Tuesday, September 18, 2018

குருஜியின் 2018 - புரட்டாசி மாத பலன்கள் -GURUJIYIN PURATTASI MADHA PALANGAL


ஜோதிடக்கலைஅரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி எண் :8870998888 

மேஷம்:

புரட்டாசி மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்ச வீட்டில் இருப்பதால் இது மேஷராசிக்கு சந்தோஷங்களையும், புத்துணர்வையும் கொடுக்கக் கூடிய மாதமாக இருக்கும். உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. மாதம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரிகள், சொந்தத் தொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அதே நேரத்தில் ஆறுக்குடைய புதனும், வலுப் பெறுவதால் சிலருக்கு கடன் பிரச்னைகள் கலக்கத்தை தரும். 

மாதத்தின் பிற்பகுதியில் உங்களிடம் சரளமான பணப்புழக்கம் இருக்கும். கடன் பிரச்னை எல்லை மீறி போகாது. மாத ஆரம்பத்தில் பணவரவில் தடைகள் உண்டு. நடுத்தர வயதினருக்கு மருத்துவச் செலவுகள் இருக்கும். ராசிநாதன் உச்சமாக இருப்பதால் எதையும் உங்களால் சமாளிக்க முடியும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. புரட்டாசி மாதம் சிறப்பான மாதம்தான்.

இன்னும் சில வாரங்களில் யோகாதிபதி குரு எட்டிற்கு மாறி உங்களுக்கு சில நல்ல மாறுதல்களை தரப் போவதால் மேஷராசிக்காரர்கள் இந்தமாதம் தங்களின் ஜென்ம நட்சத்திர தினத்திலோ, அல்லது ஒரு செவ்வாய்கிழமையிலோ தமிழ் வேளாம் குமரக்கடவுளின் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மைகளைத் தரும். நான்காமிடத்தில் இருக்கும் ராகு சுபத்துவம் அடைவதால் இனிமேல் தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். நண்பர்கள் உதவுவார்கள். சிலருக்கு ஆன்மிக பயணங்கள் வரும். 

ரிஷபம்:

இதுவரை ஆறாமிடத்தில் இருந்து சில தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த குரு இன்னும் சில வாரங்களில் விலகுவதால், ரிஷபத்திற்கு நண்பர்கள், பங்குதாரர்கள், வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் நீங்கி தொழில் விஷயங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் நன்மைகள் நடக்கும். இந்த அமைப்பால் குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் இருந்து வந்த சந்தேகங்களும் தேவையற்ற பயங்களும் இனி விலகும். புரட்டாசி மாதம் ரிஷபத்திற்கு நல்ல மாதம்தான். 

அஷ்டமச்சனி நடந்து கொண்டு இருப்பதால். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். புதிய முயற்சிகளை நன்கு யோசித்துச் செய்வது நல்லது. பெரிய முதலீடு செய்து ஆரம்பிக்கும் விஷயங்களை தள்ளி வைக்கலாம். குறிப்பிட்ட சிலருக்கு வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி மூலமும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலமும் செலவுகள் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். 

ராகு மூன்றாமிடத்தில் வலுவாக இருப்பதால் சிலருக்கு அரபு நாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதகமான நிலை வரும். சுக்கிரன் ஆறில் இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தில் பதற்றப்பட்டு முடிவெடுத்து அது தவறாகிப் போகும் என்பதால், எதிலும் நிதானத்துடன் இருங்கள். அடிக்கடி நான் எழுதுவதுபோல் உங்களுக்கு நீங்களேதான் எதிரி என்பதால் இப்போது நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். 

மிதுனம்:

ராசிநாதன் புதன் நான்காமிடத்தில் உச்சமாக இருக்கிறார். ராசிநாதன் வலுப்பெறும் போது ராசியும் வலுவடைய வேண்டும் என்பது ஜோதிட விதி. புதன் உச்சம் பெறுகிறார் என்பதால் புரட்டாசி மாதம் மிதுனத்தினர் அந்தஸ்து, கௌரவம் பெறக் கூடிய சந்தர்ப்பங்களை அடைவீர்கள். இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் போன்ற நல்ல விஷயங்கள் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. எப்போதும் இது மிதுனத்தின் மாதம்.

கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் துணிவுடன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். ராஜகிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். இளைய பருவத்தினருக்கு இது உற்சாகமான மாதம். ஜமாய்ப்பீர்கள்.

ராசிநாதனின் வலுவால் உங்கள் தைரியம் பளிச்சிடும். ஒரு சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழடைவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். சிலர் உல்லாச பயணம் செல்ல முடியும். வெகு நாட்களாக ஆரோக்கியக்குறைவு இருந்து வந்த மிதுன ராசிக்காரர்கள் குணம் அடைவீர்கள். மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். புதனின் உச்சவலு பண வரவுகளையும் தரும்.

