அஸ்வினி :
அஸ்வினிக்கு நல்ல மாற்றங்களை தரும் மாதம் இது. நட்சத்திரநாதன் கேது
ராசியாதிபதி செவ்வாயுடன் யோக நிலையில் சேர்ந்திருப்பதால் இந்த மாதம் உங்களுடைய
எதிர்காலத்திற்கு தேவையான அடிப்படை நல்ல விஷயங்களை செய்து தரும். இளைஞர்கள்
சிலருக்கு வேலை விஷயங்களில் நினைத்த மாதிரியான நன்மைகள் இருக்கும்.
இரண்டாமிடம் வலுப்பெறுவதால் பேசிப் பிழைக்கும் தொழில் செய்பவர்களான ஆசிரியர்,
வக்கீல், மார்க்கெட்டிங் துறையினருக்கு யோக மாதம் இது.
பரணி :
உங்களில் சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம், லாட்டரி போன்றவைகளில் இந்த மாதம்
அதிகமான ஈடுபாடு வரும். எதிலும் கவனமாக இருங்கள். பேராசை பெரு நஷ்டம் என்பது
இப்போது நிரூபிக்கப்படும். அதேநேரத்தில் உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரன்
ஆட்சி, மற்றும் ராசிஅதிபதி செவ்வாய் உச்சமாக இருப்பது நல்ல பலன்களை தரும்
என்பதால் அக்டோபர் மாதம் உங்களுக்கு ஆனந்த மாதம்தான். குடும்பத்தில் சந்தோஷ
சூழ்நிலை உண்டு. வேலை தொழில் போன்ற ஜீவன விஷயங்களில் குறைகள் எதுவும் இந்த
மாதம் இல்லை.
கிருத்திகை :
உங்களில் ரிஷபராசிக்கு வளர்ச்சியை தரும் மாதம் இது. நடுத்தர வயதை
தாண்டியவர்கள் மட்டும் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு
கடன்தொல்லைகள் கவலைகளை தரும். ஆயினும் எதுவும் எல்லை மீறாது. நட்சத்திர நாதன்
சூரியன் மாத பிற்பகுதியில் நீச நிலையை அடைவதால் அறிமுகம் இல்லாத ஒருவரால் 15
ம் தேதிக்குப் பிறகு எதிர்ப்புகளையும் தொல்லைகளையும் அனுபவிப்பீர்கள். புதிதாக
நண்பராகும் எவரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். பொதுவில் இது நல்ல
மாதம்தான்.
ரோகினி :
ரோகிணியினர் முழுமுனைப்புடன் செயலாற்றும் மாதம் இது. உங்களுடைய ஈகோ
தூண்டிவிடப் பட்டு நாம் யார் என்று நிரூபிக்க வேண்டும் என்று செயல்படுவீர்கள்.
உங்களுடைய முழுத்திறமையையும் இப்போது உணருவீர்கள். இளையவர்கள் சிலர் திசை
மாறும் மாதம் இது. வேண்டாத நண்பர்கள் இந்த மாதம் கிடைப்பார்கள். தவறான
பழக்கங்கள் அறிமுகப்படுத்தப் படும். உஷாராக அன்னப் பறவை போல இருங்கள். பெண்கள்
சிலருக்கு வேண்டாத நட்புகள் கிடைக்கும். அதானால் அடுத்த வருடம் பிரச்னை வரும்.
மிருகசீரிடம் :
உங்களில் ரிஷபராசி இளையபருவத்தினர் வேலை, தொழில் விஷயங்களில் திக்குத்தெரியாத
காட்டில் இருக்கும் நிலையில் இருப்பீர்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும்
எதிர்ப்புகளும் சாதகமற்ற பலன்களும் தற்போது ஜீவன விஷயத்தில் உங்களுக்கு நடந்து
கொண்டிருக்கிறது. யாரும் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்களில் மிதுன
ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டு. சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு
மாறுதல், ஊரை விட்டு மாறுதல், தூர இடங்களுக்கு செல்லுதல் போன்ற பலன்கள்
இப்போது உண்டு.
திருவாதிரை :
உங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் இருப்பவர்களால்
ஏமாற்றங்கள் இருக்கும். நம்பிய ஒருவரால் எதிர்பாராத விஷயங்கள் நடப்பதை
பார்ப்பீர்கள். இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையை உணர்ந்து புரிந்து கொள்ளக்
கூடிய சம்பவங்கள் நடக்கும். குறிப்பாக ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும்
புரிய வைக்கும் மாதமிது. வருமானத்திற்கு எவ்வித குறையும் இருக்காது.
எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தரும் என்பதால் உங்களுக்கு இது சுமாரான
மாதம்தான்.
