Tuesday, November 13, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள்- 213 (13.11.18)


ஆர். அகிலா, பெங்களூர். 

கேள்வி. 

என் அண்ணனுக்கு வரும் சுக்கிர தசையில் திருமணம் நடைபெறுமா? இதுவரை அவனுக்கு நிரந்தரமான வேலை அமையவில்லை. 10 இடங்களுக்கு மேல் வேலை பார்த்து விட்டான். நடக்கும் சுக்கிரதசையில் சினிமாவில் நுழைந்தால் வெற்றி பெற்ற நடிகராக வர முடியுமா? பேரும் புகழும் பெற முடியுமா? சினிமாத்துறையில் முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என எது கிடைக்கும்? ஜாதகப்படி லக்னத்திற்கு 12ல் சுக்கிரன்- ராகு, ராசிக்கு நான்கில் சுக்கிரன்- ராகு, சூரியனுக்கு 11ல் சுக்கிரன்-ராகு என நன்றாக உள்ளது. குருசந்திர யோகம், புதாதித்ய யோகம், மாளவ்ய யோகம், விமல யோகம் உள்ளது. பனிரெண்டில் உள்ள சுக்கிரன்-ராகு கெட்டவன் கெட்டிடில் ராஜயோகம் அடிப்படையில் உள்ளதா? என் அண்ணன் அம்பாள் உபாசகராக விரும்புகிறான். ஜாதகப்படி இது ஒத்து வருமா? தொழில், வேலை, சினிமா, ஜோதிடம் இதில் எது சுக்கிரதசையில் கைகொடுக்கும்? 43 வயது முதல் 63 வயது வரை உள்ள நீண்ட சுக்கிர தசை எப்படி இருக்கும்? 


பதில். 

(விருச்சிக லக்னம், கடக ராசி. 2ல் சூரி, புத, 5ல் குரு, 6ல் கேது, 7ல் செவ், 9ல் சந், சனி, 12ல் சுக், ராகு. 21-12-1975, அதிகாலை 4 மணி, திருச்சி) 

ஒரு அண்ணனின் மேல் பாசமுள்ள தங்கையாக இருந்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். சாமியாராகும் எண்ணமுள்ளவன் பெண் சுகம் அதீதமாகக் கிடைக்கும் துறையில் சாதிப்பானா என்று கேட்கிறீர்கள். கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் சினிமாத்துறையில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருபவர்களில் அதிகம் பேர் மது, மாது சுலபமாக கிடைக்கும் என்று வருபவர்கள்தான். ஏதோ ஓரிருவர்தான் உண்மையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் வந்து நிஜமாகவே சாதித்துக் காட்டுபவர்கள். 

இயல்பாகவே, ஒரு மனிதன் பிறந்தது முதல் தனக்கு ஆர்வமிருக்கும் துறைகளில் மட்டுமே முன்னேற்றத்தை அடையமுடியும். வேண்டாவெறுப்பாக ஒரு துறையில் நுழைந்து அதில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியாது. நிறைய பெற்றோர் தன்னுடைய மகன் இப்படி வரவேண்டும் என்று ஆசைப்படுவதை போல என்னுடைய அண்ணன் சினிமா நடிகராக வர முடியுமா என்று நீங்கள்தான் ஆசைப்படுவது போல தெரிகிறது. 

43 வயதாகியும் உங்கள் அண்ணனுக்கு இன்னும் திருமணத்தை சுக்கிரன் தரவில்லை என்பதிலிருந்தே சுக்கிரன் இங்கே யோகத்தை தரும் அமைப்பில் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். சுக்கிரன் 4 டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து கிரகணம் ஆகியிருக்கிறார். இதுபோன்ற நிலைகளில் சுக்கிரனின் பலன்களை ராகுதான் தனது தசா,புக்திகளில் தருவார். அண்ணனின் ஜாதகத்தில் சுக்கிரன் முழுமையாக பலமிழந்து விட்டார். 

அந்த யோகம், இந்த யோகம் என்று மனக்கோட்டை கட்டாதீர்கள் என்று அடிக்கடி எழுதுகிறேன். நீங்கள் குறிப்பிடும் விமலா, கமலா, புதாதித்திய யோகம் எல்லாம் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜாதகத்தில் இருப்பதுதான். யோகம் இருக்கும் எல்லோரும் அதிர்ஷ்டசாலி இல்லை. அதற்கு ஒரு தனி அமைப்பு வேண்டும். 

