அசுவினி
இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப
நிகழ்ச்சிகள் இந்த மாதம் இருக்கும். தாயார் வழியில் நல்ல நிகழ்ச்சிகளும்
அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் உண்டு திருமணம் தடங்கலாகி
வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற
விஷயங்களில் இனிமேல் சிக்கல்கள் எதுவும் இருக்காது. எடுத்த காரியம் யாவும்
வெற்றி பெறும். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும்.
வியாபாரிகளுக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம் வருமானம் உள்ள
மாதம்தான்.
பரணி
மாதம் முழுவதும் நட்சத்திர நாதன் சுக்கிரன் பலமாக இருப்பதால் எதையும்
சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சம் இல்லை. வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்ல
அனுபவங்கள் இருக்கும். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும்
செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில்
கவனமாக இருப்பது நல்லது. வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
இந்தமாதம் செலவுகளும், பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் உள்ள மாதமாக
இருக்கும்.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திர பெண்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு
பிடித்தமான வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த மாதம். மந்தமாக இருந்துவந்த
தொழில், வியாபாரம் போன்றவைகள் விறுவிறுப்புடன் நடக்கும். கடன்தொல்லைகளால்
அவதிப் பட்டவர்களுக்கு பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார்
வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். நண்பர்கள்
உதவுவார்கள். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும்
பயணங்களும், பணவரவும் உண்டு.
ரோஹிணி
யோகக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் டிசம்பர் மாதம் முழுவதும் உங்களுக்கு
நல்லசெய்திகளும், பணவரவும் உள்ள மாதமாக இருக்கும். வருமானம் குறையாது. வரவும்
நன்றாக இருக்கும். மாத முற்பகுதியில் எதிர்பாராத லாபங்களும், அதிர்ஷ்டம் கை
கொடுத்தலும் உண்டு. உங்களின் உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல்
புரிந்து கொள்வார்கள் என்பதால் ரோகினிக்கு திருப்பு முனையான மாதமிது. அதேநேரம்
பணம் வருவதற்கு நீங்கள் பொய் சொல்ல வேண்டி இருக்கும். வக்கீல், மார்க்கெட்டிங்
போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும்.
மிருகசீரிடம்
டிசம்பர் மாதத்தில் உங்களில் சிலருக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் நெருடல்கள்
இருக்கும். இளையவர்களில் சிலர் காதலிப்பவரிடம் சண்டை போட்டுக் கொள்வீர்கள்.
அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.
சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும்.
அம்மாவின் வழியில் ஆதரவும் அனுகூலமும் உண்டு. என்ன செலவு வந்தாலும் வருமானம்
குறையாது. பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல
செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும்.
திருவாதிரை
சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும்
நேரமிது. இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்
கூடியவைகள் அமைந்து இனி மாதமானால் வருமானம் வரக்கூடிய சூழல் வரும்.
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். இதுவரை இருந்து வந்த
தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளி எடுத்துக் கொண்ட காரியங்களில்
சிறிதளவு முயற்சி செய்தாலே பெரிய நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக்
கொண்டிருக்கிறது என்பதால் எந்த விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும்.
புனர்பூசம்
உங்களில் சிலர் இந்த மாதம் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். ஆன்மிகத்
துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத் தலங்களில்
இருப்பவர்கள் லாபங்களை அடைவீர்கள். புனர்பூசத்திற்கு இது ஆகாத மாதமில்லை.
தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை
கொடுக்கும். தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை
வாங்கி கொள்வது நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல்நலனில் அக்கறை
காட்டுங்கள். வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது
நல்லது.
பூசம்
பூச நட்சத்தினர் இந்தா மாதம் பிரச்னைகள் நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள்.
மாதம் முழுவதும் உங்களுக்கு மன தைரியத்தைத் தரும் நிகழ்வுகளே நடக்கும் என்பது
உறுதி. டிசம்பர் மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். சிக்கலுக்கு உள்ளாக்கி வந்த
அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வந்து இந்த மாதம் நிம்மதிக்கு வழி வகுக்கும்.
எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். உங்களில் சிலர் கடந்த சில
மாதங்களாக கஷ்டங்களை அனுபவித்தீர்கள். அவர்களுக்கு இனி கஷ்டங்கள் வர
வாய்ப்பில்லை. இனி உங்களுக்கு நல்ல காலம்தான்.
ஆயில்யம்
இந்த மாதம் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.
