு. கணவன் மனைவி உறவில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். சொந்தவீடு, வாகனம் இல்லாதவர்களுக்கு இப்போது அமையும். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். கையில் இருக்கும் சேமிப்பை செலவிட வேண்டியது இருக்கும். அப்பா விஷயத்திலும், தந்தைவழி உறவினர் விஷயத்திலும் சாதகமற்ற பலன்கள் நடக்கும்.
சித்திரை
மாத ஆரம்பத்தில் உங்களுக்கு குழப்பங்களும், தடுமாற்றங்களும் இருக்கும். பதினைந்தாம் தேதிக்குப் பிறகு சமாளித்துக் கொள்வீர்கள். வாக்குக் கொடுத்தால் நிறைவேற்றுவது கடினம். எவருக்கும் உறுதி கொடுக்க வேண்டாம். குறுக்கு வழிகளில் வரும் வருமானத்தின்போது கவனமுடன் இருப்பது நல்லது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். நட்சத்திர நாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால் உங்களில் சிலருக்கு எதிர்பார்த்த பதவிகள் உண்டு. அதேநேரம் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.
சுவாதி
சுவாதிக்கு ஒரு குறிப்பிட்ட பலனாக இந்த மாதம் தாய்வழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும். அம்மாவின் ஆதரவும் உண்டு. மாதத்தின் பிற்பகுதி நாட்கள் வெற்றி தரும். சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெண்களுக்கு அலுவலகத்தில் உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் வரும். அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.
விசாகம்
விசாகத்தின் வசந்த மாதம் இது. நல்ல மாற்றங்களை இந்த மாதம் உணருவீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு சந்தோஷமாக இருப்பீர்கள். வனத்துறையில் வேலை செய்பவர்கள், காடுகளில் பயணம் செய்பவர்கள் கவனமுடன் இருங்கள். மாணவர்கள் மற்ற விஷயங்களை தள்ளி வைத்து விட்டு படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் நன்மைகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். அப்பாவின் அன்பு கிடைக்கும். எதிலும் பற்றாக்குறை இருக்காது. டிசம்பர் உங்களுக்கு நல்ல மாதம்தான்.
அனுஷம்
அடுத்த வருடம் முதல் நீங்கள் நன்றாக இருக்கப் போவதற்கான அச்சாரம் போடும் மாதம் இது. அனுஷத்திற்கு இனி அல்லல்கள் எதுவும் இல்லை. முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிப்பீர்கள். குறிப்பிட்ட ஒரு பலனாக இதுவரை இருந்து வந்த சோம்பல் உணர்வும், மனக்கலக்கமும் விலகும். வாழ்வில் இனி கேட்டது கிடைக்கப் போகிறது. தோல்விகளையே சந்தித்தி வந்த உங்களில் சிலர் இந்த மாதம் நமக்கும் நல்லது நடக்கிறதே, வெற்றி வருகிறதே என்று உள்ளுக்குள் உணருவீர்கள்.
கேட்டை
இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும் உற்சாகமான மாதம் இது. குறிப்பிட்ட சிலர் ரகசியமான காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு தீர்வு கிடைக்கும். தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வேதனைகளையும் அவமானங்களையும் சந்தித்த இளைய வயது கேட்டையினர் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வீடு சம்மந்தமான முயற்சிகளை சிலர் எடுப்பீர்கள். கேட்டைக்கு இனி கெடுதல்கள் சொல்ல ஏதும் இல்லை.
மூலம்
டிசம்பர் மாதம் தடைகளைக் கொடுத்தாலும் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். ராசியில் சனி இருப்பதால் மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும், மனஸ்தாபமும் இருக்கும். வேலை கிடைக்காவர்களுக்கு தூர இடங்களில் வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் உண்டு. கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும். விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள்.
