Monday, March 14, 2016

2016 பங்குனி மாத பலன்கள்

மேஷம்:

மேஷநாதன் செவ்வாய் எட்டாமிடமாக இருந்தாலும் தனது இன்னொரு ராசியில் நிலை கொள்வதாலும் ஐந்து பனிரெண்டுக்குடையவர்கள் இந்த மாதம் பரிவர்த்தனை பெறுவதாலும் மேஷ ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதம் நல்ல விஷயங்களை மட்டுமே செய்யும் மாதமாக இருக்கும். தொழில் விஷயங்களில் நல்ல பலன்கள் நடக்கும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.

பனிரெண்டாம் இடத்தில் குரு பரிவர்த்தனை வலுப்பெறுவதால் குறிப்பிட்ட சிலர் இந்த மாதம் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ வழிப்பாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இந்தமாதம் அவற்றை முடிப்பீர்கள். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இந்த மாதம் கருவுறுதல் இருக்கும்.

ரிஷபம்:

பங்குனி மாதத்தின் பலன்களை ரிஷப ராசிக்காரகளுக்கு இரண்டு பிரிவாக பிரித்துச் சொல்லலாம். மாதத்தின் முற்பகுதி முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் குருபார்வையுடன் இருப்பதால் சாதகமில்லாத குழப்ப நிலைகளும் பிற்பகுதியில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக தீர்ந்து சந்தோஷப்படுதலும் உள்ள மாதமாக இது இருக்கும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.

ராசிக்கு ஏழில் சனியும் செவ்வாயும் இணைந்து ராசியைப் பார்ப்பதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பரப்பரப்பாக கோபத்துடன் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது ஒன்றுதான் இப்போது குறை என்று சொல்லலாம். சாதாரண சிறு விஷயத்திற்காக சண்டை போடுவீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் சண்டை போட வேண்டாம். நிதானம் தேவை. பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. தந்தைவழி உறவினர்களிடமிருந்து உதவிகள் இருக்கும்.

கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ் விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் பாதகம் தராது. அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்க நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும்.

மிதுனம்:

பங்குனி மாதத்தின் பெரும்பாலான நாட்கள் மிதுனநாதன் புதபகவான் நீசநிலையில் இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த குருபகவான் பரிவர்த்தனை நிலையில் இருப்பதால் நீசபங்கராஜயோகம் உண்டாகி இந்தமாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு அனைத்து நன்மைகளும் நடக்கும் மாதமாகவும் குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் ஒரு சிலருக்கு பொருள் சேர்க்கையும் உள்ள மாதமாகவும் இருக்கும்.

ராசியின் பாபரான செவ்வாய் வலுப்பெறுவதால் அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைதூக்கலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள்.

தனலாபாதிபதிகள் வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு இந்த மாதம் இருக்கும் வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்திகள் உண்டு. கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது.

கடகம்:

மாதம் முழுவதும் பத்துக்குடைய செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் ஆட்சி வலுவுடன் இருப்பதாலும் தனாதிபதி சூரியனும் ஒன்பதுக்குடைய குருபகவானும் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதாலும் மகாதனயோகம் உண்டாகி பங்குனி மாதம் கடகராசிக்கு மிகுந்த தனலாபத்தையும், மேன்மையான பாக்யங்களையும் அளிக்கும் என்பதைக் காட்டுகிறது. நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இந்தமாதம் முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும் மாதம் இது.

பூர்வீக சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு இந்த மாதம் எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்கள் நன்கு பரீட்சை எழுதுவீர்கள்.

கலைஞர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள்.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் இந்த மாதம் முழுக்க எட்டில் மறைந்து வலிமை இழந்தாலும் அவர் குருபகவானுடன் பரிவர்த்தனையில் இருப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. எனவே இந்த மாதம் சிம்மராசிக்காரர்களுக்கு சுபச்செலவுகளும், நன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். மறைமுகமான எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். சிம்மத்திற்கு இனிமேல் தோல்வி இல்லை.

