மேஷம்:
கார்த்திகை மாத ஆரம்பத்தில் ராசிநாதன் செவ்வாய் முதலில் புதனுடன் பரிவர்த்தனை
அமைப்பில் இருப்பதும், பிறகு சுக்கிரனுடன் சுபத்துவ நிலையில்
பரிவர்த்தனையாவதும் அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதால் இந்த மாதம் உங்களுக்கு
சந்தோஷமான மாதமாக இருக்கும். அஷ்டமச் சனி முடிந்து விட்டதால் உங்கள்
செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. மாதம் முழுவதும்
உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள்.
தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும்.
வியாபாரிகள், சொந்தத் தொழில் செய்வோருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி,
தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார் ஊழியர்கள் நன்மைகளை
அடைவார்கள். பெண்களால் நன்மைகளும், வீட்டில் பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும்
நடந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் உள்ள மாதமாக இது இருக்கும்.
ராசிக்கு குருபார்வை இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல்
ஒரு போதும் ஏற்படாது. எதிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள்
நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள்
நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு நிம்மதி உண்டு. அரசியல்வாதிகள்
ஏற்றம் பெறுவார்கள். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற
தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற
துறையினருக்கும் இது முன்னேற்றமான மாதமாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் எதிர்கால நன்மைக்கான
மாற்றங்கள் நடக்கும் காலமாக இருக்கும். மருந்து எப்போதுமே கசக்கும் என்றாலும்
அது நோயை தீர்க்கும் என்பதால் இப்போது உங்களுக்கு நடக்க இருக்கும் மாற்றங்கள்
அனைத்தும் நன்மையாகவே முடியும் என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.
சிலருக்கு இப்போது வெளிநாடு யோகம் உண்டு. இளையபருவத்தினருக்கு முக்கியமான
திருப்பு முனைகள் இருக்கும்.
அஷ்டமச்சனி ஆரம்பித்து இருப்பதால். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில்
சந்திப்பது நல்லது. இதுவரை ஏழாமிடத்தில் இருந்து குடும்பத்தில் குழப்பத்தை
ஏற்படுத்திக் கொண்டிருந்த சனி அங்கிருந்து விலகி விட்டதால் வாழ்க்கைத் துணைவர்
விஷயத்தில் நன்மைகளும் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு சச்சரவுகளும்
நீங்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த சந்தேகங்களும்
தேவையற்ற பயங்களும் இனி விலகும் என்பது உறுதி.
சிலர் பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். தாயார் வழியில்
நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும். முக்கியமான துறைகளில், அதிகார
அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். பெண் குழந்தைகளை சற்று
அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. அதேநேரத்தில் கடன் தொல்லைகளோ, மறைமுக
எதிர்ப்புகளோ அருகில் வராது. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு இருக்கும்.
மிதுனம்:
கார்த்திகை மாதம் மிதுனராசிக்கு மேன்மையான மாதம்தான். ராசிநாதன் புதன்
ராசியைப் பார்க்கும் நிலையில் இருப்பது உங்களுக்கு யோக அமைப்பு என்பதால்
இந்தமாதம் மிதுனத்திற்கு நல்ல பலன்கள் நடக்கும். தொழில் ஸ்தானம் வலுப்
பெறுவதால் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பள
உயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். உங்களை எதிரியாக
நினைத்தவர்கள் உங்களின் உண்மைநிலை புரிந்து நண்பராக மாறுவர்கள்.
பணவரவு நன்றாகவே இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும்.
மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள்,
எழுத்துத் துறையினர், கணக்கர்கள், கல்வித் துறையினர் போன்றவர்களுக்கு நல்ல
மாற்றங்கள் உண்டு. இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேலை,
தொழில், அமைப்புகளில் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி இனிமேல்
விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும்.
பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை. செவ்வாயும் புதனும்
பரிவர்த்தனை பெறுவது தனலாபத்தையும், மேன்மையான பாக்யங்களையும் அளிக்கும்.