பூராடம்
வேலை செய்யும் இடங்களில் பேச்சில் கவனமாக இருங்கள். வாக்குவாதங்கள் வேண்டாம். சுற்றியுள்ளவர்கள் எதிரியாகும் அமைப்பு இருக்கிறது. பழகியவர்களே உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்கள் நட்சத்திரத்திலேயே சனி சென்று கொண்டு இருப்பதால் மனக்கலக்கம் தரும் விஷயங்கள் சிலருக்கு நடக்கும். பெண்கள் விஷயத்தில் வேதனை வரும். சுற்றியுள்ளவர்கள் வெறுப்பேற்றுவார்கள். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சனி உங்களை கோபக்காரனாக்குவார் என்பதால் எதிலும் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.
உத்திராடம்
கிரக நிலைகள் பெரிய அளவிற்கு சாதகமாக இல்லை. உங்கள் முயற்சியினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் மாதம் இது. எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். குறிப்பிட்ட பலனாக வீண் பழியினால் வேலை மாற்றும் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். சிலர் ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஞானிகளின் திருத்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். எதுவும் முயற்சிகளுக்குப் பிறகே பலன் தரும் மாதம் இது.
திருவோணம்
பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் உள்ள மாதம் இது. அவரவரின் பிறந்த ஜாதக நிலைப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில மனக் கஷ்டங்கள் இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. உங்களில் சிலருக்கு சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை இருக்கும். யாருக்கும் உறுதி அளிக்க வேண்டாம். கலக்கம் தந்தாலும் தீர்வையும் தரும் மாதம் இது.
அவிட்டம்
உங்களில் கும்பத்தினர் சந்தோஷப்படும் மாதம் இது. நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகள் இந்த மாதம் அமையும். சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. குறிப்பிட்ட பலனாக முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவீர்கள். பெண்களால் செலவுகள் இருக்கும். சந்தோஷ மாதம் இது.
சதயம்
மாத ஆரம்பத்தில் நடக்கும் விஷயங்களால் சிறிது நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு ஜெயித்து காட்டுவீர்கள். சதயம் நன்றாக இருக்கும் மாதம் இது. இளையவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் இருக்கும். ஒரு சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணையை இன்னார்தான் என்று தெரியாமல் சந்திப்பீர்கள். சிலர் ஆன்மிக யாத்திரை செல்வீர்கள். மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான மாதம் இது.
பூரட்டாதி
உங்களில் சிலருக்கு இந்தமாதம் வாழ்க்கைத்துணை விஷயத்தில் கோபங்கள் இருக்கும். பொறுத்துப் போவது நல்லது. குடும்ப விஷயத்தில் ஏறுக்குமாறான நிகழ்ச்சிகளும் கசப்பான அனுபவங்களும் இருக்கும். அதேநேரத்தில் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் முன்னேற்றமாக இருக்கும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு வயதிற்கேற்ற அனுபவங்கள் கிடைக்கும். தாயை விட்டு பிரிந்து இருப்பவர்களுக்கு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணவரவு தடைபடாது.
உத்திராட்டாதி
டிசம்பர் மாதம் உத்திராட்டாதிக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். செய்யும் முயற்சிகள் மாத ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தாலும் பிற்பகுதியில் வெற்றி பெறும். ஐந்தில் இருக்கும் ராகு பணவரவுகளையும், வருமானங்களையும் கட்டுப்படுத்துவார் அல்லது தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். குறைகள் இல்லாத மாதம் இது.
ரேவதி
கிரகநிலை சாதகமாக இருப்பதால் லட்சியங்களை இப்போது நிறைவேற்றி கொள்ள முடியும். பொருத்தமான வேலை அமையும். கணவன் மனைவி இந்த மாதம் சண்டை போட மாட்டீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. இளைஞர்களுக்கு மாற்றங்கள் உருவாகும். வீட்டுக்கனவு நனவாகும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். குழந்தைகளின் மேல் அக்கறை வையுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரேவதி சாதிக்கும் மாதம் இது.
No comments :
Post a Comment