எதிலும் அவசரம் வேண்டாம். பணியிடங்களில் வாக்குவாதத்தை தவிருங்கள். அரசு,
தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். காவல் துறையினருக்கு நல்லபலன்கள்
நடக்கும். வியாபாரம் லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. வீட்டுத் தேவைக்கான பொருள்
வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி
உறவு அன்யோன்யத்துடன் இருக்கும்.
மகம்
இந்த மாதம் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக
மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும்
செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை சிலருக்கு உருவாகும்.
பெண்களுக்கு இது நல்ல மாதம். தொழில் விரிவாக்கம், பணம் முதலீடு செய்தல் போன்ற
விஷயங்களை இந்த மாதம் செய்யலாம். எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.
யாரிடமும் கோபப்பட வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிருங்கள். உங்களின் நண்பர்களே
கோபத்தால் பாதிக்கப்பட்டு எதிரியாகும் வாய்ப்பு இருக்கிறது.
பூரம்
இந்த மாதம் இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். நட்சத்திர
நாதனின் வலுவால் பணவரவு இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்திருந்த தொகை வரும்.
சிரமங்கள் அனைத்தும் தீரும். மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும்
சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு இந்த மாதம் நீண்டதூரப் பயணங்கள் அமையும்.
அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை வெளிப்படையாக பகிர்ந்து
கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால்
பேசும்பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
உத்திரம்
உங்களில் சிம்ம ராசிக்காரர்கள் அனைத்திலும் துடிப்புடன் செயலாற்றி வெற்றிக்
கம்பத்தை தொடப் போகிறீர்கள். சிலருக்கு இந்த மாதம் சுபகாரியச் செலவுகள் செய்ய
வேண்டி இருக்கும். கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு
உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். சுற்றியுள்ளவர்கள்
உங்களை வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். கோபத்தைக் கட்டுப் படுத்திக்
கொள்வது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் இணக்கமாக இருப்பார். நண்பர்களால்
லாபம் உண்டு. பெண்களால் லாபம் கிடைக்கும் மாதம் இது.
அஸ்தம்
இந்த மாதம் எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் எதுவும் ஏற்படாது.
தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும்
லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த
ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும். கலைத்துறையினருக்கு
கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு தூரப் பயணங்கள் ஏற்படும்
பிள்ளைகளுக்கு சுபகாரிய அமைப்புகள் உண்டாகும். திருமணம் தாமதமான பெண்
குழந்தைகளுக்கு திருமணம் உறுதியாகும்.
சித்திரை
உங்களில் கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் மாத கிரக நிலைகள் உங்களை
கோபக்காரனாக்கி அதன் மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்கும் என்பதால் அனைத்திலும்
பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. சித்திரை நட்சத்திரக் காரர்கள் எதிலும்
துடிப்புடன் செயல்படுவீர்கள் என்பதால் முக்கியமான துறைகளில் இருப்பவர்களுக்கு
நல்ல மாற்றங்கள் இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக்
கொடுத்து போவதன் மூலம் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை.
சுவாதி
இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு
திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும்
உறவினர் வருகையும் இருக்கும். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கும்.
வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம்
இருப்பார்கள். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் வரும்
ஆனால் சேமிக்கத்தான் முடியாது. அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும்
ஏற்றம் தரும் மாதம் இது.
விசாகம்
இந்த மாதம் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும்
சாதிக்க முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன்
செயல்படுவீர்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல
செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள்
வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு திருப்பு முனைகள் இருக்கும்.
வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். விசாகம்
நட்சத்திரக்காரர்கள் சாதிக்கும் நேரம் வந்து விட்டதால் டிசம்பர் மாதம் நல்ல
மாதமே.
அனுஷம்
டிசம்பர் மாதம் அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு செலவுகளைத் தந்தாலும்
அதற்கேற்ப பணவரவுகளையும் செலவுகள் மூலமாக குடும்ப சந்தோஷங்களையும் தரும்
மாதமாக இருக்கும். மந்தமாக இருந்து வந்த வேலை தொழில், வியாபாரம் போன்றவைகள்
இனி விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால்
அவதிப்பட்டவர்களுக்கு பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார்
வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு
இருக்கிறது. முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும்
சாதிப்பீர்கள்.
கேட்டை
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து
தடைகளும் விலகும். பெண்களுக்கு உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில்
மதிக்கப் பெறுவீர்கள். ஆண்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். டிசம்பர் மாதம்
உங்களுக்கு மிகவும் நல்ல மாதம்தான். பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக்
கடிக்கும் விஷயங்களும் இருக்காது. தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம்
கவனமுடன் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அலைச்சல்கள் மட்டும் இருக்கும்.
கைக்கெட்டும் தூரத்தில் மதிய உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம்
இருக்காது.