ஐந்தாமிடத்தில் இருக்கும் குருவினால் இதுவரை நடைபெறாமல் வெறும் முயற்சி
அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் நிறைவேறும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற
அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக
இருக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம்
இருக்கும்.
கடகம்:
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் நல்ல அமைப்பில் அமர்ந்து உங்களின்
அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் நிலையில் இருக்கிறார். தீர்த்துக்
கொண்டும் இருக்கிறார் என்பதால் கார்த்திகை மாதம் கடகராசிக்கு குறை சொல்ல
முடியாத மாதமே. குறிப்பாக இந்த மாதம் தடைகளை நீக்கி பணவரவுகளையும்,
நன்மைகளையும் செய்யும் மாதமாக இருக்கும். கடன் தொல்லைகளோ, மறைமுக எதிர்ப்புகளோ
அருகில் வராது. புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இந்த மாதம் கருவுறுதல்
இருக்கும்.
பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட
லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். இதுவரை குலதெய்வ வழிபாடு
செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இந்தமாதம் அவற்றை
முடிப்பீர்கள். ராஜ கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள்
உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு
திருமணம் உறுதியாகும்.
ராசியின் யோகர்களான குருவும், செவ்வாயும் இணைந்து ஜீவன ஸ்தானமான பத்தாம்
இடத்தை பார்ப்பதும் மிகவும் நல்ல அமைப்பு என்பதால் இந்த மாதம் கடகத்திற்கு
நல்ல பலன்கள் இருக்கும். கார்த்திகை முழுவதும் சுபநிகழ்ச்சிகளும்,
தூரஇடங்களில் இருந்து நல்லசெய்திகளும், பணவரவும் உண்டு. சிலர் தொழில் துறையில்
சாதனை படைப்பீர்கள். சிலருக்கு பொருள் சேர்க்கை இருக்கும். எதிலும் லாபம்
வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு.
சிம்மம்:
சிம்மநாதன் சூரியன் கார்த்திகை மாதம் முழுவதும் தனது நண்பரான செவ்வாயின்
வீட்டில், தன்னை நண்பராக நினைப்பவரான புதனுடன் இணைந்திருக்கிறார். இது
உங்களுக்கு சந்தோஷங்களையும் நன்மைகளையும் தரும் நிலை என்பதால் இந்த மாதம்
எதிர்மறை பலன்கள் எதுவும் இல்லாமல் நல்லமாதமாகவே இருக்கும். மேலும் இதுவரை
உங்களின் ராசிக்கு இருந்து வந்த கடன் ஸ்தானாதிபதியான சனியின் பார்வை விலகி
விட்டதால் இனி சிம்மத்திற்கு சறுக்கல்கள் இல்லாத வாழ்க்கை ஆரம்பிக்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் மனமகிழ்ச்சியான சுபகாரியங்கள் உண்டு சிலருக்கு குலதெய்வ,
இஷ்டதெய்வ தரிசனம் கிடைக்கும். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள்.
அரசுத்துறையினருக்கு இந்த மாதம் நல்லபலன்கள் உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம்
பெறுவார்கள். கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம்,
புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல்
போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும்.
இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் போன்ற நல்ல விஷயங்கள்
இருக்கும். இன்னும் சில காலத்திற்கு கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் சிம்ம
ராசிக்காரர்கள் துணிவுடன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது
உறுதி. எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. செவ்வாய்
குரு வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான
வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இருக்கும்.
கன்னி:
புதன், செவ்வாய் பரிவர்த்தனையால் இருவருமே பலம் பெற்ற நிலையை பெறுகிறார்கள்.
பரிவர்த்தனை யோகத்தால் ராசி மற்றும் மூன்றாமிடங்கள் வலுப் பெறுவதால் நீங்கள்
செய்யும் முயற்சிகள் அனைத்தும் இப்போது வெற்றி பெறும். கன்னி ராசிக்கு
அதிர்ஷ்டம் துணை நிற்கும் மாதம் இது. இந்த மாதம் உங்களுக்கு பண வரவுகளும்,
நன்மைகளும் கிடைக்கும். நண்பர்கள், உறவுகள் மூலமும் உதவிகள் உண்டு.