கடகம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் நல்ல அமைப்பில் அமர்ந்து உங்களின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் நிலையில் இருக்கிறார். இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தை தரும் என்பதால் புரட்டாசி மாதம் கடக ராசிக்கு குறை சொல்ல முடியாத மாதமே. ராசியில் இருக்கும் ராகுவால் சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்களை வேலை விஷயமாக இப்போது செய்வீர்கள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். 

கைக்கெட்டும் தூரத்தில் உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. யோகக் கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் ஏற்கனவே நீங்கள் யோசனையின்றி அவசரப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தையும் இந்த மாதம் சீர்தூக்கி முறைப்படுத்திக் கொள்ள முடியும். பிள்ளைகள் விஷயத்தில் மன மகிழ்ச்சியான சுப காரியங்கள் உண்டு சிலருக்கு குலதெய்வ, இஷ்டதெய்வ தரிசனம் கிடைக்கும். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். அரசுத்துறையினருக்கு இந்த மாதம் நல்ல பலன்கள் உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள்.

கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும். பொதுவாக இது தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் புரட்டாசி முழுவதும் தன்னை நண்பராக நினைப்பவரான புதனுடைய வீட்டில் இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த புதனும் உச்ச வலுப்பெற்று அவருடன் இணைகிறார். இது உங்களுக்கு சந்தோஷங்களையும் நன்மைகளையும் தரும் நிலை என்பதால் இந்தமாதம் எதிர்மறை பலன்கள் எதுவும் இல்லாமல் நல்லமாதமாகவே இருக்கும். அடுத்த மாதம் தொழில் ஸ்தானமான பத்தாமிடம் குரு பார்வையுடன் வலுப்பெறுவதால் வேலை, தொழில் அமைப்பில் இந்தமாதம் மாறுதல்கள் இருக்கும். 

உங்களில் சிலருக்கு புரட்டாசி மாதம் புனிதத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும் தேவையற்ற விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். 

ராசிநாதன் சூரியன் உச்ச புதனுடன் இணைவதால் புத்தகம், கணக்கு, கம்ப்யூட்டர், பத்திரிக்கைத்துறை, அஞ்சல்துறை, வியாபாரிகள், பச்சைநிறம் சம்பந்தப்பட்டவர்கள், சொல்லி கொடுப்போர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் நல்ல பலன்களும், பணவரவுகளும் இருக்கும். வெகு நாட்களாக இனிமேல் கிடைக்காது என்று கை விட்ட ஒரு தொகையோ, ஒரு பொருளோ இன்ப அதிர்ச்சியாக இந்த மாதம் கிடைக்கும். புரட்டாசி மாதம் தொல்லைகள் இல்லாத நல்ல மாதமே.

கன்னி:

ராசிநாதன் ராசியிலேயே உச்சம் பெறுவது என்பது கன்னிக்கு மட்டுமே இருக்கும் சிறப்பு என்பதாலும் அந்த சிறப்பான நிலை வருடத்திற்கு ஒருமுறை சில வாரங்கள் மட்டுமே நடக்கும் என்பதாலும் அது இந்த மாதம் உங்களுக்கு அமைவதாலும் புரட்டாசி மாதம் உங்கள் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் மாதமாக இருக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். 

மாத ஆரம்பமே யோகத்துடன் ஆரம்பிப்பதால். நீண்ட நாட்களாக மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறி இப்போது வரன் உறுதியாகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இந்தமாதம் முடித்துக் காட்டுவீர்கள்.

சுக்கிரன் தனக்கு ஆகாத விரோதியான குருவுடன் இணைந்திருப்பதால் உங்களில் கலைத் துறையினருக்கு புரட்டாசி சற்று சுணக்கமான மாதம்தான் என்றாலும், உங்களுடைய கடின உழைப்பு என்றுமே வீண் போகாது. அரசுத்துறையினர் நல்ல திருப்புமுனைகளைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போங்கள். மனைவி பேச்சைக் கேட்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. உங்கள் கௌரவமும் பாழாகாது.

துலாம்:

இன்னும் சில வாரங்களில் ராசியில் சுக்கிரனுடன் இணைந்திருக்கும் குரு விலக இருப்பது உங்களுக்கு மிக நல்ல அமைப்பு. குரு விலகியதும் ராசியில் ஸ்தம்பன நிலையில் இருக்கும் சுக்கிரன் நல்ல பலன்களைத் தர ஆரம்பிப்பார். குருவும் தன்னுடைய சுய பலத்தைப் பெற்று பண வரவுகளை தருவார். எனவே புரட்டாசி உங்களுக்கு கெடுதல்கள் எதுவும் இல்லாத மாதம்தான். துலாத்தினருக்கு மிச்சம் மீதி இருக்கும் சிக்கல்களும் இந்த மாதத்துடன் முடிவுக்கு வரும். இனி நன்றாக இருக்கப் போகிறீர்கள். 

