Wednesday, February 24, 2021

பித்ரு தோஷம் என்றால் என்ன? (A-018)


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட அவர்களைக் கவனிக்காத குற்றம் என்று பொருள்.

இதை இரண்டு வகைகளில் விவரிக்கலாம். ஜோதிடம் சார்ந்த ஒன்று. அதைச் சாராத ஒன்று.

உலகின் எந்த ஒரு புனித மதமோ அல்லது புனித நூலோ தாயையும், தந்தையையும் சிறப்பித்துத்தான் சொல்லுகின்றன. ஆனால் என்னுடைய மேலான மதம் மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தி, தெய்வத்தையே நான்காமிடத்தில் நிறுத்தி பெற்றவர்களை முதலிடத்தில் வைத்துச் சிறப்பிக்கிறது.

இந்து மதம், நாம் இந்த பூமிக்கு வருவதற்கு ஆதாரமாக இருந்து, நமக்கு உடல் கொடுத்த தாயையும், தந்தையையும் தெய்வத்திற்கும் முன்னே வைத்து முதலில் வணங்கச் சொல்கிறது.

உடலும், உயிரும் கொடுத்த தாய், தகப்பனை அவர்கள் உயிருடன் இருக்கும் போதும் மதித்து வணங்கி, அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகும் அவர்களை வருடாவருடம் நினைத்துப் போற்றிப் பசியாற்ற வேண்டியதே ஒரு இந்துவின் தலையாயக் கடமை.

தாயும், தந்தையும் நமக்கு முதன்மையானவர்கள் என்றால் அவர்கள் இருவரும் இந்தப் பூமியில் பிறப்பதற்குக் காரணமான தாத்தா, பாட்டியும் முதன்மைக்கு முதலானவர்கள் ஆகிறார்கள். தாத்தா, பாட்டிக்கு உடல் கொடுத்த முப்பாட்டன் அவர்களுக்கும் முதலாகிறார். இப்படியே இந்தச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டே போனால் அதில் ஏதோ ஒரு முனை நிறுத்தப்பட்டு அது ஆதிமுதல்வரான பரம்பொருளிடம் போய் நிற்கும்.

மதம் எனும் நமது வாழ்வியல் விதிப்படி சூரியனும், சந்திரனும் தாய் தந்தையராகக் கருதப்படுகிறார்கள். ஒவ்வொரு உயிரும் இவர்களது ஒளியால்தான் உண்டானது. தாயும் தந்தையும் இணைந்ததால், சேர்ந்ததால் நாம் பிறந்தோம். எனவே சூரியனும் சந்திரனும் இணையும், சேரும் ஒவ்வொரு மாத அமாவாசையன்றும் பெற்றோரை நினைக்கச் சொன்னது நமது மதம்.

அமாவாசை தினத்தன்று, சிறுவனான எனது மகனை அருகில் வைத்துக் கொண்டு என் தாய், தந்தையருக்கு விரதமிட்டு நான் வழிபடும்போது அதில் ஒரு கலாச்சாரக் கடத்தலும், என்னுடைய சுயநலமும் கலந்திருக்கிறது…! என் தாய், தந்தையை நான் மறக்காமல் இருப்பதைப் போல, மகனே... என் மறைவுக்குப் பிறகு, நீ என்னை மறந்து விடாதே என்று மறைமுகமாக என் மகனுக்கு நான் எடுத்துச் சொல்வதே அது.

இந்த வழிபாட்டை முறையாகச் செய்யாதவர்கள், பித்ருக்களுக்கு உணவளித்து வழிபடத் தவறியவர்கள், பூமி தனது ஒரு பாதிச்சுற்றை முடித்து வடக்கிருந்து தெற்காய்த் திரும்பும், உத்தராயணம் எனப்படும், ஒருவருடத்தின் பாதி அமைப்பில் முதலில் வரும் ஆடிமாத அமாவாசையன்று, நதிக்கரையிலோ கடற்கரையிலோ முன்னோர்களை வழிபட்டு அவர்களை திருப்திப்படுத்தும் தர்ப்பணம் செய்யலாம் என்றும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

இதுவே நமது பெற்றோரையும், அவர்களுக்கு மூத்தோரையும் நினைத்து நாம் வழிபடும் முறை.

