தனுசுராசிக்கு தற்போது நிலை கொண்டிருக்கும் பத்தாமிடத்தில் இருந்து ஒன்பதாமிடத்திற்கு ராகுவும், நான்காமிடத்தில் இருந்து மூன்றாமிடத்திற்கு கேதுவும் மாற
இருக்கிறார்கள்.
இம்முறை ராகுவைவிட கேதுபகவான் நன்மைகளைத் தரும் இடத்திற்கு மாற இருப்பதால் தனுசுராசியைப் பொறுத்தவரையில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி நன்மைகளைத்தான் அதிகம் தரும்
என்பது நிச்சயம்.
இன்னும் ஒரு கூடுதல் பலனாக பெயர்ச்சியின் ஆரம்பத்தில் ராகுபகவான் ஒன்பதாமிடத்திற்கு மாறும் போது ஏற்கனவே அங்கிருந்து நல்லபலன்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும்
குருவுடன் இணைவார் என்பதால் இணையும் கிரகத்தின் பலனை ராகு எடுத்துச் செய்வார் எனும் விதிப்படி ராகுபகவான் குருவுக்கு இணையான பலம் கொண்ட கிரகமாக மாறி உங்களுக்கு
நல்ல பலன்களைச் செய்வார்.
ராகு என்பவர் அதிரடியான பலன்களை தரும் ஒரு நிழல்கிரகம். அவர் நல்ல பலன்களைச் செய்ய வேண்டுமெனில் ஒரு சுபக்கிரகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்பது ஜோதிடவிதி.
இந்தப் பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிநாதன் இயற்கைச் சுபரான குருவுடன் அவர் இணைவதால் 2016-ம் வருடம் ஆகஸ்டு மாதம் வரை ராகுவினால் உங்களுக்கு மிகவும் நல்ல
பலன்கள் இருக்கும்.
அதன் பிறகும் கெடுபலன்கள் நடக்கவிடாமல் மூன்றாமிடத்தில் இருக்கும் கேதுபகவான் பார்த்துக் கொள்வார் என்பதால் மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி நல்லவைகளைத்
தவிர்த்து அல்லவைகளைச் செய்யாது என்பது உறுதி.
ராகுபகவான் ஒன்பதாமிடத்தில் குருவுடன் இணைவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு அன்னியமத, இன, மொழிக்காரர்களால் மிகுந்த நன்மைகளும், பொருளாதார மேன்மைகளும் இருக்கும்.
குறிப்பாக ராகுதசை, ராகுபுக்தி, குருதசை குருபுக்தி நடந்து கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகள் சற்றுக் கூடுதலாகவே இருக்கும்.
கடந்த காலத்தில் பத்தாமிடத்து ராகுவால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முடக்கங்களையும், தடைகளையும், கெடுபலன்களையும் சந்தித்தவர்கள் இப்போது
அவை நீங்கி எந்த விஷயங்களில் தடைகள் இருந்தனவோ அதே அமைப்புகள் நல்லபடியாகக் கை கொடுப்பதை உணரமுடியும்.
கேதுபகவான் மிகவும் நல்ல பலன்களைத் தரும் மூன்றாமிடத்திற்கு தற்போது மாறி இருப்பது மிகவும் சிறப்பு. இதனால் ஏற்கனவே அவர் பாதித்துக் கொண்டிருந்த நான்காமிடத்தின்
சிறப்பு நிலைகளான வீடு, வாகனம், தாயார், உயர்கல்வி போன்றவைகளில் இனிமேல் தனுசுராசிக்கு நல்ல பலன்கள் நடக்கும்.
மேலும் மூன்றாமிடத்துக் கேதுவின் பலனாக தனுசுராசிக்காரர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் மன தைரியம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். மிகுந்த
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய முழு வீரியமும் உங்களுக்கே தெரியவரும் காலகட்டம் இது.
சகாய ஸ்தானம் வலுப்பெறுவதால் அடுத்தவர்களிடமிருந்தும், தொழில் நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள் போன்றவற்றில் இருந்தும் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தாராளமாக
கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களைப் பிடிக்காத எதிரிகள் கூட தன்னை அறியாமல் ஒருவகையில் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
மூன்றாமிடம் கீர்த்தி, புகழ் எனப்படும் ஒரு மனிதனின் செயலுக்காக அடுத்தவரிடம் பாராட்டுகளைப் பெறும் இடம் என்பதால் சிலருக்கு தனி மனிதரிடமிருந்தும் சிலருக்கு
சமுதாயத்திடமிருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைக்கும். 2016-ம் வருடத்தில் சில தனுசுராசிக்காரர்கள் சாதனைகளைச் செய்வீர்கள். அந்த சாதனைகளுக்காக
என்றென்றும் நினைவு கூறப்படுவீர்கள்.