இளைஞர்களுக்கு வயதுக்கே உரிய சில கேளிக்கை அனுபவங்களும் இருக்கும்.
குருபகவான் தொழில் வீடான பத்தாம் வீட்டைப் பார்த்து, பணவரவைக் குறிக்கும்
இரண்டாம் வீட்டில் இருப்பதால் எல்லாவற்றையும் சுலபமாக சமாளிப்பீர்கள். ஜீவன
ஸ்தானம் வலுப்பெறுவதால் வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை
அமையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும்.
வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும்.
சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும்.
மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் பரிவர்த்தனை அமைப்பால் உச்சமாக
இருக்கிறார். ராசிநாதன் வலுப்பெறும் போது ராசியும் வலுவடைய வேண்டும் என்பது
ஜோதிடவிதி. புதன் உச்சம் பெறுகிறார் என்பதால் இந்த மாதம் அந்தஸ்து, கௌரவம்
பெறக்கூடிய சந்தர்ப்பங்களையும், சம்பவங்களையும் அடைவீர்கள். மாத ஆரம்பத்தில்
புதன் சூரியனுடன் இணைந்திருந்தாலும், ராசியின் நண்பர்கள் சுக்கிரனும், சனியும்
நல்லநிலையில் இருப்பதால் வருமானங்களும், சந்தோஷங்களும் உள்ள மாதமாக இது
இருக்கும்.
துலாம்:
ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி நிலையில் இருப்பதால் இந்தமாதம் துலாம் ராசிக்கு
தொழில் ரீதியான பிரயாணங்களால் நன்மைகளும், பணவரவும் இருக்கும். சொந்தவீடு
இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள்
இப்போது உண்டு. ராகுபகவான் பத்தாமிடத்தில் வலுவாக இருப்பதால் சிலருக்கு
அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள்
உதவுவார்கள். இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதகமான
நிலை வரும்.
ஒன்பதாமிடம் குரு பார்வையுடன் வலுப்பெறுவதால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள்
செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு
ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள்
இருக்கும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான
சம்பவங்கள் இருக்கும். ஏழரைச்சனி முடிந்து விட்டதால் தொழில், வேலை, வியாபாரம்
போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும்.
அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக வரிவசூல்
செய்யும் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும்
பாக்கித்தொகை கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள்
பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும்
பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள்
மூலம் நல்ல தகவல்கள் வரும். திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின்
திருமணம் இப்பொழுது கூடி வரும்.
விருச்சிகம்:
ராசிநாதன் செவ்வாய் பரிவர்த்தனை அமைப்பின் மூலம் ஆட்சியாக இருக்கும் நிலை
பெற்றிருப்பதால் பிரச்னைகள் எது வந்தாலும் அதை நீங்கள் சுலபமாக எதிர்கொள்ளும்
மாதம் இது. குறிப்பாக வேலை, தொழில் போன்றவற்றில் பிரச்னைகளை சந்தித்துக்
கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள்.
ஏழரைச் சனியில் மிகவும் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடிய ஜென்மச் சனி எனும் அமைப்பை
விருச்சிகத்தினர் கடந்து விட்டதால் இனிமேல் உங்களுக்கு சங்கடம் தரும்
நிகழ்வுகள் எதுவும் இல்லை.
ஜோதிட விதிப்படி ஜென்மச் சனி முடிந்த பிறகு நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும்
என்பது உறுதி. அதேநேரத்தில் சினிமாவில்தான் கதாநாயகன் ஒரே பாட்டில்
கோடீஸ்வரனாகி விடுவார். நிஜத்தில் நிதானமாகத்தான் எதுவும் நடக்கும். எனவே
இனிமேல் விருச்சிகத்திற்கு நிதானமாக நன்மைகள் நடக்கும். கவலை வேண்டாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் இனிமேல் கலங்கத் தேவையில்லை. இனி உங்களுக்கு நல்ல
காலம்தான். கடந்த ஐந்து ஆண்டு காலமாக உங்களை தொல்லை படுத்திக் கொண்டிருந்த
பிரச்னைகளை இனி வெற்றி கொள்வீர்கள்.