இதுவரை எந்த விஷயங்களில் உங்களுக்கு தாங்க முடியாத அவஸ்தைகளும், சிக்கல்களும் இருந்து வந்ததோ அவைகள் இனிமேல் தீரத் தொடங்கி நல்ல படியாக மீண்டு வருவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.

தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். அதே நேரத்தில் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளின் அதிபதியான சுக்கிரன் வலுவாக இருப்பதால் மேற்கண்ட அமைப்புகள் அனைத்தும் நல்ல விதமாக செயல்பட்டு உங்களுக்கு நன்மைகளை தரும். குறிப்பாக வியாபாரிகளுக்கு இந்தமாதம் மேன்மைகளை தரும். கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும்.

கன்னி:

கன்னிநாதன் புதன் இந்த மாதம் நீசமாக இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த குரு பரிவர்த்தனையில் இருப்பதால் நீசபங்கமாகி வலுவான அமைப்பில் யோகம் தரும் நிலையில் இருக்கிறார். கூடுதலாக மூன்றில் செவ்வாயும் சனியும் இருப்பதும் சுக்கிரன் உச்சமாகி ராசியைப் பார்ப்பதும் யோக அமைப்புக்கள் என்பதால் பங்குனி மாதம் உங்களுக்கு நற்பலன்கள் தரும் என்பது உறுதி. மேலும் கன்னிராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த பொருளாதார சிக்கல்கள் இருக்காது.

வேலையிலும் குடும்பத்திலும் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரம் செழிப்பாக நடக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். அதிர்ஷ்டம் இனிமேல் கொஞ்சம் அருகில் இருக்கும். புதன் நீசமாக இருந்தாலும் ராசியைப் பார்ப்பதால் நல்ல பலன்கள்தான் நடக்கும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும்.

கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. ராசிநாதன் நீசம் என்பதால் சிலர் மட்டும் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை சிறிது நாட்கள்தான்.

துலாம்:

பங்குனி மாதத்தில் பெரும்பாலான நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் நல்லநிலையில் இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். ஏழரைச்சனியின் முக்கால்வாசி பகுதியை கடந்துவிட்ட உங்களுக்கு இனிமேல் கெடுபலன்களை தருகின்ற வலிமையை சனி இழக்கிறார். எனவே இனிமேல் துலாம் ராசிக்கு துயரங்கள் எதுவும் இல்லை.

ஆறாமிடம் பரிவர்த்தனை யோகத்தால் வலுப்பெறுவதால் சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும்.

விருச்சிகம்:

மாதம் முழுவதும் விருச்சிகநாதன் செவ்வாய் ஆட்சி வலுப்பெற்று ராசியிலேயே இருப்பதும் இந்த நிலையால் ராசியில் ஜென்மச்சனியாக இருக்கும் சனியின் கெடுபலன்களைக் கட்டுப்படுத்துவதும் உங்களின் துன்பங்களை பெருமளவில் குறைக்கும் அமைப்புக்கள் என்பதால் பங்குனி மாதம் உங்களுக்கு நல்ல மாதமே. அதேபோல இன்னொரு நல்ல அமைப்பாக ஐந்து பத்துக்குடைய கேந்திர கோணாதிபதிகளான சூரியனும் குருவும் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதும் ஏழரைச்சனியின் கெட்ட பலன்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு அமைப்பு. எனவே பங்குனி மாதம் உங்களுக்கு நல்லவைகளை மட்டுமே தரும் மாதமாக இருக்கும்.

செவ்வாய் வலுப்பெறுவதால் இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் இந்தமாதம் முடிவுக்கு வந்து கொஞ்சம் நிம்மதிக்கு வழிவகுக்கும். ராசிநாதனின் வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். விருச்சிகராசிக்காரர்கள் இந்த ஒரு ஜென்மத்திற்கு பட வேண்டிய கஷ்டங்கள் அனைத்தையும் அனுபவித்து விட்டீர்கள். இனி நீங்கள் யாருக்காகவும் எந்த விஷயத்திற்காகவும் கலங்கத் தேவையே இல்லை.