இந்தப் பெயர்ச்சிக் காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும்.
இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. அதேநேரத்தில் ஏழரைச்சனி நடப்பதால் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள்
சிக்கலுக்கு உள்ளாகும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருந்தாலும் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.
வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாகக் குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க
வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். எதிலும் அகலக்கால் வைத்து விட வேண்டாம். புதிய தொழில் முயற்சிகள் கண்டிப்பாக வேண்டாம்.
சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது
முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.
அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. அரசுப் பணியாளர்களுக்கு உங்களைப்
புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி
ஓரளவு கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். சிலருக்கு வீடுமாற்றம்
தொழில்மாற்றம் வேலை மாற்றம் போன்றவைகள் இப்போது நடக்கும்.
பூர்வீகச்சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக
வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்.
குறிப்பிட்ட சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிதிலமடைந்து ஊருக்கு வெளியே கவனிப்பாரின்றி கிடக்கும் சிவன் கோவிலை புனருத்தானம்
செய்யும் பாக்கியமும் அதன் மூலம் புண்ணியமும் கிடைக்கும். தனுசு ராசிக்காரர்கள் இம்முறை சிவன் அருள் கிடைக்கப் பெறுவீர்கள்.
சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் தடங்கலாகி இருக்கும் தங்கை தம்பியின் திருமணத்தை நல்லபடியாக நடத்துவீர்கள். யூகவணிகம்
பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும்.
அலுவலகத்திலோ, தொழில் இடங்களிலோ உங்களின் கூடவே இருக்கும் நெருங்கிய ஒருவர் உங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமலோ அல்லது அவரசப்பட்டு நீங்கள் செய்யும் ஒரு தவறாலோ
உங்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரை எதிரியாக தள்ளி வைக்க முடியாமலும் நண்பராக சேர்த்துக் கொள்ள முடியாமலும் திணறுவீர்கள் என்பதால் மறைமுக
எதிர்ப்புகளில் கவனமாக இருங்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு
கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று
வருவீர்கள். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது
செய்ய முடியும்.
இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக
ஒத்திக்கு எடுத்தல் போன்றவைகள் நடக்கும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.
ஏழரைச்சனி நடப்பதால் குறுக்குவழி பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை. எங்கும் எதிலும் கவனமாக இருங்கள். முறைகேடாக தவறான வழியில் ஆசை
காட்டப்படும் எந்த முயற்சிக்கும் மனதை திடப்படுத்திக் கொண்டு அலைபாயாமலும் அடிபணியாமலும் இருக்க வேண்டியது அவசியம்.
அடுத்து வரும் ஜென்மச்சனியில் வர இருக்கும் பின்னடைவுகளுக்கான தொடக்கங்கள் உங்களுக்கு இந்த வருடமே இருக்கும் என்பதால் தனுசுராசி இளையபருவத்தினர் எதைச்
செய்தாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இது நமக்கு என்ன பலன்களைச் செய்யும் என்பதை முன்கூட்டியே யோசித்துச் செய்தால் எதையும் ஜெயிக்கலாம்.
மூலம்
நட்சத்திரக்காரர்களுக்கு:
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்லபலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய்தந்தையைப் பார்க்க தாய்நாடு வந்து திரும்புவீர்கள்.
இருக்கும் நாட்டில் சுமுகநிலை இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள்
அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
பூராடம்
நட்சத்திரக்காரர்களுக்கு:
புனித யாத்திரை செல்வீர்கள். மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு காசி கயா
ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
மகான்களின் கருணைப் பார்வை உங்கள் மீது விழும். வீடு வாங்குவதற்கு இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, குறைந்தபட்சம் அடுக்குமாடி
குடியிருப்பில் ஒரு பிளாட்டோ வாங்குவீர்கள்.
உத்திராடம்
நட்சத்திரக்காரர்களுக்கு:
மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதமின்றி செய்து கொடுக்க
முடியும். எதிர்பாராத தனலாபங்கள் இருக்கும். நீண்ட நாட்களாக கமிஷனை எதிர்பார்த்து செய்துவந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு
நல்ல தொகை கைக்கு கிடைக்கும். யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும்.
பரிகாரங்கள்
கேதுபகவானால் கிடைக்கும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயத்தில் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அன்றோ அல்லது ஏதேனும் ஒரு
செவ்வாய்க்கிழமையன்றோ அபிஷேகம் செய்யுங்கள். இயலாதவர்கள் செவ்வாய்தோறும் விநாயகப் பெருமானுக்கு விளக்கேற்றுங்கள்.
No comments :
Post a Comment