Saturday, October 20, 2018

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (22.10.2018 முதல் 28.10.2018 வரை)                 



மேஷம் :



ஆறுக்குடைய புதன் எட்டில் சுபரான குருவுடன் இணைவதால் இந்த வாரம் முதுகுக்குப் பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்கள். யாரையுமே இந்த வாரம் நம்ப வேண்டாம். வார ஆரம்பத்தில் நடக்கும் சில எதிரான விஷயங்களால் நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு ஜெயித்து காட்டுவீர்கள். உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள்.



தந்தைவழியில் எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், சுய தொழிலர்கள், விவசாயிகள், சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் நன்மை அடைவார்கள். பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு. வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் உண்டு.



ரிஷபம் :



ஆகாத எதிரிகளை நீங்கள் சிரித்த முகத்தோடு உறவாடிக் கெடுக்கும் வாரம் இது. எதிலும் நேர்வழியில் செல்லுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. செலவுகளைச் சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள்.



ராசிநாதன் சுக்கிரன் ஆறில் இருந்தாலும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் சாதகமற்ற பலன்களிலிருந்து மீண்டு வருவீர்கள். கடந்த காலங்களில் தொழில் விஷயங்களில் அகலக்கால் வைத்து புலிவாலைப் பிடித்தது போல் நடத்தவும் முடியாமல் விடவும் முடியாமல் திணறி கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் இப்போது பிறக்கும். குரு ராசியைப் பார்ப்பதால் உங்களைப் பிடிக்காதவர்கள் வீண் வம்புக்கு வந்து உங்களிடம் தோற்றுப் போய் பாடம் கற்றுக் கொள்வார்கள்.



மிதுனம் :



பெண்கள் மூலமான மனவருத்தங்களும் செலவுகளும் உள்ள வாரம் இது. அது சுபச் செலவா? அல்லது வீண்செலவா? என்பது உங்களுடைய பிறந்த ஜாதக அமைப்பை பொருத்தது. பொதுவாக இது மிதுனத்திற்கு நல்ல பலன்கள் நடக்கும் வாரம்தான். சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். அவசரத்திற்கு நண்பர்கள் உதவுவார்கள். அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு நல்லவை நடக்கும். சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு நல்ல பலன்கள் உண்டு.



மனைவி வழியில் அனுகூலம் இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாகப் பிரிவினைகள் முடிந்து உங்கள் பங்காக ஒரு நல்லதொகையோ, சொத்துக்களோ கிடைக்கும். இரண்டில் இருக்கும் ராகு ஆறில் உள்ள குருவின் பார்வையில் இருப்பதால் உங்களில் சிலருக்கு தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு. மிதுனத்திற்கு குறைகள் எதுவும் இல்லை.



கடகம் :



ராசிநாதன் சந்திரன் வார இறுதியில் குருவின் பார்வையில் உச்சவலு அடைவதால் உங்களில் சிலருக்கு இதுவரை இருந்து வந்த கடன், நோய், எதிரி தொந்தரவுகள் அனைத்தும் சாதகமாக மாறி தீர்வுக்கு வரும் வாரம் இது. இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் கால கட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். அதிர்ஷ்டம் கை கொடுக்கும் வாரம் இது.



வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். ராசியில் ராகு வலுவாக இருப்பதால் சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகை லாபங்களும் இன்னும் சிலருக்கு இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக வருமானங்களும் வரும். சனி நல்ல இடமான ஆறாமிடத்தில் இருப்பதால் எதிர்மறைபலன்கள் மாறி நல்லவைகள் நடக்கும். தொழில் விஷயங்களில் தடைகளை சந்தித்து கொண்டிருந்தவர்களின் தொழில் சிறக்கும். வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் இருக்காது.