இனி ஜோதிடப்படி பித்ருதோஷம் என்பதற்கு வருவோம்.

ஜோதிடப்படி சூரியனே தந்தை, சந்திரனே தாய் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். இங்கு சூரியன் பிதுர்க்காரகன் என்றும் சந்திரன் மாதா காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மூல ஒளியான சூரியனாலேயே நாமும், நாம் வாழும் பூமியும் பிறந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

சூரியன் எனும் செம்பொருளையே சிவம் என்ற பெயரில் நமது மூல நூல்கள் குறிப்பிடுகின்றன. சூரியன் எனும் முதன்மையான ஆண்மைச் சக்தியையே தந்தையாகவும், அதற்கு துணை நிற்கும் சந்திரன் எனும் பெண்மைச் சக்தியையே தாயாகவும் உருவகப்படுத்தி அம்மையப்பனாக நாம் வழிபடுகிறோம்.

நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களிலும் ஒளிக்கிரகங்கள் எனப்படும் இந்தச் சூரியனும், சந்திரனுமே ஒரு ஜாதகத்தின் முதன்மையானவர்கள். ஜாதகத்தில் சூரிய சந்திரர்களின் வலிமை முக்கியமானது எனும் நிலையில் இந்த இருவருடன் ஒளி இழந்த இருட்டுகளான ராகு, கேது, சனி ஆகியவை இணைந்து அவர்களைப் பலமிழக்கச் செய்யும் நிலையே ஜோதிடப்படி பித்ருதோஷம் எனப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் சூரியனை வைத்தே அந்த ஜாதகத்தின் உயிராகக் கருதப்படும் லக்னம் கணிக்கப்படுகிறது. அதேபோல அந்த உயிர் இயங்கத் தேவைப்படும் உடலானது சந்திரன் இருக்கும் இடத்தை. வைத்து ராசி என்று சொல்லப்படுகிறது.

உயிராகிய சூரியனுடனோ, உடலாகிய சந்திரனுடனோ இருளாகிய ராகு, கேதுக்கள் எந்த இடத்திலும் இணைந்து அவர்களைப் பலவீனப்படுத்துவது இங்கே முதன்மையான பித்ரு தோஷமானது. மேலும் ஒரு ஜாதகத்தின் சென்ற பிறவி நன்மைகளையும், அதனால் உண்டாகும் இப்பிறவி பாக்கியங்களையும் குறிப்பிடும் ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இந்த சாயாக்கிரகங்கள் அமர்வதும் பித்ருதோஷம்தான் என்றும் விளக்கப்படுகிறது.

அதேநேரத்தில் இந்த தோஷத்தைப் பற்றி நிகழ்காலத்தில் பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன. நம்முடைய முன்ஜென்மத்தில் நாம் பிறருக்குச் செய்த நன்மை, தீமைகளும் நம்முடைய முன்னோர்கள் செய்த நன்மை தீமைகளும், பெற்ற பாராட்டுகளும் சாபங்களும் சில இடங்களில் நம்பமுடியாத அளவிற்கு விவரிக்கப்படுகின்றன.

ஜோதிடம் எனப்படுவது ஒரு பரிபூரண காலவியல் விஞ்ஞானம் என்பதில் உறுதியாக இருக்கும் ஒரு எளிய ஜோதிடனான நான் மேற்கண்ட கருத்துக்களுக்குள் செல்ல விரும்பாமல் இந்த பித்ரு தோஷத்தை என் சிற்றறிவுக்கு எட்டியவாறு விவரித்துச் சொல்ல விரும்புகிறேன்.

