மேஷத்தினருக்கு பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு கடந்த இரண்டு வருடங்களாக
இருந்து வந்த சோதனைகளையும், வேதனைகளையும் அகற்றி நிம்மதியையும், பொருளாதார
மேன்மைகளையும் தருகின்ற வருடமாக இருக்கும்.
கடந்த சில மாதங்களாக அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான மேஷ
ராசிக்காரர்கள் சற்றுத் துவண்டுதான் போனீர்கள். முப்பது வயதுகளில் இருக்கும்
இளைய பருவத்தினரை சனி ஆட்டிப் படைத்ததோடு, வாட்டியும் எடுத்துவிட்டது.
மேஷத்தினரின் வீட்டில் வேறு யாருக்காவது விருச்சிகம், துலாம் போன்ற ஏழரைச்சனி
நடக்கும் ராசிகள் இருந்தால், ஒரு வீட்டில் இரண்டு சனி அமைப்பு உண்டாகி அந்தக்
குடும்பம் மிகவும் தடுமாறித்தான் போனது. பிறந்த ஜாதக வலு உள்ள சிலர்
மட்டும்தான் துன்பங்கள் இல்லாமல் இருக்கிறீர்கள். மற்றவர்கள் பாடு
திண்டாட்டம்தான்.
தமிழ்ப் புத்தாண்டின் சிறப்பு பலனாக இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில்,
வியாபாரம் போன்ற விஷயங்களில் இருந்து வந்த சாதகமற்ற நிலைமைகள் அனைத்தும்
வருடத்தின் நடுப்பகுதியில் இருந்து மாற்றம் அடைய ஆரம்பிக்கும். இந்த வருடம்
மேஷராசிக்காரர்களுக்கு அனைத்து நல்லவைகளும் நடக்கின்ற ஒரு வருடமாக இருக்கும்.
புத்தாண்டின் ஆரம்ப நாளிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் குரு பார்வையில்
இருப்பதும், இன்னொரு யோகாதிபதியான சூரியன் உச்சமடைந்திருப்பதும் மேஷத்திற்கு
நல்ல அமைப்புகள் என்பதால் தனலாபங்களும், பொருள் வரவும் உள்ள வருடமாக இது
இருக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த அஷ்டமச்சனி அமைப்பினால் வேலையில்
சங்கடங்கள், வேலை இழப்பு, வேலை பிடிக்காத நிலை, தற்காலிக பணிநீக்கம்
செய்யப்பட்டவர்கள், மனதிற்கு பிடித்தமான வேலை கிடைக்காதவர்கள் அனைவரும் இந்த
ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே வேலை சம்பந்தப்பட்ட குறை நீங்கப் பெற்று மனநிம்மதி
அடைவார்கள்.
இன்னும் சிலருக்கு இருந்து வந்த நெருங்கிய உறவினர் மரணத்தால் ஏற்பட்ட மன
அழுத்தம், கணவர் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பிரிவு, வழக்கு,
கடன்தொல்லைகள், ஆரோக்கிய குறைவு, தொழில் நஷ்டம், பணம் கொடுத்து ஏமாந்தவை
போன்றவைகளும் இனிமேல் நீங்கி, வாழ்க்கை நல்ல வழியில் செல்லத் துவங்கும்.
கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த சாதகமற்ற பலன்களால் கடுமையான
மனஅழுத்தத்திலும், வேதனைகளிலும், எதிர்காலம் பற்றிய குழப்பத்திலும் இருந்து
வந்த மேஷ ராசிக்காரர்கள் வருட ஆரம்பத்திலேயே குறைகள் அனைத்தும் விலகி
புத்துணர்ச்சியுடன் கூடிய மனநிலை கிடைக்கப் பெறுவீர்கள்.
ஆண்டின் ஆரம்பத்தில் அதிசார முறையில் சனிபகவான் ஒன்பதாமிடத்தில் இருப்பது
உங்களை எந்த விதத்திலும் தொல்லைப் படுத்தாத ஒரு சாதகமான அமைப்பு. அதேநேரத்தில்
ஜூன் மாதத்திற்கு பிறகு சில மாதங்கள் மறுபடியும் எட்டாமிடத்திற்கு மாறி
அஷ்டமச்சனி அமைப்பு பெறுவார் என்றாலும் அவருக்கு கெடுபலன்களை தரும் வலிமை
இருக்காது.
எனவே சனிபகவான் தற்போது இருக்கும் இடத்தில் இருந்து மாறி மீண்டும்
எட்டாமிடத்திற்கு வந்தாலும் போன மச்சான் திரும்பி வந்த கதையாக ஏதேனும்
சோதனைகளை தருவாரோ என்று கவலைப்பட தேவையில்லை.
கிரகநிலைமைகள் மேஷத்திற்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை
அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எந்த
விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும்.
எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ
அது இப்போது நடக்கும். எனவே இந்த தமிழ்ப்புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள்
அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால்
வெற்றி நிச்சயம்.
அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். அலுவலகங்களில்
சுமுகமான சூழ்நிலை இருப்பது கடினம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள்.
முதுகுக்குப் பின்னே பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உடன்
பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு
கிடைப்பது கடினம்.
மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள்
வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும்
துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது
அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம்.
பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து
மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை, வனத்துறை போன்ற
சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இந்த வருடம் பதவி உயர்வு
கிடைக்கும். சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு
கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம்
யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம்
கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

செப்டம்பருக்குப் பிறகு இளைய பருவத்தினருக்கு திருமண அமைப்புகள் கூடிவந்து
ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர்
சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை
கோணலாகிப் போய் இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நல்லபடியாக
நடந்து நீடித்தும் இருக்கும்.
தொலைக்காட்சி சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள்,
பத்திரிகைத்துறையினர், காவல்துறையினர், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம்
வாங்குபவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற
அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஆண்டு மேன்மைகளைத் தரும். மேற்கண்டவர்களுக்கு
எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்தவருடம்
நடக்கும்.
புத்திரபாக்கியம் தாமதமான தம்பதிகளுக்கு இந்தவருடம் குழந்தைப்பேறு உண்டு.
சிலருக்கு இந்த வருடம் வாழ்க்கைத் துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது
நல்ல ஒரு தொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
சிலர் கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின்
திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று
அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான்
சத்யசாயியின் திருவிடம் போன்ற புனிதத்தலங்களுக்குப் போக முடியும்.
நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம்
சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு
பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும்
உஷாராக இருங்கள்.
ஒரு சிறப்புப் பலனாக ஆகஸ்டு மாதத்திற்குப் பிறகு எந்தக் காரணம் கொண்டும்,
எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது
மற்றும் தொழில் செய்வது வேண்டாம். அது சரியாக வராது. இருக்கும் வீட்டை விற்று
புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று
அந்தப் பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கச் செய்வார் வரப்போகும்
நான்காமிட ராகு.
நான்காமிடத்திற்க்கு ராகு மாறப்போவதால் பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர்
செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது. தாயாரின்
உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். தாயாரால் மனச் சங்கடங்கள் கஷ்டங்கள் வருவதற்கு
வாய்ப்பு இருக்கிறது.
கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு.
ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். புனிதத்
தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும்
மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்.
பொதுவாக ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில்
வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில்
செய்பவர்கள் போன்ற மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த யோகத்தை
தரும்.
மொத்தத்தில் இப்போது இருக்கும் பிரச்னைகளைத் தீர்த்து மேஷத்திற்கு ஒரு நல்ல
வழியைக் காட்டும் புது வருடமாக ஹே விளம்பி வருடம் இருக்கும்.
No comments :
Post a Comment