சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு இதுவரை இருந்து
வந்த பின்னடைவுகளை போக்குகின்ற ஒரு ஆண்டாக இருக்கும்.
அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் நான்காமிடத்து சனியால் இதுவரை வேலை, தொழில்,
வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பெரும் சங்கடங்களை எதிர் கொண்ட
சிம்மராசிக்காரர்கள் அவற்றிலிருந்து மீண்டு வந்து நல்ல நிம்மதியான, நிரந்தர
வருமானம் உள்ள ஒரு நிலைக்கு இந்த வருடம் முதல் மாறப் போகிறீர்கள்.
கடந்த சில மாதங்களாக சிம்மத்தினர் அனைவரும், குறிப்பாக சிம்மராசி இளைஞர்கள்
தொழில் அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்து வந்தீர்கள். சனிபகவான் நான்கில்
அமர்ந்து உங்கள் ராசியின் ஜீவனஸ்தானமான பத்தாமிடத்தையும், ராசியையும் தன்னுடைய
கெடுபலன் தரும் பார்வையால் பார்த்ததால் பெரும்பாலான சிம்மத்தினருக்கு
எல்லாவகையிலும் சங்கடங்கள் தரும் நிலைமைகள்தான் இருந்து வந்தன.
சனியின் பார்வையினால் ராசி பலவீனம் அடைந்திருந்த நிலையில், “ஒட்டக்கூத்தன்
பாட்டிற்கு ரெட்டைத் தாழ்ப்பாள்” என்ற கதையாக ராசியிலேயே ராகுவும் இருந்ததால்
சிம்மராசிக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை. மாறாக பெரும்பாலானோருக்கு
கெடுபலன்களே நடந்து வந்தன.
பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டின் முதலில் நடக்க இருக்கும் ராகு-கேது
பெயர்ச்சியானது உங்களுக்கு மிகுந்த மனநிறைவையும், இதுவரை இருந்து வந்த
பொருளாதாரச் சிக்கல்களையும் தீர்த்து வைக்கின்ற ஒரு பெயர்ச்சியாக அமையும்.
ஆகஸ்டு மாதம் 18 ம் தேதியன்று நடக்க இருக்கின்ற ராகு-கேது பெயர்ச்சியின் மூலம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், கடன்
தொல்லைகள், வழக்கு விவகாரங்கள் போன்றவைகள் இருக்காது.
ராகு-கேதுக்கள் நன்மைகளைத் தரும் அமைப்பான 6, 12-ம் இடங்களுக்கு மாற
இருப்பதால் இதுவரை தொழில்சரிவை சந்தித்து, எல்லாவற்றையும் சமாளிப்பதற்காக கடன்
வாங்கி அவஸ்தைப் பட்டவர்கள் இனிமேல் நல்ல பொருளாதார மேன்மையை அடைந்து நிரந்தர
வருமானம் வரும் அளவிற்கு தொழில் உயர்வு பெற்று சந்தோஷப்பட ஆரம்பிப்பீர்கள்.
வேலை அமைப்புகள் நினைத்தது போலவே அமையும். அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள்
இருக்கும் வர இருக்கும் வருமானத்தின் மூலம் கடன்களை தீர்க்க முடியும். கடன்
தொல்லை இன்றி இருக்க முடியும்.
ராகு கேது பெயர்ச்சியைப் போலவே அக்டோபர் மாதம் 26 ம் நாள் நடக்க இருக்கும்
சனிப்பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் தன்னுடைய பார்வை 10-ம் இடத்தில் இருந்து
நீங்கும் விதமாக மாற இருப்பதால் சிம்மத்திற்கு இதுவரை இருந்து வந்த அனைத்து
சிக்கல்களும் நீங்க ஆரம்பிக்கும்.
இந்த இரண்டு பெயர்ச்சிகளின் ஊடாக உங்களின் யோகாதிபதியான குருபகவானும்
செப்டம்பர் மாதம் 12 ம் தேதி தற்போது இருக்கின்ற இரண்டாமிடத்தில் இருந்து
நிதானமான பலன்களைச் செய்யக் கூடிய மூன்றாமிடத்திற்கு மாற இருக்கிறார்.
இதன் மூலமும் சிம்மத்தினருக்கு நல்ல மாற்றங்களும், அந்த மாறுதல்களை சரியான
விதத்தில் பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் அமைப்பும் இருக்கும்.