ராசிக்கு நான்கில், லக்னத்திற்கு 12ல் இருக்கும் சுக்கிரன் மாளவ்ய யோகத்தை தரமாட்டார். ராகுவுடன் மிக நெருக்கமாக இணைந்த அவருக்கு பலம் இல்லை. அதைவிட மேலாக உங்களின் அண்ணனின் ஜாதகமே சற்று குழப்பமான வகையில்தான் அமைந்துள்ளது. எனது கணிப்பின்படி அவர் துலாம் லக்னத்தில் பிறந்திருக்கக்கூடும். அதிகாலையில் பிறந்த அவரின் நேரம் துல்லியமானதாக இருந்திருக்காது. ஐந்து நிமிடங்கள் முன்பு பிறந்திருந்தால் அவருடைய லக்னம் மாறும். லக்னாதிபதி வலுவிழந்தால்தான் வாழ்க்கையில் எதுவும் சரியாக அமையாது. 

அவருடைய குணங்கள் மற்றும் வாழ்க்கைச் சம்பவங்களின் மூலம்தான் நீங்கள் அவரது லக்னத்தை உறுதி செய்துகொள்ள முடியும். அளவுக்கு அதிகமான கோபம் இருந்தால் மட்டுமே அவர் விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்க முடியும். உங்கள் அண்ணன் மிதமிஞ்சிய கோபக்காரனா என்பதைக் கொண்டு அண்ணனின் லக்னத்தை முதலில் முடிவு செய்யுங்கள். 

“கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்ற பழமொழிகள் சுக்கிரனுக்காக சொல்லப்படவில்லை. முக்கியமாக அது அசுப கிரகங்களுக்கு சொல்லப்பட்டது. தவிர சுக்கிரனுக்கு பனிரெண்டாமிடம் கெட்ட இடமல்ல. உங்களைப் போன்ற ஆர்வலர்கள் இப்படித்தான் ஜோதிடத்தை தலைகீழாகப் புரிந்து கொள்கிறீர்கள். அண்ணனுடைய லக்னத்தை உறுதி செய்துகொண்டு, அதன்பிறகு லக்னாதிபதியை வலுப்படுத்தும் பரிகாரங்களை செய்த பிறகே அண்ணனுக்கு வாழ்க்கையில் முன்னேற்றங்கள் நடக்கும். அதுவரை ஒன்றும் சொல்வதற்கில்லை. 

வி. பாக்யராஜ், திட்டக்குடி. 

கேள்வி. 

வாழ்க்கையில் நான் கண்ட துயரங்கள் ஏராளம். அப்பா, அம்மா இல்லை. அண்ணன்-தம்பி பிரயோஜனம் இல்லை. சொந்த வீடும், நிரந்தர வேலையும் அமையவில்லை. திருமணமாகி ஏழு ஆண்டு காலம் ஆகிவிட்டது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த நாங்கள் காதல் கலப்புத் திருமணம் செய்து கொண்டோம். ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது என் மனைவி ஆண் குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டாள். விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாள். நான் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு யாருடைய ஆதரவும் இல்லாமல் தவிக்கிறேன். அவள் பெற்றோர்கள் சாதியை வைத்து எங்கள் இருவரையும் பிரித்து அவளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள். தயவுசெய்து என் மனைவி என்னோடு சேர்ந்து வாழ பரிகாரம் தாருங்கள். 

பதில் 

(மகர லக்னம், விருச்சிக ராசி. 1ல் சுக், 2-ல் புதன், 3-ல் சூரி, 6ல் ராகு, 9ல் செவ், சனி, 10ல் குரு, 11ல் சந், 12ல் கேது. 17-3-1982 அதிகாலை 3- 05 திட்டக்குடி) 

37 வயதாகியும் எனக்கு அம்மா-அப்பா இல்லை, அண்ணன்-தம்பி சரியில்லை என்று பிறரைக் குறை சொல்லும் நீங்கள், உங்கள் விருச்சிக ராசிக்கு கடந்த ஆறு வருடங்களாக ஏழரைச் சனியும் நடக்கும் நிலையில் காதல் மனைவியை வைத்து எப்படி நன்றாக குடும்பம் நடத்தியிருக்கப் போகிறீர்கள்? காதலிக்க தெரிந்த ஒருவனுக்கு நம்பி வந்தவளை நன்றாக வாழ வைக்கவும் தெரிந்திருக்க வேண்டும் இல்லையா? 

சுக்கிர தசை நடந்ததால் வயதிற்கேற்ற வகையில் உங்களுக்கு காதலை கொடுத்து விட்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு உங்களின் காதல் முழுக்க கசந்து போயிருக்குமே? இரண்டு பிள்ளைகளைப் பெறுவதில் உங்களுக்கு இருந்த ஆர்வம், அவர்களை நல்லபடியாக வளர்ப்பதிலும், வசதியாக வாழ வைப்பதிலும் இருந்திருக்க வாய்ப்பில்லை. 