மூலம்
டிசம்பர் மாதம் மூலத்திற்கு தடைகளைக் கொடுத்தாலும் எல்லாவற்றையும் நீங்கள்
சமாளிக்கும் மாதமாக இருக்கும். ராசியில் சனி இருப்பதால் மனைவி, நண்பர்கள்,
பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும்
இருக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தூர இடங்களில் வேலை
அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் உண்டு. கடன்களை அடைப்பீர்கள்.
தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும். விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு
கிடைக்கும். வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர்
நன்மை பெறுவார்கள்.
பூராடம்
இந்த மாதம் வேலை செய்யும் இடங்களில் வாக்குவாதங்களை தவிருங்கள். நண்பர்கள்
எதிரியாகும் அமைப்பு இருக்கிறது. பழகியவர்களே உங்களை புரிந்து கொள்ள
மாட்டார்கள். ராசியில் சனி இருப்பதால் சுற்றியுள்ளவர்கள் உங்களை
வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள்.. எந்த ஒரு விஷயமானாலும் கோபத்தைக்
கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சனி உங்களை கோபக்காரனாக்கி அதன் மூலம்
சிக்கலை உண்டாக்குவார் என்பதால் எதிலும் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.
வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும்
விலகுவார்கள்.
உத்திராடம்
உங்களில் சிலருக்கு பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும்
வீண் விரயங்களும் உண்டு. அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள்,
காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இந்த மாதம் இருக்கும்.
தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்சனைகள் வர வாய்ப்பு
இருக்கிறது. வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான மாதம். சொன்ன சொல்லை
காப்பாற்ற முடியாத நிலை இருக்கும் என்பதால் யாருக்கும் எதுவும் செய்து தருவதாக
உறுதி அளிக்க வேண்டாம்.
திருவோணம்
இதுவரை நடைபெறாமல் வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் அனைத்தும்
நிறைவேறும். வேலை இடங்களில் ஏதேனும் ஒரு சாதனைச் செயல் செய்வீர்கள். மனம்
உற்சாகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும்.
செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் இந்த மாதம் வருமானமும் உண்டு.
எல்லோருக்கும் எல்லோரும் கடன் தரமாட்டார்கள். கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம்
வேண்டும் என்பதால் செலவு செய்வதற்கு கடன் வாங்காமலேயே வருமானம் வரும்.
அலுவலகங்களில் சிறப்புக்களைப் பெறுவீர்கள்.
அவிட்டம்
மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள்
பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் நல்ல மாதம் இது. பெண்களுக்கு நல்ல
பலன்கள் நடக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.
யாரிடமும் கோபப்பட வேண்டாம். வீண் பழியினால் வேலை மாற்றும் செய்யப்பட்டவர்கள்
மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு
சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு
கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு
கிடைக்கும்.
சதயம்
நட்சத்திரநாதன் ராகு நல்லநிலையில் இருப்பதால் மனம் சந்தோஷப்படும்படியான
நிகழ்ச்சிகள் இருக்கும். இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. நல்ல
எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகளும் இந்த மாதம்
அமையும். சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள்.
சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம்.
எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. கைப்பொருள் திருட்டுப் போகுதல்,
நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு
இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
பூரட்டாதி
நீண்டநாள் எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல் இந்த மாதம்
கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும்
கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள்
வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள்
இருக்கும். உங்களில் கும்பராசியை சேர்ந்தவர்களுக்கு இப்போது திருமணம் தொடர்பான
நல்ல விஷயங்கள் உண்டு. கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக்
கொடுத்துப் போவதன் மூலம் சாதிப்பீர்கள்.
உத்திராட்டாதி
மாத ஆரம்பத்தில் சற்றுச் சறுக்கி நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக
சுதாரித்து கொண்டு ஜெயித்து காட்டுவீர்கள். மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய
பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள்
அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், இலாகா மாறுதல்
இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. முதல்வாழ்க்கை
கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை
அடைவார்கள். பெண்களால் செலவுகள் இருக்கும்.
ரேவதி
டிசம்பர் மாதம் ரேவதிக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். உங்கள்
நட்சத்திர நாதன் புதன் பாப வலுப் பெறுவதால் நீங்கள் செய்யும் முயற்சிகள் மாத
ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தாலும் பிற்பகுதியில் வெற்றி பெறும். ஐந்தில்
இருக்கும் ராகு பணவரவுகளையும், வருமானங்களையும் கட்டுப்படுத்துவார் அல்லது
தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை
யோசிப்பது நல்லது. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள்
உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள்.

No comments :
Post a Comment