குருப்பெயர்ச்சியின் மூலம் இதுவரை தடையாகி இருந்த பாக்கியங்கள் சிம்மத்திற்கு
கிடைக்கும். வயதுக்கேற்ற வேலை, திருமணம், குழந்தைபாக்கியம் போன்றவைகள்
கிடைக்காமல் மனஅழுத்தத்தில் இருந்தவர்கள் அனைத்தும் கிடைத்து நிம்மதி
பெறுவீர்கள்.
முப்பது வயதுகளில் இருக்கும் இளையபருவத்தினருக்கு அவர்களுக்கே தெரியாமல்
அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் புத்திசாலித்தனமும் வேறுபட்ட திறமைகளும்
வெளிப்பட்டு சிலர் புகழடையும் வாய்ப்பும் இருக்கிறது.
முக்கிய பலனாக இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ
அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மேலும் ஏற்கனவே இருந்த
நான்காமிட சனியின் தாக்கத்தினால் இதுவரை வசதிகுறைந்த வாடகை வீட்டில்
குடியிருந்தவர்கள் கூட இந்த வருடம் வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர்
ஒத்திக்கு வீடு எடுப்பீர்கள்.
அரசு, தனியார்துறை பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர்,
உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மாணவர்களுக்கு பள்ளி
கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை
நன்றாக எழுத முடியும்.
இதுவரை மனதில் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல்
இருக்காது. எதை நினைத்து கலங்குகிறோம் என்று தெரியாமல் இதுவரை இனம் புரியாத
கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இந்த வருடத்தில் இருந்து புது உற்சாகம்
அடைவீர்கள்.
வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி
மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள்
உண்டாகும். வெகு தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் அலைச்சல்கள்
அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள்.
வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணமாகாத இளைய
பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே
என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும்.
புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு இந்தவருடம் நல்லவேலை கிடைக்கும்.
பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்தவர்களுக்கு உடனடியாக மாற்றங்கள்
உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். மத்திய மாநில
நிர்வாகப்பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும்
ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள்
கிடைக்கும்.
சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி
அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்த புத்தாண்டு
மிகுந்த நன்மையை அளிக்கும். வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும்
இருக்கும்.
தொழிலதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த
முட்டுக்கட்டைகள் விலகும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள்
இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம்.
சிம்ம ராசிப் பெண்கள் ஆளுமைத் திறன் மிக்கவர்களாக இருப்பீர்கள். ஆண்களைப் போல
அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். ஒரு நிமிடம்
நீங்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் குடும்பத்திலோ, அல்லது தொழில் அமைப்புகளிலோ
ஏமாற்றப்படுவீர்கள். சிலர் மறைமுகமாக கணவரின் தொழிலை நிர்வகிப்பீர்கள்.
புதுவருடத்தில் நற்பெயரும் கௌரவமும் பெண்களுக்குக் கிடைக்கும். பெண்களின்
ஆலோசனை குடும்ப ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு
பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால்
பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு
கிடைக்கும்.
சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள்
வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான
திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது உங்களுக்கு கை
கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு
உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது
வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.
கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின்
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச்
செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக
இருந்தாலும் சேமிக்க முடியும்.
குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ
வழிபாடு செய்யுங்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை
இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ
சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.
அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும்.
அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆலய சீரமைப்பு பணிகளில்
சிலர் புகழ் பெறுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள்
தேடிவரும். அரசியல்வாதிகள் புகழ் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல
வாய்ப்புக்கள் கிடைக்கும். விவசாயிகள் வியாபாரிகள் போன்றவர்களுக்கு வருமானம்
உண்டு.
பிறக்க இருக்கும் புத்தாண்டில் நடக்க இருக்கும் இரண்டு முக்கிய பெயர்ச்சிகளின்
மூலம் ராசியின் பலவீனம் விலகுவதால், அதாவது ராசியில் இருக்கும் ராகு
விலகுவதும், ராசிக்கு இருக்கும் சனிபார்வை நீங்குவதும் சிம்மராசிக்கு சிறப்பை
தரும் ஒரு அமைப்பு என்பதால் இந்த தமிழ்ப்புத்தாண்டு நன்மை தரும் புத்தாண்டாகவே
சிம்மராசிக்கு அமையும்.
No comments :
Post a Comment