சிம்மம் :



ராசிநாதன் சூரியன் நீச நிலையில் இருப்பதால் குழப்பங்களுடன் ஆரம்பிக்கும் வாரம் இது. உங்களில் சிலர் டல்லான மனநிலையில் இருப்பீர்கள். சிலருக்கு கடன் தொல்லைகளோ, எதிரி தொந்தரவோ, ஆரோக்கியக் குறைவுகளோ இருக்கும். எதுவானாலும் இரண்டு வாரங்களில் அனைத்தும் சரியாகும் என்பதால் குறை சொல்ல முடியாத வாரம் இது. கடன் வாங்கி வீடு அல்லது பிளாட் வாங்கும் யோகம் இருக்கிறது. ஹவுசிங் லோன் இப்போது கிடைக்கும். தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வியாபாரம் முன்னேறும்.



பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். நிறைவேறாமல் இருக்கும் நியாயமான விஷயங்கள் நிறைவேறும். இளைய பருவத்தினர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாரம் இது. 22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி அதிகாலை 1.12 மணி முதல் 24-ம் தேதி காலை 9.22 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.



கன்னி :



வாரம் முழுவதும் யோகாதிபதி சுக்கிரன் வலுவான அமைப்பில் இருப்பதால் கன்னியின் பணக்கஷ்டங்கள் தீரும் வாரம் இது. இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு, வீடு அமைவதற்கான ஆரம்பக் கட்ட நிகழ்வுகள் இருக்கும். சிலருக்கு சிந்தனை முழுவதும் சொந்த வீட்டைப் பற்றியே சுற்றிச் சுற்றி வரும். சொத்துக்கள் சேரும் வாரம் இது. விரையாதிபதி சூரியன் சுக்கிரனுடன் இணைந்து நீசமாவதால் பெண்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் சமாளிக்க முடியும்.



சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் வரும். நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது, எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். 24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம் தேதி காலை 9.22 முதல் 26-ம் தேதி மதியம் 2.54 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.



துலாம் :



ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் சிக்கல்களுக்கு தீர்வுகள் வரும் வாரம் இது. புதிதாக எந்த சிக்கல்களும் வராது. எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம். என்ன பிரச்னைகள் இருந்தாலும் பணத்திற்கு தட்டுப்பாடு இருக்காது. எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும். துலாம் ராசிக்கு தடைப்பட்டிருந்த யோக அமைப்புகள் மற்றும் இதுவரை கிடைக்காமல் போன பாக்கியங்கள் அனைத்தும் இனிமேல் கிடைக்கும். துலாம் ராசிக்காரர்களின் செயல்திறன் வெளிப்படும் வாரம் இது.



மூன்றில் இருக்கும் சனியின் வலுவினால் தடைகள் அனைத்தையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்தவர்கள் நன்மைகள் நடப்பதை உணருவீர்கள். 22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம் தேதி மதியம் 2.54 முதல் 28-ம் தேதி மாலை 6.51 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.



விருச்சிகம் :



விருச்சிகத்திற்கு அற்புதமான வாரம் இது. வாரம் முழுவதும் சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால், இனி உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். நல்ல செயல் திறனுடன் இருப்பீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தையும் அனுபவங்களாக ஏற்றுக் கொண்டு இனிமேல் எதையும் சுலபமாக சமாளிப்பீர்கள். எதிலும் சீக்கிரமாக நல்ல முடிவு எடுப்பீர்கள்.. விருச்சிகத்திற்கு இருந்து வந்த தடை இனி நீங்கும் கடவுள் அருள் உங்கள் பக்கம் என்பதால் இனி உங்களுக்கு எதிலும் வெற்றிதான்.



முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இனி நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுபகாரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். உங்களில் சிலருக்கு பணம் வருவதற்கு பொய் சொல்ல வேண்டி இருக்கலாம். சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும்.



தனுசு :



இளைய பருவ தனுசு ராசிக்காரர்கள் தற்போது வேலை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் அமைப்புகள் எதையும் தொடங்காமல் இருப்பது நல்லது. உங்களில் பூராடம் நட்சத்திரக்காரர்களின் மனம் எதிலும் நிலை கொள்ளாமல் சரியான முடிவுகள் எடுக்கத் தடுமாறும். உங்களில் டைவர்ஸ், அடிதடி, போலீஸ் கோர்ட் என்று அலைந்து கொண்டிருப்பவர்களின் வழக்கு சாதகமாக இருக்காது. ராசிநாதன் வலிமையிழந்த நிலையில் இருப்பதால் ரிஷபராசிக்காரர்களின் எண்ணங்கள் யாவும் தடையாகும் வாரம் இது.



