Monday, November 26, 2018

Kanni: 2019 New Year Palangal - கன்னி: 2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி


கைப்பேசி : 8681 99 8888

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டான 2019-ம் வருடம் வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களைக் கொடுக்கின்ற வருடமாக இருக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வருட ஆரம்பத்தை விட ஆண்டின் பிற்பகுதியில் கிரக அமைப்புகள் நல்லமுறையில் இருப்பதால் உங்களுடைய தொழில்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்ற வருடமாக இது அமையும். 

இளைய பருவ கன்னி ராசிக்கார்கள் பலர் கடந்த ஆண்டு அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் நான்காமிடத்து சனியின் பாதிப்பினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பாதிப்புகளை அடைந்து தன்னம்பிக்கையை இழந்திருக்கிறீர்கள். 

சிலருக்கு நல்லவேலை இல்லை, சிலருக்கோ வேலையே இல்லை. இன்னும் சிலருக்கு கிடைத்த வேலை கை நழுவிப் போய்விட்டது. இன்னும் சிலரின் வாய்ப்பை அடுத்தவர்கள் தட்டிப்பறித்து சென்றுவிட்டார்கள் என்ற நிலைதான் சென்ற வருடம் கன்னி ராசிக்கு நடந்து கொண்டிருந்தது. 

அதிலும் கோட்சார ரீதியில் நான்காமிடச் சனி ஒரு அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சங்கடங்களையும், நிர்வாகச்சிக்கல்களையும் தரும் என்பதன்படி பொறுப்பில் இருக்கும் கன்னி ராசிக்காரர்களின் ஆளுமைத்திறன், சனி ராசியைப் பார்ப்பதால் பாதிக்கப்பட்டு உங்களில் சிலர் நற்பெயரை இழந்து விட்டிருப்பீர்கள். இது போன்றவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு புத்துணர்வும், நற்பெயரும் கிடைக்கும் என்பதால் பெரியவருத்தங்கள் எதுவும் இந்தவருடம் கன்னிக்கு இல்லை. 

கடந்த சில மாதங்களாக உங்களை தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த நான்காமிட சனி அமைப்பில், சனியை சூட்சும வலுப்படுத்தும் விதமாக வரும் மார்ச் துவக்கத்தில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலமாக கேதுபகவான் சனியுடன் இணைகிறார். இது சனியின் கெடுபலன்களைக் குறைத்து உங்களுக்கு நன்மை செய்யும் அமைப்பு. 

மார்ச் மாதம் 6 ம் தேதி நடக்க இருக்கும் இந்தப் பெயர்ச்சி மூலமாக உங்களுக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாக வருடம் பிறந்ததில் இருந்தே உங்களைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சினைகளும் குறைய ஆரம்பிக்கும். 

உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும் வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை விலகி தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும். 

அதேநேரத்தில் வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

பெரிய அளவில் பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது. அர்த்தாஷ்டமச்சனி அடுத்த வருடத்தில்தான் விலகுகிறது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. 

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் சிலருக்கு உருவாகும். 

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது நன்மை தரும் காலம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும். 

தொழிலதிபர்கள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர், இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் முன்னேற்றம் காணுவீர்கள். குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும். 

அரசு தனியார்துறைகளில் பணிபுரிபவர்கள் சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும். 

பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். 

இதுவரை செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதைக் கவனமாகச் செய்யுங்கள். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது. 

சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆகவேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்னையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். கடன் வாங்குவதால் பிரச்சனைகள் தீராமல் இன்னும் அதிகமாகவே செய்யும். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவது சட்டியிலிருந்து தப்பித்து அடுப்பில் விழுந்த கதை ஆகிவிடும். 

சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் அதனை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை தாமதமாகி வந்த வங்கிக்கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார். ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட்கார்டு உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும். 

யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது. 

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம். 

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. 

அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. 

பெண்களுக்கு இந்த வருடம் நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள் 

உங்களில் சிலருக்கு இந்தவருடம் மேற்கு நாடுகளுக்கு வேலை, தொழில் விஷயமாக பயணப்படுதலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வேலை அமைதலும் இருக்கும். இன்னும் சிலருக்கு முஸ்லிம், கிறித்துவ நண்பர்கள், அமைப்புகள், பங்குதாரர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பிறப்பால் முஸ்லிம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதத்தினர் மூலம் நல்லவைகள் நடக்கும். 

கேது பகவான் பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோகநிலையில் அமரும் போது மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைத் தந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவார். அதன்படி இம்முறை அவர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் இருப்பதால் சாதுர்யமான வழிகளில் உங்களை ஈடுபடுத்தி தனலாபத்தைத் தருவார். 

கேது சாதகமான அமைப்பில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் சிலர் இந்த வருடம் திடீர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் இந்த வருடம் உங்களால் சாதிக்க முடியும். 

எப்படிப் பார்த்தாலும் உங்களின் எதிர்கால நன்மைக்கு அச்சாரம் போடும் வருடமாக புது வருடம் அமையும் என்பது உறுதி.

No comments :

Post a Comment