மாத ஆரம்பத்தில் பரஸ்பர எதிரிகளான சுக்கிரன், குரு இணைவால் சில விஷயங்கள் உங்கள் கையை மீறி நடக்கும். பிற்பகுதியில் அனைத்து நல்ல விஷயங்களும் உங்களுக்கு உண்டு. துலாத்திற்கு இப்போது கோட்சாரத்தில் கிரக நிலைகள் நன்றாக இருக்கின்றன. நல்ல சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் ஓரிரு முறைதான் வந்து கதவை தட்டும் என்பதால் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் இப்போது சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம். 

தனாதிபதி செவ்வாய் மிகவும் வலுவாக இருப்பதால் எதிர்பாராத பண வரவு இந்த மாதம் முழுவதும் இருக்கும். யார் வீட்டுப் பணமானாலும் உங்கள் பாக்கெட்டில் புரண்டு கொண்டே இருக்கும். பணத்தட்டுப்பாடு இருக்காது. வேலை தொழில் விஷயங்களில் இருந்து வந்த கலக்கமான, பதட்டமான சூழ்நிலைகள் இனிமேல் இருக்காது. அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தந்தைவழி தொழில் செய்பவர்கள் போன்றவருக்கு இந்த மாதம் மிகுந்த நன்மைகள் தரும் மாதமாக இருக்கும்.

விருச்சிகம்:

ஜென்மச்சனி நடந்ததால் அடிமேல் அடி என உடல், மனம் முழுக்க அடிகளாக வாங்கி கொண்டிருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்ச வீட்டில் அமர்வதாலும், இன்னும் சில வாரங்களில் ஒளிக் கிரகமான உங்கள் நண்பர் குரு ராசியில் வந்து அமரப் போவதாலும் அனைத்துப் பிரச்னைகளும் தீர ஆரம்பிக்கும் மாதமாக இது இருக்கும். ராசிநாதனின் வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும்.

விருச்சிக ராசிக்காரர்கள் பட வேண்டிய கஷ்டங்கள் அனைத்தையும் அனுபவித்து விட்டீர்கள். இனிமேல் நல்லது மட்டுமே உங்களுக்கு நடக்கும். இளைய பருவத்தினர் அடுத்த முப்பது வருடங்களுக்கு நன்றாக இருக்கப் போகிறீர்கள். இனி உங்கள் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டிய அனுபவங்களை சனி கொடுத்து விட்டார் என்பதால் அந்த அனுபவங்களின் துணை கொண்டு எதிர்கால வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ளப் போகிறீர்கள். 

ஜென்மச்சனி முடிந்ததும் அனைத்து பிரச்னைகளும் படிப்படியாகத் தீரும் என்பதால் எதற்கும் பயப்படத் தேவையில்லை. நான் என்னதான் சொன்னாலும் ஒரு சிலர் கடுமையான எதிர்மறை பலன்களை சந்தித்து குழப்பமான மன நிலையில் இருப்பீர்கள். மன அழுத்தத்திலும் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை சிறிது நாட்கள்தான். நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. தூங்க முடியாத அளவிற்கு வேதனைகளை அனுபவித்த சிலரின் சிரமங்கள் தீரப்போவதால் புரட்டாசி உங்களுக்கு நல்ல மாதமே.

தனுசு:

தனுசு ராசிக்கு புரட்டாசி மாதம் கெடுதல்கள் சொல்ல எதுவுமில்லை. ராசியின் எதிரி சுக்கிரன் ஆறுக்கு ஆறான பதினொன்றில் இருப்பதால் வேலை, தொழிலில் சிக்கல்கள் இருந்தவர்களுக்கு இப்போது தற்காலிகமாக அது சரியாகும். ஏழரைச் சனியால் இளைஞர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. மருந்து எப்போதுமே கசக்கும் என்றாலும் அது நோயை தீர்க்கும் என்பதால் இப்போது இளைஞர்களுக்கு நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் அனைத்தும் நன்மையாகவே முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 

தனுசு ராசி பெரியவர்களுக்கு புரட்டாசி முழுவதும் தொழில், வியாபாரம் போன்றவைகள் சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு விரயங்களும், செலவுகளும், பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் உண்டு. வருமானமும் தாராளமாகவே இருக்கும் கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள்.. 


ராசிநாதன் வலுப் பெறுவதால் சிலருக்கு ஆன்மிக எண்ணங்களும் சிந்தனைகளும் கூடுதலாகி, தெய்வத்திருப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். தந்தைவழி பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். தந்தைவழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். குடும்பப்பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். 