மாதம் முழுவதும் உங்களின் தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். சிறிது நல்லவை நடப்பது போல தோன்றியவுடன் அகலக்கால் வைக்க வேண்டாம். எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

தனுசு:

பங்குனிமாதம் முழுவதும் ராசியின் கேந்திர திரிகோணாதிபதிகள் சூரியனும் குருவும் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதும் இதில் நாலாமிடத்திற்குரியவரான குருபகவானே ராசிநாதன் என்பதாலும் தனுசுராசிக்கு யோக அமைப்புகள் உணடாவதால் இந்த மாதம் உங்களுக்கு பணவரவும் தொழில் வேலை மேன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். அதேநேரம் ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம்.

தாயார் வழியில் நன்மைகள் நடக்கும் மாதம் இது. வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இந்தமாதம் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்தமாதம் உங்களுக்கு பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும்.

ராசியின் எதிரியான சுக்கிரன் வலுப்பெறுவதால் இந்த மாதம் தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். செவ்வாய் வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே எனவே வருமானமும் இந்தமாதம் தாராளமாகவே இருக்கும்.

மகரம்:

ராசிநாதன் இந்த மாதம் முழுவதும் ராசியைப் பார்ப்பதோடு தைரிய வீரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சூரியனும் குருவும் பரிவர்த்தனை அடைவதால் பங்குனிமாதம் முழுவதும் உங்கள் ஆற்றலும் திறமையும் தைரியமும் வெளிப்பட்டு நீங்கள் நல்ல பெயர் எடுக்கும் மாதமாக இருக்கும். அதேநேரம் அஷ்டமாதிபதி சூரியன் வலுப்பெறுவதால் தந்தைவழி உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். தந்தை வழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம்.

குடும்பப் பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள்.

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். மாணவர்கள் நன்கு பரீட்சை எழுதுவீர்கள். காவல் துறையினருக்கு இந்த மாதம் நன்மைகள் உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள் வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான மாதம். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும்.

கும்பம்:

ராசியின் ராஜயோகாதிபதி சுக்கிரன் இந்த மாதம் இரண்டாமிடத்தில் உச்சவலு அடைவதாலும் இரண்டு ஏழுக்குடைய சூரியன் பரிவர்த்தனை அடைவதாலும் இந்த மாதம் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் வலுப் பெற்று கும்பராசிக்காரர்களுக்கு அனைத்து நன்மைகளையும் மேன்மைகளையும் தரும் என்பதால் பங்குனி மாதத்தில் கும்பராசிக்காரர்கள் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

உங்களின் நீண்டகால பிரச்னைகளை தற்போது வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். செவ்வாய் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இந்த மாதம் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். குடும்பத்தில் வாழ்க்கை துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். அல்லது இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். பொருளாதாரம் மேன்மை பெறும்.

மீனம்:

மாத ஆரம்பமே ராசிநாதன் குரு மற்றும் ஆறுக்க்குடைய சூரியன் பரிவர்த்தனை என ஆரம்பிப்பதாலும் ஒன்பதாமிடத்தில் பாக்யாதிபதி செவ்வாய் சனி இணைவதாலும் மீனராசிக்கு பங்குனி மாதம் லேசாக எதிர்ப்புகள் தலைதூக்கும் மாதமாகவும் அடங்கிக் கிடந்த சில பிரச்னைகள் உள்ளேன் அய்யா என்று எட்டிப் பார்க்கும் மாதமாகவும் இருக்கும்.

ராசியின் எதிர்த்தன்மை உடையவரான சுக்கிரன் வலு அடைவதால் இந்த மாதம் பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் இருக்கும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் உண்டு. என்னதான் பிரச்னை என்றாலும் ராசிநாதன் குரு பரிவர்த்தனை யோகத்தில் ராசியில் இருப்பதால் உங்களுக்கு வரும் அனைத்து கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி. கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு நல்லதகவல் உண்டு. சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வரும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.

No comments :

Post a Comment