ஒன்பதாம் அதிபதியான சூரியன் வலுவிழப்பதால் ஏற்கனவே தாயை இழந்து தந்தையை மட்டும் கொண்டவர்கள் அவரது ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும். வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் மூலத்தினருக்கு சங்கடங்கள் இருக்கும். உங்களை வெறுப்பேற்றிப் பார்ப்பதற்கே பக்கத்தில் உள்ளவர்கள் ஆசைப்படுவார்கள். நீங்களும் அதற்கேற்றார்ப் போலத்தான் நடந்து கொள்வீர்கள். எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பதோடு வீண்வம்பு விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.



மகரம் :



ஏழரைச் சனி நடந்து கொண்டிருப்பதால் மகரத்தினர் யாரையும் நம்பி அதிகமான பண முதலீடு செய்வது கூடாது. இளைஞர்கள் புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்ய வேண்டும். புதியமுயற்சிகள் இப்போது கை கொடுக்காது. எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே கண்ணும் கருத்துமாக திறம்பட செய்வது நல்லது. உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும்.



கணவன் மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் சுமாராகவே இருக்கும். கோர்ட் கேஸ் இருப்பவர்கள் வழக்கை முடிக்குமாறு அவசரப்பட வேண்டாம். முக்கியமான துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். குழந்தைகளை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வரும். ஷேர் மார்க்கட் இந்த வாரம் வேண்டாம்.



கும்பம் :



ராசிநாதன் வலுவாக இருப்பதால் கும்பத்தினருக்கு கெடுதல்கள் எதுவும் சொல்வதற்கு இல்லை. மனக்கலக்கம் எதுவும் உங்களுக்கு இருக்காது. சிலருக்கு தொழில் துறையில் நன்மைகள் நடக்கும். பரபரப்பாக பிசியாக இருப்பீர்கள். ஒன்பதாமிடத்தில் சூரியன் நீசமாக இருப்பதால் தகப்பனார் உடல்நிலையில் கவனம் வைக்க வேண்டும். எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைக்கும். என்னதான் அடுத்தவர் உதவினாலும் நம்முடைய கை உழைத்தால்தான் நமக்கு நிம்மதி என்று நினைக்கக்கூடிய உங்களுக்கு இது நல்ல வாரம்தான்.



நீண்டகால பகை ஒன்று தீர்ந்து சமரசம் ஆவீர்கள். இளையபருவத்தினர் சிலர் எதிர்மறை பலன்களால் தன்னம்பிக்கை இன்றி இருப்பீர்கள். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது போல ஏதேனும் நல்ல நிகழ்ச்சிகள் உண்டு. சிலருக்கு இருந்து வந்த கடன் தொல்லைகளும் பொருளாதார சிக்கல்களும் மாறும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு தாயார் வழியில் நல்ல நிகழ்ச்சிகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும்.



மீனம் :



கோட்சார நிலைமைகள் சாதகமாக இல்லாமல் இருந்த நிலைமை மாறி தற்போது மீனராசிக்கு எல்லாமே சுபமாக முடியக்கூடிய காலகட்டம் கூடி வந்திருப்பதால், இதுவரை நடக்காமல் இருந்த அனைத்து நல்ல விஷயங்களும் இப்போது நடக்கும். கடந்த காலங்களில் எதுவுமே கைவரப் பெறாமல் நிம்மதியில்லாத சூழல்களில் இருந்து வந்த மீனத்தினர் அனைத்தும் மாறி நன்மைகள் நடக்கப் போவதை உணருவீர்கள். இனி எல்லாம் உங்களுக்கு சுபம்தான். உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும்.



வாரம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும். பெண்களுக்கு நல்ல வாரமாக இது அமையும். இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் கைகொடுக்கும். திருமணம் கூடி வரும்.

No comments :

Post a Comment