மகரம்:

மகர நாதன் சனி விரயத்தில் இருக்கும் நிலையில், மற்ற யோகாதிபதிகளான புதன் உச்சம், சுக்கிரன் ஆட்சி என்பது நல்ல அமைப்பு என்பதால் புரட்டாசி மாதம் மகரத்திற்கு தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும். ராசியில் செவ்வாய் உச்சமாகி ஏழு, எட்டாமிடங்களைப் பார்ப்பதால் கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். சிலருக்கு மனைவி மூலமான நன்மைகள் உண்டு. தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும்.

ஏழரைச் சனி தொடங்கி இருப்பதால் கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைக் குனிவை தரலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இந்த மாதம் உண்டு. சிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். 

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார் துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். சஸ்பெண்டு ஆனவர்கள் இந்தமாதம் மறுபடியும் வேலையில் சேருவீர்கள்.

கும்பம்:

ராசிக்கு குருபார்வை இருந்து உங்கள் அந்தஸ்து, கௌரவத்தை மேம்படுத்திக் காட்டும் மாதம் இது. கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் அனைத்து கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அவரவர் வயதுக்கேற்ற திருப்புமுனைகள் புரட்டாசி மாதத்தில் நடக்கும். இன்னும் சில வாரங்களில் குருவும் சுக்கிரனும் ஒன்பதாமிடத்தில் இணைந்திருக்கும் நிலை மாறுவதால் மாற்றங்களை எதிர்கொள்ள ஆரம்பிப்பீர்கள். குறை சொல்ல முடியாத மாதம் இது. 

புரட்டாசியின் சிறப்புப்பலனாக பனிரெண்டில் உச்சமாக இருக்கும் செவ்வாய் தனது கோபப் பார்வையை ஏழாமிடத்தில் வீசுவதால் காரணமின்றி வாழ்க்கைத் துணையின் மீது குற்றம் குறை கண்டுபிடித்து கோபப்படுவீர்கள். எதிலும் நிதானமாக இருக்கவேண்டியது அவசியம். குறிப்பாக வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். ஆனால் இதை மறந்து யாரிடமாவது கோபத்துடன் பேசி இந்த மாதம் அவரை விரோதியாக்குவீர்கள். குடும்ப பிரச்னைகளில் நிதானமாக இருங்கள்.

வியாபாரிகளுக்கும், சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் இது சிறந்த மாதம் தான். புதியகிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. கோட்சார நிலை நன்றாக இருந்தும் பிறந்த ஜாதக தசா புக்தி அமைப்பினால் இன்னும் நல்லவை நடக்காத சில கும்பராசியினருக்கு இந்த மாதம் சில நல்ல பலன்கள் நடக்கும். கும்பத்தினர் நிதானமானவர்கள் என்ற பெயரை மறந்து இந்த மாதம் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

மீனம்:

ராசிநாதன் குருபகவான் இன்னும் சில வாரங்களில் அவருக்கு மிகவும் பிடித்த நட்பு வீடான ஒன்பதாமிடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கப் போவதால் அடுத்த வருடம் நடக்க இருக்கும் சில நல்லவைகளுக்கு அச்சாரம் போடும் மாதம் இது. மீனத்தினர் எதிலும் நன்மை பெறும் மாதம் இது. இளைஞர்களுக்கு இதுவரை தடங்கலாகிக் கொண்டிருந்த அனைத்தும் விலகி மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறீர்கள். அடுத்த வருடம் கல்யாணம் ஆகப்போகும் எழுபது சதவிகிதம் பேர் மீனத்தினராகத்தான் இருப்பீர்கள்.

வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புகளும் லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் சிறப்பைத் தரும். சுக்கிரன் எட்டில் மறைவதால் சில சங்கடமான விஷயங்களும் விரயங்களும் இருக்கும். பெண்கள் விஷயத்தில் உஷார். சிலருக்கு அவப்பெயரும் மன அழுத்தங்களும் வரப் போகிறது. மனத்தைக் கட்டுப்பாட்டுடன் வையுங்கள். தகுதியற்றவைகளுக்கு ஆசைப் பட வேண்டாம். 

வியாபாரிகளுக்கும், சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் பாக்கி வசூல் ஆகும். முயற்சிகள் வெற்றியாக முடியும். பொருளாதார சிக்கல்கள் இருக்காது. உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். இதுவரை எந்த விஷயங்களில் உங்களுக்கு அவஸ்தைகளும், சிக்கல்களும் இருந்து வந்ததோ அவைகள் இனிமேல் தீரத்தொடங்கி நல்லபடியாக மீண்டு வருவீர்கள். 

(18.09.2018 மாலை மலரில் வெளிவந்தது.)

No comments :

Post a Comment