புனர்பூசம் :
உங்களில் கடக ராசியினர் இந்த மாதம் நன்மைகளை அடைவீர்கள். அடுத்து வரும் ஒரு
வருட காலம் உங்களுக்கு மேன்மைகளையும். பொருளாதார நன்மைகளையும் தரும் என்பதால்
அதற்கு ஆதாரமாக சில விஷயங்கள் நடக்கும் மாதமிது. புதிதாக ஒரு நண்பரோ அல்லது
ஒரு தொழில்துறை நபரோ இந்த மாதம் அறிமுகமாவார், அவர்மூலம் உங்களுடைய
முன்னேற்றங்கள் இருக்கும். சிலருக்கு வயதுக்கேற்ற வகையில் நீண்டகாலமாக
எதிர்பார்த்து கிடைக்காமல் இருந்த ஒரு விஷயம் இப்போது நடக்கும்.
பூசம் :
பூசத்திற்கு நேசமானவர்களிடமிருந்து நன்மைகள் நடக்கும் மாதம் இது. இதுவரை
தேடிப்போய் கேட்டிருந்தும் கிடைக்காத உதவிகள் இப்போது கேட்காமலேயே தேடி வரும்.
நீங்களும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் தகுதியில் இருப்பீர்கள். இளைய
பருவத்தினருக்கு யோக மாதம் இது. உங்களுடைய எதிர்காலத்திற்கான அடிப்படை
விஷயங்கள் இப்போது நடக்கப் போகிறது. பரம்பொருளின் அருளினால் எதிலும் துணிந்து
இறங்கி நீங்கள் சாதிக்க மாதமிது. கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் கெடுதல்கள்
எதுவும் இந்த மாதம் இல்லை.
ஆயில்யம் :
அக்டோபர் மாதம் உங்களுக்கு சந்தோஷங்களை மட்டும் தருகின்ற மாதமாக இருக்கும்.
நட்சத்திரநாதன் புதன் வலுவாக இருப்பதால் எதையும் புத்திசாலித்தனத்துடன்
சாதிப்பீர்கள். உங்களில் நிரந்தர வருமானம் இன்றி அவதிப்படுகிறவர்கள் இப்போது
நிலையான பணவரவு ஏற்படுவதை உறுதி செய்து கொள்வீர்கள். கடந்த காலங்களில் திருமண
வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாமல் இருந்தவர்களுக்கும், விவாகரத்து வழக்குகளில்
அலைந்து கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வு இந்த மாதம் உண்டு
மகம் :
மகம் நட்சத்திரக்காரர்கள் சாதிக்கும் மாதமிது. உங்களில் சிலருக்கு கடந்த சில
மாதங்களாகவே தொழில் அமைப்பிலும், சொந்த வாழ்க்கையிலும் நல்ல விஷயங்கள்
நடைபெறவில்லை. குறிப்பாக அலுவலகங்களில் நீங்கள் என்ன சொன்னாலும் அதை எதிர்த்து
சொல்வதற்கும், உங்களைப் பற்றி புறம் பேசுவதற்கும் ஆட்கள் இருந்தார்கள். இவை
அனைத்தும் தீருகின்ற நல்ல மாதம் இது, சுற்றியுள்ள எதிர்ப்புகள் விலகும்,
சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம், லாட்டரி போன்ற ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம்
லாபம் கிடைக்கும்.
பூரம் :
பூர நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும் நிலையிலிருந்து இந்த மாதம் மாற்றம்
உண்டு. அதிக முயற்சி செய்தும் பலனில்லாமல் தவித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு
இந்த மாதம் அதிகமான முயற்சியின்றியே அத்தனையும் நடக்கும். நட்சத்திரநாதன்
சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் மனம் சந்தோஷப்படுகின்ற நிகழ்வுகள் மட்டுமே
இருக்கும். உங்கள் சொல்லை மற்றவர்கள் கேட்பார்கள். வாழ்க்கை துணையிடம் இருந்து
அனுகூலம் உண்டு. கூட்டுத் தொழில் மேம்படும். நண்பர்கள் உதவி இருக்கும்.
உத்திரம் :
உங்களில் கன்னி ராசிக்காரர்களுக்கு விரயங்கள் அதிகமாக இருக்கும் மாதமிது.
கிரெடிட் கார்டு என்ற ஒன்று இருப்பதை மறந்து விடுவது நல்லது. இந்த மாதம்
தேவையற்ற செலவுகள் செய்வீர்கள். நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் செய்துதான்
ஆகவேண்டும் என்கின்ற சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். மாத பிற்பகுதியில்
நட்சத்திரநாதன் சூரியன் நீசபங்கநிலையை அடைவதால் மூன்றாவது வாரத்தில்
அனைத்தையும் சீர்படுத்திக் கொள்வீர்கள். செலவுகளை தந்தாலும் அக்டோபர் மாதம்
உங்களுக்கு நல்ல மாதம்தான்.