இங்கே பித்ரு தோஷ விளக்கங்களைப் பொறுத்தவரை, பயமுறுத்தல்களும், பரிகாரங்களுமே அதிகமாகத் தென்படுகிறது. பித்ரு தோஷம் எனப்படுவது சூரிய சந்திரனுடன் ராகு இணைவதால் உண்டாகும் தோஷம் என்று சொல்லப்படுவதன் மறைமுகமான காரணம், சூரியன் தன்னுடைய சுபத்துவத்தையும் அந்த ஜாதருக்கு நன்மைகள் தரும் வலுவை இழப்பதாலும்தான் என்பதே உண்மை.

ஆனால் ஒரு ராசியில் ராகுவும், சூரியனும் சேர்ந்திருப்பதாலேயே சூரியன் வலுவிழந்து விடுவது இல்லை. இதற்கு உதாரணமாக சூரியனும், ராகுவும் இணைந்த எத்தனையோ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளையும், அரசாங்க அதிகாரத்தை கொண்ட உயர்நிலையில் இருப்பவர்களையும் என்னால் காட்ட முடியும்.

ஒளிக்கிரகங்களான சூரிய சந்திரர்களுடன், ராகு-கேதுக்கள் இணைவதாலேயே ஒரு மனிதனுக்கு நல்லவை நடக்காமல் போய் விடுவதில்லை. சர்ப்பக்கிரகங்கள் ஐந்தாமிடத்தில் இருப்பதாலேயே ஒருவருக்கு குழந்தை பிறக்காமல் போய் விடுவதும் இல்லை.

ராகு-கேதுக்கள் எத்தனை டிகிரியில் அவர்களை நெருங்கி வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள். அல்லது குறிப்பிட்ட தூரம் விலகி நின்று ராகு சூரியனின் வலுவை ஏற்று அந்த ஜாதகருக்கு நன்மை செய்யப் போகிறாரா? வேறுவகைகளில் அந்த ராகு-கேதுக்களுக்கோ, சூரிய-சந்திரர்களுக்கோ சுபர்பார்வை தொடர்பு ஏற்பட்டு அவர்கள் வலிமை இழக்காமல் இருக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கணித்த பிறகே தோஷம் கணக்கிடப்பட்டுச் சொல்லப்பட வேண்டும்.

ஆனால் இங்கே சூரியனுடன் ராகு சேர்ந்துவிட்டாலே, உடனே இது பித்ரு தோஷம், உடனே காசிக்கு போ, ராமேஸ்வரம் போ இந்தப் பரிகாரத்தை செய் என்றுதான் பலன் சொல்லப்படுகிறது.

இந்த நாட்களில் ஒரு ஜாதகத்தில், எந்த அமைப்பால் அந்த ஜாதகருக்கு திருமணம், புத்திர பாக்கியம், வேலைவாய்ப்பு போன்றவைகள் நடக்கவில்லை என்பதை கணிக்கத் தடுமாறும் அல்லது கணிக்கத் தெரியாத அனுபவக் குறைவால், ஜோதிட ஞானம் முழுமையாக கை வராத ஒரு மேலோட்டமான ஜோதிடருக்கு சரியான குறை சொல்லும் ஆயுதமாகவே இந்த பித்ரு தோஷம் உபயோகப்படுகிறது.

நமது மூலநூல்களில் இது கடுமையான பித்ருதோஷம் என்றோ இதற்கு இந்த பரிகாரம்தான் செய்ய வேண்டும் என்றோ ஞானிகள் எந்த இடத்திலும் குறிப்பாக சொல்லாதபோது ஜோதிடர்களாக இந்த அமைப்பைப் பற்றிய பீதியைக் கிளப்பத் தேவையில்லை.