கிரகங்கள் நல்ல அமைப்பில் இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு மன தைரியத்தைத்
தரும் நிகழ்வுகள் மட்டுமே நடக்கும். ஜீவனாதிபதி சூரியன் வலுப் பெறுவதால் வேலை
தொழில் வியாபாரம் போன்றவைகளில் இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி வந்த
அனைத்து விஷயங்களும் இந்த மாதம் முடிவுக்கு வரும். இனிமேல் எதையும்
சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். விட்டுப் போயிருந்த சுறுசுறுப்பும்,
புத்துணர்ச்சியும், தைரியமும் இனிமேல் தேடி வரும்.
தனுசு:
மாதம் முழுவதும் ஒன்பதுக்குடைய சூரியன் பனிரெண்டாம் வீட்டில் மறைந்து தடைகளை
ஏற்படுத்தினாலும், ஐந்து பத்துக்குடைய செவ்வாய் புதனுக்கிடையே பரிவர்த்தனை
யோகம் அமைவதால் இந்தமாதம் தனுசுவிற்கு நல்ல மாதமாகவே அமையும். வேலை, தொழில்,
வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. குறிப்பிட்ட
சிலருக்கு மறைமுகமான வழியில் வெளியில் சொல்ல முடியாத வகையில் தனவரவுகளும்
வருமானமும் இருக்கும்.
ரியல்எஸ்டேட், சிகப்புநிற பொருட்கள் சம்மந்தப்பட்டவர்கள், பில்டர்கள்,
பெருவணிகர்கள் போன்றோருக்கு இந்த மாதம் நல்ல வருமானம் இருக்கும். சிலருக்கு
வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு
ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும்.
சிலருக்கு கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல்
போன்ற பலன்கள் நடக்கும். எனவே எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
நிர்வாகப் பதவியில் இருப்பவர்கள் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள்.
மாத ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலிடத்தில் நீங்கள் தவறாகப்
புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.
சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை இருக்கும் என்பதால் யாருக்கும் எதுவும்
செய்து தருவதாக உறுதி அளிக்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவர் கோபித்தால் கூட
மற்றவர் அடங்கி போவது நல்லது.
மகரம்:
இந்த மாதம் ராசியில் இருக்கும் கேதுவால் சிலருக்கு வெளிமாநில, வெளிதேச
மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்களை வேலை விஷயமாக செய்வீர்கள்.
மகர ராசிக்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும் மாதம் இது. கைக்கெட்டும்
தூரத்தில் மதிய உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. அதே
நேரத்தில் யோகக் கிரகங்கள் நல்லநிலையில் இருப்பதால் முன்னர் நீங்கள்
அவசரப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தையும் இந்த மாதம் முறைப்படுத்திக் கொள்ள
முடியும்.
குறிப்பிட்ட சிலருக்கு எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன்
குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வரும். சிக்கனமாக இருக்க வேண்டிய
மாதமிது. ஏழாமிட ராகு பணவரவுகளையும், வருமானங்களையும் கட்டுப்படுத்துவார்
அல்லது தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு
இருமுறை யோசிப்பது நல்லது. அலுவலகத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். சில
குழப்பங்களுக்கு நீங்கள்தான் காரணம் என்று வீண்பழி சுமத்தப்படுவீர்கள்.