அஸ்தம் :
அக்டோபர் மாதம் உங்களுக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதம்தான். செய்யும்
முயற்சிகள் ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தாலும் பிற்பகுதியில் வெற்றி பெறும்.
அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.
கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல்
இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். வேலை, தொழில் விஷயங்களில்
முரண்பாடாக நடந்து கொண்டிருந்த விஷயங்கள் சீரடைந்து தொழில் அமைப்புகளில்
நிம்மதி உண்டாகும்.
சித்திரை :
இந்த மாதம் ஈகோவை தவிர்ப்பதால் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். எதிலும்
அவசரம் வேண்டாம். பணியிடங்களில் வாக்குவாதத்தை தவிருங்கள். அரசு, தனியார்துறை
ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். மாத ஆரம்பத்தில் சற்றுச் சறுக்கி நம்பிக்கை
இழப்பது போல தெரிந்தாலும் சுதாரித்து கொண்டு ஜெயித்து காட்டுவீர்கள். உங்களின்
மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள்.
முதல்வாழ்க்கையில் கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது
வாழ்க்கையை அடைவார்கள்.
சுவாதி :
சுவாதியினர் இனிமேல் துடிப்புடன் செயலாற்றி எதிலும் வெற்றியை அடையப்
போகிறீர்கள். சிலருக்கு சுபகாரியச் செலவுகள் இருக்கும். கேட்கும் இடங்களில்
உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக
சமாளிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர் இணக்கமாக இருப்பார். நண்பர்களால்
லாபம் உண்டு. தொழில் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
தூரப்பயணங்கள் ஏற்படும். திருமணம் தாமதமானவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
பெண்களால் லாபம் கிடைக்கும் மாதம் இது.
விசாகம் :
விசாகத்தினரின் நல்ல மாதம் இது. இனிமேல் எதிலும் தடைகள் இருக்கப் போவது இல்லை.
இனி உங்களால் எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஏற்படாது. தொழில்,
வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும் லாபம்
வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு
காரியம் மனம் போல் நடக்கும். முக்கியமான துறைகளில் இருப்பவர்களுக்கு
நல்லமாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும்.
அனுஷம் :
இதுவரை பிரச்னைகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்தவர்கள், அவை நீங்கப்
பெறுவதை உணர ஆரம்பித்து நிம்மதி அடையத் துவங்குவீர்கள். இந்த மாதம் முழுவதும்
உங்களுக்கு மன தைரியத்தைத் தரும் நிகழ்வுகள் மட்டுமே நடக்கும். சிலர் ஆன்மிக
விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு திருப்பணிகள் செய்யும்
வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பும். சோதனைகள் முடிந்து
விட்டதால் வீடு கலகலப்பாக இருக்கும். பெண்களுக்கு வழக்கம்போல வீட்டிலும்
அலுவலகத்திலும் பணிச்சுமை இருக்கத்தான் செய்யும்.
கேட்டை :
இந்த மாதம் எதையும் சமாளிக்கும் தைரியம் உண்டாகும். அறிவால் சாதிப்பீர்கள்.
கடந்தகால சோதனைகளை மறந்து ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். சோதனைகள்
வரும்போதுதான் ஒரு மனிதனின் உண்மையான திறமை வெளியே தெரியும். கடந்த சில
வருடங்களில் கேட்டையினர் உங்களின் உண்மையான திறமைகளை தெரிந்து கொண்டீர்கள்.
இனிமேல் எதற்கும் கஷ்டம் இல்லை. அனுமார் நீங்கள். உங்கள் உயரம் உங்களுக்கே
தெரியாது. அடுத்தவர்கள்தான் எடுத்து சொல்ல வேண்டியிருக்கும். இனி கேட்டைக்கு
எந்தக் கஷ்டமும் இல்லை.
மூலம் :
அக்டோபர் மாதம் மூலத்திற்கு தடைகளைக் கொடுத்தாலும் எல்லாவற்றையும் நீங்கள்
சமாளிப்பீர்கள். மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து
வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் இருக்கும். இளைஞர்களுக்கு வேலை அமைப்புகளில்
திருப்தி இருக்காது. வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம்
வரும் ஆனால் சேமிக்கத்தான் முடியாது. அரசியல்வாதிகளுக்கும்,
காவல்துறையினருக்கும் நன்மைகள் உண்டாகும். நடுத்தர வயது மூலத்தினருக்கு
வெற்றியையும், லாபத்தையும் தரும் மாதம் இது.