கல்யாணமாகி ஏழு வருடங்கள் வரை உங்களை விட்டுவிட்ட அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் இப்போது எப்படி சாதியை “மட்டும்” வைத்து உங்களை பிரிக்கப் போகிறார்கள்? பெண்ணை நன்றாக வைத்திருந்தால் அவள் ஏன் அம்மா வீட்டிற்குப் போய் விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறாள்? அனைத்தும் கைமீறிப் போய் விட்ட நிலையில் இப்போது புலம்பி என்ன பிரயோஜனம்? 

ஜாதகப்படி மகர லக்னத்திற்கு வரக்கூடாத சூரியதசை தற்போது ஆரம்பித்திருக்கிறது. சூரியனுக்கு சுபத்தொடர்புகள் இன்றி, ராசியில் செவ்வாய், சனி பார்வையோடு, அம்சத்தில் நீச செவ்வாயுடன் இணைந்து பாபத்துவமாக இருக்கிறார். இந்த சூரிய தசையில் உங்களுக்கு வம்பு, வழக்கு, அசிங்கம், கேவலம்தான் மிஞ்சும். 

லக்னாதிபதி பலவீனமாகி, ராசியை சனி பார்ப்பதால் நீங்களே தன்னம்பிக்கை இல்லாதவராகத்தான் இருப்பீர்கள். சனிக்கான முறையான தானம் மற்றும் ப்ரீத்திகளை மாலைமலரில் முன்பே எழுதியிருக்கிறேன். அவற்றை செய்து கொள்ளுங்கள். சூரியதசையின் கெடுதல்களை ஓரளவிற்கு சமாளிக்க முடியும். கடுமையான அஷ்டமாதிபதி தசையும், ஏழரைச்சனியும் நடப்பதால் இப்போது பரிகாரங்களும் பலன் தராது. 

என். சிந்து, ஈரோடு-1 

கேள்வி. 

குருஜிக்கு வணக்கம். கடந்த ஆறு வருடங்களாக தங்கைக்கு கடுமையான திருமண முயற்சிகள் செய்கிறோம். எந்த வரனும் அமைவதில்லை அப்படியே அமைந்தாலும் ஏதேனும் ஒரு காரணத்தால் தடங்கலாகிறது. சில ஜோதிடர்கள் இந்த பெண்ணிற்கு வலுவான செவ்வாய் தோஷம் உள்ளது என்றும், வேறு சிலர் இரண்டு திருமண அமைப்பு, சன்யாசி யோகம் உள்ளது என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர் பரிகாரம் செய்து அடுத்த வருடம் திருமணம் செய்யலாம் என்றும், முன்கூட்டியே செய்தால் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்கின்றனர் பெண்ணின் வயது 28. இன்னும் தாமதம் செய்வதா என்ற குழப்ப நிலையில் இருக்கிறோம். தயவுசெய்து தாங்கள்தான் இதற்கு தீர்வை கூறவேண்டும். 

பதில். 

(விருச்சிக லக்னம், மகர ராசி. 2ல் புத, 3ல் சூரி, சந், சுக், சனி, ராகு, 7ல் செவ், 9ல் குரு, கேது 18-1-1991 அதிகாலை 4-10 கோவை) 

தங்கையின் ஜாதகப்படி லக்னத்திற்கு ஏழில் செவ்வாய், ராசிக்கு ஏழாமிடத்திற்கு சனி பார்வை, ராகு-கேது தொடர்பு என கடுமையான களத்திர தோஷ அமைப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற ஜாதகங்களுக்கு 30 வயதில் திருமணம் நடப்பதே நல்லது. 

ராசியில் நான்கு கிரகங்கள் ஒன்று கூடி இருப்பது தோஷம்தான் என்றாலும், அவற்றிற்கு உச்ச குருவின் பார்வை இருப்பதால் கெடுதல்கள் எதுவும் திருமண வாழ்வில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும் அடுத்த வருடம் விருச்சிக லக்ன பாபியான புதனின் புத்தி ஆரம்பிக்க உள்ளது. தசாநாதன் குருவும், புக்திநாதன் புதனும், ஆறுக்கு எட்டாக அமைந்துள்ளதால் திருமணத்தை தாமதித்து செய்வது நல்லது. 2019 முழுக்க திருமணம் செய்ய வேண்டாம். ஒரு வருடம் பொறுங்கள். நல்லது நடக்கும். வாழ்த்துக்கள்.

No comments :

Post a Comment