மாதத்தின் ஆரம்பத்திலேயே ராசிநாதன் சூரியன் உச்சவலுவுடன் இருப்பதும்,
    பின்பகுதி மாதத்தில் பத்தாமிடத்தில் குரு பார்வையோடு சுபத்துவமாக இருப்பதும்
    இந்த மாதம் சிம்ம ராசிக்காரர்கள் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன
    அமைப்புகளில் சாதிக்கும் மாதமாக அமையும் என்பதால் சிம்மத்திற்கு இது சிறப்பான
    மாதமாகவே அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
கடந்த இரண்டு வருடகாலமாக அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் தொழில்
    விஷயங்களில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்த சிம்மத்தினருக்கு இப்போது
    வேலையில் நிம்மதி தருகின்ற அமைப்பும், தொழில் முன்னேற்றங்கள் வரக்கூடிய
    மாற்றங்களும் நடக்கும் என்பதால் உங்களின் முன்னேற்றத்திற்கான துவக்கங்கள்
    இருக்கின்ற மாதம் இது. இதுவரை சொந்த வாழ்க்கையிலும், தொழில் அமைப்புகளிலும்,
    பின்னடைவுகளை சந்தித்து குழப்பங்களில் இருந்து வந்தவர்களுக்கு இந்த மாதம்
    மாறுதல்களும், முன்னேற்றங்களும் வந்து சந்தோஷத்தை தரும். சிலருக்கு இதுவரை
    இருந்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும்.
    யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக
    சாதித்துக் காட்ட முடியும்.
பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை
    கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும்.
    அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக
    இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு
    வாய்ப்பு இருப்பதால் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
    விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில்
    சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும்.
    வாழ்க்கைத்துணை விஷயத்தில் மட்டும் சற்று கசப்புகள் இருக்கும். பொறுத்துப்
    போவது நல்லது.
2,9,10,15,17,18,19,25,26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 21 ம் தேதி
    அதிகாலை 5.19 மணி முதல் 23ம் தேதி காலை 8.24 மணி வரை சந்திராஷ்டம நாட்கள்
    என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும்
    வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
 

 
No comments :
Post a Comment