பூராடம் :
அக்டோபர் மாதம் எதிலும் நீங்கள் முட்டி மோதும் மாதமாக இருக்கும். சிலருக்கு
வாழ்க்கைத்துணை விஷயத்தில் நெருடல்கள் இருக்கும். இளையவர்கள் சிலர்
காதலிப்பவரிடம் சண்டை போட்டுக் கொள்வீர்கள். அரசுத்துறையில் பணி புரிபவர்கள்
மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் ரகசியம் காப்பது நல்லது.
ஜென்மச் சனி நடப்பதால் மனம் ஒரு நிலையில் இருக்காது. தவறான முடிவுகள்
எடுப்பீர்கள் என்பதால் எதிலும் அனுபவம் உள்ள பெரியவர்களை கலந்து ஆலோசியுங்கள்.
உத்திராடம் :
உங்களில் இளையவர்கள் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். ஆன்மிகத்
துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத்தலங்களில்
இருப்பவர்கள் லாபங்களை அடைவீர்கள். உங்களுக்கு இது ஆகாத மாதம் இல்லை.
தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை
கொடுக்கும். நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். வேலை
செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபட வேண்டாம். வீண்பழி வரும் காலம் இது.
பொறுமை தேவை.
திருவோணம் :
உங்களில் இளைய பருவத்தினருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும் மாதம் இது.
பெரியவர்களுக்கு பெண்களால் நன்மைகளும் பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த தொகை
வரும். சிரமங்கள் அனைத்தும் தீரும். மனோதைரியம் கூடுதலாகும். பிரச்னைகளை
சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு இந்த மாதம் தூரப் பயணங்கள் அமையும்.
அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை வெளிப்படையாக பகிர்ந்து
கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் பேசும்
பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
அவிட்டம் :
அவிட்ட நட்சத்திர பெண்களுக்கு இது நல்ல மாதம். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை
கிடைக்கும். மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம் போன்றவைகள்
விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு
பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின்
மூலம் ஆதாயங்களும் வரும். நண்பர்கள் உதவுவார்கள். இளைய சகோதரத்தால் செலவுகள்
உண்டு. சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் வரும். பணவரவும் உண்டு.
சதயம் :
உங்களில் அரசு, சாப்ட்வேர் துறையினருக்கு நல்ல பலன்கள் நடக்கும். வியாபாரம்
தொழில் லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத் துறையினருக்கு
வாய்ப்புக்கள் உண்டு. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன்,
மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். பெண்களுக்கு இது உற்சாகமான
மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். ஆண்கள் உங்கள் பேச்சைக்
கேட்பார்கள்.
பூரட்டாதி :
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சாதிக்கும் நேரம் வந்து விட்டதால் அக்டோபர்
மாதம் நல்ல மாதமே. இந்தமாதம் முழுவதும் சுபநிகழ்ச்சிகளும், நல்ல செய்திகளும்,
இருக்கும். வருமானம் குறையாது. பணவரவு இருக்கும். மாத முற்பகுதியில்
எதிர்பாராத லாபங்களும், அதிர்ஷ்டம் கை கொடுத்தலும் உண்டு. உங்களைப் புரிந்து
கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள். திருப்பு முனையான மாதமிது.
இதுவரை நடைபெறாமல் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் அனைத்தும்
இப்போது நிறைவேறும்.
உத்திராட்டாதி :
உங்களில் சிலர் பணம் வருவதற்கு பொய் சொல்ல வேண்டி இருக்கும். சுறுசுறுப்பும்,
புத்துணர்ச்சியும், தைரியமும் இப்போது தேடி வந்து ஒட்டிக்கொள்ளும். இதுவரை
வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள்
அமையும். மாதமானால் நிரந்தர வருமானம் வரக்கூடிய சூழல் வரும். குடும்பத்தில்
அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். தயக்கத்தையும், சோம்பலையும் உதறித்
தள்ளுங்கள். எதிலும் நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக்
கொண்டிருக்கிறது.
ரேவதி :
மனம் மிகுந்த உற்சாகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் உண்டு.
அலுவலகங்களில் சிறப்புக்களைப் பெறுவீர்கள். அனைத்து தடைகளும் விலகும். அனைத்து
தரப்பினருக்கும் நல்ல மாதம் இது. பெண்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். எதிலும்
நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். வேலை மாற்றும்
செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். கிரக
நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தொட்டது துலங்கும். இன்னும் சில
மாதங்களுக்கு நீங்கள் ராஜாதான்.
No comments :
Post a Comment