சிந்து பைரவி, கொன்றைக்காடு.
கேள்வி :
ஐயா, பாலாரிஷ்ட தோஷம் என்றால் என்ன? குழந்தைக்கு பாலாரிஷ்ட தோஷம் இருந்தால்
அந்தக் குழந்தையை குறிப்பிட்ட கோவிலுக்கு தத்து எழுதிக் கொடுக்க
வேண்டுமெனவும், அப்படி தத்துக் கொடுத்த பிறகு வேறு எந்தக் கோவிலுக்குச்
சென்றாலும், தத்துக் கொடுத்த கோவிலில் உள்ள மூலவரின் பெயரால்தான் அர்ச்சனை
செய்யவேண்டும் என்றும் ஒரு ஜோதிடர் சொல்கிறார்.
மற்றொரு ஜோதிடர் சாமி பெயரில்
அர்ச்சனை செய்ய வேண்டியதில்லை, குழந்தையின் பெயரால் செய்தால் போதும்
என்கிறார். இந்த விஷயத்தில் ஐயா அவர்கள் நல்ல பதில் கூறி எங்களை
தெளிவுபடுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதில் :
பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில்
உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். பிறந்த குழந்தை உயிருடன் இருக்குமா?
எத்தனை காலம் இருக்கும்? இந்தக் குழந்தை பிறப்பினால் தாய்க்கும் ஏதாவது
கஷ்டங்கள் இருக்குமா என்பதை பாலாரிஷ்ட தோஷம் சுட்டிக் காட்டும்.
“ஜாதக பாரிஜாதம்” என்ற நூலில் ஒரு குழந்தை பிறந்தது முதல் 4 வயது வரை, தாய்
போன பிறவியில் செய்த கர்மாவினாலும், நான்கு வயதிலிருந்து எட்டு வயதிற்குள்
தந்தை செய்த கர்மாவினாலும், 8 வயதிற்கு மேல் பதினாறு வயதிற்குள் தன்னுடைய
சென்ற பிறவி கர்மாவினாலும் ஆயுளை இழக்கிறது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
எனவே 12 வயதிற்குள் ஒரு குழந்தை அல்லது அதனுடைய தாய்க்கு ஏற்படும் ஆயுள்
குற்றம், உடல்நலக் கோளாறுகளுக்கு பாலாரிஷ்டம் என்று பெயர்.
ஜோதிட பலன்கள் காலம், தேசம், சுருதி, யுக்தி வர்த்தமானம் எனும்
அடிப்படையில்தான் சொல்லப்பட வேண்டும் என்பது ஜோதிடத்தின் மிக முக்கிய விதி.
அந்தக் காலத்தில் குழந்தை பிறப்பு என்பது தாய்க்கும், சேய்க்கும் மிகவும்
கஷ்டமாக, குறிப்பாக தாய்க்கு ஒரு மறு பிறப்பாகவே இருந்தது. மருத்துவ வசதிகள்
முன்னேறி விட்ட இக்காலத்தில் தாய், சேய் இறப்பு விகிதங்கள் பெருமளவு குறைந்து
விட்டன. பிரசவம் என்பது இன்றைக்கு ஓரளவிற்கு நம்பிக்கையூட்டுவதாகவே
இருக்கிறது.
அன்றைய காலகட்டத்தில் குழந்தை பிழைத்திருக்குமா, தாயும் உயிருடன் இருப்பாளா
என்பதை கணிப்பதற்காக ஜோதிடத்தில் சில வழிமுறைகள் சொல்லப்பட்டன. சுருக்கமாக
சந்திரன் வலுவுடன் இருக்கும் நேரத்தில் பிறந்த குழந்தைகள் ஆயுள்பலம்
உள்ளவனாகவும், சுகப் பிரசவமாகவும், தாய்க்கும் நன்மைகளைச் செய்வதாகும்
அமைப்பில் இருப்பதாக சொல்லப்பட்டது.
சந்திரன் பாபக் கிரகங்களுடன் இணைந்து, தேய்பிறைச் சந்திரனாகவோ அமாவாசையன்றோ,
கிரகண அமைப்பிலோ பிறக்கும் குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் என்கின்ற ஆயுள் தோஷம்
உண்டாகி அதனுடைய தாயாரும் அதன் குழந்தைப் பருவத்திலேயே மரணமடைவார் என்பது
விதி.
இந்த தோஷத்தின்படிதான் அந்தக் காலத்தில் குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கு
பிறகு, அதாவது இது பிழைத்திருந்தால் ஜாதகம் எழுதிக் கொள்ளலாம் என்று, குழந்தை
பிறந்து ஒரு வருடம் கழித்தே ஜாதகம் எழுதும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. இறப்பு
விகிதம் குறைந்து மருத்துவ வசதிகள் முன்னேறி விட்ட இக்காலத்தில் பாலாரிஷ்ட
தோஷத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது.
நீங்கள் கேட்டுள்ளபடி இந்த தோஷம் இருந்தால் அந்தக் குழந்தையை குறிப்பிட்ட
கோவிலுக்கு எழுதி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் மூலநூல்களில் சொல்லப்படவில்லை.
அதேநேரத்தில் இறக்கும் தோஷம் இருக்கும் அந்தக் குழந்தையை பரம்பொருளுக்கு
தத்துக் கொடுப்பதன் மூலம் இதை உன்னுடைய குழந்தையாக்கி விட்டேன். அப்போதாவது
பிழைக்க வைக்க மாட்டாயா என்ற நல்ல நோக்கத்தில்தான் ஜோதிடர் இந்த பரிகாரத்தை
சொல்கிறார்.
குழந்தையை தத்துக் கொடுத்த பிறகு யார் பெயரில் அர்ச்சனை செய்வது என்பதெல்லாம்
தனிப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பொருத்தது. இதிலும் ஜோதிடம் வந்து பஞ்சாயத்து
செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. விஞ்ஞான முன்னேற்றத்தினால்
குழந்தை இறப்பு விகிதம் குறைந்து விட்ட நிலையில் தற்போது பாலாரிஷ்டத்தை
ஜோதிடர்கள் பெரும்பாலும் பார்ப்பது இல்லை.
(25.09.2018 மாலை மலரில் வெளிவந்தது)
No comments :
Post a Comment