உண்மையில் சூரியனும், சந்திரனும் அந்த ஜாதகத்திற்கு எந்த ஆதிபத்தியத்தைக் கொண்டவர்கள்? ராகு-கேதுக்கள் சுபத்துவம் அடைந்திருக்கிறார்களா இல்லையா? அவர்கள் எத்தனை டிகிரியில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்தபிறகே பித்ருதோஷம் சொல்லப்பட வேண்டும்.

ஒரு முறையான ஜோதிடர், கிரகங்களின் அமைப்பையும் அந்த ஜாதகத்தில் உள்ள தடைகளையும் தெளிவாகக் கணக்கிட்டு, தடையை ஏற்படுத்துகின்ற கிரகத்தை துல்லியமாகக் கணித்து, அதற்குரிய முறையான தெய்வ ஸ்தலங்களுக்கு அந்த ஜாதகரை அனுப்பி பரம்பொருளின் அருள் கிடைக்கச் செய்து, அவரின் குறைகளை நீக்கித் தரவேண்டும். அதுவே முழுமையான ஜோதிடரின் கடமை.

அதைவிடுத்து தோஷம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லையா? பித்ரு தோஷம் என்று சொல்லி விடு. இந்த ஊருக்குப் போ, அந்த ஊருக்குப் போ, இந்த ஹோமத்தைச்  செய், அந்த ஹோமத்தைச் செய் என்று சொல்லி அனுப்பி விட்டு, அதைச் செய்தாலும் எனக்குப் பலன் இல்லையே என்று மறுபடியும் அவர் திரும்பி வந்ததும், உன் தலையெழுத்து அவ்வளவுதான், உன் கர்மாவைத் தீர்க்க முடியாது என்று ஒரு அரைகுறை ஜோதிடர் சொல்வதால்தான் இந்த விஞ்ஞானக் கலை களையிழந்து போகிறது.

தாய், தந்தையருக்கு முறைப்படியான கடமைகளைச் செய்யாததால் இந்த தோஷம் வருகிறது என்பதிலும் கருத்துவேறுபாடு உள்ளது. அதிலும் எந்த தோஷமாக இருந்தாலும் அது முறையாக தெளிவாகக் கணிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எந்த தோஷமாக இருப்பினும் அனைத்தும் பரம்பொருளின் கருணைக்கு உட்பட்டதே. அவனின் திருத்தலங்களுக்குச் சென்று மனமுருகி வேண்டினாலே அனைத்தும் சித்திக்கும்.

எல்லாம் அவன் செயல்.


தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


12 comments :

  1. அருமை அய்யா அருமை.
    உங்கள் எழுத்துக்கு நான் அடிமை.

    ReplyDelete
  2. அருமை அய்யா அருமை.
    உங்கள் எழுத்துக்கு நான் அடிமை.

    ReplyDelete
  3. மிக அருமையான விளக்கம்... நன்றி....

    ReplyDelete
  4. ஓம் முருகன் துணை

    நல்ல விளக்கம் ஐயா! நன்றி

    ReplyDelete
  5. அருமை....நன்றி!!!!

    ReplyDelete
  6. ஐயா
    ஒரு உதாரணத்துடன் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
    எம்.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  7. லக்னத்திற்கு 7,8 ல் சூரியன் , சந்திரனுக்கு 7,8 ல் சூரியன் இது பிதுர் தோஷம் என்பது உண்மையா ?

    ReplyDelete
  8. லக்னத்திற்கு 7,8 ல் சூரியன் , சந்திரனுக்கு 7,8 ல் சூரியன் இது பிதுர் தோஷம் என்பது உண்மையா ?

    ReplyDelete
  9. பித்ரு தோஷத்தை பற்றி இன்னும் விரிவாக பதிவை தருக.

    ReplyDelete
  10. Good information please write about parikaram.
    Ellum Thinner..
    pindam podduvathu..

    ReplyDelete
  11. சிறப்பான பதிவு குருநாதா

    ReplyDelete