மாதத்தின் பிற்பகுதி அதிக நன்மைகளைச் செய்யும். குறிப்பாக திருமணம்
ஆகாதவர்களுக்கு திருமண உறுதி உண்டு. நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம்
இல்லாதவர்களுக்கு தற்பொழுது பகவான் கிருஷ்ணர் குழந்தை வடிவில் வந்து
அவதரிப்பார். சிலருக்கு அரசு வேலைவாய்ப்பு உண்டு. வேலை விஷயமாக வெளிநாடு
செல்வீர்கள். புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். வேலை
இடங்களில் வாக்குவாதங்களை தவிருங்கள்.
கும்பம்:
ராசியைக் குரு பார்த்து, பாக்யாதிபதி சுக்கிரன் வலுப் பெறுவதால் வாழ்க்கைத்
துணை மற்றும் பங்குதாரர்கள் நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் மாதமாக
கார்த்திகை இருக்கும். சிலருக்கு கணவர் மூலம் சந்தோஷமான விஷயங்களும், இன்னும்
சிலருக்கு மனைவியினால் ஆதாயங்களும் உள்ள மாதம் இது. “எடுத்த காரியம் யாவிலும்
வெற்றி” என்ற வார்த்தைகள் இப்பொழுது உங்களுக்கு பொருந்தும் என்பதால்
தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முயற்சிகளை செய்பவர்களுக்கு
வெற்றி நிச்சயம்.
ஆறாமிடத்தில் ராகு சுபநிலை பெறுவதால் லாபங்களும், பண வரவுகளும் அந்நிய, இன,
மத, மொழிக்காரர்களால் நன்மைகளும் உண்டு. இதுவரை பயமுறுத்தி கொண்டிருந்த
விஷயங்கள் நல்லவிதமாக மாறும். கும்பத்திற்கு கெடுபலன்கள் எதுவும் இல்லை.
நல்லவை நடக்க ஆரம்பிக்கும் மாதம் இது. அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள்
தீரும். வீடு மாற்றம், வாகன மாற்றம் இருக்கும். வருங்கால முன்னேற்றத்திற்கு
வழி கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.
நல்ல பொருளாதார நிலையும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. வியாபாரிகளுக்கும்,
சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் இருக்கும். வருமானத்தை சேமிக்கத்தான்
முடியாது. அரசியல்வாதிகளுக்கும், அரசுத் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம்
இது. வெளிநாட்டு விஷயங்களில் லாபம் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்
செய்பவர்கள் மேன்மையடைவார்கள். அடிக்கடி பிரயாணம் செய்வீர்கள். சிலர் அக்கா,
தங்கைகளின் திருமணத்தை நடத்தி பார்ப்பீர்கள்.
மீனம்:
மீனத்திற்கு இது குறைகள் இல்லாத மாதம்தான். அதேநேரத்தில் கார்த்திகையின்
சிறப்புப் பலனாக ஏழாமிடத்தில் இருக்கும் செவ்வாய் தனது கோபப்பார்வையை ராசியின்
மீது வீசுவதால் காரணமின்றி மற்றவர்கள் மீது எரிந்து விழுவீர்கள். பிறர் மீது
குறை கண்டுபிடித்து கோபப்படுவீர்கள். எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது
அவசியம். குறிப்பாக வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். ஆனால் இதை மறந்து
யாரிடமாவது கோபத்துடன் பேசி இந்தமாதம் அவரை விரோதியாக்குவீர்கள்.
குறிப்பிட்ட சிலர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். ஆன்மிகத்துறையில்
இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத்தலங்களில்
இருப்பவர்கள் உள்ளிட்ட சிலர் லாபங்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுப
காரியங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் குறைவதற்கு வாய்ப்பில்லை.
அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். சிலருக்கு
எதிர்பாராத தனலாபம் உண்டு. மாதம் முழுவதும் தொழில், வேலை, வியாபாரம் போன்ற
இனங்களில் நல்லவைகள் நடக்கும்.
அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். ராசியை செவ்வாய் பார்ப்பதால்
எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான
முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது
நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். உடல்நலம் சரி இல்லாதவர்கள்
ஆரோக்கியம் மேம்படுவார்கள். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய்
வருவீர்கள்.

No comments :
Post a Comment